தமிழ் ஐயா !!தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள் மேல் எப்போதுமே அன்பாக இருப்பார்கள்; எந்த பேதமும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால்? அவர்களுக்கு தெரியும், எப்படியும் யாரும் தமிழுக்கு டியூஷன் வர மாட்டார்கள் என்று.

அதிலும், வகுப்பு ஆசிரியரும் டியூஷன் போகும் ஆசிரியரும் வெவ்வேறாக இருந்துவிட்டால், வகுப்பாசிரியர் மேல் நமக்கு வருவது வெறும் பக்தி அல்ல, அது ‘பய’(ம்) பக்தி.

இந்த தொல்லைகள் எல்லாம் தமிழ் ஆசிரியர்களிடம் இல்லை.

தமிழ் ஆசிரியர்களை மறந்து போய் சார் போட்டுக் கூப்பிட்டால், உடனே கோபம் வந்து விடும். அவர்களை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட வேண்டும். அதிலும் ‘ஐயா’ வகுப்பறைக்குள் நுழையும் போது, மற்ற ஆசிரியர்களை வணக்கம் செய்வதைப் போல் ‘குட் மார்னிங் சார்’, என்று சொல்வதை விரும்ப மாட்டார்கள். மாறாக ‘வணக்கம் ஐயா’ எனக் கூறி மரியாதை செய்வதையே தமிழ் ஐயாக்கள் விரும்புகிறார்கள். இந்த மரியாதையை விரும்புவது தமிழ் ஐயாக்கள் இல்லை, தமிழுக்கு தர வேண்டிய மரியாதை, என்பதைத்தான் தமிழ் ஐயாக்கள் மாணவர்களை இவ்வாறாக கூறச் செய்வது.

அதிலும் சில தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்களை பார்த்து மறந்து போய் ‘குட் மார்னிங் சார்’ சொல்லிவிட்டால் போதும். “ ஹொவ் டேர் யூ சே குட் மார்னிங்?, சே ‘வணக்கம்’ ” (How dare you say good morning, say ‘வணக்கம்), எனக் கூறி ஆங்கிலத்திலும் பிரமிக்க வைப்பார்கள்.

சில தமிழ் ஆசிரியர்கள் மற்ற பாடப்பிரிவின் மேலும் பாசம் அதிகம். அதிலும் குறிப்பாக உயிரியலில் (Zoology-யில்) வரும் ஹியூமன் ஃபிசியாலஜியை (Human Physiology) விளக்கி மாணவர்களை வயதுக்கு ஏற்றவாறு ஹார்மோன்களை உசுப்பேத்தவும் செய்வார்கள்.

சில தமிழாசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தமிழையும் ஆங்கிலத்தில் தான் நடத்துவார்கள். வகுப்பறையில் நுழைந்தவுடன், ஒரு மாணவனை எழுப்பி படிக்க சொல்லி, தமிழ் ஆசிரியர் ஆங்கிலத்தில் விளக்கம் கூறுவார்.

மாணவன் படிக்கிறான், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

ஆசிரியரின் விளக்கம், ‘Every city is ours; All are our Relaives !’, ஹ்ம்ம்…. நெக்ஸ்ட் லைன் ’

மாணவன், ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’

ஆசிரியர், ’ All good and evil to us are not by others; But by ourself !!’, ‘ஹ்ம்ம்…. நெக்ஸ்ட் லைன் ’

மாணவர்களோ, மனதிற்குள்ளாக. ஆமாம் ஐயா, பத்தாவது முடித்துவிட்டு வேறு பள்ளியில் சேராமல், இந்த பள்ளியில் சேர்ந்தோம் அல்லவா. நடப்பது தமிழ் வகுப்பா, ஆங்கில வகுப்பா எனத் தெரியாமல் இருக்கும் எங்களுக்கு, ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ தான்.

சில தமிழாசிரியர்கள் முழுமையாய் தமிழில் மட்டும் தான் பேசுவார்கள். ஆங்கில வார்த்தைக் கலப்பே இருக்காது. அவ்வப்போது ‘இந்த தமிழ் வார்த்தை தெரியாதா உனக்கு?’ என ஏசுவது போல் ஏசி, புதுப் புது தமிழ் வார்த்தையைப் புகட்டுவார்கள். இப்படிப் பட்ட தமிழ் ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களைப் போல், ‘போய் சாக்பீஸ் எடுத்துவா’ எனக் கூறமாட்டார்கள். மாறாக, ‘போய் வெண்சுதைக் கட்டிக் கொண்டுவா’ எனக் கூறுவார்கள். இதைக் கேட்டுவிட்டு மாணவர் முழித்தால், அதை உணர்ந்தவராய், ‘அதான்டா ஒங்க சாக்கு பீசு….’ என இழுவையாய், சொல்லக் கூடாததை கூறியது போல் கூறி, ஒரு தூய தமிழ் வார்த்தையைப் புகட்டி இருப்பார். இப்படிப் பட்ட ஆசிரியரின் தயவால் வீட்டிற்க்கு போய் பாட்டியிடம், ‘பாட்டி ஒரு கோப்பை தேநீர் கிடைக்குமா?’ எனக் கேட்டால், பாட்டியோ, ‘என்னது கேப்பங் களியா’ என எதிர் கேள்வி கேட்கக் கூடும்.

தமிழ் தாள்கள் திருத்தப்பட்டு கொடுத்தவுடன் பல மாணவர்களின் தாள்களைப் பார்த்தால் ‘ழ’ ‘ற’ ‘ண’ க்களை சுற்றி ஆசிரியரின் சிகப்பு மை வட்டம் நிறையவே விழுந்திருக்கும். இதைப் பார்த்தவுடன் தான் நமக்கு புரியும், நம்மை சுற்றி நம்மை மாதிரியே நிறைய தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள் என்று.

‘அறம் செய விரும்பு’ எனும் வாக்கியத்தை ஒரு மாணவன் பிழையாய் ‘அரம் செய்ய விரும்பு’ என எழுதியிருந்தான். இதைக் கண்ட தமிழ் ஐயா அவனை எழுப்பி, ‘உன் அப்பா என்ன செய்கிறார்’ எனக் கேட்க. அதற்கு மாணவன், ‘இரும்பு பட்டறை வச்சிருக்காங்க, ஐயா’ என்கிறான். உடனே ஐயா, ‘அப்படியா, அப்ப பட்டறையில் அரம் செய்யவே விரும்பு, உட்கார்’ எனக் கூறி நேரத்திற்கு ஏற்ற நகைச்சுவைகளும் கூறுவார்கள் தமிழ் ஐயாக்கள்.

தமிழ் ஆசிரியர்களின் கிண்டலும் கேலியும் சற்று தூக்கலாகவே இருக்கும். தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளினிகளை வகுப்பில் அவர்கள் கிண்டல் செய்வதே ஒரு அலாதிதான்.

‘வன்க்க்க்க்க்க்க்க்….க……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… வாலெப்பலம் நழ்ழாருக்கும்’ எனவாக தொகுப்பாளினிகளின் ‘ழ’ க்களை கூறி மாணவர்களை சிரிக்க வைத்து, அப்படி பேசக் கூடாது என சிந்திக்கவும் வைத்திடுவார்கள்.

இந்நேரத்தில் இராமாயனத்தில் வரும் சுந்தர காண்டம் காண்டம் வகுப்பு எடுக்கையில் சேது சமுத்திரம் பற்றியும் ராமரின் கல்வியையும் அலசி இருப்பர்கள். அதாவது ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார் என்று.

பாரதியை, கம்பனை, வள்ளுவனை, இளங்கோவை, பாரதிதாசனை, மு.வ-வை, பூங்குன்றனாரை, ஔவையாரை என தமிழ் வளர்த்த தங்கங்களை குறைவின்றியும் பாரபட்சமின்றியும் மாணவர்கட்கு வாரி வழங்கியவர்கள் தமிழ் ஐயாக்கள்.

ராமனை, லட்சுமனனை, பரதனை, குகனை, அனுமனை, வாலியை, தருமனை, அர்ஜுனனை, கண்ணனை, கர்ணனை, சேரனை, சோழனை, பாண்டியனை என காவிய நாயகர்களையும், சரித்திர வீரர்களையும் தங்கள் பேச்சால் கண்முன்னே உலாவ விட்டு கிராஃபிக்ஸ் காட்டிய வித்தகர்கள் தமிழ் ஐயாக்கள்.

தமிழ் ஐயா, பேச்சால் கிராஃபிக்ஸ் காட்டிய பிறகும், கோனார் தமிழ் உரையில் அருஞ்சொற்பொருள், பொருளுரை, பொழிப்புரை, தெளிவுரை என எல்லாம் நெட்டுறு செய்த பிறகும், சீதைக்கு ராமன் சிற்றப்பன் எனக் கூறினால். பின் தமிழ் ஐயாக்கள் மோதிரம் கழற்றி வைத்து விட்டு, விளாசி எடுக்காமல் வேறு என்னதான் செய்வார்கள். வாழ்க தமிழ் ஐயா !

ஹரீஷ்

4 comments:

HK Arun 21 July 2009 at 00:08  
This comment has been removed by the author.
HK Arun 21 July 2009 at 00:09  

நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

நன்றி!

"உழவன்" "Uzhavan" 21 July 2009 at 17:48  

ப்ளாக் ஆரம்பிக்கிற அளவிற்கு நாம் ஏதாவது எழுதுகிறோம் என்றால் அதற்குக் காரணம் நம் தமிழ் ஐயாக்களே.. அருமையான பதிவு. குட் ப்ளக் பகுதியில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

Moulee 27 July 2009 at 04:52  

Nice one, enjoyed it. Though I didn't study Tamil in school, I learnt to read and wrtie(with mistakes). I wish I studied Tamil. In my school there was a Tamil aiya, who would punish students if they call him 'aiya'. When I read about Tamil teachers who teach Tamil in English, I remembered him, since I was not in Tamil class, I was not so fortunate to experience it.

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்