வர்ணாசிரமம் - மலர் வாசனையா ?

வர்ணாசிரமம் - மலர் வாசனையா ?'ந்து மதத்ததில் சாதி கிடையாது' என்று நம்பும் நவீன நாயகர்களே....


'சாதி என்பது, நம் மக்களுடைய கற்பனை; இந்து மதத்தில் சாதி என்பது குறிப்பிடப்பெற வில்லை' என்று கண்ணை மூடிக்கொண்டு கட்டியம் கூறுவோரே...

'இந்து மதத்தில், வர்ணாசிரம தருமம் என்று எதுவுமே இல்லை' என்று கட்டவிழ்த்து விடும்  காளையரே.....

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமத்தை, நம் மக்கள்தான் தவறாகப் புரிந்திருகிறார்கள்' எனும் பெருந்தனக் காரர்களே....

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமம் என்பது, மக்களின் மேன்மைக்காக உண்டாகபட்டது' என்று உளரும் சிறு உள்ளதோரே....
***********
'இந்து மதத்ததில் சாதி கிடையாது' - அப்படியா?  நம்புவோமாக !?!

'சாதி என்பது, நம் மக்களுடைய கற்பனை; இந்து மதத்தில் சாதி என்பது குறிப்பிடப்பெற வில்லை' -  அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில், வர்ணாசிரம தருமம் என்று எதுவுமே இல்லை' -  அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமத்தை, நம் மக்கள்தான் தவறாகப் புரிந்திருகிறார்கள்' - அப்படியா?  நம்புவோமாக !?!

'இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரம தருமம் என்பது, மக்களின் மேன்மைக்காக உண்டாகபட்டது' - அப்படியா?  நம்புவோமாக !?!
***********
எவ்வளவோ நம்புறோம் இத நம்ப மாட்டோமா என்கிறீர்களா? நிற்க!

நாம் கூறுவதையாவது நம்பாதீர்கள்.

ஏன் என்றால்? நீங்களே கூட உங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போது, இங்கே கூறப்போவது நேர்மையாக
இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். பெரியார் அவர்கள், அவரின் கருத்துகளை யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் இல்லை
மாறாக, பெரியார் அவர்கள், அவரின் கருத்துகளை பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்க சொல்லுவார்கள்

அப்படி பகுத்தறிந்து ஆராய்ந்து தான் இந்தக் கட்டுரையை எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடங்குவதற்கு முன்னர் சில கேள்விகள் கேட்டு, அந்த கேள்விகளுக்கு முடிவில் விடை கிடைகிறதா என்று சரி பார்த்துக் கொள்ளலாம்

கேள்விகள் இதோ:
- இந்து மதத்தின் சாரம் எவை ?
- வர்ணாசிரமத்தின் விளக்கம் எதிலே இருக்கிறது ?
- வர்ணாசிரமம் என்றால் என்ன ?
- வர்ணசிரமத்தினால் பயன் அடைவோர் யார் ?
- வர்ணசிரமத்தினால்,  இழப்பையும் இழிவையும் அடைவோர் யார் ?
- வர்ணாசிரமம் மனிதர்களுக்குத் தேவையா ?
- இந்து மதம்  மனிதர்களுக்குத் தேவையா ?
- மனிதர்களுக்கு  மதம் தேவையா ?

இந்து மதத்தில், இந்து மதத்தை விளக்க ஆதாரமாக இருப்பவையாகக் கூறப்படுவது:
  • வேதம்
  • மனு தர்மம் 
  • உபநிஷதம்
  • புராணம்
  • காவியம்
  • வேதாந்தம்
இன்னும் இத்யாதி இத்யாதிகள் இருக்கும்....

'இந்து மதத்தின் சாரமான வர்ணாசிரமத்தை, மொழி பெயர்க்கையில்  நம் மக்கள்தான் மனுதர்மத்தை திரித்து எழுதி விட்டார்கள்' - என்று நம்பிக்கொண்டு இருப்போர்களே;  உங்களுக்கே உங்களுக்காகதான் 'George Buhler' என்ற வெளிநாட்டு(ஜெர்மன்) அறிஞர் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மனுதர்மத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்கிறோம்

மொழி பெயர்ப்பாளர் : ஜெர்மனிகாரர்
மொழி பெயர்த்தது : சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த வருடம் : 1886
மொழி பெயர்ப்பாளர் இறந்த வருடம் : 1898
தந்தை பெரியார் பிறந்த வருடம் : 1879

அது சரி, தந்தை பெரியார் பிறந்த வருடத்தை ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்று வியப்படையத் தேவை இல்லை; எங்கே இருந்து யார் வருவார் என்றே தெரியாது, என்ன சொல்வார் என்றே தெரியாது. 'பெரியார் சொல்லித்தான் George Buhler அப்படி மொழி பெயர்த்தார்' என்று தேவை இல்லாத விதண்டா வாதம் வைத்தாலும் வைத்து விடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கை தான்  :) 

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார  நிருவனத்தில், மனுநீதி பற்றி தமிழர் தலைவர் அவர்கள் 'அசல் மனுதரும சாஸ்திரம்' என்ற அராய்ச்சி புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அதை  வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், தற்போது தமிழகத்தில் இல்லாததால்(வெளிநாட்டில் [லண்டனில்] இருப்பதால்),  மனு நீதி பற்றிய  திராவிடர் கழக வெளியீடுகளை வாசிக்காமலே, இந்த முயற்சியில் இறங்கி இருப்பதால், ஒரு வகையில் இந்தக் கட்டுரையின் நோக்கதிற்கு ஒரு தேக்கம் தான். ஆனாலும், தந்தை பெரியார் காட்டிய ஆராய்ச்சிப் பாதையில், சிறிதேனும் முயற்சி செய்து ஆங்கில மொழி பெயர்ப்பையே ஆதாரமாகக் கொண்டுதான் இந்த கட்டுரையை எழுதத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் மனு தர்மத்தைப் புரிந்து கொள்வதற்கு, கீழ்க் கண்ட தகுதிகள் இருந்தாலே போதும்.
தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் :)


ஆங்கிலப் புலமை இல்லாவிடினும்ஆங்கிலத்தில் வாசிக்க மற்றும் புரிந்து கொள்ளக் கூடிய திறமை
கற்பனையான இழிவு நிலையில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம்

அதிலும், இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கான சுட்டியும் இங்கே கொடுக்கப்படும்.மனு தர்மம் முழுமையையும் மொழி பெயர்ப்பது அல்ல, இந்த கட்டுரையின் நோக்கம். மாறாக, மனிதர்களை இழிவு படுத்தும், பிரிவு படுத்தும், ஒரு சாரார் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் ஓரவஞ்சனைப் பற்றிய, மற்றும் பகுத்தறிவுக்கு ஏற்க முடியாத அளவிற்கு உள்ள ஸ்லோகங்களை மட்டுமே இங்கே குறிப்பிடப் படும்.

'இப்படிக் கூறுகிறீரே, மனு தர்மத்தில் ஒன்றிரண்டு நல்ல செய்திகளும் இருக்குமே; அதை எல்லாம் ஏன் கூறவில்லை' என்று சண்டை சச்சரவு செய்யாதீர்கள். அப்படி நல்ல செய்திகள் இருந்தால், அதை தாங்கள் எழுதுங்கள்; அதை வாசிக்க ஆர்வமாய் இருக்கிறோம்

நாம் என்ன கூறுகிறோம் என்றால், 'இழிவில் போய் மலர் வாசனை தேடலாமா' என்றுதான் கூறுகிறோம்.

தொடரும்....

உண்மையுடன்
பொன்னியின் செல்வன்

சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


சந்து வழியாய் - சமஸ்கிருத மொழியா?


காலப்  போக்கில் கல் தோன்றி; மற்றோர் நாள் மண் தோன்றி; அன்றோர் நாள் அமீபா(Amoeba) தோன்றி; வருடங்கள் உருண்டோடி குரங்கு உருவாகி; பரிணாம வளர்ச்சியில் பின் தோன்றிய பழங்குடிகளில், மூத்த குடியான திராவிடர்கள் தோற்றுவித்த உன்னத மொழி, உயிர் மொழி - தமிழ் மொழி !

அப்படிப்பட்ட தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று குரல் எழுப்பும் இவ்வேளையில், சந்து வழியாக சமஸ்கிருத கும்பல், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிக்க முயற்சி செய்கிறது.

நல்ல வாய்ப்பாக,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்
போல், திராவிடர் கழகம்தான் இந்த சந்து வழி சமஸ்கிருத எழுத்துத் தினிப்பு முயற்சியைக் கண்டுபிடித்து, எழுத்து தினிப்பைத் தடுக்க தடுப்பணையும் போட்டுள்ளது.

விழிக்கு எப்படி ஒளி பிரதானமோ, அப்படியே மொழிக்கு ஒலி பிரதானம். எந்த ஒரு மொழிக்கும், ஒலி மிக முக்கியம்; அந்த ஒலிகளுக்கு இணையாகத்தான் எழுத்துக்கள் வருகின்றன. தமிழில் பல சிறப்பான ஒலிகள் உள்ளன. அதாவது, 'எ' 'ஒ' 'ற' 'ன' 'ழ'  போன்றவை.

'வர்ணாசிரம தர்மம்' எனும் வீண் சிரமத்தை உண்டாக்கிய மொழிதான் சமஸ்கிருத மொழி. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் அரிய மானுட தத்துவங்களை தந்தது நம் தமிழ் மொழி.  சமஸ்கிருதம், மனிதர்களை நான்கு சாதியாகப் பிரிக்கிறது. நாலு வாங்கினா ஒன்னு ஃப்ரீ எனும் கணக்காய் ஐந்தாம் சாதியையும் உருவாக்கி வைத்துள்ளது, சமஸ்கிருதம் போற்றும் இந்து மதம்.

தமிழின் மேன்மையைப் பாருங்கள்; தமிழோ, 'எல்லாமே நம் ஊர்தான்; எல்லோரும் நம் உறவினர்' 'பிறப்பால் எல்லா உயிரும் சமந்தான்' என்று கூறி இணைக்கிறது. அதாவது, காசியும் நம் ஊர்தான், கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியும் நம் உறவினர்தான், எனும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டது தமிழ் மொழி. நமக்கு மனிதர்கள் எதிரிகள் இல்லை; சில 'மனிதர்களின் தீய கொள்கைகள்தான் எதிரிகள்'. இந்த தீப கர்பத்தில், திராவிடர்களுக்கு பார்ப்பனர்களின் பார்ப்பனீயம்தான் தீய கொள்கையாக இருக்கிறது. பார்ப்பனர்களை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இல்லை திராவிடர் கழகத்தினர். மாறாக, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்ப்பவர்கள்.
  
திராவிட மொழிகளுக்கு எல்லாம் தமிழே வேர் மொழி. அந்த வேரில் விஷத்தை ஏற்றினால், மரம் கிளைகளுக்கும் பரவிவிடும் என்ற எண்ணத்தில், விஷமிகள் விஷக் கிருமிகளை வேரில் புகுத்த எத்தனிக்கிறார்கள். பெரியார் வளர்த்த பகுத்தறிவுக் கூட்டத்திடம் பலிக்குமா இந்த விஷக் கிருமிகளின் விசேஷங்கள்? பலிக்காது! 
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் 
போல, நல்லதோர் சிந்தனைச் சிற்பிகளை அல்லவா தந்தை பெரியார் எனும் சமூக மருத்துவர் உருவாக்கியுள்ளார்கள்.

எது விஷக் கிருமி? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் தினிப்பதுதான். சிறீராமன் சர்மா என்பவர் Unicode Consortium-க்கு ஒரு விண்ணப்பம் வைத்துள்ளார். என்ன விண்ணப்பம்? என்றால், சமஸ்கிருத எழுத்துக்களை தமிழில் மொழி பெயர்க்க சிரமமாய் இருப்பதால், மொழி பெயர்ப்பை எளிதாக்க சமஸ்கிருத எழுத்துக்கள் 26 ஐ தமிழில் எழுத்தாக தினிக்க விண்ணப்பம் இட்டுள்ளார்.

தமிழகத்தின், மொத்த மக்கள் தொகையில்  6 கோடியே 25 லட்சம்  பேரில், நூற்றுக்கு நான்கு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இருக்க மாட்டார்கள் (இது உத்தேசமான கணக்குத்தான். அடுத்த வருடம் சாதி வாரிக் கணக்கெடுப்பு வந்தவுடன் உண்மை நிலவரம் அறியலாம்). அந்த நான்கு சதவீதத்தில் எத்தனை சதவீதம் பேர் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருக்கப் போகிறார்கள்?. நான்கு சதவீதம் என்று உத்தேசித்தால், தமிழக மக்கள் தொகையில், ஆறே கால் கோடி பேரில், வெரும் 25 லட்சம் மக்களுக்காக, மற்ற 6 கோடி மக்கள் புழங்கும் ஒரு மொழியில், சமஸ்கிருத மொழியின் எழுத்துகளை சேர்த்தால், ஏற்றுக் கொள்ளலாமா? உலகத் தமிழர்களின் எண்ணிக்கையை சேர்த்தால், இன்னும் கூடுதல் பேருக்கும் இந்த 'சந்து வழி சமஸ்கிருதத்  திணிப்பால்' திண்டாட்டம் வந்து விடுமே! பார்த்தீர்களா இந்த சமஸ்கிருத கூட்டம் 'சந்து வழி சிந்து பாடுவதை'! இதைத் தடுக்கவேண்டியது நம் கடமை அல்லவா!? கடமை கிடக்கட்டும். இந்த சமஸ்கிருதத் தினிப்பை தடுக்க வேண்டியது நமது உரிமை அல்லவா!?

சமஸ்கிருத படைப்புகளை நம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்க, சமஸ்கிருத எழுத்தைத் தமிழில் தினிக்கப் பார்க்கிறார்கள். தமிழில் உள்ள உலகப் பொது மறையான உயரிய திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க சிரமமாய் இருக்கும் என்று கூறி, தமிழ் எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், இந்த 'சைட் வாசல் சமஸ்கிருதத் தினிப்பு' கூட்டத்திற்க்குப் பொறுக்குமா?

தமிழை நீச பாஷை என்றவர்கள் தான் சமஸ்கிருதம் போற்றும் சங்கராச்சாரியார்கள்.

"பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்?" என்று தந்தை பெரியார் அவர்கள் கொதித்து எழுந்ததின் காரணத்தை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே.

தமிழ் செழுமையான மொழி. இந்த செழுமையான மொழியில் வார்த்தைகள் ஏராளம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் வார்த்தைகள் கூட்டிக் கொண்டே போகலாம் - ஒலிகள் மாறாமல்.

தமிழ் ஓர் உயிர் மொழி. அதிலும், திராவிட மொழிகளுக்கு தமிழே ஆணி வேர். அந்த ஆணி வேரை ஏணி வைத்தாலும் எட்ட முடியாது சமஸ்கிருதத்தால்.
சமஸ்கிருதம் ஓரு பட்ட மரம்; தமிழோ வளரும் ஆல மரம்! தமிழனுக்கு என்றொரு நாடு, என்று பெருமை கொள்ளும் நாளும் வரும்.

உண்மையுடன் 
பொன்னியின்  செல்வன்

நன்றி : 

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்