Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

கத்… கத்… கத்தரிக்காய் !!



கொளுத்தும் மதிய வெயிலில், தெருவில் காய்கறிக்காரன் காய்கறி விற்றுக்கொண்டு போகிறான்.
“கத்ரி……க்கா………………………….
முருங்கெ…….க்கா……………
வெண்டி……..க்கா……………….”

கொளுத்தும் வெயிலை, ஏன் கத்தரி வெயில் என்கிறார்கள் என்று குழம்பி கொண்டு இருந்தால்; ஒரு கத்தரிப்பூவை பார்த்தவுடன் அந்த சந்தேகம் தீர்ந்தது. விஷயம் இதுவாக இருக்கலாம்; கத்தரிப் பூவின் நடுவில் உள்ள மகரந்தம் நல்ல பளிச் மஞ்சள் வர்ணத்தில் கொளுத்தும் வெயிலின் நிறத்தில் இருக்கிறது. அதனால் இருக்குமோ ? 


காய்கறிக்காரனைக் கூப்பிட்டு, வீட்டம்மா,
“என்னப்பா; இந்த முருங்க்காய் எவ்வளவு?”
“கிலோ எட்டு ரூவா-ம்மா”
“வெண்டக்கா ?”
“கிலோ பத்து”
“கத்ரிகா?”
கிலோ ஒரு டாலர்!
என்னது? டாலரா? எந்த டாலர்? முருகன் டாலரா?
என்னம்மா. விவரம் தெரியாதா ? இது அமெரிக்கா கத்தரிக்கா-ம்மா; அதான்
மேலும் வெறுப்பேற்றும் விதமாய், காய்கறிக்காரன், “கோயம்பேடு மார்க்கெட் வரலாற்றிலேயே, முதன் முறையாய்; உலகத் தொழில் நுட்பத்துடன் தயாரான; வெளைச்சல் வந்து மூன்றே மாதத்தில்; விற்பனைக்கு வந்திருக்கும்மா !”, என்கிறான்.

இப்படியாக, தெருவில் கத்தரிக்காய் வாங்கி கொண்டு வீட்டுக்குள் வந்தால்; அமெரிக்காவில் இருந்து பேராண்டி, வீட்டுக்கு தொலை பேசுகிறான்; “என்ன, எப்படி இருக்கீங்க எல்லாம்? செய்தி கேட்டீங்களா? மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரப் போகிறதாமே?"
வீட்டில் இருந்து, “அட! அது ஓல்ட் நியூஸ்! அது, இப்ப நம்ம வீட்டுக்குள்ளேயே வந்திடுச்சு. அது தான் இப்போ லேட்டஸ்ட் நியூஸ்! எங்களுக்கு எங்கேப்பா தெரியுது அதெல்லாம். இந்த ‘கல்யாணம்’, ‘துளசி’, ‘கலசம்’, ‘கோலங்கள்’, ‘அரசி’, ‘ஆனந்தம்’ பாக்கவே எங்களுக்கு நேரம் சரியா இருக்குது ! இன்னிக்கு காய்கறி வாங்கறப்பதான், காய் கறிக்காரன் சொன்னான்; ஏதோ, அமெரிக்க கத்தரிக்காய்னு; சரி! அமெரிக்க கத்தரிக்காயாச்சே-ன்னு, ரெண்டு கிலோ கூடுதலாவே வாங்கி வச்சாச்சு! அந்த கத்தரிக்காயில Manufactured Date, Expiry Date எல்லாம் போட்டு இருக்குடா! அதெல்லாம் தமிழில் தான் அச்சிடனும்னு, எவன் வந்து சாப்பிடும் போது, சாப்பிட விடாம கைய பிடிக்கப் போறானோன்னு பயமா இருக்கு-டா!’

மேலே கூறியவை எல்லாம், கூடிய விரைவில், நாம் அன்றாடம் கேட்கும் சில சம்பாஷனைகள் ஆகக் கூடும்.

பின்னே, என்ன சார்? இந்தியாவில், இந்த மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் எல்லாம் வரப் போகிறதாமே. வரட்டுமே; பேஷா வரட்டுமே! இந்த ‘கத்தரிக்கா’ எல்லாம் ‘சுண்டக்கா’ மேட்டர் நமக்கு!! கத்தரிக்காய் தானே சார்! இது என்ன கத்ரினா கைஃப் மேட்டரா?
கத்ரினா கைஃப் ‘விலங்கியல்’ விவகாரம்; இந்த கத்தரிக்காய் வெறும் ‘தாவரவியல்’ விவகாரம் தானே. ஆமாம் சார், கத்ரினா கைஃப் ஒரு பெண் மான்; இந்த பெண் மானின் ஆண் மான் -  சல்மான்; இந்த மான்கள் விலங்கு வேட்டைக்கு கூட செல்லும். அப்போ இது விலங்கியல் தானே. விலங்கியல் தான் கொஞ்சம் கஷ்டம்; தாவரவியல் எல்லாம் சும்மா ‘அல்வா’ சாப்டற மாதிரி நமக்கு!

அணு என்றாலே அமெரிக்கா தான் போலும். அது ஆயுதமாக இருந்தாலும், காய்கறியாக இருந்தாலும் கூட!

கத்தரிக்காயின் பிறப்பிடம் இந்தியா. இந்தியாவுக்கே கத்தரிக்காயா ? சூரியனுக்கே டார்ச் லைட்டா ? ஒரு வலைப்பூவில் படித்த கேள்விகள், மிக நியாயமான கேள்விகள். அது அப்படியே இங்கே கொடுக்கப் பட்டுளது.

அது சரி, இப்போது கத்தரிக்காய்க்கு எங்கே தட்டுப்பாடு வந்தது? அதன் உற்பத்தியை அதிகரித்தே தீர வேண்டியது கட்டாயம் என யாராவது குரல் எழுப்பினார்களா ? எதற்காக இந்த விபரீத ஆசை புரியவில்லையா ?

என்ன நியாயமான கேள்விகள் ! இந்த மரபணு மாற்றிய கத்தரிக்காய் பற்றிய தகவல்களை, ‘தகவல் அறியும் சட்டத்தில்’ கேட்டார்களாம் சில சமூக ஆர்வலர்கள். ஆனால், அது ‘வர்த்தக ரகசியம்’ என்பதால் தர இயலாது என்று கூறி விட்டார்களாம். அவர்களுக்கு அது ‘வர்த்தக ரகசியம்’; நமக்கோ, வாழ்க்கையும் சந்ததியும் அத்தியாவசியம். வாழ்க்கை அத்தியாவசியத்தை விட ‘வர்த்தக ரகசியம்’ முக்கியம் எனில்; அதில் சந்தேகம் கொள்வதில் எள்ளளவும் தவறில்லை. அந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை.

இப்படித்தான், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் முன், வீட்டுக்கு தொலை பேசினான் நண்பன், “ஹ்ம்ம்.. வீட்டில் என்ன குழம்பு இன்னிக்கு?”
“கத்தரிக்காய் சாம்பார்-ங்க”
“ஹ்ம்ம்.. சரி.. யார் சாம்பார் வெச்சது? நீயா? பாட்டியா?’
“இன்னிக்கு, நானே காய் வெட்டி கொழம்பு வெச்சேங்க!”
“ஓ! அப்பிடியா .. ஹ்ம்ம்.. சேரி…. வரும் போது நான் வெளியில சாப்பிட்டு வந்திடரேன். எனக்கு சோறு வைக்க வேண்டாம்”
“இல்லீங்க. நீங்க வீட்டுக்கு வந்திடுங்க… இது ஒன்னும் அமெரிக்கா கத்தரிக்கா இல்ல; நம்ம ஊரு கத்தரிக்கா தான் பயபடாதீங்க!” என்றாள்.
அதற்கு நம்மாளு, “பயம் அமெரிக்கா மேல இல்ல !!!” என்றான்.
அதற்கு அவள், “பாருங்க! நான் பன்னின கத்தரிக்கா சாம்பாருக்கு பேடன்ட்(Patent) கூட கிடைக்கும்.  தெரிஞ்சுக்கங்க!’
அதற்கு நம்மாளு, “நீ பன்னின கத்தரிக்கா சாம்பாருக்கு பேடன்ட் (Patent) கிடைக்குதோ இல்லியோ; ஆனா, அத சாப்பிட்டா பேஷன்ட் (Patient) கிடைப்பாங்க !!”

……………………..……………………..……………………..……………………..
……………………..……………………..……………………..……………………..
……………………..……………………..……………………..……………………..


மரபணு ‘பேடண்ட்’ தெரிந்து கொள்வது இல்லை நம் நோக்கம்; நாமும், நம் நிலமும், தொடரும் சந்ததியும், சந்தடி சாக்கில் ‘பேஷன்ட்’ ஆகி விடக் கூடாது என்பது தான் நம் நோக்கம்! வேறொன்றுமில்லை !!

ஹரீஷ்

உன்னைப் போல் ஒருவன் !!


டோலி தெரியுமா உங்களுக்கு? டோனி இல்லை சார். டோலி?

இந்த டோலி தான் முதன் முதலாய் ‘உன்னைப் போல் ஒருவன்’ ஆனவன்.

நாம் ஏதோ ‘அவன்’ ‘இவன்’ என்று டோலியை மனிதன் போல் பாவித்து பேசுகிறோம். ஆனால், இந்த டோலி மனிதன் இல்லை மிருகம். அதுவும் மனிதன் செய்த மிருகம்.

டோலி ஒரு செம்மறி ஆடு. இந்த செம்மறி ஆட்டை உருவாக்கியது விஞ்ஞானிகள். ஆனாலும் ஈன்றெடுத்தது மற்றொரு செம்மறி ஆடு.

“மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்”, என்று கூற முழு தகுதி உடையது இந்த டோலி செம்மறி ஆடு.

பூங்காவில் உள்ள ரோஜா செடியில் இருந்து காவலாளி பார்க்காத போது, ஒரு சிறு கிளையை ஒடித்து கிளப்பிட்டு வந்து, வீட்டு தோட்டத்தில் நட்டு வளர்த்து, ரோஜா பூ பூக்க வைப்பதும் க்ளோனிங் தான். இதுவோ செடி க்ளோனிங். இதிலும் மிருக க்ளோனிங் தான் இந்த டோலி செம்மறி ஆடு.


க்ளோனிங் என்றால் என்ன ? க்ளோனிங் என்றால் காப்பி அடிப்பது. அதான் சாரே, ஸெராக்ஸ் எடுக்கிறது தான் க்ளோனிங். அதைத்தான் மாணவர்கள் நாங்கள் தேர்வில் செய்கிறோமே. இதில் என்னத்த இந்த விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்கிறார்களோ? தெரியவில்லை. மாணவர்கள் எங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியில் கொஞ்சமாவது இந்த விஞ்ஞானிகளுக்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பி அடித்து, மறந்தும் கூட அடுத்தவன் பரீட்சை எண்ணையே எங்கள் தாளிலும் எழுதாமல், மறக்காமல் எங்களுடைய தேர்வு எண்ணையே ஞாபகம் வைத்துக் கொண்டு எழுத வேண்டிய பொறுப்புணர்ச்சி இருக்கிறது. அதில் ஒரு சதவிகித பொறுப்புணர்ச்சி இருந்தாலே விஞ்ஞானிகள் மனித க்ளோனிங் பற்றி சிந்திக்காமல் இருப்பார்கள்.


மனித க்ளோனிங் செய்யும் முறை என்னவென்றால், முதலில் பெண்ணிடம் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அந்த கரு முட்டையில் உள்ள நியூக்ளியஸ் நீக்கப் படும்.
அடுத்ததாக ஆணிடம் இருந்து ஒரு செல் (அது எந்த செல்லாகவும் இருக்கலாம்) எடுத்து வைத்துப் படும்.

பிறகு ஆணுடைய செல்லும், பெண்ணுடைய நியூக்ளியஸ் இல்லாத கரு முட்டையும் மின்சாரத்தின் உதவியோடு இனைக்கப்படும்.

ஆணுடைய செல்லை உள்கொண்ட அந்த கருமுட்டை இப்போது பெண்ணின் கருப்பையில் வைக்கப்படும்.

அவ்வளவுதான். பத்தே மாததில் சூடான குழந்தை தயார் ! !! !! !

பின்னே என்ன சார், டி.வியில் காய்கறி நறுக்கி போட்டு சமையல் குறிப்பு சொல்ற மாதிரின்னா சொல்றா. மனுஷாளை உருவாக்க மின்சாரம் போதுமாம் சார். கேட்கவே விரசமா இல்லியோன்னா. காதல் எனும் மின்சாரம் இருக்கச்சே இந்தெ கரன்ட் வச்சு கொழந்த பெத்துக்கறது எல்லாம் பிரம்மாவுக்கே அடுக்காது, ஆமாங்கானும். அதிலும் திருப்போருர் முருகன் கோவிலில் பிள்ளை பொறக்கவேனும்னு நினைச்சிண்டு மரத்தில் கடுதாசி எழுதி வச்சா, மத்ததை அந்த கந்தசாமி பாத்துப்பான். அத எல்லாம் விட்டுட்டு இந்த க்ளோனிங் கிளீனிங் எல்லாம் நமக்கு சரிப்படுமா. சித்தெ என்னிய தனியா இருக்க விடறேளா !!

……………
……………
……………
……………
……………
……………

அதிலும் கணவன் வெளிநாட்டிலோ, வெளி மாநிலத்திலேயோ இருந்து மனைவியை வந்து காண முடியாத நிலை, மற்றும் முக்கிய வேலை பளு எனில் தன்னுடைய செல் ஒன்றை எடுத்து எஃஸ்பிரெஸ் டெலிவெரியில் கொரியர் அனுப்பி வைத்தால், பத்து மாதத்தில் சூடான குழந்தை டெலிவெரி நடக்கக் கூடும், இந்த மனித க்ளோனிங்கால்.

இந்தியாவிற்கு மனித க்ளோனிங் தேவையா ?
இந்தியாவில் இப்போதே 120 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்தியாவில் ஏற்கனவே வேலையின்றி பல கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்த லட்சனத்தில் க்ளோனிங்க் ஒன்றுதான் குறைச்சல். போங்க சார் ! போய் செவ்வாய் கிரகத்தில் சோறு பொங்கி சாப்பிட முடியுமான்னு மொதல்ல பாருங்க சார்.

ஹரீஷ்

பாதாள உலகம் !!


காவியங்களில் மொத்தம் மூன்று உலகம் உள்ளதாக சொல்லுவார்கள்.
மண்ணுலகம்,
வானுலகம் மற்றும் ,
பாதாள உலகம் என்று.

மனிதன் மண் உலகில் மட்டும் சஞ்சரித்து கொண்டு இருந்தான். பின் அவன் எண்ணங்கள் மென் மேலும் உயர்ந்து, ரைட் சகோதர்கள் முயற்சியால், ஆராய்ச்சியை விரிவு படுத்தி ஆகாய விமானம் கண்டுப் பிடித்தான்.இதற்கு காரணம் பறவை, பறவையை பார்த்து பிரமித்து, நம்மாலும் பறக்க முடியுமா என்ற எண்ணம் தான்.

நியூட்டனின் மூன்றாம் விதிப் படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. மனிதன் தரையில் இருந்தான். தரைக்கு மேலே ஆகாய விமானம் பறக்க விட்டான். இப்போது இந்த வினைக்கு எதிர் வினையால் சமநிலை படுத்த வேண்டும் என்றால் பாதாள உலகம் தான் போக வேண்டும்.
ஆனால் பாதாள உலகம் போக முடியுமா. முடியும் என்று மனிதன் நிருபித்திருக்கிறான்.

அந்த காலங்களில் அரசர்கள் போர் காலத்தில் தப்பி செல்ல சுரங்க பாதைகளில் செல்லுவார்கள். அது அரசாட்சி. இதுவோ மக்களாட்சி. இப்போது, மக்களும் அலுவலகத்திற்கு சுரங்க பாதையில் செல்லாம்.

பாதாள உலகத்திற்கு வாய் உண்டா என்று கேட்டால், உண்டு ..
அந்த வாய்கள் லண்டன், நியூயார்க், பாரிஸ், மாஸ்கோ, ரோம் என்று இருந்து, இப்போது இந்தியாவில் டெல்லி,கொல்கத்தா நகரங்களில் இருந்து, சென்னையிலும் வாயை திறக்க காத்துக் கொண்டு இருக்கிறது. இவற்றிலும் மிக தொன்மையான வாய் லண்டனில் உள்ளது.

'தடக் தடக், தடக் தடக்' என்று தரையில் தாளத்துடன் புகை வண்டி பார்த்து பிரயாணித்து இருக்கிறோம். இப்போது பாதாள உலகத்தில் சத்தம் சற்றே குறைவாக உள்ள மெட்ரோரயில் வண்டியில், பிரயாணித்து பிரமிக்க போகின்றோம், விரைவில் சென்னையில். நம் சிங்கார சென்னையில் !
சத்தம் தான் குறைவே அன்றி, வேகம் இல்லை. சத்தம் சிறுத்தாலும் வேகம் சிறுக்காது.

இந்த மெட்ரோ வண்டியை ிட சீறிப்பாயும் வேகத்தில், தண்டவாளத்தில் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பறந்து செல்லும் புல்லட் ரயில்களும் இப்போது வந்து உள்ளன, ஜப்பானில்.

அப்படி பட்ட ஜப்பான் நாட்டில் இருந்து தான் நம் சென்னையின் மெட்ரோ ரயில் வண்டி வேலைக்கு கடனுதவி கிடைத்துள்ளது.

பாதாள உலகத்தில் உள்ள மெட்ரோ ரயில் வண்டியில் பிரயாணம் செய்வதில் ஒரு சவுகரியம் என்னவென்றால், அரசியல் கட்சிகள் யாரும், சாலை மறியல் பண்ணுவது போலவோ, புகைவண்டி மறியலில் ஈடு படுவது போலவோ மறியலில் ஈடு பட மாட்டார்கள்.

மேலும் 'இந்தி எதிர்க்கிறேன்', ஒரு ரூபாய்க்கு அரிசி தந்ததால் எல்லோரும் குண்டடித்து விடுவார்கள் எனக்கூறி,'தொந்தி எதிர்க்கிறேன்' என்று அரசியல்வாதிகள் அகலக் கால் வைதார்களேயானால், அகால மரணம்தான் அடைய வேண்டும்.
அரசியல் கட்சிகளே, ஜாக்கிரதை ! . அதனால் சற்று சிந்தித்து போராடுங்கள்.

இந்த திட்டதிற்கு ஒதுக்க பட்டுள்ள பணம் 14600 கோடி ரூபாய். மெட்ரோ ரயில் வண்டி பணிகள் 2015 -இல் முடியும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

இந்த மெட்ரோ ரயில் வண்டியில் பிரயாணம் பண்ணும் போது, பிரணாயாமம் தெரிந்திருக்க வேண்டியது இல்லை. என்னதான் கூவம் நதியை கடந்து சென்றாலும், மூச்சு பயிற்சிக்கு அவசியம் இருக்காது.

ஆகாய விமானம் பறவையை பார்த்து பிரமித்து கண்டு பிடித்தான்.
இந்த மெட்ரோ ரயில் ரயிலை எதை கண்டு வியந்து கண்டு பிடித்திருப்பான்.
ஒருவேளை தூங்கிக்கொண்டு இருக்கும் போது தொல்லை செய்த பெருச்சாளியை கண்டு இருக்குமோ.

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்