Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


காலப்  போக்கில் கல் தோன்றி; மற்றோர் நாள் மண் தோன்றி; அன்றோர் நாள் அமீபா(Amoeba) தோன்றி; வருடங்கள் உருண்டோடி குரங்கு உருவாகி; பரிணாம வளர்ச்சியில் பின் தோன்றிய பழங்குடிகளில், மூத்த குடியான திராவிடர்கள் தோற்றுவித்த உன்னத மொழி, உயிர் மொழி - தமிழ் மொழி !

அப்படிப்பட்ட தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று குரல் எழுப்பும் இவ்வேளையில், சந்து வழியாக சமஸ்கிருத கும்பல், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிக்க முயற்சி செய்கிறது.

நல்ல வாய்ப்பாக,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்
போல், திராவிடர் கழகம்தான் இந்த சந்து வழி சமஸ்கிருத எழுத்துத் தினிப்பு முயற்சியைக் கண்டுபிடித்து, எழுத்து தினிப்பைத் தடுக்க தடுப்பணையும் போட்டுள்ளது.

விழிக்கு எப்படி ஒளி பிரதானமோ, அப்படியே மொழிக்கு ஒலி பிரதானம். எந்த ஒரு மொழிக்கும், ஒலி மிக முக்கியம்; அந்த ஒலிகளுக்கு இணையாகத்தான் எழுத்துக்கள் வருகின்றன. தமிழில் பல சிறப்பான ஒலிகள் உள்ளன. அதாவது, 'எ' 'ஒ' 'ற' 'ன' 'ழ'  போன்றவை.

'வர்ணாசிரம தர்மம்' எனும் வீண் சிரமத்தை உண்டாக்கிய மொழிதான் சமஸ்கிருத மொழி. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் அரிய மானுட தத்துவங்களை தந்தது நம் தமிழ் மொழி.  சமஸ்கிருதம், மனிதர்களை நான்கு சாதியாகப் பிரிக்கிறது. நாலு வாங்கினா ஒன்னு ஃப்ரீ எனும் கணக்காய் ஐந்தாம் சாதியையும் உருவாக்கி வைத்துள்ளது, சமஸ்கிருதம் போற்றும் இந்து மதம்.

தமிழின் மேன்மையைப் பாருங்கள்; தமிழோ, 'எல்லாமே நம் ஊர்தான்; எல்லோரும் நம் உறவினர்' 'பிறப்பால் எல்லா உயிரும் சமந்தான்' என்று கூறி இணைக்கிறது. அதாவது, காசியும் நம் ஊர்தான், கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியும் நம் உறவினர்தான், எனும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டது தமிழ் மொழி. நமக்கு மனிதர்கள் எதிரிகள் இல்லை; சில 'மனிதர்களின் தீய கொள்கைகள்தான் எதிரிகள்'. இந்த தீப கர்பத்தில், திராவிடர்களுக்கு பார்ப்பனர்களின் பார்ப்பனீயம்தான் தீய கொள்கையாக இருக்கிறது. பார்ப்பனர்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இல்லை திராவிடர் கழகத்தினர். மாறாக, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்ப்பவர்கள்.
  
திராவிட மொழிகளுக்கு எல்லாம் தமிழே வேர் மொழி. அந்த வேரில் விஷத்தை ஏற்றினால், மரம் கிளைகளுக்கும் பரவிவிடும் என்ற எண்ணத்தில், விஷமிகள் விஷக் கிருமிகளை வேரில் புகுத்த எத்தனிக்கிறார்கள். பெரியார் வளர்த்த பகுத்தறிவுக் கூட்டத்திடம் பலிக்குமா இந்த விஷக் கிருமிகளின் விசேஷங்கள்? பலிக்காது! 
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் 
போல, நல்லதோர் சிந்தனைச் சிற்பிகளை அல்லவா தந்தை பெரியார் எனும் சமூக மருத்துவர் உருவாக்கியுள்ளார்கள்.

எது விஷக் கிருமி? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிப்பதுதான். சிறீராமன் சர்மா என்பவர் Unicode Consortium-க்கு ஒரு விண்ணப்பம் வைத்துள்ளார். என்ன விண்ணப்பம்? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் மொழி பெயர்க்க சிரமமாய் இருப்பதால், மொழி பெயர்ப்பை எளிதாக்க சமஸ்கிருத எழுத்துக்கள் 26 ஐ தமிழில் எழுத்தாக தினிக்க விண்ணப்பம் இட்டுள்ளார்.

தமிழகத்தின், மொத்த மக்கள் தொகையில்  6 கோடியே 25 லட்சம்  பேரில், நூற்றுக்கு நான்கு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இருக்க மாட்டார்கள் (இது உத்தேசமான கணக்குத்தான். அடுத்த வருடம் சாதி வாரிக் கணக்கெடுப்பு வந்தவுடன் உண்மை நிலவரம் அறியலாம்). அந்த நான்கு சதவீதத்தில் எத்தனை சதவீதம் பேர் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருக்கப் போகிறார்கள்?. நான்கு சதவீதம் என்று உத்தேசித்தால், தமிழக மக்கள் தொகையில், ஆறே கால் கோடி பேரில், வெரும் 25 லட்சம் மக்களுக்காக, மற்ற 6 கோடி மக்கள் புழங்கும் ஒரு மொழியில், சமஸ்கிருத மொழியின் எழுத்துகளை சேர்த்தால், ஏற்றுக் கொள்ளலாமா? உலகத் தமிழர்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இன்னும் கூடுதல் பேருக்கும் இந்த 'சந்து வழி சமஸ்கிருதத்  திணிப்பால்' திண்டாட்டம் வந்து விடுமே! பார்த்தீர்களா இந்த சமஸ்கிருத கூட்டம் 'சந்து வழி சிந்து பாடுவதை'! இதைத் தடுக்கவேண்டியது நம் கடமை அல்லவா!? கடமை கிடக்கட்டும். இந்த சமஸ்கிருதத் தினிப்பை தடுக்க வேண்டியது நமது உரிமை அல்லவா!?

சமஸ்கிருத படைப்புகளை நம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்க, சமஸ்கிருத எழுத்தைத் தமிழில் தினிக்கப் பார்க்கிறார்கள். தமிழில் உள்ள உலகப் பொது மறையான உயரிய திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க சிரமமாய் இருக்கும் என்று கூறி, தமிழ் எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், இந்த 'சைட் வாசல் சமஸ்கிருதத் தினிப்பு' கூட்டத்திற்க்குப் பொறுக்குமா?

தமிழை நீச பாஷை என்றவர்கள் தான் சமஸ்கிருதம் போற்றும் சங்கராச்சாரியார்கள்.

"பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்?" என்று தந்தை பெரியார் அவர்கள் கொதித்து எழுந்ததின் காரணத்தை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே.

தமிழ் செழுமையான மொழி. இந்த செழுமையான மொழியில் வார்த்தைகள் ஏராளம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் வார்த்தைகள் கூட்டிக் கொண்டே போகலாம் - ஒலிகள் மாறாமல்.

தமிழ் ஓர் உயிர் மொழி. அதிலும், திராவிட மொழிகளுக்கு தமிழே ஆணி வேர். அந்த ஆணி வேரை ஏணி வைத்தாலும் எட்ட முடியாது சமஸ்கிருதத்தால்.
சமஸ்கிருதம் ஓரு பட்ட மரம்; தமிழோ வளரும் ஆல மரம்! தமிழனுக்கு என்றொரு நாடு, என்று பெருமை கொள்ளும் நாளும் வரும்.

உண்மையுடன் 
பொன்னியின்  செல்வன்

நன்றி : 

‘தை ஒன்று’ தமிழ் புத்தாண்டின் தொடக்கம்

vallur.jpg  
'தை ஒன்று' தமிழ் புத்தாண்டின் முதல் நாள். அத்-'தை'-யை கொண்டாடுவது தமிழர்க்கு மாண்பு. அதாவது, 'தை' என்ற மாதத்தை.
மனிதர்களுக்கு புத்தாண்டு தேவையா? என்று வினவினால்; தேவைதான். ஏன் தேவை? என்றால்:
  • -    மனிதர்கள் புத்துணர்ச்சி பெற
  • -    பழையன கழிந்து புதியன புக ஒரு வாய்ப்பு
  • -    சற்றே இளைப்பாற; உழைத்த உழைப்பிற்கு களிப்பு பெற
  • -    முன்னேற்றத்தின் வழிகோலாய் புது வகையில், புது வியூகத்தில் முயற்சிகள் மேற்கொள்ள
  • -    அன்பைப் பறிமாற
  • -    ஆறுதல் பெற
  • -    தேறுதல் அடைய
  • -    சென்ற வருட சத்தியத்தையே மீண்டும் இந்த வருடமும் தொடர J
என்று பல வகையிலும் புத்தாண்டுகள் பேருதவியாய் இருக்கும்.

இப்படிப்பட்ட புத்தாண்டு எவ்வாறாக அமைந்திருக்க வேண்டும்? என்று சிந்தித்து பார்த்தால்:
  • -    மதச் சார்பின்மையாகவும்
  • -    மூட நம்பிக்கைகள் இன்றியும்
  • -    பகுத்தறிவு கண்ணோட்டத்தோடும்
  • -    கற்றறிந்த அறிஞர் பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
  • -    இயற்கையோடு இணைந்த
  • -    எளிமையாய், இனிமையாய், இனத்திற்கு பெருமையாய்
இருக்க வேண்டும்.

ஆனாலும், சில வருடங்கள் முன்வரையிலும் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வந்த தமிழ் வருடப்பிறப்பு (சித்திரை 1) மேற்கூறிய வகையறாவில் வரவில்லை.
தமிழர்க்கு என்று ஒரு ஆண்டுக்குறிப்பேடு இல்லை என்ற வருத்தத்தை போக்கும் வகையில், 'தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாள்' என்று அரசு சட்டம் இயற்றியது. அதன் சுருக்கம் வருமாறு :

58. In 1921, over 500 scholars under the leadership of the great scholar and founder of 'Thani Tamil Iyakkam', Thiru Maraimalai Adigalar had met in Pachaiyappa's College at Chennai and had decided that Tamils need a separate calendar and a new calendar in the name of Saint Thiruvalluvar could be followed and this would constitute the 'Tamil Year'. They also determined that the birth year of Thiruvalluvar was 31 BC. This decision was accepted by Hon'ble Chief Minister Kalaignar even as early as 37 years ago and it was ordered to be followed in the Government Diary from 1971 and the Government Gazette from 1972. In view of the consensus amongst almost all Tamil Scholars that the first day of the month of Thai, is the first day of the Tamil year, this Government has decided to declare 1st Thai as the Tamil New Year day. Therefore, the people of Tamil Nadu, who now celebrate Pongal as the festival of Tamils, can now celebrate it as Tamil New Year day also with redoubled joy. On this day let the people of this State plant trees bearing the 'Mukkani' fruits of banana, mango and jackfruit; draw colourful Kolams; decorate their houses with array of lamps showing them in new splendour; wearing new clothes sing and dance in praise of Tamil pride and self respect; spread the message of equality and shower their love and joy.

விடுவார்களா இந்து மத பக்தர்கள்; 'தமிழ் நாடு முருக பக்த பேரவை', போட்டார்கள் ஒரு கோர்ட் கேசை! இதில் வியப்பைப் பாருங்கள்; கிறிஸ்துவ அமைப்புகளோ, இஸ்லாமிய அமைப்புகளோ, புத்த அமைப்புகளோ, சமன அமைப்புகளோ கோர்ட் கேஸ் போடவில்லை. இதில் இருந்து புரிவது என்னவென்றால், சித்திரை ஒன்று என்பது இந்து மதத்தின் உற்பத்தி என்று. ஆக சித்திரை ஒன்று மதம் சார்ந்தது என்பது தெளிவாகிறது.

கேஸ் இதுதான்:

கற்பனை கதாபாத்திரமான பிரம்மா, சித்திரை ஒன்றில்தான் உலகை படைத்தார், என்று தமிழ் இந்துக்கள் நம்புகிறார்களாம்!
தமிழ் இந்து calendar 60 வருட சுழற்சியை பின்பற்றுகிறதாம்; அதுவும் ''Nirayana' vernal equinox' படியாம். அது என்ன ''Nirayana' vernal equinox' என்று கேட்காதீர்கள். Vernal Equinox பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக்கவும் :
http://www.nasa.gov/audience/forstudents/5-8/features/FirstDayAutumn_Feat_5-8.html


வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு அவர்கள், "60 வருட சுழற்சி எப்படி உருவானது என்பது விவாதத்திற்குரியது; அந்த 60 வருடங்களுக்கும் சம்ஸ்கிருத பெயர்கள் எப்படி வந்தது?" என்றும் சுட்டிக்காட்டி வினவினார்.மேலும், "இந்த கேள்விகள் எந்த அறிஞராலும் விளக்கப்படவில்லை. ஆகையால் விவாதம் அறுதியிட்டு நம்ப இயலாததாகிறது" என்றும் கூறினார்.
 

இவ்வாறாக, தமிழ் வருடப்பிறப்பை 'தை ஒன்றாக்கியது' சட்டப்படி செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்கள்.

கற்பனையான முருகனை நம்பினோர், முருகனை நம்பாமல் ஹை கோர்ட்டை நம்பினார்களோ இல்லியோ.அதான் முருகன் தண்டிசுட்டார் போல! இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் கற்பனை கதாபாத்திரம்தான் முருகன் என்று!

1921-ல் 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இசைவு தர ஏற்றுக் கொள்ளபட்டதுதான் 'தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு' என்பது.
'தை' என்ற ஓர் எழுத்து; 'தை' என்ற அந்த ஓரு வார்த்தைதான், தமிழ் புத்தாண்டின் தொடக்கம். இதை நாம் ஏதொ வாய்க்கு வந்தபடியில் கூறவில்லை. மாறாக, எந்த பூத கணமும் கூறவில்லை, தேவ கனமும் கூறவில்லை; அசரீரியாகவும் கேட்கவில்லை; கடவுள் என்ற பெயரில் வானத்தில் இருந்து குதித்து வரமும் கொடுக்க வில்லை.
'தை ஒன்று' தான் தமிழரின் வருடத்தில் முதல் நாள் என்று தமிழறிஞர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள்.

கருத்தரங்கம்
தமிழாண்டு தீர்மானிப்புக் கருத்தரங்கம்
இடம்
பச்சையப்பன் கல்லூரி, சென்னை
தலைமை
தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்
முன்னிலை
பேராசிரியர் கா.நமச்சிவாயம்
வருடம்
1921
முடிவு
திருவள்ளுவராண்டின் அடிப்படையில் தை முதல் நாளே ஆண்டின் தொடக்கம்.
முடிவெடுத்த ஏழு முதன்மை தமிழறிஞர்கள்
  •  மறைமலையடிகளார்
  • பேரா. கா.நமச்சிவாயர்
  • தமிழ்த் தென்றல் திரு.வி.க.
  • தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணி-யம்
  • சைவப் பெரியார் சச்சிதானந்தம்
  • நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
  • நாவலர் சோமசுந்தர பாரதியார் 



பின்னர் தந்தை பெரியாரும் தமிழ் புத்தாண்டு பற்றி தமிழறிஞர்கள் கூறியதை ஏற்று மக்களிடையே பரவலாக்கினார்கள். இப்படி கற்றறிந்த அறிஞர் பெருமக்களாலும், பட்டறிவு பல்கலைக்கழகமாய் விளங்கும் தந்தை பெரியாரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட்துதான், 'தை ஒன்று தமிழ் புத்தாண்டு'.

இந்து மத நூலான அபிதான சிந்தாமணியில் இருக்கிறது, தமிழ் வருடப்பிறப்பின் விளக்கம். இந்து மத நூலாயிற்றே, வில்லங்கம் இல்லாமலா இருக்கும். கவலையே படாதீர்கள், 'காம லீலை' 'காம ரசம்' 'காம சாம்பார்' 'காம இச்சை' 'காம எச்சை' என்று அள்ளி தெளிக்கும் வகையில் இருக்கிறது இந்த வருடப்பிறப்பின் கதை.
எந்தக் கதை? சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டாக சித்தரிக்கும் கதை.

கதை இதோ:
கற்பனை கதாபாத்திரமான நாரதருக்கு, ஒரு நாள் காம இச்சை ஏற்பட்டதாம். அதுவும் தேவ ரிஷியான நாரதர், தேவலோகத்தில் இருந்திண்டு காம இச்சையை   அணைக்காமல் இருக்கலாமோ என்ன?
அதனால்
 நாரதர், எங்கு போனால் தன் காம இச்சையைத் தீர்க்க முடியும்? என்று, தன்னுடைய 'Palm Top Computer' எடுத்து - அதாங்க 'ஞான திருஷ்டியில' பார்த்து;
ஆங்! இந்த வேலைக்கு, 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து' கற்பனை கதாபாத்திரமான 'கிருஷ்ணன்'தான் சரி என்றுணர்ந்து, கிருஷ்ணனைப்  பார்க்க வருகிறார் நாரதர்.

கிருஷ்ணன் நாரதரைப் பார்த்து:
"என்ன ஒய்! எங்கே இந்த பக்கம்? என்ன வேணும் உமக்கு?" என்கிறார்.

நாரதர், "அது ஒன்னும் இல்லைங்காணும்…..ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்ம்…..... " என்றபடியே தலையை சொறிகிறார் - பல்லை இளிக்கிறார்.

"அட சும்மா சொல்லுங்கானும்.. நமக்குள்ள என்ன
 formality"  என்கிறார் கிருஷ்ணன்.

"சொன்ன கோச்சுக்கப் புடாது. உங்களாண்ட 60000 கோபிகையர் இருக்கா"

"ஆமா! இருக்கா. அதுக்கு?"

"அதில நேக்கு ......."

"நோக்கு ? ......."

"நேக்கு ஒன்னே ஒன்னு தரேளா"

"அட! இதென்ன பிரமாதம்; பேஷா செஞ்சிட்டா போச்சு! நீர் என்ன பண்றீர்ணா; இன்னிக்கு ராவுல, என்னுடைய 60000 கோபிகையர்களில், நான் இல்லாத
 ஏதாவது ஒரு கோபிகையர் வீட்டுக்கு போய், என்ஜாய் பண்ணும் ஒய்!"

நாரதருக்கோ மகா குஷி. பின்னே? கிருஷ்ணரின் கோபிகை என்றால் சும்மாவா? நாரதர் உடனே மனக்கணக்கு போடுகிறார்; கிருஷ்னனுக்கு இன்று இரவுக்கு ஒன்று போக, மீதம் 59999 இருக்குமே! என்று மலைத்து விட்டாராம். 'இங்கி பிங்கி பாங்கியோ''சா பூ த்ரீயோ' - யாருக்கு தெரியும்.

இரவும் வந்தது.

நாரதர் கோபிகையர் வீடுகளுக்கு விஜயம் செய்தார். எந்த கோபிகையர் வீட்டுக்குப் போனாலும் அங்கெல்லாம் கிருஷ்ணன் படுத்துக்கொண்டு இருக்கிறாராம்.. இது ஏதடா வம்பா போச்சே!
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்; எங்கும் நீக்கமற நிறைந்திருப்பார் என்றால் இதுதான் போலும்! என்று சலித்து கொண்டே; நாரதர் சல்லடை போட்டுத் தேடுகிறார் ஒவ்வொரு வீடாக.

கடமை உணர்ச்சி என்ற ஒண்டு இருக்கிறது அல்லவா? அதுவும் கடமை 'காமத்திற்கு' என்றால் கேட்கவே வேண்டியது இல்லை; அர்த்த சாமமானாலும் காமக் கடமைக்கு அளவேது? எவ்வளவு தேடியும் எல்லா வீட்டிலும் கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, கிருஷ்ணன் வீட்டுக்கே போக முடிவு செய்கிறார் முடிவாக.

அப்படிப் போகும் போது என்ன எண்ணினாராம் நாரதர் என்றால்? அது ஒரு தனி வெட்கக்கேடு. வேறென்ன, நம்மூரில் சொல்வார்களே, 'துணிக் கடை பொம்மையைக் கூட விட மாட்டான் போல இவன்' என்று. அதுபோல,
கிருஷ்ணனையே சல்லாபித்து விடுவதாக கங்கணம் கட்டி கொண்டாராம் நாரதர். இது ஏது புதுக்கதையாக இருக்கிறது.
அதாவது, தன்னை அலைய விட்டு காம இச்சையை அடக்க விடாமல் மோசம் செய்த கிருஷ்ணனையே 'மோசம்' செய்வதாக எண்ணிக் கொண்டாராம் நாரதர்.
  

நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து :
    
"கிருஷ்ணா இது உமக்கே அடுக்குமாங்கானும்"
கிருஷ்னனோ, "எது நாரதரே?"
"இப்படி ஒவ்வொரு கோபிகையர் வீட்டிலேயும், நான் வரும் நேரமாகப் பார்த்து  attendance போட்டிண்டு என்ன டீல்-ல விட்டுட்டியே கிருஷ்ணா. என் காம இச்சையை அடக்க, என்னைப் பெண்ணாக்கி உன்னையே நான் அடைய விரும்புகிறேன்." என்று நாரதர் கெஞ்ச.

கிருஷ்ணன் நாரதரை ஸ்திரீ நாரத அம்மாள் ஆக்கி, அந்த ஸ்ரீமதி நாரத அம்மாளை அனுபவித்தாராம். எவ்வளவு வருடம் என்றால்? 60 வருடம்! இந்த 60 வருடத்திற்கும் 60 குழந்தைகளாம்! அந்த 60
 குழந்தைகளும் 60 வருடங்களாகி விட்டன.

பின்னர் ascending order-ல்
  ஆளுக்கு ஒரு முறை இந்த உலகத்தை ஆள சொல்லி விட்டார்களாம். அப்படிப் பட்ட முட்டாள்தனமான வருடப்பிறப்பு தான், 'சித்திரை' மாதத்தில் அடுத்த ascending order  வருடத்திற்கு மாறுமாம்.

இது மூட நம்பிக்கைகள் நிறைந்தல்லவா  இருக்கிறது!

'தை ஒன்று தமிழ் புத்தாண்டு'-ல் எந்த மூட நம்பிக்கைக்கும் இடமில்லையே!
அந்த முட்டாள்தனமான புதுவருட பிறப்பின் படி, தற்போதைய வருடம் - விக்ருதி. அதாவது 'விக்ருதி' தான் உலகை ஆண்டு வருகிறாராம்.
'பாரக் ஒபாமா', 'டேவிட் கேமரூன்', 'விளாடிமிர் புடின்'
 என அகில உலகத் தலைவர்கள் யாராக இருந்தாலும், எது செய்வதாக இருந்தாலும் இந்த 'விக்ருதி' அனுமதியோடதான் செய்கிறார்கள் போலும்.
இது பகுத்தறிவுக்கு ஏற்றதாக இருக்கிறாதா?

இப்படிப்பட்ட மூடத்தனமான புது வருடப்பிறப்பை தந்தை பெரியார்தான், மாற்றி அமைக்க தளம் அமைத்து கொடுத்தார்கள்!
இனி தமிழ் புத்தாண்டு என்றாலே 'திருவள்ளுவர்' ஆண்டு கணக்கின்படி 'தை' மாதம் ஒன்றாம் தேதிதான்.

பூமி சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அப்படி சுற்றி வரும் போது ஜனவரி மாதத்தில்தான் பூமி சூரியனை மிக அருகில் சந்திக்கிறது. இதனை அறிவியலில் 'Perihelion' என்று கூறுகிறார்கள்.




இந்த வகையில், இயற்கையோடு இணைத்து பார்க்கையிலும், தை என்பது ஆங்கில மாதமான 'ஜனவரி'யின் மத்தியில்தான் தொடங்குகிறது. ஆக, நம் 'தை ஒன்று தமிழ் புத்தாண்டு' என்பது, பூமிப்பந்து சூரியனுக்கு மிக மிக அருகில் தொடங்கி ஒரு சுற்று சுற்றி வருகிறது என்று கொள்வது மிக மிகப் பொருந்தும்! அதாவது பூமிப்பந்து சூரியனுக்கு மிகக்குறைந்த தூரத்தில் இருந்து சுற்ற ஆரம்பித்து; நாளாக நாளாக தூரம் மாறிக்கொண்டே வரும். ஒரு வருடம் சுற்றிய பிறகு மீண்டும் ஆரம்பித்த இட்த்திலேயே இருக்கும், அதாவது சூரியனுக்கு மிக மிக அருகில்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடுவார்களே தொடக்கப் புள்ளியில் இருந்து; அது போல!

மதச் சார்பு இன்றி, மூட நம்பிக்கை இன்றி, பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு, அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன உணர்வைத் தந்து, இயற்கையோடும் ஒத்துப்போகும் – 'திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்று' நம் புத்தாண்டாய் இருப்பதில் நமக்கு எப்போதும் ஏற்றமே!

ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்க; தந்தை பெரியார் பாணியிலேயே கூறுவதாய் இருந்தால், இது நம் கருத்துதானே ஒழிய இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. சற்றே சிந்தித்துப் பார்த்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

நன்றி – ஆதாரம்:

ராம் செத்தாராம்


ற்பனை கதாபாத்திரமான ராமால், சேதாரம் அதிகம்; அதற்கு ஆதாரம் : பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரம், மனித உயிர்கள் இழப்பு.
கற்பனை கதாபாத்திரமான ராமால், ஆதாயம் குறைவு; அதற்கு ஆதாரம் : சேது சமுத்திர திட்டம்.

கடப்பாரை கொண்டு மசூதியை இடித்த காவித்தீவிரவாதிகள் நினைத்து கொண்டிருக்கக் கூடும்; தாங்கள், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' என்று.
அதாவது, தங்களைக் கேள்வி கேட்க; தவறைச் சுட்டிகாட்ட; யாருமே இல்லை என்ற இறுமாப்பு நிலை.

'புத்தியற்ற காவி பதர்கள்' செய்த மசூதி இடிப்பை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரம தருமம் என்னவெனில்:
கற்பனை கதாபாத்திரமான பிரம்மாவின்- 
முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பணன்; கற்பனையான முதல் சாதியாம் :(
தோளில் பிறந்தவர்கள், சத்ரியன்; கற்பனையான இரண்டாம் சாதியாம் :(
தொடையில் பிறந்தவர்கள், வைசியன்; கற்பனையான மூன்றாம் சாதியாம் :(
காலில் பிறந்தவர்கள், சூத்திரன்; கற்பனையான நான்காம் சாதியாம் :(
இதற்கும் கீழே 'பஞ்சமர்' என்றெல்லாம் பிரித்து வைத்திருகிறார்கள் 'புத்தியற்ற காவி பதர்கள்' :( :( :( :(

இராமாயண கற்பனை கதையில், சம்பூகன் எனும் சூத்திரன் தவமிருந்தானம். அப்படி தவமிருந்தவனை, ராமன் எனும் கற்பனை கதாபாத்திரம், தலையைக் கொய்து கொன்றானாம். எப்படி இருக்கிறது நியாயம்? இந்து மத தர்மத்தின்படி சூத்திரன் தவம் செய்யக்கூடாதாம். தவம் உண்மையோ பொய்யோ அதை பிற்பாடுப் பார்ப்போம். ஆனாலும், கற்பனை கதைப்படியே எடுத்துக் கொண்டாலும், சூத்திர சம்பூகனைக் கொல்ல, கற்பனையான முதல் சாதியான பார்ப்பணன் ராமனுக்கு எவன் உரிமை கொடுத்தான்? இதுதான் இந்து மதம் தூக்கிப் பிடிக்கும் சாதிய அடிமைத்தனம். இது என்ன ஓரவஞ்சனை, ராமன் மட்டும் கற்பனை கதாபாத்திரம், சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் இல்லையா? என்று வருத்தம்கொள்ளத் தேவையில்லை. சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான். எப்போது என்றால்?, ராமன் எப்போது கற்பனை கதாபாத்திரம் என்ற உண்மை ஏற்கப்படுகிறதோ, அக்கணமே சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான்!

நன்றாக கல்வி கற்றுவிட்டு, கணினியில் உட்கார்ந்து கொண்டு, கை நிறைய சம்பாதிக்கும் பலர் கூறுகிறார்கள்; 'உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது? இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இன்னும் ஏராளமிருக்கிறதே' என்று. சாக்கடையில் எவ்வளவு நல்ல விஷயம் இருந்து என்ன பயன்?

அது எப்படி, 'இந்து பயங்கரவாதிகள்' என்ற வார்த்தையைக் கூறலாம்? என்றால்; யாரை இந்து பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறோம் என்றால்:
- வர்ணாசிரம தருமத்தை, சிரமப்பட்டாவது 'எப்பாடு பட்டேனும் பிற்பாடு புகுத்துவோர்'.
- சாதி எனும் சாக்கடையை நிலை நிறுத்துவோர். கல்வியாலும், அறிவாலும், உழைப்பாலும் சாதித்து முன்னேற விரும்புவோரை அடக்க, சாதியை ஒரு கருவியாய் பயன்படுத்துவோர்.
- தீண்டாமையை ஆதரிப்பவர். மனிதனை மனிதனாய் பார்க்காமல் மிருகத்தினும் கேவலமாய் நடத்துவோர்.
- தனிப்பட்ட கருத்தை, தன்னுடைய ஆதாயத்திற்காக, அதாவது சுயநலத்திற்காக பிறர்மேல் தினிப்போர்.
இவை மட்டும் நிலையான பட்டியல் இல்லை; இவை நீளும் கூட.

நீங்கள் மேற்கூறிய பட்டியலில் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் வீன் எரிச்சல்? மாறாக, இந்த பட்டியலில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். இது அறிவு யுகம். அறிவு யுகம், அதன் ஆழத்தை அடைவதற்கு முன்னர், அலையாய் ஆர்ப்பரிக்கும் காலம் இது. இப்படி அலை ஆர்பரிக்கும் காலத்தில், இவ்வளவு நாளாக மேற்கூறிய இந்து பயங்கரவாதத் தன்மையை வெளிபடுத்தியவர் யாராயினும்; அவர்களையும், அவர்கள் சேர்ந்தோர் மேலும் இயல்பாகவே பாய்ச்சல் வரும்.

நீங்கள் நேர்மையானவர் என்றால் உங்களை நீங்களே மெச்சிக் கொள்ளலாம்! நம் பாராட்டுகளும் கூட!

ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை, வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், அயோத்தியாதான் ராம் என்ற அந்த கற்பனை கதாபாத்திரத்தின் பிறந்த ஊர், என்று ஊகித்து எடுத்துக்கொண்டால் கூட; பல நூறு வருடமாக இருக்கும் ஒரு மசூதியை இடிக்க இந்த கற்பனையான ராம (க்)தர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புத்த விகாரங்கள் பலவற்றை அழித்து அதன் மேல் கோவில் கட்டியதாக வரலாற்று ஆதாரங்கள் இருகிறதே! அப்படி என்றால், அழிக்கப்பட்ட புத்த விஹாரங்கள், மீண்டும் அதே இடங்களில் உருவாவதை இந்த கற்பனையான ராம ப(க்)தர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தானே! கற்பனையான ராம (க்)தர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

ராம் என்ற கற்பனை கதா பாத்திரம் எங்கே பிறந்தார் என்று, ஏன் இவ்வளவு கேள்வி?
கற்பனை கதாபத்திரம் என்பதால் மூளையில்தான் பிறந்திருப்பார் :) ! அப்படி என்றால் ராம் ஜென்ம பூமி என்பது மூளையை அல்லவா குறிக்கும்?
[ அதற்கும் மேல் பதில் வேண்டுமானால், உயிரியல் (zoology) புத்தகத்தைப் படித்தால், ராம் எங்கு பிறந்திருப்பார் என்று விளக்கம் கிடைக்கும். அல்லது கனிவான gynecologist இடம் விசாரிக்கலாம் !  இதற்கு மேல் வாயைப் பிடுங்காதீர்கள்! ஆமாங்கானும் :) :) ! ]

ராம் என்ற பெயரை தொடர்பு வைத்துக் கொண்டுதான், இன்றைய தேசிய கட்சிகள் காங்கிரசும், பாரதிய ஜனதா தளமும் வளர்ந்திருக்கிறது. எப்படி என்றால்? 
காங்கிரசை வளர்த்தது காந்தி; காந்தி விரும்பியது ராம ராஜ்ஜியம்.
காந்தியை சுட்டது கோட்சே; கோட்சே சார்ந்தது ஆர்.எஸ்.எஸ்; 
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா தளம்.
கோட்சே 'சுட்டாராம்'; காந்தி 'செத்தாராம்'!
'சுட்டாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியாகவும்; 
'செத்தாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியாகவும் வளர்ந்து இருக்கிறார்கள் :) :) (உபயம் : பெரியார் தாசன்)

தமிழகம், எந்த மத ரணத்திற்கும் ஆளாகாமல், அமைதியாக இருப்பதற்குக் காராணம், ராம் எனும் கானல் நீரான மாயத்தோற்றத்தை கண்டு மதிமயங்காமல் இருப்பதால் தான்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய் விடும். இது எப்படி என்றால்? இதனை ஆங்கிலத்தில் mutual exclusion semaphore என்பார்கள். அதாவது, ஒரு நாணயத்தை சுண்டி விட்டால், பூ விழுமா? தலை விழுமா? ஒரு நேரத்தில் 'பூ' விழலாம். மற்றொரு நேரத்தில் 'தலை' விழலாம். 'பூ' விழுந்தால் 'தலை' விழாது; 'தலை' விழுந்தால் 'பூ' விழாது. அது போல, 'புத்தி' வந்தால் 'பக்தி' வராது. 'பக்தி' வந்தால் 'புத்தி' வராது.

[ எடக்கு மடக்கா கேட்பதாய் எண்ணி, 'எப்போதுமே தல விழுந்தால்?' என்று கேட்டால்; 'அந்த நாணயம், அஜித் ரசிகருடைய நாணயம்' என்றுதான் சொல்ல இயலும். ]

அல்லது, புத்தி இஸ் inversely proportional to பக்தி. பக்தி எப்போது இல்லாமல் போகிறதோ அதாவது சூநியமாகிறதோ, அப்போதுதான் மனிதனின் அறிவு இன்பினிட்டி தொட இயலும்.
புத்தி = k * ( 1 / பக்தி)
எப்போது, பக்தி = 0 ஆகிறதோ,
அப்போது, புத்தி = infinity ஆகிறது!

மாறாக புத்தியை பூஜியமாக்கினால், ஹர ஹர நித்யானந்தா ஆகலாம்; கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள, அதாவது Accused ஆச்சாரியார் சங்கராச்சாரியார் ஆகலாம். அல்லது, கொலைக் குற்றவாளி பிரேமானந்தா ஆகலாம். அல்லாமல், பக்தியும் புத்தியும் விகிதாசாரத்தில் (proportionate) இருப்பவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, அரசியல்வாதியையோ, நடிகரையோ தலைவனாய் கொண்டு, பாலாபிஷேகம் பண்ணலாம் :) :)

வெளிநாட்டுகாரனோ கட்டுமானப் பணியை (construction), ஆட்களை குறைவாக வைத்து, எப்படி செய்யமுடியும் என்று பார்க்கிறான். கற்பனையான ராம (க்)தர்களோ எவ்வளவு கூடுதலான கூட்டம் வைத்துக்கொண்டு இடிப்பு (destruction) வேலையைச் செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் நீங்களே; கற்பனை கதாபாத்திரமான ஸ்ரீ ராமனால் சீரழியலாமா இந்தியா? காவித்துணி அணிந்து, அமைதி வழியில் நடப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்லிக் கொள்கின்றவர்கள், ஒன்றுகூடி ஒரு மசூதியை இடிப்பது காவித் தீவிரவாதம் தானே.

பகுத்தறிவாளர்களும், மனிதநேயவாதிகளும், மற்றும் கடவுள் எதிர்பாளர்களும் கூறும் சிந்தனை இதில் அவ்வளவும் ஏற்புடையது. இன்றைய தேதியில், அதுவும் இந்த அறிவு யுகத்தில் கடவுளாலும், மதத்தாலும் தான் அமைதி பெருவாரியாக குலைகின்றது. இதை யாராலும் மறுக்க முடியாதே! இவற்றை முன்னிட்டுதான், தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயம் வளர, சகோதரத்துவம் வளர, சமத்துவம் அடைய வேண்டுமானால்; கடவுள், மத, சாதி, மூட பழக்க வழக்கங்களை வேரோடுக் கிள்ளி எறிய வேண்டும் என்று, தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். வாழ்நாள் முழுதும் என்பது கூட தவறுதான். ஏனென்றால், பிறக்கும் போதே இந்த புனித செயலுக்காதான் பிறந்தாரா? என்ற எதிர் கேள்வியை இது உருவாகக் கூடும். ஆகையால், பெரியார் அவர்கள் தன்னுடைய பட்டறிவால் உணர்ந்து தெளிந்தது முதல், கற்பனையான கடவுள், மதம், சாதி, மூட பழக்கவழக்கங்களை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று தன்வாழ் நாள் முடியும்வரை பாடுபட்டார். 

மூத்திரப் பையை தூக்கி கொண்டும் ஊர் ஊராகச் சென்று, இந்து மத பொய் சாஸ்திரங்களில் மறைந்திருக்கும் சூழ்சிகளை எடுத்துக்காட்டி, பகுத்தறிவை பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் பட்ட அவமானங்கள் சொல்லி மாளாது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டும், மனித சமுதாயம் முழுமைக்காக உழைத்தார் தந்தை பெரியார். பெரியார் இல்லை என்றால், நாம் இன்றைய நிலை அடைந்திருக்க முடியுமா!


பெரியார் பிறந்த மண்ணில், காவித் தீவிரவாதிகளை 'கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து கொள்வார்கள் !

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

ராம் செத்தாராம்

உள்ளத்தின் குரல்





சொல்’  - இதைப் பற்றி, திருவள்ளுவர் எவ்வளவோ சொல்லி இருக்கிறார்! சொற்களின் சிக்கனத்துக்கு திருவள்ளுவரே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஏழே வார்த்தையில் கருத்தையும்; அதே நேரத்தில் உவமைகளையும் கூறி; சொற் சிக்கனத்தை போதித்த திருவள்ளுவர் தான், இன்றைய நவீன யுக ட்விட்டர்-களுக்கும்(Twitter) முன்னோடி!

இப்படியாக ட்விட்டர் புண்ணியங்களால் சொற்களைக் கூட சிக்கனம் செய்து விடலாம். ஆனாலும், கேள்வி செல்வமான கேட்பதில், சிக்கனம் செய்ய முடியுமா? என்றால்; அதுதான் முடியாது.

வாயைத் திறந்துவிட்டு, பேசாமல் கூட இருந்து விட முடியும். ஆனாலும், ஒருவர் வாய் திறந்து பேசி விட்டால்; அதைக் கேட்காமல் தான் இருந்து விட முடியுமா?  பேசுவதைக் கூட தடுத்து விட முடியும்; கேட்பதை தடுத்துவிட முடியாது. நிறைய கேட்க வேண்டும் என்பதால்தான் இயற்கையிலேயே இரண்டு காது இருக்கிறது; ஒரு நாக்கு இருக்கிறது. நாக்குக்காவது கதவு இருக்கிறது. காதுக்கு ஏது கதவு? பல நேரங்களில்; பேச்சை, கேட்டு கேட்டு காது பஞ்சர் ஆகி, ‘ஸ்சே.ம் ப்ளட்………’-இல் அல்லவா முடிகிறது.

வாய், ஆட்டோமெடிக் கதவு போல; அதுவும் மனைவி முன், வாய் தானாகவே மூடிக் கொள்ளும். ஆனால், இந்த காதுக்கு தான் இப்படிப்பட்ட கதவுகள் இல்லை. மனைவியின் ‘தொன தொன’க்களை கேட்டே ஆக வேண்டியிருக்கிறது. என்னது? ‘கேட்டா’; காதில் போட்டுக் கொண்டாக வேண்டியிருக்கிறது! காதில போட்டாதான், உப்பு அளவா போட்ட சோத்த வாயில போட முடியும், சாரே!

காதுக்கு வடிகட்டியும் போட முடியாது. நமக்கு நாமே தான் அந்த கட்டுப்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இதைத்தான் பாரதி, ‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிறார். கேட்பதில், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கேட்பதில் மூன்று வகை இருக்கிறது. உடலால் கேட்பது; மூளையால் கேட்பது; உள்ளத்தால் கேட்பது.

உடலால் கேட்பது – தீப்பொறி(!) பேச்சாளர்கள், அடுத்த கட்சி தலைவரைப் பற்றி, ஆ……….பாசமாய் மேடையில் பேசும் போது; சருமத்தால் மட்டும் கேட்டு விட்டால் நன்மை. அதாவது, சத்ததை உடம்புக்கு வெளியிலேயே நிறுத்தி விடுவது. சும்மா… சும்மனாகாச்சுக்கும் கேட்டா போதும். முடிந்தால் அங்கிருந்து ஓடியே விடுவது நலம்.

மூளையால் கேட்பது – அறிவியல் மாநாட்டில், வகுப்பில் கேட்கும் வகை.

உள்ளத்தால் கேட்பது – அதாவது, ‘வாழ்க வளமுடன்’, ‘வாழும் கலை’ போன்ற கூட்டங்களில் கேட்கும் வகை இது. அப்புறம், காதலர்கள் சொல்லும் ‘டெலிபதி’ கூட இந்த வகை தான்.

மகாத்மாக்கள் இதயத்தைத் திறந்து கொண்டு கேட்கிறார்கள். நாமோ, தொலைக்காட்சியை ஆன் செய்து, சீரியலில் ‘நம்ம குடும்பம்’ பார்த்துக் கொண்டே, “அத்தை, ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்-னு சொன்னீங்களே. சொல்லுங்க அத்தை”, எனும் வகை!

குரல்களில் எல்லாம் மிகச்சிறந்த; மற்றும் கேட்க வேண்டிய;உன்னதமான, உண்மையான குரல், நமக்குள்ளே இருக்கும் அந்த உள்ளத்தின் குரல் தான். அந்த உள்ளத்தின் குரல் தான் உண்மையின் குரல்; அறத்தின் குரல்.

இனி, உலகின் வேறு எந்த துக்ளியோண்டு ஒலியும் கேட்க விருப்பமின்றி; உள்ளத்தின் குரலை மட்டும் கேட்டாலே போதும்; என்றேண்ணினால்; சற்றே பொறுப்போம்! நிலவில் ஒலி கேட்காது. ஒலி பிரயாணிக்க ஊடகம் தேவை. 2015-இல் சந்திரனுக்கு மனிதரை அனுப்பும் திட்டம் இருப்பதாய் இஸ்ரோவில் சொல்லப் படுகிறது. அப்படி அனுப்பும் போது, நாமும் நிலவுக்கு சென்று; புற உலகின் ஹை டெசிபல் சத்தத்தின் பிடியில் இருந்து தப்பிக்கலாம். அது அதிக செலவு பிடிக்கும் என்றால்; 2050 வரை பொறுத்துக் கொள்ளலாம். எப்படியும் இன்றைய அரசியல் வாதிகளின் கொள்ளுப் பேரன்கள் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையில், இலவசமாய், வீட்டிற்கு ஒருவர் நிலவுக்கு சுற்றுலா அனுப்பி வைக்கப் படலாம். உள்ளம் என்ற ஒன்று இருந்து; அந்த உள்ளத்தின் குரல் ஒலித்தால், ஒரு வேளை இலவசத்தை   எதிர்க்கலாம்.


ஹரீஷ்

அட, அகராதி!




கராதி’ என்றால் என்ன தெரியுமா? 


சமீபத்தில் கமலுக்கு, 50 வருட கலை சேவையை முன்னிட்டு நடந்த பாராட்டு விழாவில்; மேடையில் கமலைப் பார்த்து, “நடிப்புக்கு கமல் ஒரு டிக்ஷனரி” என்று கூறினார்கள். அதற்கு கமல் அடக்கமாகவும் பொறுமையாகவும், “டிக்ஷனரி என்றால், தமிழில் ‘அகராதி’ என்று பெயர்”, என்றார் சிரித்துக்கொண்டே. மேடையில் குழுமியிருந்த எத்தனைப் பேர், கமல் கூறிய ‘அகராதி’-யின் உண்மை அர்த்தம் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. கமல் கூறிய ‘அகராதி’-யின் அர்த்தம் ‘கிருத்துருவம்’, ‘எகனைக்கு-மொகனை’, ‘ஏட்டிக்கு-போட்டி’ போன்றவை. இந்த அர்த்தங்கள் எல்லாம், எந்த அகராதியைப் புரட்டி பார்த்தாலும் இருக்காது!


திருக்குறளின் முதல் குறள்; அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகராதி’ வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; நான்காம் வார்த்தை ‘ஆதி’; அகர+ஆதி = அகராதி.


அகராதிக்கு மற்றுமொரு பெயர் ‘அகரமுதலி’. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகரமுதலி’-யும் ஏறக்குறைய வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; இரண்டாம் வார்த்தை ‘முதல’. ஆக, அகர+முதல+(இ) = அகரமுதலி.


தமிழ் மொழியில் எழுத்துகள்,‘அ’ வில் ஆரம்பித்து ‘ன்’ வரை இருக்கிறது. இவ்வகையில்,திருக்குறளுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது; திருக்குறளின்,முதற் குறளின் முதல் எழுத்து ‘அ’; கடைசிக் குறளின் கடைசி எழுத்து ‘ன்’. ஆஹா! திருக்குறளில் இப்படி மறைத்து மறைத்து எவ்வளவு சூட்சமங்கள் இருக்கிறதோ? தெரிய வில்லை! இப்படி, பொதுவாகப் பார்த்தால் தெரியாமல், மறைத்து வைத்தும் பல பொருள் தருகிறதே திருக்குறள்;அதனால் தான் திருக்குறள் பொதுமறை-யோ! (விளக்கம்: 'மறை' என்றால் வேதம். 'பொது' என்றால் அனைவருக்கும் பொதுவானது. அதாவது எல்லா மனிதர்களும் ஏற்றுக் கொள்ளும் கருத்துகள்.)


'அகராதி’ என்றால் பொருள் தருவது; ‘பொருள்’ என்றால் பொண்,மணி,வைரம்,வைடூரியம் போன்ற ‘பொருள்’ அல்ல; சொற்பொருள் தருவது; அதாவது வார்த்தைக்கு விளக்கம் தருவது.


ஆங்கிலம் ஒரு கடனாளி மொழி.இப்போது ‘ஜெய்ஹோ’ வும் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது. கடனாளிகள் பகட்டாக உலவும் காலம் இது; எத்தனை கடன் அட்டைகள் பையில் இருக்கின்றனவோ அதற்கு ஏற்றார் போல் சிகப்பு கம்பள வரவேற்பும் இருக்கும். தமிழோ ஒரு கொடையாளி மொழி. அதுவும், தமிழ் போன்ற செம்மொழிகளில் அகராதி இல்லாமலா? தமிழில், அகராதிகள் தொகுப்பதற்கு முந்தைய காலங்களில் இருந்தவை, நிகண்டு. நிகண்டு என்றாலும் சொற்களின் தொகுப்புதான்;அதாவது, ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது; அல்லது, பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது;அதுவும் செய்யுள் வடிவில் இருக்கும்.


தற்காலத்தில் நிகண்டு இருந்தால் எப்படி இருக்கும்?
உதாரணத்திற்கு, 'ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது'; ‘முடிச்சிடலாம்’ என்றால், சதுரங்கம் விளையாடுபவருக்கு, விளையாட்டை முடிக்கவும்; கபாலிக்கோ,அரசியல்வாதி கை காட்டுபவரை ‘லேசா தட்டி’ கைலாசத்துக்கு அனுப்புவதும்!


அதுவே,'பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது';‘நடிகர்’, ‘அரசியல்வாதி’ என்றால் இரு வேறு சொற்கள்தான்;ஆனாலும், இப்போதோ அவை இரண்டும் ஒரே பொருளையே குறிக்கின்றன். பொருளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.அது அவரவர் கற்பனையைப் பொறுத்தது!


‘நிகண்டு’கள் பெரும்பாலும்அகர வரிசையில் இருக்காது; பாரதியார் ஒரு நிகண்டு தொகுத்திருக்கிறார்; அதன் பெயர் ‘பொருள் தொகை நிகண்டு’. 'நிகண்டு' 'அகராதி' போன்றவற்றை குறிப்பிடும் போது ‘எழுதி இருக்கிறார்’ என்று சொல்ல முடியாது; மாறாக ‘தொகுத்திருக்கிறார்’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.தமிழின் முதல் அகராதி(சதுரகராதி) தமிழரால் தொகுக்கப்பட்டது அல்ல. வீரமாமுனிவர் (ஜி.யூ.போப்) தான் முதன் முதலாய் தமிழ் மொழியின் அகராதியைத் தொகுத்தவர். ஆனந்த விகடனும் ஒரு அகராதியைத் தொகுத்து இருக்கிறது. அகராதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என தொல்காப்பியத்திலேயே விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ‘எழுத்தென் படுப அகரமுதல் னகர இறுவாய்’ என்று. 


எவ்வளவோ அகராதிகள் வந்தாலும், ஒரு ஆசிரியரின் பணியை அகராதியால் ஈடு செய்து விட முடியாது. அகராதி, அகராதி தான்; ஆசிரியர், ஆசிரியர் தான்!


இப்போது எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘அகராதி’ இருக்கிறது; அரசியல்வாதிக்கு என்று ஒரு தனி ‘அகராதி’ இருக்கிறது. “என் கடைசி மூச்சு இருக்கும் வரை, காவிரி நீரை தமிழகம் கொண்டு வர ஓயாமல் பாடுபடுவேன்”, என்பார் அரசியல்வாதி. ஆக! அப்படிப்பட்ட அரசியல்வாதியின் வாழ்நாளில், காவிரிநீர் தமிழகம் வந்து விடாதாம். ஆக! அவர் பாடுபட்டு கொண்டே தான் இருப்பார், போயும் போயும் பாடுபடுவதின் பலனை எல்லாம் நாம கேட்க முடியுமா?


அதிலும் முல்லைப் பெரியாறு அணை விவகார ‘அகராதி’ சற்றே தூக்கல். அகராதியின் அர்த்தம்; நேற்று, மத்திய அரசைக் கை காட்டி; இன்று, கேரள அரசைக் கை காட்டி; நாளை, இது காவிரி பிரச்சினைக்காக கூட்டப்படும் கூட்டம் என கர்னாடகாவை கை நீட்டினாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், எங்கள் அகராதியில்; சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்.


அதே போல் கணவன் மனைவிக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது. “என்னங்க! இந்த சரவணா தங்க மாளிகை விளம்பரம் சூப்பரா இருக்குல்ல?”, என்று கேட்டால்; அர்த்தமோ, ‘உங்க பொங்கல் போனஸ் எப்ப வருது ?!?’, என்பதுதான்.


ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்