காந்தி எனும் காந்தம் !!






மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.
புகைப் பிடித்தவர்; வீட்டு வேலைக்காரனிடம் பணம் திருடியவர்; வீட்டில் தங்கம் திருடியவர்; மனைவியிடம் கடுமையாய் நடந்து கொண்டவர்; மனைவியை சந்தேகம் கொண்டவர்; விபச்சாரியிடம் சென்று திரும்பி வந்தவர்; மனைவி கணவனுக்கு அடிமை என்று எண்ணியவர்; தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர்; இருட்டு, பேய் பிசாசு போன்றவற்றைக் கண்டு பயந்தவர். சீட்டு ஆடியவர்; நண்பர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி ஆபாச வார்த்தைகள் பேசியவர்.

இவரைப் போயா மகாத்மா என்பது ? அது அபத்தம் ஆயிற்றே ?

காந்தி மகாத்மாவா ? இல்லையா ?

காந்தி, தன் நிறைகளைக் காண்பதை விட தன் குறைபாடுகளையே அதிகம் உணர்ந்தவர்.

கதராடை அணிந்த அந்த தொண்டுக் கிழவர் தான் கோட் சூட் அணிந்த ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற்றியவர்.
கையில் கைத்தடி ஊன்றிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்த காந்தி தான், கன் (GUN) மற்றும் கேனான் (CANON) உடைய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையே தள்ளாட வைத்து இந்திய நாட்டை விட்டு அகற்றியவர்.

இது எப்படி சாத்தியமாயிற்று ?

ஆங்கிலேயர் பல நூறு ஆண்டுகள் இந்தியாவை அடிமை ஆட்சி புரிந்த பின், காந்தியின் அந்த ஒரு அஸ்திரத்தால் தாக்கப்பட்டு சுதந்திரத்தை ‘இந்தாப் பிடி’ எனக் கொடுத்து விட்டு ஓடிச்சென்றனர். அந்த அஸ்திரம் தான் அஹிம்சை; சத்தியாகிரகம். சத்தியாகிரகம் என்றால் உண்மையில் உறுதி.

ஆங்கிலேயரின் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும், பில்டிங் ஸ்டிராங்க் ஆனா பேஸ்மென்ட் வீக். காந்தியின் அஹிம்சைக்கும் அறப்போராட்டதிற்க்கும், பில்டிங்கும் ஸ்டிராங்க் பேஸ்மென்டும் ஸ்டிராங்க்.

காந்திஜி ஒரு போராட்டத்தில் இறங்கும் முன் சம்பந்த பட்டவர்களிடம் முதலில் பேசி, பிரச்சினையை நேரடியாய் களையப் பார்ப்பார். அதிலும், குற்றம் புரிந்தோரிடம் நேரிடையாக விவாதித்து பின்னும் தவறு செய்தவர் திருந்தவில்லை எனில், பிறகே போராட்டத்தை தொடங்குவார்.

இப்படியாக காந்தியை உதாரணமாகக் கொண்டு தற்போது உள்ள அரசியல்வாதியிடம் சென்று, “ஐயா, நீங்க கொடுத்த ரோடு காண்டிராக்ட்டில் ஊழல் நடந்திருக்கு. அதனால அந்த ரோடு கான்டிராக்டரை மாத்திட்டு நேர்மையான காண்டிராக்டரை மாத்தலைன்னா, அந்த ரோடு போடற இடத்தில் ஜனங்களை கூட்டி போராட்டதில் ஈடுபட வேண்டி இருக்கும்”, என்றால்.
அரசியல்வாதியோ, “சரிங்க நீங்க போங்க, பின்னால நான் பாத்துக்கறேன்” என்கிறார்.
நாமோ பெருமிதமாய் வெளியே வந்தால், நம்மைப் பின் தொடர்ந்து, சத்தமின்றி ஒரு ரோடு ரோலர் மெல்லமாய் நகர்ந்து வர ஆரம்பிக்கிறது.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் – வள்ளலார்.
வாடிய விவசாயின் முகம் பார்த்து, அந்த விவசாயியின் குறைந்த மேலாடையை பார்த்து அந்த விவசாயியின் துயரைத் தானும் அனுபவிக்க தன் ஆடையையும் தியாகம் செய்தவர் – காந்தியடிகளார்.

சரியாக சிந்திக்காத சொல் ஒன்றையும் அவர் வாயில் இருந்து வந்து விடாது. ஒன்றை சொல்லிவிட்டு பின் அதற்காக வருந்துபவர் இல்லை காந்தி. காந்திஜி, காற்று வாக்கில் வாய்க்கு வந்ததை பேசக் கூடியவர் இல்லை. ஒரு விஷயம் காந்திஜி கூறுகிறார் என்றால் அந்த விஷயத்தின் அடி ஆழம் நுனி வரை ஆராய்ந்து பரிசோதித்து உணர்ந்த பின் தான் அவர் வாயில் இருந்து வார்த்தை வரும். இன்றோ, நாம் அடிக்கடி கேட்கக்கூடிய ஒரு டையலாக், “அது …………….ப்போன வ்வாரம். ந்நான் சொன்னது இந்த வ்வாரம்’ போன்ற மழுப்பல்கள்.
காந்தி அறிவியலை அவ்வளவாக கற்றதில்லை. ஆனாலும் மக்களின் மனம் எனும் இயலை அறிந்தவர். அதனால்தான் காந்திஜி ஒரு விஷயம் செய்ய சொன்னால், மக்கள் அதைத் தாங்களே சொன்னதாய் எண்ணிக் கொண்டு செயலில் இறங்கி விடுகிறார்கள்.

சாதிப் பிரிவினையையும் மதப் பிரிவினையையும் கடுமையாய் எதிர்த்தவர். சாதி மற்றும் மதப் பிரிவினை கூடாது என்பதை வலியுறுத்தி பல முறை தன்னை வருத்தி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

காந்தி, விபச்சாரியிடம் சென்று வசை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தவர். காந்தி ஏக பத்தினி விரதன். திருமணத்திற்கு பிறகு, ஒரு கால கட்டத்தில் பொது சேவையில் தன்னை முழுமையாய் ஈடு படுத்திய பின், பூஜிய பத்தினி விரதனாகவே தன்னை மாற்றிக் கொண்டார். பூஜிய பத்தினி விரதன் என்றால் பிரம்மச்சரியம். அப்படி இருக்க என்ன ஒரு மனத் தூய்மை வேண்டும். என்ன ஒரு சேவை நோக்கம் வேண்டும். இன்றோ சாமியார்களும் சி.டி வெளியிடுகிறார்கள்.

எப்போதும் தன் அந்தராத்மாவின் குரலுக்கு அடி பணிபவர். தன் சொந்தக் குறை எதற்காகவும் நீதிமன்றம் செல்வது இல்லை என்ற உறுதி கொண்டவர். சொன்னதை செய்பவர். செய்வதை மட்டுமே சொல்பவர்.
இப்படித்தான்,
இரண்டாம் முறையாய் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன் கப்பல் கரையில் நின்று கொண்டு இருக்கிறது. காந்தி தென்னாப்பிரிக்கா வரக் கூடாது என்று வெள்ளையர்கள் அவரின் கப்பலை, துறை முகம் வர முடியாமல் நிறுத்தி வைத்து இருந்தனர். கப்பலில் இருந்தவர்கள் காந்தியிடம்,“வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றினால் உங்கள் அஹிம்சையை எப்படிக் கடைப்பிடிபீர்கள்”, என்றனர்.
அதற்கு காந்தி, “அவர்களை மன்னித்து அவர்கள் மீது வழக்கு தொடராமல் இருந்து விடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்று நம்புகிறேன்” என்றார். கேள்வி கேட்டவரோ சிரித்தார். இப்படியும் இருக்க முடியுமா? என்று. பின் காந்தி துறைமுகம் வந்தவுடன் அவரைக் கண்டு பலரும் கூடி கற்களாலும் அழுகிய முட்டையாலும் அடித்தனர்.
ஆனாலும் தன்னை அடித்தவர்களைப் பற்றி காந்தி இவ்வாறாக கூறுகிறார். “தங்கள் பிழையை உணரும் போது அவர்கள் சாந்தம் அடைவது நிச்சயம். அவர்களுக்கு நியாய புத்தியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார். “என்னைத் தாக்கியவர்கள் மீது குற்றம் சாட்டி வழக்கு தொடரக் கூடாது என்பது என் கொள்கை” என்றார். சொன்னதையே செய்தும் காட்டியவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் மரண தண்டனைக் கைதி கோட்சே.
காந்தியை சுட்டுக் கொன்றதால் இந்திய நீதி மன்றம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. ஒரு வேளை, கோட்சே சுட்ட குண்டு காந்தியை மாய்க்காமல் இருந்திருந்தால், காந்திஜியே முன் வந்து கோட்சேவை மன்னித்து இருப்பார். அதுதான் மகாத்மா.

காந்தி செய்த சோதனைகள், அவர் நமக்காக அடைந்த வேதனைகள், நம்மை முன்னிட்டு செய்த தியாகங்கள், தொடுத்த போராட்டங்கள் கணக்கிலடங்கா.

அது ஒரு வார இறுதி நாள். நண்பர்களுடன் மது அருந்திய மாலை. அன்று சத்திய சோதனை புத்தகத்தைப் பார்த்ததிலேயே சற்று நடுக்கம் ஏற்பட்டது. கண்களில் நீர் முட்டுகிறது. அந்த புத்தகத்தைத் தொடவும் மனம் கூசுகிறது. ஆன போதிலும் என்னைப் போன்ற மக்கு ஆத்மாவால், துளியும் மறுக்காமல் ஒத்துக் கொள்ள முடிகிறது காந்தி ஒரு மகாத்மா தான் என்று. அப்படி இருக்கையில் உங்களைப் போன்று மிகத் தெளிவாக சிந்திக்கும் ஆசாமிகளுக்கு, காந்தி ஒரு மிகப்பெரிய மகாத்மா தான் !


ஹரீஷ்

2 comments:

ungalrasigan.blogspot.com 21 October 2009 at 19:44  

காந்தி பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். கடைசி பாரா நச்!

பொன்னியின் செல்வன் 22 October 2009 at 19:19  

_/!\_ : ரவி சார், பின்னூட்டத்திற்கு நன்றிகள் ! ' நச்!'-அதற்கு காரணம், 1. எதோ என்னால் இயன்ற உண்மையை ஒத்துக்கொள்வது தான். அடுத்த ஒரு வருடத்திற்கு மதுவை தொடுவதில்லை என்றும் சத்தியம் செய்து இருக்கிறேன். 2. நீங்கள் மிகத் தெளிவாக சிந்திக்கும் ஆசாமி !

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்