ஏமாற்றம் மானிடத் தத்துவம்


மாறுகிறவர் இருப்பதால் ஏமாற்றுபவன் இருக்கிறானா, அல்லது ஏமாற்றுகிறவன் இருப்பதால் ஏமாறுகிறவர் இருக்கிறாரா?

ஏமாறுவோர் இருப்பதால்தான் ஏமாற்றுவோர் இருக்கிறார். ஏமாற்றம் எனும் மரத்திற்கு, வேர் - ஏமாறுவோர்; கிளையும், இலையும், கனியும் – ஏமாற்றுவோர். வேர் நீரை உரிஞ்சுகிறது; பலனோ இலைக்கும் கனிக்கும்.

ஏமாற்றம் எனும் செயலுக்கு, செய்பவர் மற்றும் செய்யப்படுபவர் என ‘இருவர்’ வேண்டும். ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை. ‘நீயின்றி நான் இல்லை’ என்பது போல்.[ஏ.. பெண் சிங்கமே! நீயின்றி நானில்லை என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது!]
ஏமாறுவது நலமா? எனில், ஆம்; நலம்தான்! அதில் ஒரு நன்மை இருக்கிறது. அதாவது, மீண்டும் அதே மாதிரி ஏமாறாமல் இருக்க பாடம் கற்றுத்தருகிறது. ஒரு முறை ஏமாந்த பின், மீண்டும் மீண்டும் அதே மாதிரியே ஏமாறுவோர் நிலைதான் பரிதாபம். அதாவது வாக்காளர்கள் மாதிரி! ஏமாறும் வாக்காளர் இருக்கும் வரையில் ஏமாற்றும் போலி அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது. ஏமாறுவோரும், எல்லா நேரத்திலும் ஏமாற மாட்டார்கள்.

சில நேரங்களில், வேண்டும் என்றே கூட ஏமாறலாம். அது எதற்கு உபயோகப்படும் என்றால், எதிரில் இருப்பவரின் குண நலன்களை எடுத்துக் காட்டுவதற்கு உதவும்.

சின்ன மீனைப் பிடித்தால்தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும். அதைப் போல், சின்ன முள்ளில் மாட்டி வெளிவந்தால்தான், பெரிய முள்ளில் மாட்டாமல் தப்பிக்கலாம். அதற்காக பட்டறிவை வளர்க்கிறேன் பேர்வழி என்று, எப்போதும் பெரிய முள்ளிலேயே மாட்டினால் அது அவரவர் புத்திசாலித்தனத்தை பொருத்தது.

மாற்றம் என்பது மானிடத் தத்துவம். ஏமாற்றம் என்பதோ மனிதன் உபயோகிக்கும் மலிவான யுக்தி. இது என்னவோ மனிதன் மட்டும் உபயோகிக்கும் யுக்தி அன்று. மிருகங்களும் இந்த யுக்தியைப் புரிகின்றன. என்ன வித்தியாசம்? எனில், மிருகங்கள் தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சிக்கு அதைப் புரிகின்றன. மிருகங்கள் புரியும் ஏமாற்று செயல், மற்ற மிருக இனத்தின் மேல்தான் இருக்கும். மனிதனோ, தான் வசதியாய் வசிப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறான்; அதுவுன் தன் சக மனித இனத்தின் மேலேயே! மனிதனுக்குதான் ஆறாம் அறிவு இருக்கிறதே! அது, வேறு எதற்கு இருக்கிறதாம்? இதற்குத்தான்!

ஒருவர் வந்து, கைமாத்துக்காக 100 ரூபாய் பணம் வாங்கி செல்கிறார். ஒரே வாரத்தில் பணத்தைத் திருப்பி கொடுத்து விடுவதாகவும் சொல்கிறார். ந்…நம்..பி கொடுப்பதில் தவறில்லை. ஒரு வாரம் என்பது நமக்கோ 52 முறை வந்து சென்றிருக்கும். ஆனால், பணம் வாங்கியவருக்கோ, ஒரு வாரம் இன்றும் முடிந்திருக்காது; என்றும் முடிந்திடாது.

பிறிதொரு நாளில்,  அதே நபர் வந்து, “சாரே! ஒரு பிரில்லியன்ட் ஐடியாகீது சாரே. அத்தாவது நீ ஒரு பத்தாயிரம் மட்டும் இன்வெஸ்ட் பன்னு. ஒரே வருஷத்துல அத்து இருவதாயிரம் ஆய்டும் சாரே”, என்றால் அப்போதுதான் பட்டறிவு தடுக்கும். ‘ஒரு வாரத்தில்’ என்பதே ஒரு வருடம் தாண்டி உருண்டோடையில்; ‘ஒரே வருஷத்துல’ என்பது யுகப் புரட்சியோ!

வந்த பாதையிலோ 100 ரூபாய் போயிற்று; வரும் பாதையிலோ 10,000 ரூபாய் நிற்கிறது. அப்போதுதான், மாற்றுப் பாதை தேர்ந்தெடுக்க பட்டறிவு தடுக்கும். இந்த மாற்றத்திற்கு காரணம்? ஏமாற்றம்! இந்த மாற்று பாதைக்கு காரணமான ஏமாற்றமும் மானிடத் தத்துவம் தானே!

ஹரீஷ்

2 comments:

ரவிபிரகாஷ் 3 December 2009 at 21:48  

‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று பாடினார் பட்டுக்கோட்டையார். ஏமாறுகிற விஷயத்தில் அது அப்படியே உல்டா! ஏமாறுகிறவர்களாய்ப் பார்த்துச் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க முடியாது! நல்ல பதிவு!

பொன்னியின் செல்வன் 5 December 2009 at 04:11  

_/!\_ ரவி சார், பின்னூட்டத்திற்கு நன்றி.

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்