வைரமுத்து

தமிழ் தந்த தவப் புதல்வன்.
கள்ளிக்காடு கண்டடெடுத்த கருப்புத் தமிழ்.
வடுகப்பட்டி வார்த்தெடுத்த வார்த்தை வள்ளல்.

முத்தமிழாம் இயல் இசை நாடகத்தில், முதல் தமிழாம் ‘இயல்’ தமிழை ஏழை எளியோனும் அறியும் வண்ணம் வார்த்தைகளில் வர்ண ஜாலம் காட்டுபவர்.

திரை மும்மூர்த்திகள் வைரமுத்து, இளையராஜா, பாரதிராஜா ஆகியோரில் மற்ற இருவருக்கும் பெயரில் ‘ராஜா’ இருக்கிறது. ஆனால் கவிஞருக்கோ ‘ராஜா’ பெயரில் இல்லாமல் வாங்கிய பட்டத்தில் இருக்கிறது. அதுவும் ‘பேரரசு’.
ஆம். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து !

கவிஞருக்கு கலைஞர் என்றால் ஒரு பிரியம். கலைஞருக்கும் அப்படியே.
கலைஞர் பேசும் போது பலரும் ஆவென்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். வைரமுத்து பேசும் போது கலைஞர் ஆவென்று பார்த்துக் கொண்டு இருப்பார்.

கவிஞர் பேசுகையில்
அதில்
பிழை இருக்காது;
ஒரு
தெளிவு இருக்கும்;

தெரிந்து கொள்ள
விஷயமிருக்கும்;
விஷயத்தை பற்றிய
புரிதல் இருக்கும்;

பகிர்ந்து கொள்ள
ஆசையிருக்கும்;
பகிர்ந்து விட்ட
திருப்தியிருக்கும்;

வார்த்தையில்
பரவசம் இருக்கும்;
கருத்துக்கள்
கனக்கச்சிதமாய் இருக்கும்;

அழுத்தமாய் ………….. ஆழமாய் ……………..
சிறிதும் திருத்தமின்றி;
தெள்ளெனத் தெளிவாய்
கருத்து சிதையாமல்
இருக்கும் சொற்கள்!

இதற்கு மேல் ஒரு விஷயத்தை யாரும் விளக்கி விட முடியாது என்னும் விதமாய் பேசுவார்.
இப்படி கோர்வையாய் அவர் பேசுவதை கேட்கும் கலைஞர் ஆவென்று பார்க்காமல் வெறென்ன செய்வார்.

விகடனில் கவிஞர் எழுதிய கருவாச்சி காவியம், தொடராய் வந்து கொண்டு இருந்தது. ஒரு வாரத்தில் பத்திரிகையில், இந்த வார தொடரை சிறுவர்களும் கர்ப்பஸ்த்திரிகளும் இதயம் பலகீனம் உடையவரும் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அந்த அத்தியாயத்தை படித்தோருக்கு தெரியும், வார்த்தையின் வலிமை. வார்த்தையின் சக்தி… வார்த்தைகளின் உணர்ச்சி. அந்த அத்தியாயத்தின் சாரம் என்னவெனில் ஒரு கர்ப்பஸ்திரி தனக்குத்தானே பிரசவம் செய்துக் கொள்வாள். இதை நாம் எளிதாய் ஒரு வாக்கியத்தில் சொல்லி விட்டோம். கவிஞரோ அந்த வாரத்தின் அத்தியாயத்தில், இதயம் பிழிய வைத்து, வயிற்றை புரட்ட விட்டு, உடலை நடு நடுங்க வைக்கும் அளவுக்கு, வார்த்தைகளில் வீரியத்தை கூட்டி தன் வார்த்தை ஜாலத்தை காட்டி இருப்பார்.

ஹொகெனெக்கல் பிரச்சினையில் பிரம்மாண்டமான திரை உலகப் பேரணி நடந்தது. அதில் பல இயக்குனர்களும், நிகழ்கால நடிகர்களும் வருங்கால முதல்வர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். அவற்றில் சில நேரம், உணர்ச்சி மிகுதியும், குறைவாயும், சில வசை பாடல்கள் எனவாக நடந்து கொண்டு பேரணி இருந்தது.
கவிஞர் வைரமுத்து வந்தார். பேசினார். மிக நயமாக பேசினார். நல்லதைப் பேசினார். அவர் பேச்சில் குற்றம் குறை கானாத படி பேசினார்.

ஐயன் வள்ளுவன் வாக்கு என்னவெனில்,
சொலல்வலன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

பேச்சுத் திறமை உள்ளவன், சோர்வில்லாதவன் பயப்படமாட்டான்; இவனை எதிர்த்து வெல்வது யாருக்கும் கஷ்டம்.
இது வைரமுத்து அவர்களுக்கு சாலப் பொருந்தும்.

கவிஞர் 12-வது வயதிலேயே கவி புனைய ஆரம்பித்து விட்டார்.
கவிதை என்றால் காதல் இல்லாமலா.
இங்கு பலர் காதல் வந்தவுடன் தான் தாங்களும் கவிஞன் என்று எண்ணிக்கொண்டு கிறுக்க ஆரம்பிப்பார்கள். அதாகப்பட்டது,
படுக்க தேவை பாய்
மரத்துல கீது காய்
நீன் ஊம் சொன்னா
நான் ஒங் காலடி நாய்.
எனவாக பல இம்சைக் கவிஞர்கள் தோன்றுவது காதலுக்கு பின்னே தான். இப்படிப் பட்டோர்க்கு முதலில் வருவது காதல், பின் தொடர்வதே இம்சைக் கவிதைகள்.
ஆனால் கவிஞர் வைரமுத்துவிற்கு முதலில் வந்தது கவிதை. அந்த கவிதையால் வந்ததே காதல்.
கேட்பதற்கு இதுவே கவிதை போல் இருக்கிறது.

தமிழை கைப்பிடித்த பெண் பெயர் ‘பொன்மணி’.
ஒ.. இவர்தான் தமிழ் தொட்ட பெண்ணோ ….
ஆஹா ……
கவிஞரின் குடும்பம் இப்போது ‘பொன்னும்’ ‘மணியும்’ ‘வைரமும்’ ‘முத்துமாய்’ பிரகாசிக்கிறது.
கவிஞரின் குடும்பம், பொன் மணி வைர முத்து எனப் பெயர்களால் செல்வாக்கான் குடும்பம் மட்டும் அன்று, கவிஞரின் உயர் எண்ணங்களாலும் தமிழ் பேச்சாலும் எழுத்து நடையாலும், சொல் வாக்கான குடும்பமும் கூட.

‘நிழல்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் கவிஞரின் திரைப்பாடல்கள் திறமை வெளிச்சத்திற்கு வந்தது.
இயல்பாக வெளிச்சம் வருவதால் தான் நிழல்கள் கூடவே வரும். இது அறிவியல்.
கவிஞருக்கோ ‘நிழல்கள்’ வந்ததால் புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.
என்ன ஒரு புதுமை….
தமிழ் திரைக்கு, ‘நிழல்கள்’ வந்ததால் வெளிச்சம் வந்தது.

கவிஞரின் முதல் திரைப்பாடல், ‘இது ஒரு பொன் மாலைப்பொழுது’ எனும் பாடல். கவிஞரின் முதல் திரைப்பாடல் பிறந்த அன்றே அவரின் முதல் மகன் பிறந்ததும்.
பாடலும் பிறந்தது.
புத்திரனும் பிறந்தான்.
திரைப் பாடல் பிறந்ததால் மகிழ்ச்சி பெற்றார்.
தனக்குப் புத்திரன் பிறந்ததால் மக்கட் பேறு பெற்றார்.

கவிஞருக்கு சொல்லின் செல்வி சரஸ்வதி தேவி நாவிலும் நாடி நரம்பிலும் நாட்டியமாடுகின்றாள்.

கவிஞர் பேசினால் வார்த்தைகள் விட்டு விட்டு வராது.
தங்கு தடை இன்றி பிரளயமாய்த்தான் வந்து விழும். ஏன் என்றால் உணர்ச்சிகள் வெளிப்படுகையில் பிரளயமாய்த்தான் வரும்.

அவர் எழுதிய புத்தகங்கள் பற்பல.
தமிழ் இலக்கியத்திற்கு கவிஞரின் பங்களிப்பாக, இதுவரையிலும் 30-க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

அவரிடம் பொத்தி வைக்கப்பட்டு இருந்த கிராமத்தை பிரிந்த சோகம், நேசித்த நிலத்தை விட்டு நகர்ந்த கொடும் நிகழ்வு, பெருக்கெடுத்து பல வருடம் கழித்து எழுத்து பிரவாகமாய் வந்ததில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பெரும் பேறு கிட்டியதது. அதுவே ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ ஆக உறுப்பெற்று ஒரு சாகித்ய அகாடெமி விருதாக கவிஞருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தது. அந்த உனர்ச்சியே ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் வரும் ‘விடை கொடு எங்கள் நாடே’ என்னும் பாடலுக்கும் வழி வகுத்து தேசிய விருதுக்கும் வழி வகுத்து இருக்கக் கூடும்.

கள்ளிக்காட்டு இதிகாசம் மூலம் தன் சொந்த ஊர் சொந்தங்களை மீண்டும் ஒருமுறை தண்ணீருக்குள் இருக்கும் கிராமத்திற்க்கு அழைத்து சென்றார்.

வைரமுத்து அவர்களை பார்த்தால் அவர் காந்த கண்களில் ஒரு வித்தியாசம் காணலாம். அதாவது அவர் கண்கள் நம் கண்களைப் பார்க்கிறதா அல்லது நமது தலைக்கு மேலே பார்க்கிறதா என்று. அவர் நம் தலை மேல் சுடர் விடும் மனிதம் என்னும் ஒளி வட்டத்தை தான் காண்கின்றார் போலும்.

கவிஞர் பாங்க்காக்-கிலும், ஹாங்காங்-கிலும் தமிழ் பள்ளிகள் ஆரம்பித்து இருக்கிறார், தமிழை வளர்ப்பதற்காக.
மழை வேண்டிய நமது மாநிலத்தில், நமது குழந்தைகள் 'ரெயின் ரெயின் கோ அவே' பாடினால், கூடிய சீக்கிரத்தில் கவிஞர் தஞ்சாவூரிலும் மதுரையிலும் தமிழ் பள்ளி ஆரம்பித்தால் ஆச்சர்யம் இல்லை.

விகடனில் சமீபத்தில் வெளி வந்த செய்தி. கவிஞர் அதிகாலை நான்கு மனிக்கு நடை பயனம் செய்யும் போது உதிக்கும் எண்ணங்களை தொகுத்து கொண்டு இருக்கின்றாராம். தமிழ் நடை.

கவிஞர் வாங்கிய தேசிய விருதுகள் இதுவரை ஐந்து,
அந்த பாடல்கள் தான் பஞ்சப்பாட்டு. ஆம், ‘பஞ்ச’ பாடல்கள்.
பொறுங்கள்.
‘பஞ்ச’ பாடல்கள் என்றவுடன் பசி பட்டினி பற்றிய பாடல்கள் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். ‘பஞ்ச’ பாண்டவர்கள் என்றால் முத்தான ஐந்து பாண்டவர்கள் அல்லவா, அதைப் போலவே ஐந்து முத்தான பாடல்களுக்கு தேசிய விருது வாங்கி உள்ளார். கூடிய விரைவில் ‘பத்துப்பாட்டுக்கும்’, அதாவது பத்து திரைப்பாடல்களுக்கு விருது வாங்கிய பெருமை அடைய வாழ்த்துவோம்.

வைரமுத்து கவிதை
கருத்து விதை
கருத்துக் கருவூலம்;
வார்த்தையில் வித்தை
கேட்பதில் விந்தை;
ஹரிஷ்

இளை(சை)யராஜா !!

இளையராஜா ஒரு இசை சாம்ராட் .
இளையராஜா இசைக்கு இசையாதோர் யாரோ.
இளையராஜா சுவாசிப்பது காற்றை அல்ல, இசையை.

மிக சிறந்த இசைக்கருவிகள் உதவியோடு தன் இதயத்தில் உதித்த இசையை மக்கள் இன்புற வெளியிட்டு விட்டு, அந்த இசைக்கு அவர் வைத்த பெயர் 'ஒன்றும் இல்லைங்க வெறும் காத்து ', அதாவது 'Nothing But Wind'.

அப்படி இல்லை என்றால் சிறந்த இசைப்பாடல்களை தந்து விட்டு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் வைத்த பெயர், 'எப்படிப் பெயர் வைப்பது ?', அதாவது 'How to Name it ?' எனவாக பெயர் வைக்க குழம்பியவர்.

கலைஞர் ஒருவருக்கு பெயர் சூட்டுகின்றார் என்றால் அதில் எப்போதும் ஒரு ஆழமான பெயர் காரணம் இருக்கும். அந்த பெயர் காரணமும், பெயர் சூட்டப் படுபவரின் செயல் காரணத்தை அடிப்படையாய் கொண்டு இருக்கும். கலைஞர் எப்போதும் சும்மா பேருக்கு பெயர் வைப்பவர் இல்லை. இதை நாம் உண்மை என்று உணர்ந்து கொள்வதற்கு, கலைஞர் இளையராஜாவுக்கு சூட்டிய 'இசைஞானி' எனும் பட்டமே சாட்சி.

இளையராஜா, தேனி மாவட்டம் தந்த, பண்னையபுரம் பெற்று எடுத்த இசைப் புத்தகம். இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க ஆனந்தம். ஆம், இவரும் கிராமத்துக் குயில்தான்.

நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்து மூன்று இளைஞர்கள் கனவுகளை மட்டும் கை இருப்பாய் கொண்டு, தங்கள் திறமையின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து,உழைப்பை மட்டுமே மூலதனமாய் கொண்டு, சென்னை நகரம் வந்தனர். அவர்களை தமிழ் திரை உலகின் மும்மூர்த்திகள் எனலாம், அவர்கள் வைரமுத்து, இளையராஜா மற்றும் பாரதிராஜா.

அவர்களுக்குள் இருந்தது திறமை மட்டும் அல்ல, வெறி. திறமைகளை வெளிப்படுத்த வெறி.
இவர்களில் இளையராஜா, முத்தமிழாம், இயல் இசை நாடகத்தில், இரண்டாம் தமிழாம் இசைத் தமிழை பெருமைப் படுத்தி உளார்.

அக்கால இளைஞர்களுக்கு 'அன்னக்கிளி' ஆகட்டும், மத்தியகால இளைஞர்களுக்கு 'தேவர் மகன்' ஆகட்டும், இக்கால இளைஞர்களுக்கு 'சீனி கம்' ஆகட்டும், அன்றும் இன்றும் என்றும் அவர் இசையில் ராஜா தான்.
இசை உலகின் முடி சூடா மன்னன்; இனிய ராஜா; இசை ராஜா தான் இளையராஜா.
அவர் இசை மேஸ்ட்ரோ, இசை மேதை. இளையராஜாவுக்கு இசை தான் எல்லாம்.

காலத்தை பிரித்து அறிய கி.மு(கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) என்று கூறி விடலாம். தமிழ் திரை இசையைப் பிரிக்க இ.மு. என்றும் இ.பி என்று கூறலாம். இ.மு இளையராஜாவுக்கு முன். இ.பி இளையராஜாவுக்கு பின்.

தமிழகத்தில் எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் கதை திரைக்கதை தயாரிப்பாளர் வசனம் இயக்குனர் போன்ற பெயர்கள் மாறி மாறி வந்து கொண்டு இருந்தன, ஆனாலும் இசை என்ற பெயருக்கு மட்டும் மாறாமல் இருந்த ஒரு பெயர் இளையராஜா.

'திருவாசகம்' தமிழ் புத்தகத்தில் மட்டும் கேள்விப் பட்டு இருந்த இளைஞர் கூட்டத்திற்கு, அவர் இசையின் மூலம் மீண்டும் வெளிச்சம் காட்டி இருக்கின்றார்.
திருவாசகத்திற்கு உள்ள பெருமை, திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசத்திற்கும் உருகார்.
அதைப் போலவே, இளையராஜா இசைக்கு உருகாதோர் ஒரு இசைக்கும் இசையார்.
இவ்வாறு இருக்கையில் இளையராஜா இசையில் திருவாசகம் கேட்க என்ன வென்று சொல்லுவது.
கரும்பு தின்ன கூலியா..........

சாதிப் பிரிவினை பார்ப்பதே தப்பு. இதிலும் சாதிப் பிரித்து திறமை பார்ப்பது மகா பாவம்.
இதற்கு மேலும் சாதி த்வேஷம் கொண்டு திறமை மதியா மனிதர் தலையில், வங்கக் கடலில் விழ வேண்டிய இடிகள் நங்கென்று நெஞ்சில் விழக் கடவதாக. வங்கக்கடல் எங்கேயோ தூரத்தில் அல்லவா இருக்கிறது என்போருக்கு நாம் சொல்லி கொள்வது, வங்கக் கடல் தூரத்தில் தான் இருக்கிறது, ஆனால் அந்த இடிகள், கூகிள் மேப் (Google Map ) உதவியோடு உங்களைக் கண்டு பிடித்து விடக் கூடுவதாக.

ஒரு சில புல்லுருவிகள் அவர் அந்த சாதி, இந்த சாதி என்று அவரை சிறுமை படுத்தப் பார்க்கின்றனர்.
அப்படிப் பட்டோர்க்கு அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
'அடப் பதர்களே ..... இளையராஜாவின் இசையை இரவில் கேட்டு நிம்மதியாய் தூங்கும் அற்ப மானிடர்கள் நீங்கள், அவரையே சாதி பிரித்து ஏசும், நீங்கள் தான் கீழ்ப் பிறவி.அவர் நீயும் நானும் அறியா சாதியை சேர்ந்தவர்'
இளையராஜாவின் சாதி இசை, அதிலும் உள் பிரிவு தமிழ் இசை.

தாளங்களும் ராகங்களும் இவர் கடைக்கண் தங்கள் மேல் படுமா என்று ஏங்கி தவிக்கின்றன.
அவர் வாங்கிய விருதுகள் ஏராளம். ஆனாலும் அவர் விருதுக்கு இசைப்பவர் அல்ல.
விருதுகள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. விருதுகள் அவருக்கு ஒரு பொருள் அவ்வளவு தான்.
அவர் உலகம் தனி உலகம்.... அந்த இசை உலகில் தான் எப்போதும் சஞ்சரித்து கொண்டு இருப்பார்.
அவ்வப்போது அவர் ஆசை பட்டால் இப்பூவுலகிற்கு வருவார். அதுவும் அவர் பெற்ற இசையை பெருக இவ்வையகம் என்பதற்கு தான் இருக்கும்.

இளையராஜா தன் மானசீக குருவாக கொள்வது மூவரை, அவர்கள் மேல் நாட்டு இசை மேதைகள் Beethoven, Bach மற்றும் Mozart.

மேதைகளின் திறமைகள் இன்று இரவு படுத்து நாளை காலை விழிக்கும் போது உருவாவது இல்லை. அதாக பட்டது தமிழ் திரைப்படங்களில் வருவது போல் ஒரே பாடலில், அதுவும் ஐந்து நிமிடத்தில் வருவதும் இல்லை.
மேதைகளின் திறமை தினம் தினம் பட்டை தீட்டப்பட்டு, பின் பல நாள் கழித்தே பார் அறியும் வண்ணம் வரும். இளையராஜாவும் இப்படித்தான். தன் 14வது வயதிலேயே நாடோடி இசைக்குழுவில் சேர்ந்து தென் தமிழகத்தை சுற்றி வந்தவர். பல வருடம் கழித்தே அவர் இசை புகழ் தமிழ் நாடறியும் வண்ணம் வந்தது.

இப்போது உலகறியும் வண்ணமாய், BBC -யில் உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக, இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'ராக்கம்மா கைய தட்டு' பாடல் பலராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இளையராஜா இசை அமைத்த நானூறாவது திரைப்படம் நாயகன், ஐநூறாவது படம் அஞ்சலி.
ஆயிரம் எப்போது வரும் என்று நாம் காத்து கொண்டு இருகின்றோம்.

உணவிற்கு பெயர் பெற்ற சரவணா பவன் ஹோட்டலுக்கு, பின் மாலைப் பொழுதில் சென்ற பொழுது, உணவு விடுதியில் இளையராஜா பாடல்கள் ஒலிபரப்பி கொண்டு இருந்தது.
என்ன இனிமையான பாடல்கள் .. எல்லாம் முத்தான பாடல்கள்....
அய்யன் வள்ளுவர் கூறியது,
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
வள்ளுவன் கூறியது கேள்வி செல்வம் என்றாலும், நாம் அப்போது இரு செவியையும், இருக்கும் ஒரே இதயத்தையும் இளையராஜாவிடம் கொடுத்து விட்டு, சர்வரிடம் ஒரு தோசை சொல்லியாயிற்று. தோசை வர தாமதம் ஆயிற்று. அதைப் பற்றி நமக்கேன் கவலை, அதுவும் இளையராஜா இசைத்து கொண்டிருக்க.
திடீரேனே ஒரு தடங்கல். வேறென்ன, தோசை வந்து விட்டது. தட்டு தடால் என மேஜையில் வைக்க படுகிறது. ஒரே அபஸ்வரம் ... இருந்தாலும் பொறுத்துக் கொண்டு இசையை அனுபவித்து கொண்டே உண்கிறோம்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து சர்வர் வருகின்றார், இசையின் நடுவே, வேறு எதுவும் வேண்டுமா என்று வினவுகின்றார். நாம் ஒன்றும் வேண்டாம் என்கின்றோம். இசையை ரசித்து கொண்டே உணவை உண்டு முடித்த பின்னும் சர்வர் இசையை இடை மறிக்கும் விதமாய், 'வேறென்ன சார்' என்கின்றார்.
நாமோ பொறுமை இழந்து, 'இப்போ சாப்பிட்ட பில்லை கான்செல் பண்ணி விடுங்கள் சார்' என்கின்றோம். சர்வர் நகர்ந்து செல்கின்றார்.
நாம் மீண்டும் இசையை ரசிக்கின்றோம்.

இயற்கை என்றுமே அவர் இசைக்கு இணைந்து கை கொடுக்கும். எங்கெல்லாம் வார்த்தை வெற்றிடம் வருகின்றதோ, அங்கெல்லாம் ஓரமாய் ஒரு குயில் குதூகலமாய் கூவிக் கொண்டு இருக்கும். ஒரு மயில் மகிழ்ச்சியாய் ஆடிக் கொண்டும் இருக்கும்.

சில இசை அமைப்பாளர்களுக்கு மின்சாரம் இல்லை என்றால் இசை அமைக்க முடியாது, ஏன் என்றால் அவர்கள் மேற்கத்திய கருவிகளை சார்ந்திருப்பதால். அதிலும் சில இசை அமைப்பாளர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு மின்சாரமும் வேண்டும், ஆங்கில இசை குறுந்தகடுகளும் வேண்டும், கூடவே கூகுள் (Google) வேண்டும். பின்னே இசையை எங்கே தேடுவதாம். நீங்களா அவருக்கு இசை அமைத்து கொடுப்பீர்கள்.
ஆனால் இளையராஜாவால் மின்சாரம் இருந்தாலும் இல்லா விட்டாலும் இசை அமைக்க முடியும். அவருக்கு கருவிகள் ஒரு பொருட்டே அல்ல. அந்த ஹார்மொனியும் மட்டும் போதும்.

வள்ளுவன் வாக்கு என்ன வெனில்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. என்கின்றார்.
இந்த குறளை இளையராஜாவிற்காக இடை செருகல் சேர்த்தால்,
இசை ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, இசையை கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. எனக்கூறலாம் .

ஹரீஷ்

கணக்கு !!! !+!-!x!-! !!!இது வெண்டைக்காய் விவகாரம்.

'மதம்' பெரிதா? 'மனிதம்' பெரிதா? என்று கணித முறையில் ஆராய்ந்தால், 'மனிதம்' தான் சிறந்தது எனத் தெரியவரும்.
வார்த்தை ஒன்று : {ம, த, ம் }
வார்த்தை இரண்டு : {ம, னி, த, ம் }
எண்  கணித முறையில் உள்ள செட் (Set), சப் செட் (Sub set) மற்றும் சூப்பர் செட் (Super Set) வழி பார்த்தோமேயானால், 'மனிதம்' என்ற வார்த்தையில், {ம, த, ம்} என்று, மதத்தின் அணைத்து எழுத்துக்களும் உள்ளன. அப்படி பார்க்கையில், 'மனிதம்' சூப்பர் செட்(Super set), 'மதம்' சப் செட்(Sub set).
ஆகா 'மனிதம்' தான் சிறந்தது. கணிதம் வாழ்க !!!

உலக தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையான, எண் கணித வளர்ச்சிக்கான பணிகளில், இந்தியாவின் பங்களிப்பு ஏதேனும் உண்டென்றால்; ஒன்றுமில்லை.
ஒன்றுமில்லை ?
ஆம்.... 'ஒன்றுமில்லை' ...
சற்றே பொறுப்போம்.
'ஒன்றுமில்லை' என்பதை, கணிதத்தின் படி கூற வேண்டும் என்றால், 'பூஜியம்' என்று தான் கூற வேண்டும்.
ஆக, இந்த 'ஒன்றுமில்லை' எனப்பட்ட 'பூஜியத்தை' உலகுக்கு தாரை வார்த்தது நமது இந்திய தேசம் தான்.

அதிலும் இன்றைய தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாய் இருக்கும் இரண்டு எண்களாக கருதப்படுவது.
பூஜியம் (0); மற்றும் ஒன்று (1).
இந்த இரண்டு எண்களும் தான் தகவல் தொழில் நுட்பத்தின் இரு கண்கள்.
இவற்றை இன்னும் பல விதங்களில் கூறுவது உண்டு. அவையாவன,
ஆன் (ON) - ஆஃப் (OFF)
எஸ் (YES) - நோ (NO)
ட்ரூ (TRUE) - ஃபால்ஸ் (FALSE)
இதையே தமிழில் மொழி பெயர்க்கலாம் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளாமல் தோன்றுவது,
வ்வரும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - ஆனா வ்வராது .....

இந்த 'பூஜியம்' என்பது இல்லாது இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், பல வேடிக்கைகள் நடக்கலாம். உதாரணத்திற்கு நாம் வாங்கும் சம்பளத்தில் பூஜியத்தை எடுத்து விட வேண்டியதுதான்.
அதாவது ரூபாய் 3500 என்று இருந்தால், ரூபாய் 35 ஆகி விடும். இவை எல்லாம் நம்மை போன்ற சாமானிய பட்டவர்களுக்குத் தான் இப்படிப்பட்ட கவலை. அதுவே தமிழக முதல்வராய் இருந்து, 1 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த கவலை வந்து விடாது, ஏனென்றால் வாங்கும் சம்பளத்தில் தான் பூஜியம் இலையே. அதிலும் 9 ராசி எண்ணாக அமைந்து விட்டால், ஒரே குஷி தான்.

நம் குழந்தைகள், நிஜத்தில் புத்திசாலிகள் தான். நாம் தான் அவர்களை மனனம் செய்ய வைத்து, நியூரான்களை நசித்து விடுகின்றோம்.

ஒரு பொறியியல் மாணவனிடமும், ஒரு சிறு குழந்தையிடமும் ஒரே கணக்கு கேள்வி கேட்கப் படுகின்றது.
மொத்தம் மூன்று மூன்றுகளை உபயோகிக்கலாம். அதாவது 3, 3, 3.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் விடை 24 வர வேண்டும் என கேட்கப்படுகின்றது.
இதற்கு பொறியியல் மாணவன், கீழ் கண்டவாறாக விடை அளித்தான்.
= 3, 3, 3
= (3^3) - 3
= 27 - 3
= 24
விடை சரியான விடைதான்.
அதே கேள்விக்கு சிறு குழந்தை கீழ் கண்டவாறாக விடை அளித்தான். ஆனால் விடை கொண்டு வந்த விதம் தான் வேடிக்கை.
முதல் மூன்றை (3) திருப்பி இரண்டாம் மூன்றோடு (3) ஓட்டினான். இப்போது கையில் இருப்பது (8).
இப்போது இந்த எட்டை மீதம் இருந்த மூன்றோடு பெருக்கி விட்டான்,
= 3, 3, 3
= 8, 3
= 8 x 3
= 24
கெட்டிகார பிள்ளைகள்...

கணக்கில் சிறந்தவர்களை, 'கணக்குல புலி' என்கிறோம். புலி என்னைக்கு கணக்கு படித்தது ? என்று எண்ணி பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகின்றது.
ஒரு வேளை இப்படியும் இருக்குமோ ? ...
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ ? ......
புலியின் ஓடும் வேகத்திற்கு, ஈடான வேகத்தில் கணக்கு போடுபவரைத்தான் இப்படி 'கணக்குல புலி' என்று சொல்லுகின்றார்கள் போலும் ?
அப்படிப் பார்த்தால், நாமெல்லாம் 'கணக்குல மான்' ; கேள்வி கேட்டவுடனேயே பதுங்கி விடுவோம். பிறகு இரண்டு கால் பாய்ச்சலில் ஓடியும் விடுவோம்.

கல்லூரியில், கணக்கு வாத்தியார் வகுப்பு முடிந்து வகுப்பறையை விட்டு வெளியே சென்றவுடன், என்ன தாலாட்டு சத்தத்தையே காணோம், என்று தூக்கம் களைந்து எழுந்து பார்த்தால்; கரும் பலகையில், நாள் பட்ட கொத்து பரோட்டாவை பிச்சு போட்ட மாதிரி கிறுக்கி இருக்கும். முதல் பெஞ்ச் நண்பனிடம்  போய், 'இது என்னடா?' என்று விசாரித்தால், 'மாட்ரிக்ஸ்'(Matrix) என்பான். நாமோ புரியாதவனாய், 'ஃபஸ்ட் பார்ட்டா ? செகண்ட் பார்ட்டா ?' என்போம்.
இப்படி, பல நாள் முதல் பெஞ்ச் விசாரிப்பில் வெளிப்படுவன, லக்ராஞ்சே (Lagrange), ஃபோரியர் (Fourier), ஆயிலர் (Euler) எனப்படுவன.

இந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் இதெல்லாம் சொல்லித் தர மாதிரியான கல்லூரி எங்காவது கண்டால் சொல்லி அனுப்பவும்.

இவையன்றி கணக்கு பரீட்சை முடிந்தவுடன் தேர்வு அறைக்கு பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பல துணுக்கு சீட்டுகள் கிடைக்கலாம். இப்போதெல்லாம் கையெழுத்து பிரதியுள்ள புத்தகங்களுக்கு பெருத்த மதிப்பிருக்கின்றது. இந்த குப்பைத்  தொட்டியைக் கிளறினால் , பல கையெழுத்துகள் அடங்கிய ஒரு முழு இன்ஜினியரிங் மேதமேடிக்ஸ் புத்தகம் கிடைக்கலாம்.

பதிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுக்கோள், தலையனை அளவு உள்ள புத்தகங்களுக்கு பதில், கைக்கு அடக்கமான வடிவில், எடை குறைவான அளவில் வெளியிட்டால் உங்கள் புத்தகங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கும். மாணவர்களும் ஆர்வத்துடன் வாங்குவார்கள். புத்தக சுமை குறையுமே என்ற ஒரே (!!!) ஆர்வத்தில் தான் இதைக் கேட்கின்றோம்.

அன்று, காந்திஜி இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒன்றுபட்டு பாடுபட்டு இந்திய விடுதலை வாங்கித்தந்தார்.
இன்று, கலாம் இந்திய இளைஞர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, வளர்ந்த இந்தியாவை அடைய பாடுபடுகின்றார்.
இது 'இன்டெக்ரல் கால்குலஸ்' (Integral Calculus) கணக்கு.

மாறாக, ஏழு அமைச்சரையும் அழுது வடிந்து தான் கொடுத்தார்கள் என்பதாலும், தன் மத்திய அமைச்சர் மகனுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பேச தெரியாது என்பதால், குடும்பம் சிறுமை படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மீண்டும் ஆரிய திராவிடர் பிரிவினையை தூண்டி விட முயற்சி செய்யலாம்,சில தமிழ் தலைவர்கள்.
இது 'டிஃபெரென்ஷியல் கால்குலஸ்' (Differential Calculus) கணக்கு.


குழந்தைகளுக்கு கணக்கு சொல்லி தரும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு அப்பா அவர் சிறு குழந்தைக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
அப்பா கூறுகின்றார், 'ஒன்னும் ஒன்னும், ரெண்டு '.
குழந்தை, 'போப்பா, நீ பொய் சொல்லுற... அன்னிக்கு என் தலைய தடவி விட்டுக்கிட்டே, அம்மாகிட்ட ஒன்னும் ஒன்னும் மூணு -ன்னு சொன்ன',
அப்பா சிரித்துக்கொண்டே, 'டேய், அது வேற கணக்குடா'
குழந்தை, 'அப்போ அத மொதல்ல சொல்லிக்கொடு' !!!!!
இது குழந்தை கணக்கு !

கட்சி படு தோல்வி அடைந்து விட்டதால், எதிர் கட்சி தலைவராய் அமர மாட்டேன் என்று கூறுவது.
எம்.பி. எண்ணிக்கை குறைந்து விட்டதால், கொட நாட்டில் இருந்து அடுத்த காய் நகர்த்தலாம் என்று எண்ணுவதும்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை கூட்டணி தாவினால் பலம் பெருகும், என்று எண்ணி ஏமாறுவது.
இவை எல்லாம் அரசியல் கணக்கு !


சில சமயங்களில் சிங்கிள் டீ குடிக்க கூட காசு இருக்காது. மாச கடைசியாக வேற இருக்கும்.
வேறு வழியே இல்லாமல், நண்பருடன் நாயர் கடைக்கு சாயா குடிக்க சென்றால்,
'சேட்டா, ரெண்டு டீ.. ஸ்ட்ராங்கா......... '
'என்ட  மோனே, ஸ்ட்ராங்காயிட்டு வேணுமோ ? ............ போன மாச பாக்கியே இன்னும் கொடுத்திட்டு இல்லியே ..... '
'சேட்டா, இன்னும் ஒரு வாரம்தான் , சம்பளம் வந்து விடும் , கவலையே படாதீங்க'
டீ குடித்த பின், மீண்டும் அடுத்த மாச கடைசியில் தான் நாயர் கடைக்கு விஜயம் செய்வோம்.
இது காந்தி கணக்கு !!

ஹரீஷ்

நதிகள் !!!நதிகள் நாகரிகத்தின் கண்கள். எங்கெல்லாம் நதிகள் உள்ளதோ, அங்கெல்லாம் நாகரிகம் இருக்குமோ என்னவோ தெரியாது. ஆனால், எங்கெல்லாம் நாகரிகம் தோன்றியதோ அங்கெல்லாம் நதிகள் இருந்திருக்கின்றன. ஹரப்பா நாகரிகம் (சிந்து நதி), எகிப்திய நாகரிகம் (நைல் நதி), மெசபடடேமியா நாகரிகம் (யூப்ரடிஸ் நதியும், டைக்ரிஸ் நதியும்) என்று நாகரிகம் தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணியாக நதிகள் இருந்திருக்கின்றன.

ஆறு இல்லா ஊர் பாழ், என்பர் பண்டைய தமிழ் நாட்டில்.
நீரின்றி அமையாது உலகு, நதி இன்றி அமையாது நகரம்.
உலகத்தின் தலை சிறந்த நகரங்கள் அனைத்தையும் ஒட்டி நதிகள் உள்ளன, லண்டன்(தேம்ஸ் நதி) பாரிஸ்(செய்ன் நதி) டோக்கியோ(சுமிதா, தமா நதி) மாஸ்கோ(வோல்கா நதி) ரோம்(டைபெர் நதி) நியூயார்க்(ஹட்சன் நதி).
நம் நாட்டை பார்த்தாலோ டெல்லி(யமுனா நதி) கொல்கத்தா(ஹூக்லி நதி) மற்றும் சென்னை(அடையாறு நதி கூடவே கூவம் நதியும் (!!!!)).

மேலே பார்த்த நகரங்களில் நதி உள்ளது. இவற்றிற்கும் மேலாக ஒரு சிறப்பான நகரம் உண்டு என்றல் அது வெனிஸ் நகரம் தான். வெனிஸ் நகரத்தில், நதியில் தான் நகரமே இருக்கிறது.

நதிகள் பல வகையில் மனிதனுக்கு உதவியாய் இருக்கின்றது. குடிநீர், போக்குவரத்து, பாதுகாப்பு அரண், மின்சாரம் தயாரிக்க, கழிவு நீர் அகற்ற என பல வகைகளில் உதவுகின்றன.

நதிகளுக்கு உள்ள மற்றொரு சிறப்பு, நதிகளின் கரையில் தான் புனித ஸ்தலங்கள் நிறையவே இருக்கின்றன காசி, மதுரா, அலகாபாத் போன்றவை. 'அகம் ப்ரஹ்மாஸ்மி' வாலாக்கள் இங்கே சற்று தூக்கலாகவே காணப்படுவர்.
இப்படிப் பட்ட இடங்களில்அஸ்தியை கரைத்தால், நேரே மோட்சத்திற்கு வழி வகுக்குமாம். மேலும் புனித நதிகளில் முங்கி எழுந்தால் பாவங்கள் போய் விடும் என்றும் மக்களுக்கு நம்பிக்கை. வருடம் முழுதும் தலை குளிக்காமல் மேலும் பல தீங்குகள் செய்துவிட்டு, ஒரே ஒரு முறை மட்டும் புனித நதியில் தலை குளிப்போருக்கு பாவம் போகிறதோ இல்லையோ, பொடுகு போக வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் பார்த்தாலும் பல புண்ணிய ஸ்தலங்கள் நதிக் கரையை ஒட்டியே உள்ளன. ஸ்ரீ ரங்கம், தஞ்சைப் பெரிய கோவில் , வேளங்கண்ணி, நாகூர் தர்கா எனவாக, காவேரி நதி மிக கொடுத்து வைத்த நதி. எம்மதமும் சம்மதம் என்று கூறிகொண்டே கடலில் கலக்கின்றாள்.

நதிகள் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி இயற்கையின் விதிப்படி ஓடுகின்றன. இது நியூட்டன் பிறப்பதற்கு முன்னேயும், ஆப்பிள் தோன்றுவதற்கு முன்னாலேயும் இப்படித் தான் ஓடிக் கொண்டு இருக்கின்றது. நதிகள் ஏன் இப்படி தங்களை தாழ்த்தி கொள்ளுகின்றன. எதற்கு? நதிநீரை நிலத்தில் பாய விட்டு, நிலத்தை பசுமை அடைய செய்து, விவசாயத்தை கொழிக்க வைத்து, மனிதனை மேம்படுத்துவதற்காக.
ஆஹா ..
நதி இறங்கி வருகின்றது மனிதனை உயர்த்த ..
என்ன அருமை ....

நிலமானது உடலேன்றால், நதிகள் உடலில் குருதி பாய்வது போல்.
நதிகள் நேர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலை மாதிரி பாய்வதில்லை. அவை நெளிந்து வளைந்து செல்கின்றன. இது வாழ்வில் நெளிவு சுளிவுகள் நிறைய வரத்தான் செய்யும், அவற்றை எல்லாம் பொறுத்து, நதி போல செல்ல வேண்டும் என்பதையே குறிக்கின்றன. நடுவில் மலையே வந்தாலும், நதி பாய்வதை நிறுத்துவது இல்லை. மலையை சுற்றி வந்தாவது தன் பிரயாணத்தை தொடர்கின்றது . அது போல் நமக்கும் பிரச்சினைகள் வந்தால் அதை விட்டு தள்ளி நகர்ந்து, பிரயாணத்தை தொடர வேண்டும் என்பதை உணர்த்துகின்றதோ.

நதிகளின் பெயர்கள் பெண்களின் பெயர்களே அதிகம் வைக்க படுகின்றன. கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா, காவேரி, இந்திராணி எனவாக. நதிகள் மென்மையானவை மேலும் பெண்களைப் போற்றி வணங்கும் தன்மை வேண்டும், என்பதால் தான் பெண்களின் பெயரே நதிகளின் பெயராய் வைக்க பட்டுள்ளன.

ஒரு சுட்டிக் குழந்தையிடம் போய், 'கங்கா யமுனா சரஸ்வதி' தெரியுமா என்று கேட்டால், ஹ்ம்ம் தெரியும் அங்கிள், சாயங்காலம் ஆறு மணிக்கு டிவி சுவிட்ச் ஆன் பண்ணினால் தெரியும் அங்கிள், என்று சொல்லிவிட்டு ஓடி விட்டது. அடுத்த முறை அந்த குழந்தையை பார்த்து 'காவேரி' எத்தனை மணிக்கு டிவியில் தெரியும் என்று கேட்க வேண்டும்.

இதற்கும் அடுத்த கேள்வியாக, 'ஆறு' தெரியுமா என்ற கேட்க அச்சமாக உள்ளது. நாம் போய் அந்த குழந்தையிடம் கேட்க, அந்த குழந்தையோ, 'ஹ்ம்ம் தெரியும் அங்கிள், போன வாரம் கூட போயிட்டு வந்தோம்'. மேலும் அந்த குழந்தை, 'அசின் ஆன்ட்டிக்கு பதில த்ரிஷா ஆன்டி ஆக்ட் பண்ணி இருந்தா பெட்டரா இருந்திருக்கும்' என்றால், நமக்கு பிறகு என்ன தான் கேட்கத் தோணும்.

நதிகள் மலை மேடுகள் தாண்டி, வயல்கள் வழி வந்து, காடு கழனி தாண்டி கடைசியாய் கடலில் கலக்கிறது.
நதிகள் சீரான வேகத்தில் பாய்ந்தால் மக்களுக்கு 'வெல்லம்' தான். விவசாயம் செழிக்கும். பொருளாதாரம் பெருகும்.
அது இல்லாமல், நதிகள் கோபமாய் வேகத்தை பெருக்கெடுத்து பாய்ந்தால் எங்கும் 'வெள்ளம்' தான். மேலும் பொருள் சேதமும் உயிர் சேதமும் கூட அதிகரிக்கலாம்.
நதிகள் நமக்கு 'வெல்லமா' அல்லது 'வெள்ளமா' என்பதை அது போகும் வேகமே தீர்மானிக்கின்றன.

நதி பலருக்கும் பல அர்த்தம் போதிக்கும்.
விவசாயிக்கு - விளைநிலத்தின் உணவு கிடைக்கும் இடம் ....
பொறியியல் வள்ளுனனுக்கு - பாலம் கட்டும் இடம்.
அரசியல்வாதிக்கு - பாலம் கட்ட திட்டம் ஒதுக்கும் (!!!) இடம் ..
வண்ணானுக்கு - கரையில், துணிகளின் கறை போக்கும் இடம்

வள்ளுவனுக்கோ ...
      இருபுனலும் வாய்ந்த மழையும் வருபுனலும்
     வல்லரணும் நாட்டிற்க்கு உறுப்பு.

அதாக பட்டது, ஊற்று, மழை, தகுந்த மலை, அதிலிருந்து வரும் ஆறு, பாதுகாப்பான அரண் இவை நாட்டின் அங்கங்களாகும் என்கின்றார்.

நதி நீரோட்டத்தை முழுமையாய் தடுக்க முடியுமா ?. முடியாது தான், ஆனாலும் தற்காலிகமாக தடுப்பதால் மனிதனுக்கு பல நன்மைகள் விளைவிக்கின்றன. விவசாயத்திற்கு நீரை பங்கிட, மின்சாரம் தயாரிக்க, மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு கொள்கை அரசியல் செய்ய என பல வகைகளில் மக்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் உபயோகமாய் இருக்கின்றது.

நதியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.... மின்சாரத்தில் இருந்து நதியை தயாரிக்க முடியுமா. இதை ஆற்காட்டார் கேட்டால் கோவப்படலாம், 'இங்கே மின்சாரமே கிடைக்கறதே பெரிய புளியங்கொம்பா இருக்கு, இதுல இது வேறயா' என்று ...

நதிகள் உள்ள பிரதேசம் சோலைவனம். நதிகள் பார்காத பிரதேசங்களோ பாலைவனம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நதிகள் பாய்ந்தோடும் கரையெல்லாம் நிலம் சிறப்பு.
ஆற்றங்கரையோர கிராமங்கள் கொடுத்து வைத்தவை.
ஆற்றங்கரையில் ஆல மரம், மர நிழலில் குதூகலமாய் குழந்தைகள். கரையெல்லாம் நாணலும், காட்டான் மணியும், கோரையுமாய், மேலும் தென்னங் கொல்லை, மூங்கில் புற்றுகள், மாந்தோப்பு, வாழை மற்றும் மிளகாய் தோட்டம் எனவும், அருகில் சென்றாலே குளிர்ந்த காற்று, நதி நீரின் வாசம் எனவாக ஆற்றங்கரையோர கிராமங்கள் சொர்க்கம்.

ஆத்துல தண்ணி ஓடினாலே நாம் மகிழ்ச்சியாய் இருப்பதை நம்மால் உணர முடியும். இதை இதுவரை நாம் உணர்ந்திராத பட்சத்தில், Air Sahara விமானத்தில் எகானமி கிளாசில் டிக்கெட் வாங்கி சஹாரா பாலைவனம் அல்லது தார் பாலைவனம் வரை ஒரு முறை சென்று திரும்பி வரலாம். அவரவர் சொந்த செலவில் !!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்