Showing posts with label காந்திஜி. Show all posts
Showing posts with label காந்திஜி. Show all posts

காந்தி எனும் காந்தம் !!






மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.
புகைப் பிடித்தவர்; வீட்டு வேலைக்காரனிடம் பணம் திருடியவர்; வீட்டில் தங்கம் திருடியவர்; மனைவியிடம் கடுமையாய் நடந்து கொண்டவர்; மனைவியை சந்தேகம் கொண்டவர்; விபச்சாரியிடம் சென்று திரும்பி வந்தவர்; மனைவி கணவனுக்கு அடிமை என்று எண்ணியவர்; தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர்; இருட்டு, பேய் பிசாசு போன்றவற்றைக் கண்டு பயந்தவர். சீட்டு ஆடியவர்; நண்பர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி ஆபாச வார்த்தைகள் பேசியவர்.

இவரைப் போயா மகாத்மா என்பது ? அது அபத்தம் ஆயிற்றே ?

காந்தி மகாத்மாவா ? இல்லையா ?

காந்தி, தன் நிறைகளைக் காண்பதை விட தன் குறைபாடுகளையே அதிகம் உணர்ந்தவர்.

கதராடை அணிந்த அந்த தொண்டுக் கிழவர் தான் கோட் சூட் அணிந்த ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற்றியவர்.
கையில் கைத்தடி ஊன்றிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்த காந்தி தான், கன் (GUN) மற்றும் கேனான் (CANON) உடைய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையே தள்ளாட வைத்து இந்திய நாட்டை விட்டு அகற்றியவர்.

இது எப்படி சாத்தியமாயிற்று ?

ஆங்கிலேயர் பல நூறு ஆண்டுகள் இந்தியாவை அடிமை ஆட்சி புரிந்த பின், காந்தியின் அந்த ஒரு அஸ்திரத்தால் தாக்கப்பட்டு சுதந்திரத்தை ‘இந்தாப் பிடி’ எனக் கொடுத்து விட்டு ஓடிச்சென்றனர். அந்த அஸ்திரம் தான் அஹிம்சை; சத்தியாகிரகம். சத்தியாகிரகம் என்றால் உண்மையில் உறுதி.

ஆங்கிலேயரின் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும், பில்டிங் ஸ்டிராங்க் ஆனா பேஸ்மென்ட் வீக். காந்தியின் அஹிம்சைக்கும் அறப்போராட்டதிற்க்கும், பில்டிங்கும் ஸ்டிராங்க் பேஸ்மென்டும் ஸ்டிராங்க்.

காந்திஜி ஒரு போராட்டத்தில் இறங்கும் முன் சம்பந்த பட்டவர்களிடம் முதலில் பேசி, பிரச்சினையை நேரடியாய் களையப் பார்ப்பார். அதிலும், குற்றம் புரிந்தோரிடம் நேரிடையாக விவாதித்து பின்னும் தவறு செய்தவர் திருந்தவில்லை எனில், பிறகே போராட்டத்தை தொடங்குவார்.

இப்படியாக காந்தியை உதாரணமாகக் கொண்டு தற்போது உள்ள அரசியல்வாதியிடம் சென்று, “ஐயா, நீங்க கொடுத்த ரோடு காண்டிராக்ட்டில் ஊழல் நடந்திருக்கு. அதனால அந்த ரோடு கான்டிராக்டரை மாத்திட்டு நேர்மையான காண்டிராக்டரை மாத்தலைன்னா, அந்த ரோடு போடற இடத்தில் ஜனங்களை கூட்டி போராட்டதில் ஈடுபட வேண்டி இருக்கும்”, என்றால்.
அரசியல்வாதியோ, “சரிங்க நீங்க போங்க, பின்னால நான் பாத்துக்கறேன்” என்கிறார்.
நாமோ பெருமிதமாய் வெளியே வந்தால், நம்மைப் பின் தொடர்ந்து, சத்தமின்றி ஒரு ரோடு ரோலர் மெல்லமாய் நகர்ந்து வர ஆரம்பிக்கிறது.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் – வள்ளலார்.
வாடிய விவசாயின் முகம் பார்த்து, அந்த விவசாயியின் குறைந்த மேலாடையை பார்த்து அந்த விவசாயியின் துயரைத் தானும் அனுபவிக்க தன் ஆடையையும் தியாகம் செய்தவர் – காந்தியடிகளார்.

சரியாக சிந்திக்காத சொல் ஒன்றையும் அவர் வாயில் இருந்து வந்து விடாது. ஒன்றை சொல்லிவிட்டு பின் அதற்காக வருந்துபவர் இல்லை காந்தி. காந்திஜி, காற்று வாக்கில் வாய்க்கு வந்ததை பேசக் கூடியவர் இல்லை. ஒரு விஷயம் காந்திஜி கூறுகிறார் என்றால் அந்த விஷயத்தின் அடி ஆழம் நுனி வரை ஆராய்ந்து பரிசோதித்து உணர்ந்த பின் தான் அவர் வாயில் இருந்து வார்த்தை வரும். இன்றோ, நாம் அடிக்கடி கேட்கக்கூடிய ஒரு டையலாக், “அது …………….ப்போன வ்வாரம். ந்நான் சொன்னது இந்த வ்வாரம்’ போன்ற மழுப்பல்கள்.
காந்தி அறிவியலை அவ்வளவாக கற்றதில்லை. ஆனாலும் மக்களின் மனம் எனும் இயலை அறிந்தவர். அதனால்தான் காந்திஜி ஒரு விஷயம் செய்ய சொன்னால், மக்கள் அதைத் தாங்களே சொன்னதாய் எண்ணிக் கொண்டு செயலில் இறங்கி விடுகிறார்கள்.

சாதிப் பிரிவினையையும் மதப் பிரிவினையையும் கடுமையாய் எதிர்த்தவர். சாதி மற்றும் மதப் பிரிவினை கூடாது என்பதை வலியுறுத்தி பல முறை தன்னை வருத்தி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

காந்தி, விபச்சாரியிடம் சென்று வசை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தவர். காந்தி ஏக பத்தினி விரதன். திருமணத்திற்கு பிறகு, ஒரு கால கட்டத்தில் பொது சேவையில் தன்னை முழுமையாய் ஈடு படுத்திய பின், பூஜிய பத்தினி விரதனாகவே தன்னை மாற்றிக் கொண்டார். பூஜிய பத்தினி விரதன் என்றால் பிரம்மச்சரியம். அப்படி இருக்க என்ன ஒரு மனத் தூய்மை வேண்டும். என்ன ஒரு சேவை நோக்கம் வேண்டும். இன்றோ சாமியார்களும் சி.டி வெளியிடுகிறார்கள்.

எப்போதும் தன் அந்தராத்மாவின் குரலுக்கு அடி பணிபவர். தன் சொந்தக் குறை எதற்காகவும் நீதிமன்றம் செல்வது இல்லை என்ற உறுதி கொண்டவர். சொன்னதை செய்பவர். செய்வதை மட்டுமே சொல்பவர்.
இப்படித்தான்,
இரண்டாம் முறையாய் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன் கப்பல் கரையில் நின்று கொண்டு இருக்கிறது. காந்தி தென்னாப்பிரிக்கா வரக் கூடாது என்று வெள்ளையர்கள் அவரின் கப்பலை, துறை முகம் வர முடியாமல் நிறுத்தி வைத்து இருந்தனர். கப்பலில் இருந்தவர்கள் காந்தியிடம்,“வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றினால் உங்கள் அஹிம்சையை எப்படிக் கடைப்பிடிபீர்கள்”, என்றனர்.
அதற்கு காந்தி, “அவர்களை மன்னித்து அவர்கள் மீது வழக்கு தொடராமல் இருந்து விடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்று நம்புகிறேன்” என்றார். கேள்வி கேட்டவரோ சிரித்தார். இப்படியும் இருக்க முடியுமா? என்று. பின் காந்தி துறைமுகம் வந்தவுடன் அவரைக் கண்டு பலரும் கூடி கற்களாலும் அழுகிய முட்டையாலும் அடித்தனர்.
ஆனாலும் தன்னை அடித்தவர்களைப் பற்றி காந்தி இவ்வாறாக கூறுகிறார். “தங்கள் பிழையை உணரும் போது அவர்கள் சாந்தம் அடைவது நிச்சயம். அவர்களுக்கு நியாய புத்தியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார். “என்னைத் தாக்கியவர்கள் மீது குற்றம் சாட்டி வழக்கு தொடரக் கூடாது என்பது என் கொள்கை” என்றார். சொன்னதையே செய்தும் காட்டியவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் மரண தண்டனைக் கைதி கோட்சே.
காந்தியை சுட்டுக் கொன்றதால் இந்திய நீதி மன்றம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. ஒரு வேளை, கோட்சே சுட்ட குண்டு காந்தியை மாய்க்காமல் இருந்திருந்தால், காந்திஜியே முன் வந்து கோட்சேவை மன்னித்து இருப்பார். அதுதான் மகாத்மா.

காந்தி செய்த சோதனைகள், அவர் நமக்காக அடைந்த வேதனைகள், நம்மை முன்னிட்டு செய்த தியாகங்கள், தொடுத்த போராட்டங்கள் கணக்கிலடங்கா.

அது ஒரு வார இறுதி நாள். நண்பர்களுடன் மது அருந்திய மாலை. அன்று சத்திய சோதனை புத்தகத்தைப் பார்த்ததிலேயே சற்று நடுக்கம் ஏற்பட்டது. கண்களில் நீர் முட்டுகிறது. அந்த புத்தகத்தைத் தொடவும் மனம் கூசுகிறது. ஆன போதிலும் என்னைப் போன்ற மக்கு ஆத்மாவால், துளியும் மறுக்காமல் ஒத்துக் கொள்ள முடிகிறது காந்தி ஒரு மகாத்மா தான் என்று. அப்படி இருக்கையில் உங்களைப் போன்று மிகத் தெளிவாக சிந்திக்கும் ஆசாமிகளுக்கு, காந்தி ஒரு மிகப்பெரிய மகாத்மா தான் !


ஹரீஷ்

மூளைக்குள் சாலை !!



செய்திகளைத் தேட, கூகுள் (Google) தேடல் இயந்திரம், யாஹூ(Yahoo) தேடல் இயந்திரம், மைக்ரோசாஃப்ட்(Microsoft) தேடல் இயந்திரம் எனப் பல தேடுதல் இயந்திரங்கள் இருக்கின்றன. இவற்றை விட மிகச்சிறந்த செய்தித் தேடல் கருவி எது என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுவோர் மேலே தொடரலாம்.

செய்திகளை சேமிக்க, ஆரக்கில்(Oracle) டேட்டாபேஸ், சைபேஸ்(Sybase) டேட்டாபேஸ், DB2 டேட்டாபேஸ் எனப் பல டேட்டாபேஸ்கள் இருக்கின்றன. இருந்தாலும் மிகச்சிறந்த செய்தி சேமிக்கும் கருவி எது தெரியுமா ?

இப்போதோ இன்டெல் ப்ராஸெசர் (Intel Processor), சென்ட்ரினோ ப்ராஸெசர் (Centrino Processor), இந்த சர் அந்த சர் எனப் பல ப்ராஸெசர்கள் (Processor) பிரானனை வாங்குகின்றன். ஆன போதிலும் உலகத்தின் மிகச்சிறந்த செய்தி ப்ராஸெசிங் கருவி எது என்று தெரிந்தால் நமக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அந்த கருவி எது! என்று, ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அந்த கருவி என்னவென்பதை இந்நேரத்தில் யூகித்திருந்தால், மூளை விழிப்புடன்தான் வேலை செய்கிறது என்று நமக்கு நாமே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளலாம்.

வள்ளுவர் வாய் மொழியில் மொழிவதாயின்,
     அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
     உள்ளழிக்கல் ஆகா அரண்
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி; பகைவர்களால் கூட அழிக்க முடியாத அரண்.

இப்போது புரிகிறதா,
அப்படிப்பட்ட அறிவை தாங்கும் அற்புத ஆச்சரியக் கருவி நமது மூளையேதான் !!

ஆம், நமது மூளைதான் உலகத்தின் மிகச்சிறந்த தேடுதல் இயந்திரம், டேட்டாபேஸ் மற்றும் ப்ராஸெசர்.

மூளையை பற்றிப் பேச பல நல்ல விஷயங்களும், சில தீய விஷயங்களும் இருக்கின்றன.
தீமையை விடுத்து, நன்மையை மட்டும் நாடி, ‘பெரிதினும் பெரிது மற்றும் பேசுவோம்’.

மனிதன் உருவாக்கிய தேடுதல் இயந்திரங்கள், டேட்டாபேஸ்கள், ப்ராஸெசர்கள் எல்லாம் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பான அறைகளில் வைக்கப்படுகின்றன.
சாதாரனப்பட்ட இயந்திரங்களுக்கே சூட்டைப் போக்க, தாக்குதலில் இருந்து தப்பிக்க, வசதி தேவைப்படுகிறது. இதை விடவெல்லாம் மிகச்சிறந்த மனித மூளைக்கும், இயற்கை இயல்பாகவே பல பாதுகாப்பு அரன்களை வைத்து இருக்கிறது. அதாவாது மூளையை மண்டை ஓட்டுக்குள் வைத்து, மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் உராய்வை தவிர்க்க, இடையில் திரவமும் வைத்து இருக்கிறது.

இயந்திரங்கள் எதிர்பாராமல் பழுது அடைந்தால், மற்றொன்றை வைத்து சேவையைத் தொடர்வது சாத்தியம். மேலான்மையில்(Management) அதனை, தொழில் தொடர்ந்திடும் யுக்தி (Business Continuity Plan) அல்லது மாற்று யுக்தி (Contingency Plan) எனக் கூறுவர்.
மூளையில் இது எல்லாம் சாத்தியம் இல்லை. முனுசாமி மூளையை மூனு நாளைக்கு, மயில்சாமி கடன் எல்லாம் வாங்க முடியாது.

மூளையில் உள்ள திசுவின் பெயர் நியூரான்.
ஒரு நாடு என்றால் அதற்குள் பல நகரங்கள் இருக்கும். நாட்டில் உள்ள நகரங்களை இனைப்பது சாலைகள். அதைப் போல மூளை எனும் நாட்டிற்குள், நியூரான் எனும் நகரங்கள் இருக்கின்றன. ஒன்று இரண்டு நியூரான் அல்ல; நூறு பில்லியன் நியூரான்கள். குழந்தையாய் பிறக்கும் போதே இந்த நியூரான்கள் உருவாகிவிடுகின்றன. ஆனாலும் எந்தெந்த நியூரான் நகரங்கள் இனைத்து சாலை இனைக்கப் படுகிறதோ, அதற்கு தகுந்தார் போல்தான் மனிதர்கள் உருவாகிறார்கள். இந்த நியூரான்களின் இனைப்பே, உருவாவது காந்தியா? ஹிட்லரா? என்பதை நிர்னயிக்கிறது.

பிறந்தவுடன் நியூரான்கள் இனைப்பு பெறாமல் இருக்கும். குழந்தை வளர வளர இந்த நியூரான்கள் சிறிது சிறிதாக இனைப்புப் பெறுகின்றன.

பெண்களின் தங்க நகைப் பிரியம், மாமியார் மருமகள் உறவு, அரசியல்வாதியின் கொள்கைகள் எல்லாம் எந்த நியூரான் முடிச்சு என்று அறிந்து கொள்ள உள்ளே நுழைந்தால் நாம் தொலைந்து தான் போவோம்.

நியூரான்களில் முக்கியமான மூன்று பகுதி, உடல்(Body), டென்ரைடெஸ்(Dendrites) மற்றும் அஃஸான் (Axon). செய்திகளை மற்ற நியூரான்களிடம் இருந்து உள்ளே கொண்டு வர டென்ரைடெஸ்(Dendrites) பயன்படுகிறது. ஒரு நியூரானில் இருந்து மற்றொரு நியூரானுக்கு செய்தி அனுப்ப அஃஸான் (Axon) பயன் படுகிறது.
மனிதன் வளர வளர நியூரானில் உள்ள டென்ரைடெஸ்(Dendrites) கிளை விட்டு கிளை விட்டு பல நியூரான்களிடம் இருந்து தகவல் பெறும் ஆற்றலைப் பெருகிறது.
அதாவது டென்ரைடெஸ்(Dendrites) என்பது செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை நிருபர் என்று கொண்டால், அஃஸான் (Axon) என்பது செய்தி விநியோகிக்கும் பத்திரிக்கை எனக் கொள்ளலாம்.

இயற்கையின் படைப்பான மூளையிலும் வலது இடது இருக்கிறது. வலது மூளை இடது பக்க உடலையும், இடது மூளை வலது பக்க உடலையும் கட்டுப் படுத்துகிறது.

சாதி, மதம், இனம், மொழி, வர்க்க பேதமின்றி அனைவருக்கும் மிக நிறையவே நியூரான்கள் இருக்கிறது. இதில் கீழோர் என்றும் மேலோர் என்றும் யாரும் இல்லை.

காந்திஜி கூறியது, நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருள்வார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றன, என்று.

அப்படிப் பட்ட தூய நோக்கம் ஒருவருக்கு எப்படி அமையும் என்றால், நல்ல வளர்ப்பு முறையாலும், கல்வி முறையாலும், சிறந்த சுற்றுப்புற சூழ்நிலையாலும், செம்மையான சமூகமும் சேர்ந்துதால்தான் சாத்தியம்.

இப்படிப்பட்ட தூய நோக்கம் கொண்ட நியூரான்களின் இனைப்பை அடைந்து விட்டால், மூளை இனிதே !! நாளும் இனிதே !!


ஹரீஷ்

கணக்கு !!! !+!-!x!-! !!!



இது வெண்டைக்காய் விவகாரம்.

'மதம்' பெரிதா? 'மனிதம்' பெரிதா? என்று கணித முறையில் ஆராய்ந்தால், 'மனிதம்' தான் சிறந்தது எனத் தெரியவரும்.
வார்த்தை ஒன்று : {ம, த, ம் }
வார்த்தை இரண்டு : {ம, னி, த, ம் }
எண்  கணித முறையில் உள்ள செட் (Set), சப் செட் (Sub set) மற்றும் சூப்பர் செட் (Super Set) வழி பார்த்தோமேயானால், 'மனிதம்' என்ற வார்த்தையில், {ம, த, ம்} என்று, மதத்தின் அணைத்து எழுத்துக்களும் உள்ளன. அப்படி பார்க்கையில், 'மனிதம்' சூப்பர் செட்(Super set), 'மதம்' சப் செட்(Sub set).
ஆகா 'மனிதம்' தான் சிறந்தது. கணிதம் வாழ்க !!!

உலக தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையான, எண் கணித வளர்ச்சிக்கான பணிகளில், இந்தியாவின் பங்களிப்பு ஏதேனும் உண்டென்றால்; ஒன்றுமில்லை.
ஒன்றுமில்லை ?
ஆம்.... 'ஒன்றுமில்லை' ...
சற்றே பொறுப்போம்.
'ஒன்றுமில்லை' என்பதை, கணிதத்தின் படி கூற வேண்டும் என்றால், 'பூஜியம்' என்று தான் கூற வேண்டும்.
ஆக, இந்த 'ஒன்றுமில்லை' எனப்பட்ட 'பூஜியத்தை' உலகுக்கு தாரை வார்த்தது நமது இந்திய தேசம் தான்.

அதிலும் இன்றைய தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாய் இருக்கும் இரண்டு எண்களாக கருதப்படுவது.
பூஜியம் (0); மற்றும் ஒன்று (1).
இந்த இரண்டு எண்களும் தான் தகவல் தொழில் நுட்பத்தின் இரு கண்கள்.
இவற்றை இன்னும் பல விதங்களில் கூறுவது உண்டு. அவையாவன,
ஆன் (ON) - ஆஃப் (OFF)
எஸ் (YES) - நோ (NO)
ட்ரூ (TRUE) - ஃபால்ஸ் (FALSE)
இதையே தமிழில் மொழி பெயர்க்கலாம் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளாமல் தோன்றுவது,
வ்வரும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - ஆனா வ்வராது .....

இந்த 'பூஜியம்' என்பது இல்லாது இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், பல வேடிக்கைகள் நடக்கலாம். உதாரணத்திற்கு நாம் வாங்கும் சம்பளத்தில் பூஜியத்தை எடுத்து விட வேண்டியதுதான்.
அதாவது ரூபாய் 3500 என்று இருந்தால், ரூபாய் 35 ஆகி விடும். இவை எல்லாம் நம்மை போன்ற சாமானிய பட்டவர்களுக்குத் தான் இப்படிப்பட்ட கவலை. அதுவே தமிழக முதல்வராய் இருந்து, 1 ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த கவலை வந்து விடாது, ஏனென்றால் வாங்கும் சம்பளத்தில் தான் பூஜியம் இலையே. அதிலும் 9 ராசி எண்ணாக அமைந்து விட்டால், ஒரே குஷி தான்.

நம் குழந்தைகள், நிஜத்தில் புத்திசாலிகள் தான். நாம் தான் அவர்களை மனனம் செய்ய வைத்து, நியூரான்களை நசித்து விடுகின்றோம்.

ஒரு பொறியியல் மாணவனிடமும், ஒரு சிறு குழந்தையிடமும் ஒரே கணக்கு கேள்வி கேட்கப் படுகின்றது.
மொத்தம் மூன்று மூன்றுகளை உபயோகிக்கலாம். அதாவது 3, 3, 3.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் விடை 24 வர வேண்டும் என கேட்கப்படுகின்றது.
இதற்கு பொறியியல் மாணவன், கீழ் கண்டவாறாக விடை அளித்தான்.
= 3, 3, 3
= (3^3) - 3
= 27 - 3
= 24
விடை சரியான விடைதான்.
அதே கேள்விக்கு சிறு குழந்தை கீழ் கண்டவாறாக விடை அளித்தான். ஆனால் விடை கொண்டு வந்த விதம் தான் வேடிக்கை.
முதல் மூன்றை (3) திருப்பி இரண்டாம் மூன்றோடு (3) ஓட்டினான். இப்போது கையில் இருப்பது (8).
இப்போது இந்த எட்டை மீதம் இருந்த மூன்றோடு பெருக்கி விட்டான்,
= 3, 3, 3
= 8, 3
= 8 x 3
= 24
கெட்டிகார பிள்ளைகள்...

கணக்கில் சிறந்தவர்களை, 'கணக்குல புலி' என்கிறோம். புலி என்னைக்கு கணக்கு படித்தது ? என்று எண்ணி பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகின்றது.
ஒரு வேளை இப்படியும் இருக்குமோ ? ...
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ ? ......
புலியின் ஓடும் வேகத்திற்கு, ஈடான வேகத்தில் கணக்கு போடுபவரைத்தான் இப்படி 'கணக்குல புலி' என்று சொல்லுகின்றார்கள் போலும் ?
அப்படிப் பார்த்தால், நாமெல்லாம் 'கணக்குல மான்' ; கேள்வி கேட்டவுடனேயே பதுங்கி விடுவோம். பிறகு இரண்டு கால் பாய்ச்சலில் ஓடியும் விடுவோம்.

கல்லூரியில், கணக்கு வாத்தியார் வகுப்பு முடிந்து வகுப்பறையை விட்டு வெளியே சென்றவுடன், என்ன தாலாட்டு சத்தத்தையே காணோம், என்று தூக்கம் களைந்து எழுந்து பார்த்தால்; கரும் பலகையில், நாள் பட்ட கொத்து பரோட்டாவை பிச்சு போட்ட மாதிரி கிறுக்கி இருக்கும். முதல் பெஞ்ச் நண்பனிடம்  போய், 'இது என்னடா?' என்று விசாரித்தால், 'மாட்ரிக்ஸ்'(Matrix) என்பான். நாமோ புரியாதவனாய், 'ஃபஸ்ட் பார்ட்டா ? செகண்ட் பார்ட்டா ?' என்போம்.
இப்படி, பல நாள் முதல் பெஞ்ச் விசாரிப்பில் வெளிப்படுவன, லக்ராஞ்சே (Lagrange), ஃபோரியர் (Fourier), ஆயிலர் (Euler) எனப்படுவன.

இந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் இதெல்லாம் சொல்லித் தர மாதிரியான கல்லூரி எங்காவது கண்டால் சொல்லி அனுப்பவும்.

இவையன்றி கணக்கு பரீட்சை முடிந்தவுடன் தேர்வு அறைக்கு பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பல துணுக்கு சீட்டுகள் கிடைக்கலாம். இப்போதெல்லாம் கையெழுத்து பிரதியுள்ள புத்தகங்களுக்கு பெருத்த மதிப்பிருக்கின்றது. இந்த குப்பைத்  தொட்டியைக் கிளறினால் , பல கையெழுத்துகள் அடங்கிய ஒரு முழு இன்ஜினியரிங் மேதமேடிக்ஸ் புத்தகம் கிடைக்கலாம்.

பதிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுக்கோள், தலையனை அளவு உள்ள புத்தகங்களுக்கு பதில், கைக்கு அடக்கமான வடிவில், எடை குறைவான அளவில் வெளியிட்டால் உங்கள் புத்தகங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கும். மாணவர்களும் ஆர்வத்துடன் வாங்குவார்கள். புத்தக சுமை குறையுமே என்ற ஒரே (!!!) ஆர்வத்தில் தான் இதைக் கேட்கின்றோம்.

அன்று, காந்திஜி இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒன்றுபட்டு பாடுபட்டு இந்திய விடுதலை வாங்கித்தந்தார்.
இன்று, கலாம் இந்திய இளைஞர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, வளர்ந்த இந்தியாவை அடைய பாடுபடுகின்றார்.
இது 'இன்டெக்ரல் கால்குலஸ்' (Integral Calculus) கணக்கு.

மாறாக, ஏழு அமைச்சரையும் அழுது வடிந்து தான் கொடுத்தார்கள் என்பதாலும், தன் மத்திய அமைச்சர் மகனுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பேச தெரியாது என்பதால், குடும்பம் சிறுமை படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மீண்டும் ஆரிய திராவிடர் பிரிவினையை தூண்டி விட முயற்சி செய்யலாம்,சில தமிழ் தலைவர்கள்.
இது 'டிஃபெரென்ஷியல் கால்குலஸ்' (Differential Calculus) கணக்கு.


குழந்தைகளுக்கு கணக்கு சொல்லி தரும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு அப்பா அவர் சிறு குழந்தைக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
அப்பா கூறுகின்றார், 'ஒன்னும் ஒன்னும், ரெண்டு '.
குழந்தை, 'போப்பா, நீ பொய் சொல்லுற... அன்னிக்கு என் தலைய தடவி விட்டுக்கிட்டே, அம்மாகிட்ட ஒன்னும் ஒன்னும் மூணு -ன்னு சொன்ன',
அப்பா சிரித்துக்கொண்டே, 'டேய், அது வேற கணக்குடா'
குழந்தை, 'அப்போ அத மொதல்ல சொல்லிக்கொடு' !!!!!
இது குழந்தை கணக்கு !

கட்சி படு தோல்வி அடைந்து விட்டதால், எதிர் கட்சி தலைவராய் அமர மாட்டேன் என்று கூறுவது.
எம்.பி. எண்ணிக்கை குறைந்து விட்டதால், கொட நாட்டில் இருந்து அடுத்த காய் நகர்த்தலாம் என்று எண்ணுவதும்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை கூட்டணி தாவினால் பலம் பெருகும், என்று எண்ணி ஏமாறுவது.
இவை எல்லாம் அரசியல் கணக்கு !


சில சமயங்களில் சிங்கிள் டீ குடிக்க கூட காசு இருக்காது. மாச கடைசியாக வேற இருக்கும்.
வேறு வழியே இல்லாமல், நண்பருடன் நாயர் கடைக்கு சாயா குடிக்க சென்றால்,
'சேட்டா, ரெண்டு டீ.. ஸ்ட்ராங்கா......... '
'என்ட  மோனே, ஸ்ட்ராங்காயிட்டு வேணுமோ ? ............ போன மாச பாக்கியே இன்னும் கொடுத்திட்டு இல்லியே ..... '
'சேட்டா, இன்னும் ஒரு வாரம்தான் , சம்பளம் வந்து விடும் , கவலையே படாதீங்க'
டீ குடித்த பின், மீண்டும் அடுத்த மாச கடைசியில் தான் நாயர் கடைக்கு விஜயம் செய்வோம்.
இது காந்தி கணக்கு !!

ஹரீஷ்

கருப்பு வெளிச்சம் - ஒபாமா !!



குழந்தைகளும் அவர் கையில் குதுகலமாகத் தான் காட்சி அளிக்கின்றன. அவரிடம் அப்படி என்ன சிறப்பு.
அவரை கண்டாலே பெண்கள் பரவசம் அடைகின்றார்கள். இதோ நம் அண்ணன், இதோ நம் தந்தை போன்றவர், இதோ நம் மகன் இங்கே என்று.
ஆண்களோ, நம் நண்பன் இதோ இருக்கின்றான் என்று ஆனந்தமடைகின்றார்கள்.
அப்படி என்ன ஒரு ஈர்ப்பு ... காந்தியை அவர் வணங்குவதால் வந்த காந்த சக்தியோ.

கார்டூனிஸ்ட்களுக்கோ மிகுந்த கொண்டாட்டம், அவர்கள் வரைவதற்கு ஏற்ற ஒரு கார்ட்டூன் முகம் கிடைத்து இருக்கின்றதே.

பதவி ஏற்ப்பு விழாவில் ஒரு வார்த்தை பிறண்டாதால் மீண்டும் ஒரு முறை தனிமையில் பதவி ஏற்றார்.

   சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை
   வெல்லும் சொல் இன்மை அறிந்து

என்பதை முற்றும் உணர்ந்திருக்கின்றார்.

அவரை அந்த மதம், இந்த மதம் என்று கூறிப் பார்த்தார்கள். அவரோ, தான் மனித மதம் என்பதில் மனம் கொண்டவர். ஆகையால், அவரிடம் மத விஷயங்கள் மந்தமாகவே எடு பட்டன.

அவரை நிறம் கொண்டு, கறுப்பர் இனம் என்று பாகு படுத்த பார்த்தனர்.
ஆனாலும் அவர் வெள்ளை மாளிகைக்கு ஒரு புது அர்த்தம் கற்பித்து இருக்கின்றார்.
வெள்ளை - அணைத்து வர்ணங்களையும் வெளியிடுவது .
கருப்பு - அணைத்து வர்ணங்களையும் உள் வாங்குவது.
அதாவது, அணைத்து குண நலன்களையும் உள்ளடக்கிய ஒருவர், உலகுக்கே கட்டளைகள் வெளியிடும் மாளிகையில் இருக்கின்றார்.

எங்கள் நாட்டிலும் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களோ அரிசியிலும் அரசியல் பண்ணுவார்கள் .
சுடுகாட்டு கூரையிலும் ஊழல் புரிவார்கள்.

எங்கள் அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகளை பார்த்து இருந்தால், ஒருவேளை, ஒரு டாலருக்கு பீட்சாவும் கோக்கும் கொடுப்பதாக கூறி இருக்கலாம் நீங்கள். நல்ல வேளை அமெரிக்க மக்கள் தப்பித்தார்கள்.

மக்கள் அளித்த வாக்கால் வெள்ளை மாளிகையில் அமர்ந்து இருக்கின்றீர். நீங்கள் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஆரம்பித்து இருக்கின்றீர். வாழ்த்துக்கள்.

கியூபா விற்கு மக்கள் போய் வரவும் பண பட்டு வாடாக்களையும் அனுமதிப்போம் என்று சொன்னீர். அதையும் செய்தீர்.

தாங்கள் கூறிய படி குண்டனமோ சிறையை சிறிது சிறிதாய் மூடுவோம் என்றீர். இதோ அந்த வேலை ஆரம்பித்தும் விட்டது. அங்கே நடக்கும் மனித உரிமை மீறலை தைரியமாய் தெரிவித்து அதற்கு வருந்தவும் செய்தீர். செம்மையான காரியம் செய்தீர்.

இப்போது அதிபர் பதவிக்கு வந்ததால், அப்படியே ஒசாமாவை-யும் ஒரு ஓரமாய் உட்கார வைக்க முடியுமா என்றும் பாருங்கள்.

அவரோடு போட்டி இட்டவர்களை காட்டிலும் அவரிடம் அதிக பண பலம் இல்லைதான், ஆனாலும், தன் மன பலத்தால் அனைவரையும் ஓரம் போ ! ஓரம் போ ! என்று ஒதுக்கி காட்டியவர்.

உலக பொருளாதாரம் படுத்து கிடக்கும் இவ்வேளையில், உலகமே, இதோ பொருளாதாரத்தை எழுப்பி நிமிர்ந்து நிற்க வைக்க, வெள்ளை மாளிகையில் கார் வேந்தன் வந்திருக்கிறார், பராக் பராக் பராக் !! என்கின்றனர்.

ஆம்,
ஒபாமா ..
பராக் ஒபாமா .... !!

ஹரீஷ்

காந்தி சிரிக்கின்றார் கவருக்குள்ளே ....



தமிழ் மக்களே ...

விழித்து கொள்ளுங்கள் வந்து விட்டது வேலை ...
வேலை உங்கள் மதியில் உள்ளது ..... .. செயல் உங்கள் விரலில் உள்ளது ....

ஆள் கூட்டி மாஸ் காட்டலாம் தேர்தல் கூட்டத்தில் ....
ஆனாலும் நம் ஆள் காட்டி விரலில் தான் உள்ளது அவர்கள் ஐந்து ஆண்டு ஆயுட் காலம் ...

வந்தே விட்டது ஐந்து வருடம் முன் நாம் செய்த தவறுக்கான பிராயசித்தம் ..

இதோ தினமும் வருகின்றார்கள் .... நம் நாளைய பாரதத்தை புரட்டி போட போகின்றார்களாம் ...
வார்த்தை அவர்களுக்கு என்றுமே தடை இல்லை ......
வார்த்தைகளில் வெல்லம் வடியும் ..... வெற்றி பெற்றாலோ வேதனை தான் மிச்சம் ...

இன்று சொல்லுவார்கள் நான் உங்களின் தொண்டன் என்று வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து .......
நாளை, நாம் அவரை கேவலம் கேள்வி கூட கேட்க கூடாது என்றும் சொல்லுவார் ...
காரணம் என்ன வெனில் ...
அவர்களும் மக்கள் மன்றத்தில் கேள்வியே கேட்க மாட்டார்களாம் ...

அடுத்த நான்கு வருடத்தில் இவர்களுக்கு மன்னர் ஆட்சி தான் நினைவில் இருக்கும் ...
ஆமாம் ஆமாம்.... இருக்காதா ... .. நாம் தான் amnesia நோயாளிகள் ஆயிற்றே ....
நம் தொகுதியின் தேர்ந்து எடுக்க பட்ட வேட்பாளர் யார் என்று நமக்கு எள்ளளவும் மீண்டும் தெரிந்து கொள்ள கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் அடுத்த ஐந்து வருடத்திற்கு நடந்து கொள்ளுவார் ....
மீண்டும் நாம் ஐந்து வருடம் கழித்து தான் பிராயச்சித்தம் தேட வேண்டும் ....

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் இவ்வாறும்
உடையான் அரசருள் ஏறு !!!

என்று அய்யன் வள்ளுவன் கூறியதை அப்படியே தவறாக எடுத்து கொண்டுள்ளார்கள் போலும்
படை - அடியாட் படை
குடி - டாஸ்மாக் கடை
கூழ் - பிரியாணி பொட்டலம்
எனவாக இவர்கள் ஆட்சி செய்ய நம் ஆட் காட்டி விரலே சென்ற முறை சாட்சி சொல்லியது ...

இவர்கள் நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று என்று பேசுபவர்கள் இல்லை..
ஆம்.. கடந்த ஐம்பது வருடமாக ஒரே வாக்குறுதி தானே கொடுக்கின்றனர் ...

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற போகின்றார்களாம் கவரில் வைத்த பணத்தை கொடுத்த படியே கூறுகின்றார்கள் ..
காந்தி சிரிக்கின்றார் கவருக்குள்ளே ....

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்