பொங்கலன்று பாட்டியுடன்ந்தப் பொங்கலுக்கு, பொங்கலோ பானையில் பொங்க, நிகழ்ச்சி நிரல்களோ தொலைக்காட்சியில் பொங்கிவழிந்தன.


எதை எடுப்பது? எதை விடுப்பது? ஆனாலும், கட்டைவிரல் நுனி களைத்துத்தான் போயிருக்கும். ஆமாம்! இருக்காதாப் பின்னே; கட்டைவிரலால் அந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்தியழுத்தி கட்டைவிரலே தேய்ந்திருக்கும். கழுதைத் தேய்ந்து கட்டைவிரலான கதையாய், கடைசியில் கட்டைவிரல் தேய்ந்து சுண்டுவிரலான கதையாய் அல்லவா ஆகியிருக்கும்.


நல்லவிதமாக, இந்த குழப்பமேதும் இல்லாமல், பிடித்த நிகழ்ச்சிகளை மட்டும் இணையத்தில் பார்த்ததால் கட்டைவிரல் தப்பித்தது.


சூர்யாவின் பேட்டி ஒரு சேனலில் வந்திருந்தது. நிகழ்ச்சியின் முடிவில், மீடியாவைப் புகழ்ந்துத் தள்ளிவிட்டார் மனிதர். ஏனோத் தெரியவில்லை; இடம் பொருள் ஏவல் ஏதென்றறியாமல், 'ஈனம்' எனும் வார்த்தையினால் தோன்றிய சினம் குறைக்கவோ?


சூரியாவின் தம்பி கார்த்தியின் பேட்டிகள் சுவாரசியமாக இருக்கிறது. உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்போது உள்ளத்தில் இருந்து பேசுவதும்; இயக்குனர் வரும்போது, எழுந்துநின்று மரியாதை செய்வதும்; பெருமைகளை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்வதும் என பிரமிக்க வைக்கிறார். சிவகுமாரின் மைந்தன் அல்லவா; சூரியாவின் தம்பி அல்லவா!


'நீயா நானா'  சிறப்பு நிகழ்ச்சியில் 'பேச்சு' தான் விவாதத்தலைப்பே. பேச்சாளர்கள் அணியில் உள்ள ஊறறிந்த பேச்சாளர்கள் மைக்கைப்பிடித்தால் விட மாட்டேனென்கிறார்கள். கேட்கப்படும் கேள்விக்கு நேராகவும் விடையளிக்க மாட்டேன்கிறார்கள். இதுல TRP ரேட்டிங்க் ஏத்தற மாதிரி, இறுதியில் ஒரு சச்சரவுப் பேச்சை ஒளிபரப்பி, மறக்காமல் 'தொடரும்' போட்டு விட்டார்கள்.


இணையத்தில் பார்த்தாலும் சில நிகழ்ச்சிகளை விளம்பரங்களோடுதான் பார்க்க முடிந்தது. அப்போதுதான் புரிந்தது; விளம்பர இடைவேளையில்தான் நிகழ்ச்சி ஓளிபரப்பாவதை. யாரு சார் சொன்னா பொருளாதாரம் படுத்து கிடக்குன்னு?


அவ்வப்போது, தொகுப்பாளினிகள் வந்து தூய இனிய செந்தமிழில், 'பொங்கள் வால்த்தும்' கூறினர், 'ஷோலர்' வரலாற்றையும் விவாதித்தனர்; உபயம்: ஆயிரத்தில் ஒருவன்.


'தமிழ் படம்' குழுவினரின் கலந்துரையாடல்கள் நல்ல நகைச்சுவையாகவும் காமெடியாகவும் இருந்தன. திரைப்படம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. 'தமிழ் படம்' பெயரில் 'ப்' இல்லை; ஏனோ தெரியவில்லை. மருதையில் இப்படித்தான் பேர் வைப்பாங்களோ!


இடையிடையே ஸ்ரேயா வந்துப் போனார். அதான் சொல்லியாச்சே 'இடையிடையே' என்று.


முக்கிய சேனல்களில், பட்டிமன்றம் இருந்தன. சாலமன் பாப்பையா பட்டிமன்றமும், இறையன்பு பட்டிமன்றமும் மிகச்சுவையாக இருந்தன. இறையன்பு பேச்சால் பிரமிக்க வைக்கிறார்கள். ஜெயா டி.வியில் பட்டிமன்றம் பயங்கர போர்;முழுமையாகப் பார்க்கப் பிடிக்கவில்லை. விஜய் டி.வியிலோ புதுமையாய் ஆன்மிக பட்டிமன்றம் இருந்தது. தலைப்பு, 'அவதாரம் தோன்றுவது காக்கவா? அழிக்கவா?' என்பதுதான். என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்டுவிடுவோம் என்று கேட்டதில், பல நேரங்களில் ச்சிப்பு பொத்துகிட்டு வருகிறது. மிக விரைவில் கி.வீரமணியும், கலைஞர் அவர்களும் இந்த தலைப்பில் பட்டிமன்றம் வைத்துப் பேசினால் ஆச்சரியமில்லை.


பொங்கல் தினத்தன்று ஒரு சேனலில், 'பொங்கல் செய்வது எப்படி' என்று ஆதிமுதல் அந்தம்வரை ஓன்னொன்னா விளக்கிக்கொண்டு இருந்தார்கள். 
அது சரி! 
குழந்தைகள் தினத்தன்று என்ன நிகழ்ச்சி ஒளிபரப்புவார்கள் 
என்று அவர்களை விசாரிக்க வேண்டும்.
விஜய் டி.வியில், கோபிநாத்துடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி மயிர்க்கூச்செரிய வைத்தது. குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள 'அகரம்' ஃபௌண்டேஷனின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. ஹேட்ஸ் ஆஃப் சூர்யா!


என்ன ஒரே வருத்தம்ன்னா, பொங்கல் அன்று பாட்டிகிட்ட தொலைப்பேசியில பேசமுடியல.பாட்டியின் குரல் கேட்க முடியல. பாட்டி செல்போன் எங்கேயோ எப்படியோ தொலஞ்சிடுச்சாம். பாட்டியோட செல்ஃபோன உபயோகிக்க வாங்கிட்டு போறவங்க, எங்கயாச்சும் மறந்து வச்சிடறாங்களாம். பொங்கல் தினத்தன்று சர்க்கரைப் பொங்கல் சாப்பிட முடிந்தது. வெறும் சக்கரைப் பொங்கல் வாயில போட்டு என்ன பிரயோசனம்; அதுவும் பாட்டியின் குரல்கேட்க முடியாமல் 'செவிக்கு உணவில்லாத போது'!-பொன்னியின் செல்வன்-

தமிழ் தழைக்க


மீபத்தில், முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் தமிழ் எழுத்து சீரமைப்பு பற்றிய கருத்துக்களை அறிய நேர்ந்தது. அந்த கருத்துக்களின் வழிவந்ததே இந்தக் கட்டுரை.

எழுத்து என்றால் வடிவம் தானே? அதுவும் ஓர் ஓவியம் தானே? ஆக, எழுதத்தெரிந்தவர்கள் எல்லோரும் ஓவியர்களே; குறிப்பிட்டு சொல்வதாய் இருந்தால் சொல் ஓவியர்கள்!

நவீன ஓவியங்களிலோ (Modern Art ), அதைக் காண்பவர் அந்த ஓவியத்தில் இருந்து பலவற்றை புரிந்துகொள்ளக்கூடும். அப்படிப்பட்ட கவலை எல்லாம் இந்த சொல் ஓவியத்தில் இல்லை. ஆனாலும், 'அ' என்ற சொல் ஓவியத்தைப் பார்த்து, வாய்திறந்து 'ஆ' என்று நெடிலாய் வாசித்துவிட்டால் சற்றே சிக்கல் தான்.

'அ' எனில், ஒலி; ஓவியம்;எழுத்து;குறியீடு; ஓர் எண்ணம்;

உயிர் எழுத்துக்களை உச்சரிக்க பற்கள் தேவையில்லை. குழந்தைகளும் பொக்கைவாய் பெரியவர்களும் கூட உயிரெழுத்துக்களை உச்சரிக்கலாம். அதிகமான உயிரெழுத்துக்கள் தமிழுக்கு இருப்பது சிறப்புதான்.

உயிர் இல்லாமல் உடல் இல்லை;  ஓர் உடலில் உயிரில்லை எனில் அது வெறும் பிணம். உயிரெழுத்து இன்றி எந்த தமிழ் வார்த்தையும் இல்லை. அவ்வகையில் தமிழ் உயிரோட்டமான மொழியும் கூட.

ஒரு மொழி முதலில் எண்ணமாக உருவாகி, சைகையாக கையாளப்பட்டு; பின், ஒலியாக எழுப்பப்பட்டு; பிற்பாடே, அந்த ஒலிக்கு நிகரான வரிவடிவம் வரையப்பட்டிருக்கும். பிற்பாடே, வார்த்தைகள் வந்திருக்கும்; அதன்பின்னேதான் இலக்கணம் வந்திருக்கும்; தொடர்ந்து இலக்கியங்கள் வந்திருக்கும். இதுதான் ஒரு சீரிய செம்மொழியின் பரிணாமவளர்ச்சி. ஆக, ஒரு மொழியின் பரிணாம வளர்ச்சிக்கு அதிமுக்கிய காரணம் எண்ணம்; அதாவது சிந்தனை. 

சிந்தனை இருப்பதால்தான் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; வாழ்வார்கள்.

இன்றிலிருந்து 2500 ஆண்டுகட்கு முன்னரே, தமிழில் இலக்கண நூல் தொல்காப்பியம் இய்ற்றப்பட்டுள்ளது; எனில், அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் தமிழுக்கு வரிவடிவம் வந்திருக்கும்? வரிவடிவம் வருவதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் ஒலிவடிவம் வந்திருக்கும்? அப்படியெனில் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்னரே தமிழன் சிந்திக்க தொடங்கியிருக்கிறான்! நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு, என்னே ஓரு தொடர்ச்சி! இம்மொழி மென்மேலும் உயர வேண்டும் அல்லவா? அதை, எப்படி மேலும் சீர்படுத்த முடியும்? இதோ பார்க்கலாம்.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தி ஏழு.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ

மெய் எழுத்துக்கள் மொத்தம் 18 : க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 216.

ஆய்த எழுத்து 1.

மொத்த எழுத்துக்கள் :12 + 18 + 216 + 1 = 247

நமது மூளைக்குள் இருக்கும் நியூரானுக்கு ஒலி முதன்மை; அந்த ஒலிக்கு இணையான சொல்லோவியமாக எழுத்து இருக்கும். ஆக, தமிழை பேசுவதோடல்லாமல், எழுதத்தெரிய நமக்கு 247 சொல்லோவியங்கள் தேவை. ஆக, நம்மிடம் 247 ஒலிகளும், அதற்கு இணையாக 247 சொல்லோவியங்களும் தேவை.

இதில் மாறாமலிருப்பது ஒலி; மாறுவது, மாறியது, மாறிக்கொண்டிருப்பது, மாறவேண்டியது சொல்லோவியம் எனப்படும் எழுத்து. ஆனாலும், அவ்வளவு சொல்லோவியம் தேவையா? என்றால், அவ்வளவு தேவையில்லை. ஏனென்றால், அதற்கு துணையெழுத்துக்கள் இருக்கின்றன. எடுத்துகாட்டிற்கு, கீழே உள்ளதை பார்த்தால் புரியும்.
    க் + அ =    க
    க் + ஆ =    கா
    க் + இ =    கி
    க் + ஈ =    கீ
    க் + உ =    கு
    க் + ஊ =    கூ
    க் + எ =    கெ
    க் + ஏ =    கே
    க் + ஐ =    கை
    க் + ஒ =    கொ
    க் + ஓ =    கோ
    க் + ஔ =    கௌ
    .
    .
    .
    .
    ன் + ஔ =    னௌ

இப்படியாக மொத்தம் 247 சொற்களை எழுத மொத்தம் 107 தனித்த சொல் ஓவியங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஏனெனில், 

'க'-வுக்கும் 'கா'-வுக்கும் ஒரேயொரு துணைக்கால்தான் வித்தியாசம். 

'க'-வுக்கும் 'கெ'-வுக்கும் ஒரேயொரு ஒற்றைச்சுழி கொம்புதான் வித்தியாசம்.

'க'-வுக்கும் 'கே'-வுக்கும் இரட்டைச்சுழி கொம்பு மட்டும்தான் வித்தியாசம். 

அதாவது, 'க' எனும் சொல்லோவியத்திற்கும், 'கா' எனும் சொல்லோவியத்திற்கும் ஒரேயொரு துணைக்கால்தான் வித்தியாசம். இப்படிப் பார்க்கையில், மொத்தம் 107 தனித்த சொல்லோவியங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மொத்தமுள்ள 247 தமிழ் எழுத்தையும் எழுதிடலாம்.

இந்த 107 தனித்த சொல்லோவியங்களை மேலும் குறைக்க முடியுமா? அதைக் குறைப்பதால் தமிழைக் கற்றல் எளிதாகுமா? என்ற ஆராய்ச்சியின் முடிவாக, வா.செ. குழந்தைசாமி அவர்கள் இந்த 107 தனித்த சொல்லோவியத்தை குறைத்து, 39 தனித்த சொல் ஓவியம் போதும் என்கிறார்கள். அதாவது மூளையில் உள்ள நியூரானில், வெறும் 39 சொல் ஓவியங்களை மட்டும் பதிந்தாலே போதும். அப்பாடா! நம் குழந்தைகளாவது பிழைத்தார்களே!

அது சரி, அதை எப்படி 39 தனித்த சொல்லோவியமாக குறைத்திருக்கிறார்கள் என்று ஆவலாய் இருந்தால் இதை சொடுக்கவும் http://www.tamilvu.org/esvck/index.htm

அது சரி, இந்த சொல் ஓவியத்தைக் குறைப்பதால் பயன் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உலகமயமாக்கப்பட்ட இந்த நாளில், வருங்கால தமிழ் இனத்தின் குழந்தைகள் தமிழை எளிமையாய் கற்க, சீர்படுத்தும் முயற்சிதான் இது.

சிறப்பாய் சிந்திக்கும் சீரிய தமிழ் இனமே! சற்றே சிந்தித்துப் பாருங்கள்; வருங்கால நம் தமிழ் குழந்தைகள், "அ means A-வா?" என்று கேட்டால், தமிழரின் தாய்மொழி தமிழா? ஆங்கிலமா? குழந்தைகளைக் குறைகூறவில்லை; ஆங்கிலத்தை தாழ்ச்சிசெய்யும் நோக்கமும் இல்லை; ஆனாலும், தாய்மொழியாம் தமிழ்மொழி தொடர வேண்டும் எனும் வேட்கைதான். குழந்தைகளுக்கு தமிழ்கற்கும் சூழ்நிலையும், கற்றலில் எளிமையும் கொடுக்க இயலுமல்லவா?

கீழ்கண்டது, நமது வேண்டுகோள்.
இந்த 'ஔ' என்ற உயிரெழுத்துக்கு ஒரு தனித்தன்மையான சொல் சித்திரம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.  ஜப்பானிய மொழியில் ஒரு சொல் உள்ளது: Poke-Yoke; அப்படியெனில், ஆங்கிலத்தில் Fool Proof; அதாவது, சாமானியனும் தவறு இழைக்க முடியாத நிலைப்பாடு. எடுத்துக்காட்டிற்கு சொல்வதாய் இருந்தால் எழுதுகோலின் மூடியை ஒரு குறிப்பிட்ட திசையில் சுழற்றினால் மட்டும்தான் எழுதுகோல் திறக்கப்படும் / மூடப்படும். அதாவது, எங்கெல்லாம் தவறுநேர வாய்ப்பிருக்கிறதோ அங்கேயெல்லாம் இந்த Poke-Yoke பிரயோகிக்கப்படலாம். 

அதுபோல இந்த 'ஔ' என்ற சொற் சித்திரத்தை(குறியீட்டை) சீர்செய்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், இந்த எழுத்து சித்திரம் 'ஓ' என்ற உயிரெழுத்தும் கொண்டுள்ளது; 'ள' என்ற உயிர்மெய்யெழுத்து சித்திரமும் கொண்டுள்ளது. ஆக 'ஔ' வாசிக்கையில் தவறு நேர வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க, 'ஔ' என்ற சொல்லுக்கு, புது சொற்சித்திரம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். இதைத் தமிழ் மூதாட்டி 'ஔ'வையார் கூட ஒப்புக்கொள்ளக்கூடும். இல்லையெனில் ஔவையாரை ஒ-ளவையார் என்று வாசித்து இம்சித்து விடக் கூடும்!

[ ஔ = ''.

  இது எப்டி இருக்கு! ]
தந்தைப் பெரியார் காலத்தில் செய்த எழுத்து சீர்திருத்தங்கள் எளிமையாய் நம் காலத்திற்கு எடுத்துவரப்பட்டது. அதேபோல வரும் தலைமுறைக்கு இன்னொரு எளிமை சீர்திருத்தம் தேவைதானே? இது கலைஞர் காலத்தில்தான் சாத்தியம்; பார்க்கலாம். உலக செம்மொழி மாநாட்டில் இதற்கு அடித்தளம் அமையலாம் என்று நம்புவோமாக.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!பொன்னியின் செல்வன்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்