Showing posts with label யூத்ஃபுல் விகடன். Show all posts
Showing posts with label யூத்ஃபுல் விகடன். Show all posts

பாரதி சாடும் சாதி


இக்கட்டுரையின் நாயகன்; கவிநாயகன், மகாகவி பாரதி. பாரதி பிறந்து 128 வருடம் உருண்டோடிவிட்டது. இன்றும் அவன் புகழ் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் வார்த்தைகளின் வீரியம், பல தலைமுறைகள் தாண்டியும் பீடு நடைப் போடுகிறது.

கால சக்கரத்தில், முன்னோக்கி ஒராயிரம் ஆண்டுகள் உருண்டோடினாலும்; அன்றும், சேது சமுத்திரத்தின் வழி செல்லும் மாலுமிகள் மிக விந்தையாய்த்தான் பேசுவார்கள், "அன்று, ஓர் அமரகவி கண்ட கனவு நனவானதில், நமக்குப் பிரயானம் எவ்வளவு எளிதாகிறதுப் பார்" என்று.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று உரைத்தான்; இதை சொல்லும் முன்னரே அவன் பல மொழிகள் கற்று தேர்ந்தவன். ஆம்! பாரதி பன்மொழி வித்தகன். அப்படிப் பட்ட பாரதியின் தமிழ் கவிதையைக் கேட்கும் பொழுது 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே'!

பாரதி ஓர் தமிழ் அகராதி தொகுத்திருக்கிறார். பாரதியின் சொல்லாட்சி பிரமிக்க வைக்கும். அவர் தமிழிலா எழுதினார்? இல்லை! தமிழ், பாரதியைக் கொண்டு தன்னைத்தானே எழுதிக் கொண்டது!

மூடநம்பிக்கைகளை மூட்டைக்கட்டவும், அச்சத்தை அகற்றவும் பல சிந்தனை சொற்கள் செதுக்கியவன். பெண்களின் சுதந்திரத்தை, பெண்கள் பேசும் முன்னரே இந்த பாட்டுடைத் தலைவன் பாடிவிட்டான்.

ஒருவர் நல்ல சொற்களைக் கூறினால், அதிலோர் நல்ல அதிர்வலைகள் பிறக்கும். அதே நல்ல சொற்களைக் கடைப்பிடித்தால் அதன் அதிர்வலைகள் அடர்த்தி ஆகும். இப்படி இருக்கையில், நல்ல சொற்களைச் சொன்னவரே, சொன்னபடி நடந்தும் காட்டினால் அந்த அதிர்வலைகளின் அடர்த்தி விகிதம் எப்படி இருக்கும்! அவன்தான் பாரதி! யப்பப்பா... பாரதி ஓர் யுகப் புரட்சி!

நாம், ஒரு தவறும் செய்யாதபோது; ஆனாலும் நாம் தூற்றப்பட்டும் சிறுமை படுத்தப் பட்டும், குற்றம் சாட்டப்படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படிபட்ட சூழ்நிலையில், பாரதியின் இந்தக் வரிகளை வாசித்துப் பார்த்தால் எவ்வளவு உத்வேகம் வருகிறது!


தேடிச் சோறு நிதம் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக்கு இரை எனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

சாதிகளை சாடியவன் இந்த முண்டாசுக்கவி; சாதிப் பிரிவினைப் பேசுவோரைப் பார்த்து, 'ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ' என்றான். சாதி மதங்களை பார்க்கக் கூடாது எனும் விதமாய்,'ஜாதி மதங்களைப் பாரோம்' என்றான். ஒரு படி மேலே போய், மனிதர்களில் ஏன் வீண் பிரிவினை; காகமும் குருவியும் கூட நம் இனமே எனும் தெய்வீக எண்ணமாய், 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றும் பாடினான். சாதியை, குழந்தையின் உள்ளத்தில் இருந்து முதலில் களைய வேண்டும் என்று, 'சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;' என்றும் பாடினான்.

பாரதிக்கு கனவுகள் அதிகம். அவன் கண்ட கனவுகள் யாவும் நிறைவேறக்கூடியவையும் கூட. பாரதியின் பல கனவுகள் நிறைவேறியும் இருக்கின்றன. ஒரு பாடலில், 'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்' என்று கனவுக் கண்டான்; பின்னொரு நாளில் எவரெஸ்ட் உச்சியை இந்தியர் தொட்டனர். 'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்று கனவு கண்டான்; பின்னொரு நாளில் வானொலி வந்தது. 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்று கனவு கண்டான்; சமீபத்தில் தான் நிலவில் நீர் ஆதாரம் இருப்பதை நமது சந்திரயான் வின்கலம் உறுதி செய்தது. 'கடல் மீனை அளப்போம்' என்று கனவு கண்டான்; இன்று இந்திய செயற்கோளின் மூலமாக கடலில் உள்ள மீன் ஆதாரம் தெரிந்து கொள்ள முடியும். 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்று கனவு கண்டான்; இன்று அந்த பணியும் நடைபெறுகிறது. அதே பாடலில் அவன் கண்ட முக்கியமான கனவை,  கடைசியாய் குறிப்பிடுகிறான், 'சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்' என்றான்; பாரதியின் இந்த கனவு ஒர் நாள் நனவாகுமா? நனவாகும்!



பொன்னியின் செல்வன்

காந்தி எனும் காந்தம் !!






மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.
புகைப் பிடித்தவர்; வீட்டு வேலைக்காரனிடம் பணம் திருடியவர்; வீட்டில் தங்கம் திருடியவர்; மனைவியிடம் கடுமையாய் நடந்து கொண்டவர்; மனைவியை சந்தேகம் கொண்டவர்; விபச்சாரியிடம் சென்று திரும்பி வந்தவர்; மனைவி கணவனுக்கு அடிமை என்று எண்ணியவர்; தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர்; இருட்டு, பேய் பிசாசு போன்றவற்றைக் கண்டு பயந்தவர். சீட்டு ஆடியவர்; நண்பர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி ஆபாச வார்த்தைகள் பேசியவர்.

இவரைப் போயா மகாத்மா என்பது ? அது அபத்தம் ஆயிற்றே ?

காந்தி மகாத்மாவா ? இல்லையா ?

காந்தி, தன் நிறைகளைக் காண்பதை விட தன் குறைபாடுகளையே அதிகம் உணர்ந்தவர்.

கதராடை அணிந்த அந்த தொண்டுக் கிழவர் தான் கோட் சூட் அணிந்த ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற்றியவர்.
கையில் கைத்தடி ஊன்றிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்த காந்தி தான், கன் (GUN) மற்றும் கேனான் (CANON) உடைய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையே தள்ளாட வைத்து இந்திய நாட்டை விட்டு அகற்றியவர்.

இது எப்படி சாத்தியமாயிற்று ?

ஆங்கிலேயர் பல நூறு ஆண்டுகள் இந்தியாவை அடிமை ஆட்சி புரிந்த பின், காந்தியின் அந்த ஒரு அஸ்திரத்தால் தாக்கப்பட்டு சுதந்திரத்தை ‘இந்தாப் பிடி’ எனக் கொடுத்து விட்டு ஓடிச்சென்றனர். அந்த அஸ்திரம் தான் அஹிம்சை; சத்தியாகிரகம். சத்தியாகிரகம் என்றால் உண்மையில் உறுதி.

ஆங்கிலேயரின் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும், பில்டிங் ஸ்டிராங்க் ஆனா பேஸ்மென்ட் வீக். காந்தியின் அஹிம்சைக்கும் அறப்போராட்டதிற்க்கும், பில்டிங்கும் ஸ்டிராங்க் பேஸ்மென்டும் ஸ்டிராங்க்.

காந்திஜி ஒரு போராட்டத்தில் இறங்கும் முன் சம்பந்த பட்டவர்களிடம் முதலில் பேசி, பிரச்சினையை நேரடியாய் களையப் பார்ப்பார். அதிலும், குற்றம் புரிந்தோரிடம் நேரிடையாக விவாதித்து பின்னும் தவறு செய்தவர் திருந்தவில்லை எனில், பிறகே போராட்டத்தை தொடங்குவார்.

இப்படியாக காந்தியை உதாரணமாகக் கொண்டு தற்போது உள்ள அரசியல்வாதியிடம் சென்று, “ஐயா, நீங்க கொடுத்த ரோடு காண்டிராக்ட்டில் ஊழல் நடந்திருக்கு. அதனால அந்த ரோடு கான்டிராக்டரை மாத்திட்டு நேர்மையான காண்டிராக்டரை மாத்தலைன்னா, அந்த ரோடு போடற இடத்தில் ஜனங்களை கூட்டி போராட்டதில் ஈடுபட வேண்டி இருக்கும்”, என்றால்.
அரசியல்வாதியோ, “சரிங்க நீங்க போங்க, பின்னால நான் பாத்துக்கறேன்” என்கிறார்.
நாமோ பெருமிதமாய் வெளியே வந்தால், நம்மைப் பின் தொடர்ந்து, சத்தமின்றி ஒரு ரோடு ரோலர் மெல்லமாய் நகர்ந்து வர ஆரம்பிக்கிறது.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் – வள்ளலார்.
வாடிய விவசாயின் முகம் பார்த்து, அந்த விவசாயியின் குறைந்த மேலாடையை பார்த்து அந்த விவசாயியின் துயரைத் தானும் அனுபவிக்க தன் ஆடையையும் தியாகம் செய்தவர் – காந்தியடிகளார்.

சரியாக சிந்திக்காத சொல் ஒன்றையும் அவர் வாயில் இருந்து வந்து விடாது. ஒன்றை சொல்லிவிட்டு பின் அதற்காக வருந்துபவர் இல்லை காந்தி. காந்திஜி, காற்று வாக்கில் வாய்க்கு வந்ததை பேசக் கூடியவர் இல்லை. ஒரு விஷயம் காந்திஜி கூறுகிறார் என்றால் அந்த விஷயத்தின் அடி ஆழம் நுனி வரை ஆராய்ந்து பரிசோதித்து உணர்ந்த பின் தான் அவர் வாயில் இருந்து வார்த்தை வரும். இன்றோ, நாம் அடிக்கடி கேட்கக்கூடிய ஒரு டையலாக், “அது …………….ப்போன வ்வாரம். ந்நான் சொன்னது இந்த வ்வாரம்’ போன்ற மழுப்பல்கள்.
காந்தி அறிவியலை அவ்வளவாக கற்றதில்லை. ஆனாலும் மக்களின் மனம் எனும் இயலை அறிந்தவர். அதனால்தான் காந்திஜி ஒரு விஷயம் செய்ய சொன்னால், மக்கள் அதைத் தாங்களே சொன்னதாய் எண்ணிக் கொண்டு செயலில் இறங்கி விடுகிறார்கள்.

சாதிப் பிரிவினையையும் மதப் பிரிவினையையும் கடுமையாய் எதிர்த்தவர். சாதி மற்றும் மதப் பிரிவினை கூடாது என்பதை வலியுறுத்தி பல முறை தன்னை வருத்தி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

காந்தி, விபச்சாரியிடம் சென்று வசை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தவர். காந்தி ஏக பத்தினி விரதன். திருமணத்திற்கு பிறகு, ஒரு கால கட்டத்தில் பொது சேவையில் தன்னை முழுமையாய் ஈடு படுத்திய பின், பூஜிய பத்தினி விரதனாகவே தன்னை மாற்றிக் கொண்டார். பூஜிய பத்தினி விரதன் என்றால் பிரம்மச்சரியம். அப்படி இருக்க என்ன ஒரு மனத் தூய்மை வேண்டும். என்ன ஒரு சேவை நோக்கம் வேண்டும். இன்றோ சாமியார்களும் சி.டி வெளியிடுகிறார்கள்.

எப்போதும் தன் அந்தராத்மாவின் குரலுக்கு அடி பணிபவர். தன் சொந்தக் குறை எதற்காகவும் நீதிமன்றம் செல்வது இல்லை என்ற உறுதி கொண்டவர். சொன்னதை செய்பவர். செய்வதை மட்டுமே சொல்பவர்.
இப்படித்தான்,
இரண்டாம் முறையாய் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன் கப்பல் கரையில் நின்று கொண்டு இருக்கிறது. காந்தி தென்னாப்பிரிக்கா வரக் கூடாது என்று வெள்ளையர்கள் அவரின் கப்பலை, துறை முகம் வர முடியாமல் நிறுத்தி வைத்து இருந்தனர். கப்பலில் இருந்தவர்கள் காந்தியிடம்,“வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றினால் உங்கள் அஹிம்சையை எப்படிக் கடைப்பிடிபீர்கள்”, என்றனர்.
அதற்கு காந்தி, “அவர்களை மன்னித்து அவர்கள் மீது வழக்கு தொடராமல் இருந்து விடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்று நம்புகிறேன்” என்றார். கேள்வி கேட்டவரோ சிரித்தார். இப்படியும் இருக்க முடியுமா? என்று. பின் காந்தி துறைமுகம் வந்தவுடன் அவரைக் கண்டு பலரும் கூடி கற்களாலும் அழுகிய முட்டையாலும் அடித்தனர்.
ஆனாலும் தன்னை அடித்தவர்களைப் பற்றி காந்தி இவ்வாறாக கூறுகிறார். “தங்கள் பிழையை உணரும் போது அவர்கள் சாந்தம் அடைவது நிச்சயம். அவர்களுக்கு நியாய புத்தியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார். “என்னைத் தாக்கியவர்கள் மீது குற்றம் சாட்டி வழக்கு தொடரக் கூடாது என்பது என் கொள்கை” என்றார். சொன்னதையே செய்தும் காட்டியவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் மரண தண்டனைக் கைதி கோட்சே.
காந்தியை சுட்டுக் கொன்றதால் இந்திய நீதி மன்றம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. ஒரு வேளை, கோட்சே சுட்ட குண்டு காந்தியை மாய்க்காமல் இருந்திருந்தால், காந்திஜியே முன் வந்து கோட்சேவை மன்னித்து இருப்பார். அதுதான் மகாத்மா.

காந்தி செய்த சோதனைகள், அவர் நமக்காக அடைந்த வேதனைகள், நம்மை முன்னிட்டு செய்த தியாகங்கள், தொடுத்த போராட்டங்கள் கணக்கிலடங்கா.

அது ஒரு வார இறுதி நாள். நண்பர்களுடன் மது அருந்திய மாலை. அன்று சத்திய சோதனை புத்தகத்தைப் பார்த்ததிலேயே சற்று நடுக்கம் ஏற்பட்டது. கண்களில் நீர் முட்டுகிறது. அந்த புத்தகத்தைத் தொடவும் மனம் கூசுகிறது. ஆன போதிலும் என்னைப் போன்ற மக்கு ஆத்மாவால், துளியும் மறுக்காமல் ஒத்துக் கொள்ள முடிகிறது காந்தி ஒரு மகாத்மா தான் என்று. அப்படி இருக்கையில் உங்களைப் போன்று மிகத் தெளிவாக சிந்திக்கும் ஆசாமிகளுக்கு, காந்தி ஒரு மிகப்பெரிய மகாத்மா தான் !


ஹரீஷ்

கனத்த கடிதங்கள் !!



காலச் சக்கரம் முன்னே சுழல சுழல, காலங்காலமாக மிதி வண்டியில், க்ளிங்-க்ளிங் க்ளிங்-க்ளிங் ஓசையுடன் வந்து அஞ்சல்காரர் கொடுக்கும் கடிதங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன.

இன்றைய குழந்தைகள் அஞ்சல் அட்டையையும்(Post Card), இன்லேண்ட் லெட்டரையும் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.
தொலைப்பேசி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் வந்த பின்னால் கடிதங்களின் போக்குவரத்து குறைந்து தான் இருக்கிறது.
தொலைப் பேசியில் ஒருவர் பேசுகையில், பேசி முடிக்கும் முன்னரே, எதிர் முனையில் இருப்பவர் இடை மறித்துப் பேசக் கூடும்.
இப்படி இடையில் பேசி குறுக்கிடும் இடைஞ்சல்கள் அஞ்சல்களில் இல்லை.இவ்வாறாக கடிதம் எழுதுவதில் ஒரு சௌகரியமும் இருக்கிறது. நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவர்; நாம் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கும் வரை, அதாவது எழுதியதைப் படித்து முடிக்கும் வரை எதிர்ப் பேச்சு எதுவும் பேச முடியாது. இன்றும் சில மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்கும் படலம் முடிந்தவுடன், “ஊருக்கு போய் கடிதம் போடுகிறோம்” எனக் கூறுவது இதற்குத் தான் போலும்.

கடுதாசிகளில் பல வகை உண்டு. அவற்றில் ஒரு புதிரான கடுதாசிதான் மொட்டைக் கடுதாசி. திருப்பதியில் போய் மொட்டைப் போட்ட ஒருவரை கண்டுபிடிப்பது எப்படி மிக சுலபமோ, அவ்வளவு சுலபம் இந்த மொட்டைக் கடுதாசி எழுதியவரைக் கண்டுபிடிப்பதும் (!).

கடிதங்கள் வரலாறு ஆன கதைகளும் உண்டு. ஜவஹர்லால் நேரு அவர்கள் சிறைச்சாலையில் இருந்து மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் “Glimpses of World History” என ஒரு வரலாற்று புத்தகமாக வந்தது.

கடிதங்கள் பல செய்திகளையும் தாங்கி வருகின்றன.
இந்த முறையும் ஊர் திருவிழவுக்கு வர இயலாது, எனவும்; விதை நெல் வாங்க பணம் வேறு எங்காவது புரட்ட முடியுமா என்று பார்த்து கொள்ளுங்கள், எனவும்; இந்த கோடை விடுமுறையில் குழந்தைகள் நீச்சல் பயிற்சி செல்லுகிறார்கள், அதனால் இந்த விடுமுறைக்கும் குழந்தைகள் கிராமத்திற்கு வர முடியாது, எனவும்; அண்ணாச்சி மகன் திருமணத்திற்கு என் பெயரில் 100 ரூபாய் மொய் எழுதி விடவும். எனக்கு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத வேலை இருக்கிறது, எனவும்; உங்களுக்கு ஒரு பேரன் பிறந்திருக்கான். கைக்குழந்தையும் மருமகளும் சுகம். குழந்தையை உங்கள் மருமகளின் மதத்தில் பதிந்திருக்கிறோம்.
இவ்வாறாக கடிதங்கள் இயலாமை, மறுப்பு, வெறுப்பு, துக்கம், கோபம், மகிழ்ச்சி என மனிதனின் பல உணர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

கிராமங்களில் படிக்கத் தெரியாதவர்களுக்கு கடிதம் படித்துக் கொடுப்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. படித்து முடித்தவுடன், கடிதத்தில் இருந்த செய்திக்கேற்ப பத்து பைசாவோ, ஐம்பது பைசாவோ கிடைக்கலாம். பெட்டிக் கடைகாரருக்கு கடிதம் படித்துக் கொடுத்தால் தேன் மிட்டாயோ, புளிப்பு மிட்டாயோ கிடைக்கக் கூடும்.

கிராமங்களில் எழுதத் தெரியாதவர்களுக்கும் கடிதம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்டோர் கடிதம் எழுத பெரும்பாலும் சிறுவர்களையே எழுதித்தர சொல்லுவார்கள். அப்போது வெளியிடக்கூடாத (“Off the Record”) செய்திகள் பலவும் வெளி வரும். ஆனாலும் செய்தியின் முக்கியம் கருதி அதைக் கடிதத்தில் பதிய வேண்டாம் என்றும் சொல்லி விடுவார்கள். இப்படியாக கடிதங்கள் புழுங்கிய மணங்களின், மிச்சம் ஒட்டி இருக்கும் சிறிது சந்தோஷங்களை மட்டுமே செய்திகளாக சுமந்து செல்கின்றன.

இன்றும் கிராமங்களில், கூரை வீடுகளின் கொக்கியில் தொங்கும் கடிதங்கள், கடந்த கால் நூற்றாண்டில் மனிதனின் படிமம் ஆக இருக்கின்றது.
அந்த கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல, காலத்தை கடந்து வந்த மனிதனின் மணங்களின் பதிவு.
கடந்த காலங்களில் கிராமத்தை விட்டு நகரம் என்னும் நரகத்தை அடைந்த மகன், மகள், பேரன், பேத்தி என உறவுகளின் இதயத்தை தாங்கி கொண்டு, இன்றும் கடிதங்கள் கொக்கியில் ஏக்கத்துடன் தொங்குகின்றன; என்றாவது ஒரு நாள் இதை எழுதிய மனிதர்களை பார்த்து விட மாட்டோமா என்று.

கொக்கியில் தொங்கும் அந்த கடிதங்கள் இன்னும் கனத்துக் கொண்டும், காத்துக் கொண்டும் இருக்கின்றன.

ஹரீஷ்

தமிழ் ஐயா !!



தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள் மேல் எப்போதுமே அன்பாக இருப்பார்கள்; எந்த பேதமும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால்? அவர்களுக்கு தெரியும், எப்படியும் யாரும் தமிழுக்கு டியூஷன் வர மாட்டார்கள் என்று.

அதிலும், வகுப்பு ஆசிரியரும் டியூஷன் போகும் ஆசிரியரும் வெவ்வேறாக இருந்துவிட்டால், வகுப்பாசிரியர் மேல் நமக்கு வருவது வெறும் பக்தி அல்ல, அது ‘பய’(ம்) பக்தி.

இந்த தொல்லைகள் எல்லாம் தமிழ் ஆசிரியர்களிடம் இல்லை.

தமிழ் ஆசிரியர்களை மறந்து போய் சார் போட்டுக் கூப்பிட்டால், உடனே கோபம் வந்து விடும். அவர்களை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட வேண்டும். அதிலும் ‘ஐயா’ வகுப்பறைக்குள் நுழையும் போது, மற்ற ஆசிரியர்களை வணக்கம் செய்வதைப் போல் ‘குட் மார்னிங் சார்’, என்று சொல்வதை விரும்ப மாட்டார்கள். மாறாக ‘வணக்கம் ஐயா’ எனக் கூறி மரியாதை செய்வதையே தமிழ் ஐயாக்கள் விரும்புகிறார்கள். இந்த மரியாதையை விரும்புவது தமிழ் ஐயாக்கள் இல்லை, தமிழுக்கு தர வேண்டிய மரியாதை, என்பதைத்தான் தமிழ் ஐயாக்கள் மாணவர்களை இவ்வாறாக கூறச் செய்வது.

அதிலும் சில தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்களை பார்த்து மறந்து போய் ‘குட் மார்னிங் சார்’ சொல்லிவிட்டால் போதும். “ ஹொவ் டேர் யூ சே குட் மார்னிங்?, சே ‘வணக்கம்’ ” (How dare you say good morning, say ‘வணக்கம்), எனக் கூறி ஆங்கிலத்திலும் பிரமிக்க வைப்பார்கள்.

சில தமிழ் ஆசிரியர்கள் மற்ற பாடப்பிரிவின் மேலும் பாசம் அதிகம். அதிலும் குறிப்பாக உயிரியலில் (Zoology-யில்) வரும் ஹியூமன் ஃபிசியாலஜியை (Human Physiology) விளக்கி மாணவர்களை வயதுக்கு ஏற்றவாறு ஹார்மோன்களை உசுப்பேத்தவும் செய்வார்கள்.

சில தமிழாசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தமிழையும் ஆங்கிலத்தில் தான் நடத்துவார்கள். வகுப்பறையில் நுழைந்தவுடன், ஒரு மாணவனை எழுப்பி படிக்க சொல்லி, தமிழ் ஆசிரியர் ஆங்கிலத்தில் விளக்கம் கூறுவார்.

மாணவன் படிக்கிறான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

ஆசிரியரின் விளக்கம், ‘Every city is ours; All are our Relaives !’, ஹ்ம்ம்…. நெக்ஸ்ட் லைன் ’

மாணவன், ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’

ஆசிரியர், ’ All good and evil to us are not by others; But by ourself !!’, ‘ஹ்ம்ம்…. நெக்ஸ்ட் லைன் ’

மாணவர்களோ, மனதிற்குள்ளாக. ஆமாம் ஐயா, பத்தாவது முடித்துவிட்டு வேறு பள்ளியில் சேராமல், இந்த பள்ளியில் சேர்ந்தோம் அல்லவா. நடப்பது தமிழ் வகுப்பா, ஆங்கில வகுப்பா எனத் தெரியாமல் இருக்கும் எங்களுக்கு, ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ தான்.

சில தமிழாசிரியர்கள் முழுமையாய் தமிழில் மட்டும் தான் பேசுவார்கள். ஆங்கில வார்த்தைக் கலப்பே இருக்காது. அவ்வப்போது ‘இந்த தமிழ் வார்த்தை தெரியாதா உனக்கு?’ என ஏசுவது போல் ஏசி, புதுப் புது தமிழ் வார்த்தையைப் புகட்டுவார்கள். இப்படிப் பட்ட தமிழ் ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களைப் போல், ‘போய் சாக்பீஸ் எடுத்துவா’ எனக் கூறமாட்டார்கள். மாறாக, ‘போய் வெண்சுதைக் கட்டிக் கொண்டுவா’ எனக் கூறுவார்கள். இதைக் கேட்டுவிட்டு மாணவர் முழித்தால், அதை உணர்ந்தவராய், ‘அதான்டா ஒங்க சாக்கு பீசு….’ என இழுவையாய், சொல்லக் கூடாததை கூறியது போல் கூறி, ஒரு தூய தமிழ் வார்த்தையைப் புகட்டி இருப்பார். இப்படிப் பட்ட ஆசிரியரின் தயவால் வீட்டிற்க்கு போய் பாட்டியிடம், ‘பாட்டி ஒரு கோப்பை தேநீர் கிடைக்குமா?’ எனக் கேட்டால், பாட்டியோ, ‘என்னது கேப்பங் களியா’ என எதிர் கேள்வி கேட்கக் கூடும்.

தமிழ் தாள்கள் திருத்தப்பட்டு கொடுத்தவுடன் பல மாணவர்களின் தாள்களைப் பார்த்தால் ‘ழ’ ‘ற’ ‘ண’ க்களை சுற்றி ஆசிரியரின் சிகப்பு மை வட்டம் நிறையவே விழுந்திருக்கும். இதைப் பார்த்தவுடன் தான் நமக்கு புரியும், நம்மை சுற்றி நம்மை மாதிரியே நிறைய தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள் என்று.

‘அறம் செய விரும்பு’ எனும் வாக்கியத்தை ஒரு மாணவன் பிழையாய் ‘அரம் செய்ய விரும்பு’ என எழுதியிருந்தான். இதைக் கண்ட தமிழ் ஐயா அவனை எழுப்பி, ‘உன் அப்பா என்ன செய்கிறார்’ எனக் கேட்க. அதற்கு மாணவன், ‘இரும்பு பட்டறை வச்சிருக்காங்க, ஐயா’ என்கிறான். உடனே ஐயா, ‘அப்படியா, அப்ப பட்டறையில் அரம் செய்யவே விரும்பு, உட்கார்’ எனக் கூறி நேரத்திற்கு ஏற்ற நகைச்சுவைகளும் கூறுவார்கள் தமிழ் ஐயாக்கள்.

தமிழ் ஆசிரியர்களின் கிண்டலும் கேலியும் சற்று தூக்கலாகவே இருக்கும். தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளினிகளை வகுப்பில் அவர்கள் கிண்டல் செய்வதே ஒரு அலாதிதான்.

‘வன்க்க்க்க்க்க்க்க்….க……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… வாலெப்பலம் நழ்ழாருக்கும்’ எனவாக தொகுப்பாளினிகளின் ‘ழ’ க்களை கூறி மாணவர்களை சிரிக்க வைத்து, அப்படி பேசக் கூடாது என சிந்திக்கவும் வைத்திடுவார்கள்.

இந்நேரத்தில் இராமாயனத்தில் வரும் சுந்தர காண்டம் காண்டம் வகுப்பு எடுக்கையில் சேது சமுத்திரம் பற்றியும் ராமரின் கல்வியையும் அலசி இருப்பர்கள். அதாவது ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார் என்று.

பாரதியை, கம்பனை, வள்ளுவனை, இளங்கோவை, பாரதிதாசனை, மு.வ-வை, பூங்குன்றனாரை, ஔவையாரை என தமிழ் வளர்த்த தங்கங்களை குறைவின்றியும் பாரபட்சமின்றியும் மாணவர்கட்கு வாரி வழங்கியவர்கள் தமிழ் ஐயாக்கள்.

ராமனை, லட்சுமனனை, பரதனை, குகனை, அனுமனை, வாலியை, தருமனை, அர்ஜுனனை, கண்ணனை, கர்ணனை, சேரனை, சோழனை, பாண்டியனை என காவிய நாயகர்களையும், சரித்திர வீரர்களையும் தங்கள் பேச்சால் கண்முன்னே உலாவ விட்டு கிராஃபிக்ஸ் காட்டிய வித்தகர்கள் தமிழ் ஐயாக்கள்.

தமிழ் ஐயா, பேச்சால் கிராஃபிக்ஸ் காட்டிய பிறகும், கோனார் தமிழ் உரையில் அருஞ்சொற்பொருள், பொருளுரை, பொழிப்புரை, தெளிவுரை என எல்லாம் நெட்டுறு செய்த பிறகும், சீதைக்கு ராமன் சிற்றப்பன் எனக் கூறினால். பின் தமிழ் ஐயாக்கள் மோதிரம் கழற்றி வைத்து விட்டு, விளாசி எடுக்காமல் வேறு என்னதான் செய்வார்கள். வாழ்க தமிழ் ஐயா !

ஹரீஷ்

தமிழ் நன்றி !!

என்றாவது ஒரு நாள், துக்குளியோண்டு வாக்கியமாவது விகடனில் வந்தால் இவர்களுக்கு நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். இப்போது ஒரு கட்டுரையே ஆன்லைன் யூத்புல் விகடனில் வந்ததால், மகிழ்ச்சியில் கூறுவது.

பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் சங்கரன் ஐயா அவர்களுக்கும், இருதயராசு ஐயா அவர்களுக்கும். தமிழையே ஆங்கிலத்தில் பாடம் எடுத்த ஆசிரியர் அவர்களுக்கும்.

ஆபீஸ் நூலகத்தில் இருந்து படிக்க 'ஆனந்த விகடன்' கொண்டு வந்த அன்னைக்கும். 'தினமணி' படித்து, எங்களையும் படிக்க தூண்டிய தந்தைக்கும்.

'பொன்னியின் செல்வன்' படித்து நிறைய பேசிய செந்தமிழ் நகர் பெரியம்மாவுக்கும், ஆர்த்தி அக்காவுக்கும்.

'சிவகாமியின் சபதம்' படிக்க செய்த பத்மா அத்தைக்கும்.

பல புத்தகங்களை தன் வீட்டு நூலகத்தில் இருந்து படிக்க ஊக்குவித்த திருநாவுக்கரசு பெரியப்பாவுக்கும்.

சிறந்த தமிழ் நாவல்கள் எழுதியுள்ள, தமிழின் அரும் பெரும் எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் சி. எம். முத்து சித்தப்பாவிற்கும்.

'குறிஞ்சி மலர்' படிக்க சொல்லி தூண்டிய மீரா மாமிக்கும்.
'சுஜாதா' மேல் ஈர்ப்பு ஏற்படுத்திய முரளி மச்சானுக்கும்.

Last but not least.
அருமை நண்பர்கள் கவி தேசிகன், எமர்சன், ராம்குமார், டேனியல் போன்ற தமிழ் விரும்பும் நண்பர்கள், மேலும் இவர்கள் உள்ளே தமிழ் தீ பல நேரங்களில் காண முடிவது.
கவி தேசிகனின் கருத்தான கவிதைகள், எமர்சனின் எதார்த்த கவிதைகள், ராம்குமாரின் கடுமையான கவிதைகள், டேனியலின் தமிழ் சிரிப்பு திரைக்கதைகள், என இவர்கள் உள்ளே தமிழ் தீ பல நேரங்களில் காண முடிவது.

படிக்க வைத்தும், தங்கள் படைப்பால் பிரமிக்கவும் வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஹரீஷ்

தூக்கம் !!



நம்மில் பலரும் காலையில் தூக்கத்தில் விழித்தவுடன் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா.
வேறென்ன, மீண்டும் தூங்குவது தான்.
என்ன தான் இருந்தாலும் காலையில் பத்து பத்து நிமிடம் அலாரம் நகர்த்தி நகர்த்தி வைத்து தூங்கி எழுவது ஒரு சுகம் தான்.

மனிதன் தேவைகளாக கருதப்படுவது
மாசற்ற காற்று
நல்ல நீர்
உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இருப்பிடம்
இனிய இல்லாள்

இவற்றோடு, இரவில் நிம்மதியான உறக்கம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். தூக்கம் அந்த அளவுக்கு அத்தியாவசியமான ஒன்றும் அவசியமான ஒன்றும் கூட.
உண்ணாவிரதம், அருந்தா விரதம் மற்றும் பேசாமலே இருக்க மௌன விரதம் போன்ற பல விரதம் பார்த்திருக்கிறோம்.
ஆனாலும் முயற்சித்தாலும் முடியாத இரண்டு விரதங்கள் என்னவென்றால்.
சுவாசிக்கா விரதம்
தூங்கா விரதம்

இதில் உள்ள ஒரு ஒற்றுமை என்ன வெனில் இடைவெளி. ஆம்.

சுவாசம் இடைவெளி விட்டே நடக்கிறது. நாம் ஒரேயடியாக காற்றை உள்ளிருத்தி கொண்டே இருப்பதில்லை. சுவாசிப்பதும் ஒரு இடைவெளியில் தான் நடக்கிறது. காற்றை உள் இழுப்பது, உள்ளிருத்தி வைப்பது, பின் வெளியிடுவது இப்படி ஒரு நிமிடத்திற்குள் பல சுவாச வட்டம் நடைபெறுகிறது.
தூக்கமும் இடைவெளி விட்டுத்தான் வருகிறது. ஆனால் இடைவெளியோ ஒரு நாளுக்கும் மறு நாளுக்கும் இடையில் வருகிறது.

ஜெட் லேக் (Jet Lag) என்ற ஒரு சொல் இருக்கிறது. சில வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் விடும் பீட்டர்களில் இந்த வார்தையையும் அடிக்கடி நாம் கேட்கலாம். நாடு விட்டு நாடு வந்தவுடன் வருகின்ற ஒரு விஷயம்தான் ஜெட் லேக் (Jet Lag) இதற்கு இனையான தமிழில் உள்ள வார்த்தை என்னவென்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படி சொல்லலாம்.‘’காத்தாலே தூக்கமா கீதுபா’’ என்று.
அதாவது ‘காலை வேளையிலேயே தூக்கமாக வருகிறது. இரவு படுத்தால் தூக்கமே வர மாட்டேன் என்கிறது’ எனக் கூறும் விதமாய் நமது உடலில் உள்ள தூக்க கடிகாரம் மாறிவிடும்.
மேலும் ஒரு மாதத்திற்கு பிறகும் இப்படி ஜெட் லேக் (Jet Lag) இருப்பதாக மேலாளரிடம் கூறிக் கொண்டு தப்பிக்க பார்த்தால், மேலாளர் நம்மை அடுத்த டிக்கெட்டில் ஊர் போய் அங்கிருந்து வேலையை தொடரலாம் எனக் கூறினால், ஜெட் லேக் (Jet Lag) எல்லாம் உடனே ஓடிப் போகி விடலாம். பிறகு தூக்கம் சரியான நேரத்துக்கும் வர ஆரம்பிக்க கூடும்.

பத்து வயது சிறுவன் ஒருவனிடம் ஒரு நாள் என்பது எப்படி கணக்கிடப்பட்டு வருகிறது என்று அறிவியல் பூர்வமாக விளக்கி கொண்டு இருந்தோம்.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டால் ஒரு நாள் வருகிறது. இப்படி பூமி 365 முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போது ஒரு வருடம் ஆகிறது. அப்படி ஒரு வருடம் கடக்கையில் உனக்கு ஒரு வயசு ஏறுது என்றோம்.
உடனே அந்த குழந்தை, ஏன் அங்கிள் ஒரு ஏரோப்ளேன் ஏறி, பூமி சுத்துற டைரெக்ஷன்-க்கு எதிர் டைரெக்ஷன்-இல் ஏரோப்ளேனை விட்டு இறங்காமல், பத்து வாட்டி 365 டைம்ஸ் சுற்றினால் மறுபடியும் எனக்கு ஒரு வயசு ஆயிடுமா அங்கிள், என்கிறான்.
நல்ல வேளை, இன்னும் இந்த குழந்தையிடம் மாம்பழத்திற்கு அண்ணன் விநாயகரும் தம்பி முருகனும் எப்படிப் போட்டியிட்டார்கள் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால், முருகன் தான் பூமியை சுற்றினாரே இன்னும் கொஞ்சம் சுற்றியிருந்தால் விநாயகனுக்கு அண்ணன் ஆக முருகன் ஆகியிருக்கலாம்ல என்று கேட்டாலும் கேட்பார்கள்.

இப்படி ஏடாகூடமாக கேட்கும் குழந்தைகளிடம் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள கை கொடுப்பது தூக்கம்.
அதெப்படி ?
தம்பி, ரொம்ப நேரமா படிச்சுகிட்டு இருக்க. காலையில் படிக்கலாம். இப்போ போய் தூங்கு, என்று நழுவி விடலாம்.
இப்போதாவது சொல்லுங்கள் தூக்கம் அவசியம்தானே.

ஐயன் வள்ளுவன் கூறுவது யாதெனின்.
      உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
      விழிப்பது போலும் பிறப்பு
அதாவது, இறப்பது தூங்குவதை போல; பிறப்பது தூங்கி விழிப்பது போல்.

தூக்கம் என்பது தற்காலிக இறப்பு. இறப்பு என்பது நிரந்தர தூக்கம் எனவும் கொள்ளலாம்.

வெற்றியாளர்கள் தூங்கும் நேரம் மிக குறைவு. உழைக்கும் நேரமே அதிகம்.


மனிதன் தூங்கும்போது விழி மூடி இருக்கும். அது போக தூங்காத நேரங்களில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதிலும் நாடாள்பவர்களுக்கு விழிப்புணர்வு மிக அவசியம்.

இதையே வள்ளுவர் இவ்வாறாக குறிப்பிடுகிறார்.
      தூங்காமை கல்வி துனிவுடைமை இம்மூன்றும்
      நீங்கா நிலனாள் பவற்கு

இதில் வள்ளுவன் தெரிவிப்பது நாடாள்பவர்கள் தூங்கவே கூடாது என்பதை அல்ல, மாறாக தூங்காத போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே.

நமது மாணவர்கள் சிலர் இதில் சற்றே கைதேர்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே அறிந்த ஒரு வித்தை யாதெனின். ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கொன்டிருப்பார். மாணவரின் கண்கள் ஆசிரியரையே பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் மாணவரோ தூங்கிக் கொண்டிருப்பார்.

இதைவிட ஒரு படி மேலான மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தூங்குவது விழிப்புணர்வு தூக்கம். அதாவது ஆசிரியர் பாடம் நடத்தையில் விழிகள் திறந்து கொண்டே தூங்கவும் செய்வார், ஆசிரியர் இவரைப் பார்க்கும் போது தலையை மேலும் கீழும் ஆட்டவும் செய்வார், இதுவரை ஆசிரியர் கூறியதை எல்லாம் புரிந்து கொண்டும் ஏற்றுக் கொண்டும் தலையாட்டுகிறாராம். இது விழிப்புணர்வான தூக்கம்.

வள்ளுவன் இன்னொரு குறளில்,
      தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
      தூங்காது செய்யும் வினை

என்கிறார். காலந் தாழ்த்துவதை காலந் தாழ்த்தலாம். சிலவற்றை விரைவில் செய்ய வேண்டும்.
இந்த குறளை ராத்திருடன் ரங்கன் கேட்டால் வேறு விதமாய் அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம். தூங்க வேண்டியவர்கள் தூங்கியவுடன் தான் தூங்காமல் தொழிலை திறம் பட செய்ய வேண்டும், எனவாக.

சக்தி தூக்கம் (Power Nap) என்ற ஒன்று சமீப காலங்களில் பேசப்பட்டு வருகிறது. சக்தி தூக்கம் என்றால் ஏதோ இப்பொது எல்லாம் மின்சார சக்தி சரி வர வராமல் நம்மை பாடு படுத்தி, அது போய் தூங்கி விடுகிறதே அது தான் சக்தி தூக்கம் போல, என்று தவறாக எண்ணிக் கொள்ளவேண்டாம்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தர ஆரம்பித்ததில் இருந்து முதியோர் இறப்பு சதவிகிதம் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. மேலும் முதியோர் இல்லத்தில் சேரும் முதியவர் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த பெறுமை எல்லாம் அறிஞர் அண்ணாவின் கனவுக்கும் கலைஞரின் செயல் வடிவத்திற்க்கும் சேர வேண்டியது.

அப்படியே சென்ற மூன்று வருடங்களில், ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பிள்ளை பெற்றவர்கள் எத்தனை பேர் அடுத்த பிள்ளைப் பெற்றிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வெளி வந்தால் மின்சாரம் தூங்கியதால் வந்ததின் விளைவுகள் தெரியலாம். இதற்கு மேல் நம் வாயை பிடுங்காதீர்கள்.

சக்தி தூக்கம் என்றால் சிறிது நேர தூக்கம்.
இப்படிப் பட்ட சக்தி தூக்கம் என்பது 20-30 நிமிடம் பகல் வேளையில் தூங்குவது. இப்படி பட்ட சக்தி தூக்கத்தினால் மூளை மீண்டும் புத்துணர்வு பெற்று உழைக்க ஆரம்பிக்கும்.

தூங்காமல் தான் இருக்க முடியாது. தூங்கி கொண்டே இருப்பவர்கள் காவியத்தில் இருக்கிறார்கள். கும்பகர்ணன். விட்டால் பல வருடங்கள் தூங்கி கொண்டே இருப்பானாம். கும்பகர்ணனை எழுப்ப மிகக் கஷ்டப்பட்டு தான் எழுப்ப வேண்டுமாம். அவர் நம் இனம் போலும்.

தூக்கத்துக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்கள். நல்ல கேள்வி கேட்டீர்கள் போங்கள். முதல்வர்களுக்கு துனை முதல்வர்கள் இருக்கையில் கும்பகர்ணனுக்கு நிகழ் காலத்தில் துனை கும்பகர்ணன் இருக்கக் கூடாதா என்ன.

படுக்கையில் பஞ்சு மெத்தை இருப்பதாலும், பஞ்சு மெத்தைக்குள்ளே பணக் கட்டுகள் இருப்பதாலும் நல்ல தூக்கம் வந்து விடாது.

அசூயை இன்றி
சிந்தனை சரியாய்

தீயவை நினையாமல்
நல்லவை நினைத்து

பெரியோரை மதித்து
சிரியோரை மகிழ்வித்து

உடல் உளைக்க
பெற்ற அறிவும் உளைக்க
அதில் களைக்க

பாயில் படுத்தவுடனே
பொத்துக் கொண்டு
நாடி வரும்
நிம்மதி உறக்கம் !!

ஹரீஷ்

வயிறு அரங்கம் !!



மனிதனுக்கு 'மண்' ஆசை, 'பெண்' ஆசை, 'பொன்' ஆசை இருப்பது போல்,
'உண்' ஆசையும் உண்டு ... உண் ஆசை என்றால் உண்ணும் ஆசை ...

'மண்' ஆசையால் வந்தது மகாபாரதம் ...
'பெண்' ஆசையால் வந்தது ராமாயணம் ...
'பொன்' ஆசையால் வந்தது GRT, பிரின்ஸ் , ஸ்ரீ, லலிதா மற்றும் DAMAS ஜ்வெல்லேரி.
'உண்' ஆசையால் வருவது ... வேறென்ன வயிற்று வலி தான் ...

பெரியவர்கள் தலைக்கணம் கூடாது என்று கூறி இருக்கின்றார்கள்.
தலைக்கணம் கூடாது தான் .. வயிற்று கணமுமா கூடாது ......
இல்லை, வயிற்று கணம் ஏற்று கொள்ள பட்டது தான் ... ஆனாலும் அரைக் கணம் மட்டுமே போதும் ...
வயிற்றில் முழு கணமும் ஏற்றினால், வயிற்றில் உள்ள மாவு அரைக்கும் மெஷின் எப்படி வேலை செய்யும் ..

உணவு உண்ணும் போது அரை வயிறு மட்டுமே உண்டு, மற்றொரு கால் வயிற்றுக்கு தண்ணீர் அருந்தி, மீதமுள்ள கால் வயிற்றை காலியாக வைத்தால், வைத்தியரை பார்க்கும் வேலை வராது ...
உணவே மருந்தாக இருக்கும்.
இதை மீறினாலோ வைத்தியர் கொடுக்கும், புரியாத கையெழுத்தில் கிறுக்கப்பட்ட காகிதத்தில் உள்ள தெரியாத மருந்துகளை தின்ன வேண்டியது தான்.
பின் மருந்தே உணவாகும் ...

ஒரு நாளைக்கு ஒரு ஃபுல் மீல் மட்டுமே உண்பவர் யோகி ..
ஒரு நாளைக்கு இரு ஃபுல் மீல் சாப்பிடுபவர் போகி ....
ஒரு நாளைக்கு மூன்று ஃபுல் மீல் திங்கிறவன் துரோகி ...

சிலர் இருக்கின்றார்கள் ...அவர்கள் தொண்டை வரை சாப்பிட்டு விட்டு, சாஷ்டாங்கமாய் எழுந்து நின்று, உடலை ஒரு குலுக்கு குலுக்குவார்கள். பின் மேலும் கீழும் ஒரு குதி குதித்து, மீண்டும் சாப்பிட உட்காருவார்கள்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள், அவர்கள் unlimited மீல் ஆர்டர் செய்து ஒரு மணி நேரம் நோகாமல் சாப்பிட்டு விட்டு, சர்வர்-ஐ கூப்பிட்டு இலையை எடுக்க வேண்டாம், என்று எழுந்து, கையை கழுவாமலே சிறிது தூரம் நடந்து விட்டு வந்து, சர்வர்-ஐ மீண்டும் கூப்பிட்டு, எங்கே அந்த சாம்பாரை எடுத்து வா, என்று அரங்கேற்றத்தை ஆரம்பிப்பார்.

அதிலும் சிலர் இருக்கின்றார்கள் ஒரே வேளையிலேயே இரண்டு மூன்று unlimited மீல்ஸ் சாப்பிடுவார்கள் .... அவர்களை உணவு பஞ்சத்திற்கு காரணமான தேச துரோகி என்றே கூறலாம்.

அப்படி பட்டவர்களை சோமாலியா, உகாண்டா , எதியோபியா போன்ற நாடுகளுக்கு நாடு கடத்துவது நலம் .. அது மட்டுமின்றி அவர்களுக்கு அந்த நாட்டிலே வைத்து நம் செலவிலேயே 'மாய பஜார்' திரைப்பட ஒரிஜினல் DVD போட்டு காட்டி மேலும் வெறுப்படைய செயலாம் ...

பசியும் பட்டினியும் போக்குவோம் என்று பலர் கூற கேட்கின்றோம் ..
அவர்களுக்கு நாங்கள் சொல்வது இது தான் ... நீங்கள் பட்டினியை மட்டும் போக்க முயற்சி எடுங்கள் .. பசி தன்னாலேயே போய் விடும் ...
பசி என்பது மனிதனின் உடலில் இயற்கை. பட்டினி என்பதோ பசியை போக்க இயலாமை.

ஒருவனுக்கு வேளா வேளைக்கு எப்பொழுதும் சரியான நேரத்தில், ஒரே உணவை, ஒரே அளவில் பல மாதம் கொடுப்போம்....................
...... பின் சில நாட்களுக்கு அதே உணவை அந்த குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்காமல் சிறிது காலம் தாழ்த்தி கொடுத்தோமேயானால், எவ்வளவு காலம் தாழ்த்துகின்றோமோ அவ்வளவு பசி அவனுக்கு எடுக்கும் ... ......................... அதோடு, அவன் என்னதான் ஒரே உணவை உண்டாலும், காலம் தாழ்த்தும் அளவுக்கு நிகராக ருசியும் அதிகரிக்கும்.. ...................... இப்போது ருசியோ அதிகரித்து விட்டது.... ................அப்புறமென்ன , எப்போதும் உண்ணும் அளவை காட்டிலும் அதிகமாகவே சாபிடுவான்..
இது தான் ... Law of Direct Proportion !!!! பசி = (k * ருசி) = (k * உணவின் அளவு)

இவற்றிற்கும் மேலே பாட்டி கை பக்குவம் , அம்மாவின் அன்பு கலந்த உணவு என்று பல காரணங்கள் ருசிக்கு காரணியாக கூறப்பட்டு வந்தது அக்காலத்தில் ...
ஆனால் இக்காலத்திலோ,
பெண்கள் வாயார புகழ்வது கணவனின் கை பக்குவதையே ...

பெண்கள் இரவில் 'கோலங்கள்' பார்த்து பின் 'அரசி'-யை பார்த்து கொண்டிருக்க,
ஆண்கள் காய்கறிகள் வெட்டி விட்டு அரிசியை பார்த்து கொண்டிருகின்றார்கள், அடுப்படியில்.

பின் கை பக்குவத்துக்கு என்ன குறைச்சல் !!!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்