சென்னையில் சகலமும் !!!
பத்து ரூபாய்க்கு, பிளாட்பாரக் கடையில் கால் பிளேட்  பிரியாணியும் கிடைக்கும். 500 ரூபாய்க்கு, ஐந்து நட்சத்திர ஓட்டலில், புபே (Buffet) மீல்சும் கிடைக்கும், சென்னையில்.

திருவல்லிகேணி. சென்னையின் பேச்சி்லர் சரணாலயம். அங்கே எத்தனை சாலைகள், எத்தனை சந்துகள் என்று எண்ணிப் பார்த்து, மேன்ஷன்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், மேன்ஷன்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கக் கூடும். மார்கழி மாதமாய் இருந்தால், திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவிலில் சூலமங்கலம் சகோதரிகள் கச்சேரி பார்க்கலாம். கோவிலுக்கு சீக்கிரமே போனால் பொங்கல் சூடாகவே கிடைக்கும்வாய்ப்பிருந்தால் கச்சேரி முடிந்தவுடனும் பொங்கல் கிடைக்கும். குருக்கள் கண்டுக்கொள்ள மாட்டார். இந்த குருக்கள் என்றெல்லாம் பரிமாருகின்றார் என்று தெரிந்து கொண்டால், அன்றெல்லாம், டின்னெர் பெருமாள் புண்ணியத்தில் ஷேமமா முடியும்.
அப்படி இல்லாத நாட்களில், வேறு வழியே இல்லை. பாய் கடையில் கால் பிளேட் கோழி பிரியாணியும், சால்னாவும் தொட்டுக்கிட்டு ஜம்முன்னு வந்திடலாம். இதையும் மீறி பிளாட்பார கடையில் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தால், பின் (!) விளைவுகளுக்கு அவரவரே பொறுப்பு. கை கழுவும் போது, கீழே காக்கா சிறகுகள் கிடந்தால், மேலே பறந்து கொண்டிருந்த போது, அது தவறி கீழே விழுந்திருக்கலாம் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.                             
சென்னைக்கென்று ஒரு வழக்கு மொழி வந்து விட்டது. அதுவே, சென்னை செந்தமிழ் ! அந்த சென்னை செந்தமிழில் இன்றளவும் சிறப்பான வாக்கியமாக கருதப்படுவது,  “ஒரே பேஜாரா கீதுப்பா .......... !”. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

புத்தகம் வேண்டுமா ? இதோ, மூர் மார்க்கெட், மற்றும் கடற்கரையை ஒட்டி, கண்ணகி கை காட்டும் பாரதி சாலை இருக்கிறது. அதுவும் போதாதா? இதோ லஸ் கார்னர் இருக்கிறது. அங்கே 'நம்மாழ்வார்' கடை ஆனந்த  விகடனிலும் பிரசித்தி.
பெண்கள் கல்லூரி உள்ளே போவதற்கு ஆண்களுக்கு சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனாலும், இப்படி கூச்சம் இன்றி பெண்கள் கல்லூரி ஒன்றிற்கு, ஆண்டிற்கு ஒரு முறை உள்ளே செல்லலாம். அது ஸ்பென்செர் பிளாசா அருகே உள்ள காயிதே மில்லத்  பெண்கள் கலைக் கல்லூரி. ஆம்! ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் புத்தகத் திருவிழா தான் அது. நாம் அதிர்ஷ்டசாலியாய் இருந்தால் சிறிது முயற்சியிலேயே 'ஹாய்' மதன் ஆட்டோகிராப் கிடைக்கலாம். இப்போதுதான் திருமணமான நபராய் இருந்தால், முயற்சி செய்யாமலே மல்லிகா பத்ரிநாத் ஆட்டோகிராப்   கிடைக்கலாம்.

பார்த்துப் பார்த்து, பொறுக்கி எடுத்து, ஒன்னும் வாங்காமலேயே திரும்பனும்னா, பாண்டி பஜார் செல்லலாம். பார்ப்பதற்கே பணம் தரனும்ன்னா சிட்டி சென்டர் செல்லலாம். அது அவரவர் விருப்பம். பாண்டி பஜாரில், நாம் நகர்ந்த பின்னும் கடைக்காரர் பொருளின் விலையை தள்ளுபடி செய்வார், அதைக் கேட்டு மயங்கி, உடனே பொருளை வாங்கி விடக் கூடாதுசிறிது தூரம் அப்படியே நடந்து செல்வது மாதிரி சென்று, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தால், மேலும் தள்ளுபடி கிடைக்கலாம். இதையும் மீறி, அதே கடைக்காரர் கண்ணில் படும்படி, பலமுறை நடந்தோமேயானால், அடுத்த முறை, கடைக்காரர் நம்மை  கண்டு கொள்ள மாட்டார். அவருக்கு தெரியும்,இது பைசா தேராத கிராக்கி-ன்னு”.

ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் பாண்டி பஜார் போகலாம். பத்துக்கு மேல் ஒரே பொருளை வாங்க வேண்டும் என்றால், பஸ் பிடித்து பாரிஸ் செல்வது உசிதம். அங்கே தெருவுக்கு தெரு ஒரு வியாபாரம் நடக்கிறது. ஒரு தெரு பாத்திர தெரு, ஒன்றில் பர்னிச்சர், மற்றொன்றில் நாட்டு மருந்து, ஒன்று பூக்களுக்கு, மற்றொன்று தங்க நகைகளுக்கு, மேலும் வீட்டு உபயோக பொருள் தெரு, எலெக்ட்ரிக் தெரு என இப்படியாக நாம் பராக்கு பார்த்து கொண்டே செல்வோமேயானால், பின் பஸ் பிடிக்க, பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் திரும்பி வருவதற்குள்  பத்து  பேரிடமாவது வழி கேட்டு தான்  வர வேண்டி இருக்கும்

அந்த காலத்தில்,கூவம் ஆறு” என்று அழகாக கூறப்பட்டு இருந்தது. இப்போதோ, அதன் புகழ் காற்றில் அனைவரும் உணரும் வண்ணம் பரவியிருப்பதால், வெறும்கூவம்என்றாலே அனைவரும் அறிந்து கொள்வர். மின்சார புகை வண்டியில், சென்னை பீச் ஸ்டேஷன் வரை போகின்றவர் பிரணாயாமம் முச்சு பயிற்சி கற்றுக் கொள்வது நலம் பயக்கும். ஏனெனில் கூவம் பாலம் தாண்டும் இடைவெளியில்  புகை வண்டி கோளாறாகி நின்றால், வாயு பகவான் தான் காப்பாற்ற வேண்டும்.

மூச்சு முட்ட ஷாப்பிங் பண்ணனும்ன்னா, ரெங்கநாதன் தெரு தான் போகணும். அது ஜனக் கடல் தெரு. என்னதான் ரெயில் நிலையம்  பக்கத்தில் இருந்தாலும், அதன் சத்தமே கேட்காத அளவுக்கு நிரம்பி இருக்கும் ஜன சமுத்திரத்தில், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் வரை சென்று வருபவரை என்னவென்று சொல்வது.
இவ்வளவையும் தாண்டி, சரவணா ஸ்டோர் பாத்திரக்கடை முழுதும் பார்த்து விட்டு அப்புறம் துணிக்கடை, பர்னிச்சர் கடை எல்லாம் பார்த்து விட்டு, ஒன்றுமே வாங்காமல் மொட்டை மாடி போய், களைப்பு தீர, ஒரே ஒரு காபி மட்டும் குடித்து விட்டு வருகின்றவரை, வெறுமனே 'விண்டோ ஷாப்பிங்', என்று மனசு நோகாம சொல்லிவிட முடியாது தான்.
அதிலும் ஒரு சாரர் செய்வது காஸ்ட்லிவிண்டோ ஷாப்பிங்'. அவர்கள் போவது எல்லாம் ஜி.ஆர்.டி, பிரின்செஸ், பாலு , ஸ்ரீ, சரவணா தங்க மாளிகை, மற்றும் ஜாய் அலுக்காஸ் மட்டுமே. இவை எல்லாம் போய் விட்டு வந்தவரிடம், என்ன வாங்கினீர்கள்  என்றால், மார்க்கெட்- கோல்ட் ரேட் விசாரிக்க போனதாய் சொல்லுவார்கள்.

சென்னையில் எலெக்ட்ரானிக் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரிச்சீ  ஸ்ட்ரீட் இருக்கிறது. இதுவரை வந்துள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள், இன்னும் கொஞ்ச நாளில் வரப்போவது எல்லாமே இங்கு கிடைக்கும். அங்கே போனால், “சார் SONY டிவி லேட்டஸ்ட் மாடல்-கீது, வேணுமா சார்என்பார்கள். ஆளை பார்த்தவுடன், சற்று சமயோசிதமாக தப்பித்து விடவேண்டும். இல்லை என்றால், வீட்டு வரவேற்பறையில் SONY டிவியில் சீரியல் பார்த்து கொண்டு இருப்போம். என்ன கொடுமை என்றால், வீட்டில் வைத்து அந்த டிவி பெட்டியை பிரித்து பார்த்தால், டிவியில்SONYஎன்று ஆங்கிலத்தில் பொறிக்கப்படாமல், அழகு தமிழில்சோனி என்று பொறிக்கப்பட்டிருக்கும். அப்படியே பக்கென்று இருக்கும். சரி ! அவன் கொடுத்த விசிடிங் கார்டில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், மறுமுனையில் தொலைபேசி எடுக்கபடுகின்றது, “ஹலோ சைதாபேட்டை ................... J1 ஸ்டேஷன்”. நமக்கோ மேலும் தூக்கி வாரிப் போடும். ஏமாந்தபின் புகார் கொடுக்க கஷ்டப்படக் கூடாதாம். அதனாலே, விசிடிங் கார்டில் போலீஸ் ஸ்டேஷன் நம்பரே இருக்கும். கஸ்டமர் சர்வீஸ் !!!! அடக் கஷ்டமே !!!

இவை இன்றி நடன விடுதி, வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த மங்காத்தா கிளப்கள், காசினோக்கள், போதை வஸ்துக்கள் கிடைக்கும் இடம் என்று , சென்னை மர்மமும் நிறைந்த நகரம்.


வெளிநாடு வாழ் தமிழ் நண்பர் ஒருவர், இந்திய சுற்றுபயணம் வந்தார். சில நாட்கள் கழித்து, மவுண்ட் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அருகே வந்து, மெதுவாய் மெல்லிய குரலில், “சார் அது (!) எந்த ஏரியா, சார் ! ” என்றார்.
அவரை ஏற இரங்க பார்த்து , “சார் !!  அது ஏன் சார் என்ன பார்த்து அத கேட்டீங்க !!! ”


வாழ்க்கையின் இரண்டு எல்லைக் கோட்டிலும் மக்களை கொண்டு, வந்தாரை வாழ வைக்கும் வாசலாகவும், சகலமும் கிடைக்கும் சென்னை நகரம், இன்றும் உலக அரங்கில் தமிழர்களை தலை நிமிரத்தான் செய்கிறது !!


ஹரீஷ்

பாதாள உலகம் !!


காவியங்களில் மொத்தம் மூன்று உலகம் உள்ளதாக சொல்லுவார்கள்.
மண்ணுலகம்,
வானுலகம் மற்றும் ,
பாதாள உலகம் என்று.

மனிதன் மண் உலகில் மட்டும் சஞ்சரித்து கொண்டு இருந்தான். பின் அவன் எண்ணங்கள் மென் மேலும் உயர்ந்து, ரைட் சகோதர்கள் முயற்சியால், ஆராய்ச்சியை விரிவு படுத்தி ஆகாய விமானம் கண்டுப் பிடித்தான்.இதற்கு காரணம் பறவை, பறவையை பார்த்து பிரமித்து, நம்மாலும் பறக்க முடியுமா என்ற எண்ணம் தான்.

நியூட்டனின் மூன்றாம் விதிப் படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. மனிதன் தரையில் இருந்தான். தரைக்கு மேலே ஆகாய விமானம் பறக்க விட்டான். இப்போது இந்த வினைக்கு எதிர் வினையால் சமநிலை படுத்த வேண்டும் என்றால் பாதாள உலகம் தான் போக வேண்டும்.
ஆனால் பாதாள உலகம் போக முடியுமா. முடியும் என்று மனிதன் நிருபித்திருக்கிறான்.

அந்த காலங்களில் அரசர்கள் போர் காலத்தில் தப்பி செல்ல சுரங்க பாதைகளில் செல்லுவார்கள். அது அரசாட்சி. இதுவோ மக்களாட்சி. இப்போது, மக்களும் அலுவலகத்திற்கு சுரங்க பாதையில் செல்லாம்.

பாதாள உலகத்திற்கு வாய் உண்டா என்று கேட்டால், உண்டு ..
அந்த வாய்கள் லண்டன், நியூயார்க், பாரிஸ், மாஸ்கோ, ரோம் என்று இருந்து, இப்போது இந்தியாவில் டெல்லி,கொல்கத்தா நகரங்களில் இருந்து, சென்னையிலும் வாயை திறக்க காத்துக் கொண்டு இருக்கிறது. இவற்றிலும் மிக தொன்மையான வாய் லண்டனில் உள்ளது.

'தடக் தடக், தடக் தடக்' என்று தரையில் தாளத்துடன் புகை வண்டி பார்த்து பிரயாணித்து இருக்கிறோம். இப்போது பாதாள உலகத்தில் சத்தம் சற்றே குறைவாக உள்ள மெட்ரோரயில் வண்டியில், பிரயாணித்து பிரமிக்க போகின்றோம், விரைவில் சென்னையில். நம் சிங்கார சென்னையில் !
சத்தம் தான் குறைவே அன்றி, வேகம் இல்லை. சத்தம் சிறுத்தாலும் வேகம் சிறுக்காது.

இந்த மெட்ரோ வண்டியை ிட சீறிப்பாயும் வேகத்தில், தண்டவாளத்தில் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பறந்து செல்லும் புல்லட் ரயில்களும் இப்போது வந்து உள்ளன, ஜப்பானில்.

அப்படி பட்ட ஜப்பான் நாட்டில் இருந்து தான் நம் சென்னையின் மெட்ரோ ரயில் வண்டி வேலைக்கு கடனுதவி கிடைத்துள்ளது.

பாதாள உலகத்தில் உள்ள மெட்ரோ ரயில் வண்டியில் பிரயாணம் செய்வதில் ஒரு சவுகரியம் என்னவென்றால், அரசியல் கட்சிகள் யாரும், சாலை மறியல் பண்ணுவது போலவோ, புகைவண்டி மறியலில் ஈடு படுவது போலவோ மறியலில் ஈடு பட மாட்டார்கள்.

மேலும் 'இந்தி எதிர்க்கிறேன்', ஒரு ரூபாய்க்கு அரிசி தந்ததால் எல்லோரும் குண்டடித்து விடுவார்கள் எனக்கூறி,'தொந்தி எதிர்க்கிறேன்' என்று அரசியல்வாதிகள் அகலக் கால் வைதார்களேயானால், அகால மரணம்தான் அடைய வேண்டும்.
அரசியல் கட்சிகளே, ஜாக்கிரதை ! . அதனால் சற்று சிந்தித்து போராடுங்கள்.

இந்த திட்டதிற்கு ஒதுக்க பட்டுள்ள பணம் 14600 கோடி ரூபாய். மெட்ரோ ரயில் வண்டி பணிகள் 2015 -இல் முடியும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

இந்த மெட்ரோ ரயில் வண்டியில் பிரயாணம் பண்ணும் போது, பிரணாயாமம் தெரிந்திருக்க வேண்டியது இல்லை. என்னதான் கூவம் நதியை கடந்து சென்றாலும், மூச்சு பயிற்சிக்கு அவசியம் இருக்காது.

ஆகாய விமானம் பறவையை பார்த்து பிரமித்து கண்டு பிடித்தான்.
இந்த மெட்ரோ ரயில் ரயிலை எதை கண்டு வியந்து கண்டு பிடித்திருப்பான்.
ஒருவேளை தூங்கிக்கொண்டு இருக்கும் போது தொல்லை செய்த பெருச்சாளியை கண்டு இருக்குமோ.

ஹரீஷ்

பாட்டி !!!சௌந்தர்யவதி! ஆனாலும் துர்பாக்கியசாலி! அவள், சிறு வயதிலேயே தன் குங்குமம் பறி கொடுத்தவள்.

அவள் கூறிய கதைகளும், காட்டிய அன்பும், ஆட்டிய தூளியும்; இனி நான் எங்கேப் பெற முடியும்?

அவ்வப்போது வந்து, " ந்தா... காசு கொடு " ன்னு கேட்டு வாங்கிக்குவா. நான், புன்னகையோடும் மரியாதையோடும், அவளுக்கு, கையில் இருப்பதைத் தருவேன். எனக்கு தெரியும்; அவள் சேர்க்கும் பணம் என் அண்ணன் திருமணத்திற்கு அவள் தாலி வாங்கி தரணும்ன்னு ஆசைப் படுறது.

அவளுக்கு, எவ்வளவோ ஆசைகள் இருக்கும், இருந்து கொண்டும் இருக்கும். ஆனாலும், அவற்றை எப்போதாவது யாரிடமாவது சொல்லியிருப்பாளா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனாலும், அவள் ஆசை இன்னதென்று தெரிந்து விட்டால் அதை அவளுக்கு சொல்லாமலே செய்வதில் ஒரு பேரானந்தம் இருக்கும்!

அவள் கேட்கறது கோயிலுக்காக இருக்கும்; அவளுக்கு இருக்காது. என்னதான் கோயிலுக்கு பணம் தருவது எனக்கு அவ்வளவாக உடன் பாடு இல்லை என்றாலும், கடவுள் சிலைகள் மேல் நம்பிக்கை அவ்வளவாக இல்லை என்றாலும், அவள் கேட்டால் கொடுத்து விடுவேன். கடவுளே கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா!

உலகில் நான் மதிக்கும் மிகப் பெரிய பெண், பாட்டி.

அவள் ஆக்கும் அமுது அமுதம். ராத்திரியில் வெளில நான் சாப்பிடக் கூடாது, வீட்டில் வந்து சாபிடனும்ன்னு எனக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே செல்போன் இயக்க கற்றுக் கொண்டவள்.

நாங்கள் விருப்பப்பட்டோம் என்பதற்காகவே 'அறிவொளி' இயக்கத்தில் 'அ', 'ஆ' கற்று கொண்டு அவள் பெயரை எழுத பழகினாள். அவ என்ன கம்ப ராமாயணமா படிக்கப் போறா?

அவள், கிராமத்திலும் சிற்றூரிலும், தினமும் வெள்ளந்தியான மனிதர்களைப் பார்த்து பேசி வந்தவள்; அதுவே அவளுக்கும் பிடிக்கும். இப்போதோ, நகரத்தில் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொண்டு இருக்கிறாள். ஏனெனில், நானும் என் அண்ணனும் நகரத்தில் இருக்கின்றோம், என்ற ஒரே காரணத்தினால், அவள் இந்த நகரம் என்னும் நரகத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.
வள்ளுவன் வாக்கில் சொல்வதாய் இருந்தால்
      அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்

      பிறன் போலே நோக்கப் படும்.

பணம் இல்லை என்றால் பெற்ற தாயாலும் கூட பிறர் போல பார்க்க படுவார் என்கின்றார் வள்ளுவர். அந்த அளவுக்கு பணம் தன் வேலை காட்டுகின்றதாம். நானோ நகரம் தாண்டி, நாடு தாண்டி, அவளைப் பார்த்து கொள்ளாமல், செய்நன்றி மறந்து பணம் புரட்ட வந்திருக்கேன். அது விதி செய்த சதி !

நகரத்தில் இருந்து, உடம்பு சரியில்லாம போச்சுன்னா வேது பிடிக்க, அந்த பச்சிலைகளை அவ எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ? அது அவளுக்கு தான் வெளிச்சம்!

அவள் எதுவுமே கேட்க மாட்டாள்; அப்படி பட்டவ "ந்தா.. அந்த கஸ்தூரி என்ன ஆனான்னு தெரியல; சித்த டிவி போடு" -ங்கறா .

பாட்டி, தொலைகாட்சியில் நாடகம் பார்க்கும் போதும், "ஐயய்யோ இந்த பாவி பய இப்படி பண்றானே" என்று நடிப்பவர்களுக்காகவும் தன் இரக்கத்தை காட்டுபவள்.

அவள், அந்தக் காலத்து பெண்மணி. அவளுக்கு அகங்காரம் அசூயை என்பதை இதுவரை நான் பார்த்ததே இல்லை; சத்தியம்... சத்தியம்... சத்தியம் ....!!! இதை அவளுடன் நான் அதிக காலம் இருந்ததினால் சொல்கிறேன்.

பல படங்களையும் பார்த்து  நான் அவ்வளவாக பிரமிப்பு அடைவதில்லை. ஆனாலும் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்து மிகவும் பிரமித்து போனேன். படத்தின் பெயர் 'The Way Home'. முடிந்தால் அந்த படம் பாருங்கள். முடியலைன்னா உங்க பாட்டியையாவது பார்த்து கொள்ளுங்கள்.

நடு இரவாக இருக்கும். அவள் அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பாள். நானும் உறவினரும் வீட்டுக்கு வருவோம். தூங்கிகிட்டு இருக்கிறவ எழுந்து வருவாள். வந்து, சாப்டியான்னு கேட்டு, சாப்பிடலைன்னா சமையல் பண்ணி சாப்பாடு தருவா. இது நான் நடு ராத்திரியில் வருவதால் இல்லை, வீட்டிற்கு யார் நடு ராத்திரியில் வந்தாலும் அவர்களுக்கு இந்த உபசரிப்பு நிச்சயம்.

கோவில் போய்விட்டு வருவா. வந்தவுடன் கோவில் பிரசாதம் எல்லாத்தையும் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்து விடுவா. அவள் சாப்பிட்டாளா?என்று யாருக்கும் தெரியாது.

அவளுடைய வயதிற்கு, அவள் பார்த்த மனிதர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று நான் பிரமிப்பது உண்டு. அவளால் நாங்கள் பாக்கியம் அடைந்தோம் என்று பல முறை பலரால் அறிந்திருக்கின்றோம்.

ஒருமுறை வீட்டில் உள்ள தேவை இல்லாத பொருட்கள் பலவற்றை எடுத்து குப்பையில் போட்டு, வீட்டை சுத்த படுத்தணும்னு, பல பொருட்களை எடுத்து சென்று, தெரு முனையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு வந்தேன். அதில் சில பீங்கான் தட்டுகளும் அடங்கும். இதை எல்லாம் பாட்டி கவனித்து கொண்டு இருந்தாள். நான் வீட்டிற்க்கு வந்தவுடன், "பீரோவ்ல பீங்கான் தட்டு இருந்திச்சே அது எங்க?" ன்னு கேட்டா .. ...நான், "அத யாரு யூஸ் பண்றா, அதான் குப்பை தொட்டியில போட்டுட்டேன்" அப்டின்னேன்.
அவ, "அது உன் தாத்தா வாங்கியாந்தது" அப்டின்னா; அவள் கண்கள் ஈரமாவது தெரிந்தது; அப்போதும் அவள் திட்டவில்லை கோவப்படவில்லை. நான் அப்போதே திரும்பி போய் குப்பை தொட்டியிலிருந்து அந்த பீங்கான் தட்டை எடுத்து வந்து விட்டேன்.

அவள் சொல்லி இருக்கா, சின்ன வயசில என்ன இடுப்புல வச்சுக்கிட்டு, அவ ஆத்துக்கு குளிக்க வந்தாளாம். ஆத்துல நல்லா தண்ணி ஓடிகிட்டு இருந்திச்சாம். என்ன கரையில விட்டுட்டு அவ குளிச்சிட்டு வந்திருக்கா. வந்து பார்த்தா என்ன காணுமாம். அவ பதறி போயிட்டாளாம். உசிரே போச்சாம் அவளுக்கு; என்ன ஆச்சு புள்ளைக்கு-ன்னு? சுத்தி முத்தியும் பாத்தாளாம், ஒரன்டியும் அகப்படலயாம்; எங்கேயோ பக்கத்தில் 'பொளக்' 'பொளக்'ன்னு சத்தம் கேட்டிச்சாம்; கிட்ட வந்து பார்த்தா, காட்டான் மணி செடியில் தண்ணியில் கரையோரமா சிக்கிக்கிட்டு தண்ணிய குடிச்சுகிட்டு கிடந்தேனாம். "ஐயோ" அப்டீன்னு ஓடி வந்து என்ன தூக்கிட்டு வந்தாளாம். அப்புறம் தான் அவளுக்கு உசிரே வந்துச்சாம்.
எனக்கும் அப்பிடித்தான் இருக்கும்!

இப்பவும் அப்பப்ப பணம் கேட்கிறா. நானும் கொடுத்து கொண்டு இருக்கிறேன். அடுத்த 'தாலி' வாங்க ஆரம்பமாகி விட்டாள் போல பாட்டி!

ஆயிரம் உன்டிங்கு அழகி; ஆனாலும் அவ்வாயிரமும் என் பாட்டி முன் பணிந்து தான் போக வேண்டும். பாட்டி, அந்த ஆயிரத்திற்கும் அன்பிலும், அழகிலும் அம்மாவாய் இருப்பாள்.

நான் வெளியூர் செல்லும் முன் அவளிடம் வாக்கு கொடுத்தபடி, அவளை அழைத்துக்கொண்டு கோவில் சென்றேன். அவள் கோவிலில் கூறிய ஆசிகள், என்றும் என் உள்ளங்களில் ரீங்காரமிடும். அவள் துக்கங்களை கூறி, பின் மனமார வாழ்த்துகின்றாள் "மவராசனா இரு"-ன்னு. நான் இப்போது நினைத்து கொள்கிறேன், உன் பேரனாய் இருந்து ஆண்டியாகவும் இருக்க ஆனந்தமே.

அவளை கஷ்ட படுத்துகின்றவரை-யோ, அவமரியாதை செய்பவரை-யோ, முகம் சுளிக்க வைப்பவரையோ யார் தடுத்தாலும் விடேன்.

நான் பல நேரங்களில் நினைப்பது உண்டு. பாட்டிக்கு ரகசியம் ஏதாவது மனதிற்குள்ளாகவே வைத்திருக்கிறாளா என்று. இப்போ நினைத்து பார்க்கும் போது உண்மை புரிகின்றது. அவள் பல ரகசியங்களை மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறாள் என்று. அவளை கஷ்டப் படுத்தியவரை-யும் , த்வேஷித்தவர்களை-யும் , வஞ்சித்தவர்களை-யும் வருத்தியவரையும் அவள் மற்றவரிடம் சொல்லுவதே இல்லை. எல்லாமே இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறாள். இவ்வளவுக்கு பின்னும், அவள் அவர்களை அன்புடன் அனுசரிக்கின்றாள், பாசத்துடன் பார்த்துக் கொள்கின்றாள் .
Paati ...... You are great !!!

ஹரீஷ்

களைப்பறியா கலைஞர் !!அகராதியில் உழைப்பு என்று தேடிப் பார்த்தால் அதில் பல அர்த்தங்கள் இருக்கலாம்; ஆனாலும் நிஜத்தில் நம் கண் முன் பார்க்கும் ஒரு ஒப்பற்ற தலைவர் கலைஞர். அவர், உழைப்பிற்கு உருவம் தந்த தலைவர்.

சூரியனும், அவர் எழுந்தவுடன் தான் உதயமாகும். அவருடைய உழைப்பிற்கு ஈடு இணை இந்த தமிழகத்தில் எந்த இளைஞனாலும் கூட இயலாது.
இந்த 85 வயதிலும், முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்கு பின்னும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். எங்கோ எதிலோ படித்தது, ஒரு மனிதன் தோல்வி அடைய பல காரணம் இருக்கலாம். அனால் ஒரு மனிதன் ஜெயிக்க ஒரு காரணம் தான் இருக்க முடியும் 'உழைப்பு'.

கலைஞருக்கு உழைக்க வில்லை என்றால் தான் களைப்பு வரும்;
உழைத்தால் தான் களிப்பு வரும். அவருடைய உதவியாளர்கள் திணறித்தான் போவார்கள் அவருடன் பணி புரிவதற்கு. பல முறை சட்ட சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். ஐந்தாம் முறையாய் முதல்வராய் இருக்கிறார். தமிழை இரண்டாம் தர மொழியாக்கி விடுவார்களோ என்று எண்ணி பயந்து, பெரியார், அண்ணா வழியில் இந்தியை தமிழகத்தில் எதிர்த்தது என அவர் கலந்து கொண்ட போராட்டங்கள் கணக்கில் அடங்கா.

இப்போதும் அறுவை சிகிச்சைக்கு பின் சக்கர நாற்காலியில் போகும் போது அவர் எண்ணம் எதுவாக இருக்கும் என்று எண்ணி பார்த்தால், ' அப்பாடா இவ்வளவு நாள், மனம் சிந்திக்கும் வேகத்திற்கு நடக்க முடியாம இருந்திச்சு. இப்போது வேகமாய் நகர்ந்து பல வேலைகள் செய்யலாம். பல அதிகாரியை வேலை வாங்கலாம்' என்றுதான் எண்ணி இருக்கும்.

தமிழகத்தின் வரலாற்றை முழுமையாய் அறிந்த இரண்டு நபர்கள் இப்போது உள்ளார்கள் எனின் அவர்கள் கி வீரமணியும், கலைஞர் என்றும் தான் மூத்த தலைவர்களும் கூறுகின்றனர்.

கலைஞருக்கு, தமிழ் மேல் கொள்ளை ஆசை; ஆதலாலே தமிழ் கவிஞர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றார்கள். கவிஞர் வைரமுத்துவிற்கு தினம் ஒரு முறையாவது கலைஞரிடம் தொலைப்பேசியில் பேசி விட வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் திருப்தி. தமிழ் தமிழிடம் பேசுவது தித்திக்காமலா இருக்கும்.

கலைஞருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரின் நகைச்சுவை திறன் நிருபர்களிடம் மிக பிரசித்தம்.

திருவாரூரில் திருக்குவளை எனும் சிறு கிராமத்தில் பிறந்து, தமிழகத்தில் மிகப் பெரிய கட்சிகளுள் ஒன்றான தி.மு.க வின் தலைவராகவும் , தமிழகத்தின் முதல்வராயும் இருப்பதால், அவர் யாராலும் எதையும் சாதிக்க முடியும் , 'உழைப்பு இருந்தால்', என்பதை நிரூபித்து இருக்கிறார்.

கலைஞர் கவியரங்கம் என்றால் ஒரே குதூகலம் தான். காண கண்கள் இரண்டும் கூட தேவை இல்லை. ஆனால் கேட்டு மகிழ இரண்டு காதுகள் கூட போதாது. இரண்டாயிரம் காதுகளாவது தேவைப்படும். அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை, மேடைகளில் அவர் கடைசியாகத்தான் பேசுவார். அவர் முன்னமே பேசினால், கூட்டம் களைந்து விடும் என்பதால் தான் இந்த ஏற்பாடு.

அவர் எழுதிய தமிழ் திரைப்பட வசனங்களை,நம்மால் எழுதி வைத்து எழுத்து கூட்டியும் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்ன உணர்ச்சி மிகுந்த எழுத்துக்கள். பராசக்தி நீதிமன்ற வசனம் 'ஓடினேன் ஓடினேன்' ஆகட்டும் , மனோகரா வசனம் ஆகட்டும். இவை என்றும் அவர் பெயரை சொல்லும்.

எவ்வளவோ தமிழ் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அதிலும் குறளோவியம், அவர் திருக்குறளை கதையுடன் கூறும் விதம் அற்புதம். அவரின் எழுத்து பாணியே தனிதான்.

அவருக்கு குடும்பம் பெரியது தான்; இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் என்றாவது செய்தித்தாளிலோ, செவி வழியாகவோ கலைஞர் அடிக்கடி குடும்பத்துடன் குன்னூரில் ஓய்வு எடுக்கிறார் என்றோ, ஊட்டியை ஊர் சுற்ற போய் உள்ளார் என்றோ கேட்டிருப்போமா? குடும்பத்துடன் இருக்கும் நேரத்தை காட்டிலும் கழகத்திற்குத்தான் அதிக நேரம் உழைத்திருப்பார்.

முப்பால் தந்த வள்ளுவனுக்கு முக்கூடல் சங்கமத்தில் சிலை எழுப்பினார். அலைகள் இவ்வளவு நாளாய் கரையை இடித்தன, இப்போது தமிழை இடித்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு அலையும், நான் நீ என்று போட்டி போட்டு கொள்கின்றன, 'நான் இடிப்பேன்' 'நீ இடிப்பாய்' என்று. தமிழை இடிப்பதால் இனித்து விடுவோம் என்று என்னிக்கொள்கின்றன போலும்.
இதைப் பார்த்து, வள்ளுவர் கூறுகின்றார், 'அலைகளே என்னை இடிப்பதால் நான் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் வரம் பெற்றீர்கள். இப்போது கன்னியாக்குமரியில் இருந்து நகர்ந்து சென்னை செல்லுங்கள். அங்கு, என்னை சிலையாய் எழுப்பியவன் இருக்கிறான். அவனின் தலைவன் அண்ணா, கடற்கரையில் உறங்கி கொண்டு இருக்கிறான். போய் அவனை, இயன்றால் எழுப்புங்கள். அப்படி செய்தீர்களேயானால் தமிழ்க்கடல் கலைஞன் கொண்டு வந்த கடல் நீரை நன்னீராக்கும் பணியில் நீங்கள் இனிப்படைவீர்கள். உம் வரமும் நிறைவேறும்'.

அண்ணாவின் கனவு, இரண்டு அரையணாவுக்கு ஒரு கிலோ அரிசி. இதை அண்ணா நூற்றாண்டில் நிறைவேற்றி உள்ளார்.
சமத்துவபுரம், உழவர் சந்தை போன்ற எண்ணற்ற நல்ல திட்டங்கள் கொண்டு வந்தவர்.

யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்னும் உத்தி அறிந்தவர், வள்ளுவன் மொழியில் சொல்லுவதாய் இருந்தால்,
      இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
      அதனை அவன் கண் விடல்.

வாழ்க நூறாண்டுகள்; உங்களுக்கும் ஓய்வு தேவை; வழிவிடுங்கள் இளைஞர்களுக்கு; அருகில் இருந்து வழி காட்டுங்கள்.

இந்தி எதிர்ப்பு, இரு மனைவி, இலவசங்கள், குடும்ப அரசியல் இவைவிடுத்து கலைஞரை பார்த்தால் அவர் ஒரு தமிழ் இன தலைவர் தான்.
இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

ஹரீஷ்

இளைஞர் அறை !!இந்தியாவில் இத்தனை கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள்; அத்தனை கோடி இளைஞர் இருக்கிறார்கள் என்று கூறுகின்றீர்கள்.
இந்தியாவின் வளர்ச்சி இந்த இளைஞர்களை நம்பித்தான் இருக்கின்றதாம்.

எங்களை நம்பி தான் இந்தியா வளருமாம்; வளரட்டும். அதனால் இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களும் வளரும்; நல்லது.
எங்களால் வளர்ந்த குடும்பங்கள், எங்களுக்கு வாடகைக்கு வீடு மட்டும் கொடுக்க மாட்டார்களாம். என்ன நியாயம் இது?

என் நண்பன் ஒருவன், சற்று 'முணுக்' என்று கோவப் படுவான். அவன், வடபழனியில் ஒரு வீட்டிற்க்கு சென்று வாடகைக்கு பார்க்க சென்றான். வீட்டுக்காரர், 'இல்லைப்பா பேமிலி-க்கு தான்ப்பா வீடு' அப்டீன்னார்.அவன் உடனே, கடுப்பாக, 'சாரி சார் ! நானும் பேமிலி இருக்குற வீட்ல தான் வாடகைக்கு தங்கலாம்ன்னு இருக்கேன்' அப்டின்னுட்டு வந்துட்டான்.

பேச்சிலர் எல்லாம் என்ன சுயம்பு லிங்கம் மாதிரி தானாவா வந்தாங்க?அவங்களும் பேமிலி மூலியமா தான வந்தாங்க? அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றார்களோ? தெரியவில்லை.

இவ்வளவு கஷ்டப்பட்டு,   ஏதாவது ஒரு மூலையில் வீடு கிடைத்து விட்டால் போதும்; அப்புறம் பேச்சிலருக்கு கொண்டாட்டம் தான்!
பேச்சிலர் ரூமில் பல வகை இருக்கிறது;அதில் ஒரு வகை தான் 'வேடந்தாங்கல்' ரூம். அது என்ன வென்றால், அந்த ரூமில் மாறி மாறி ஆட்கள் வந்து கொண்டும் போய் கொண்டும் இருப்பார்கள். அப்டிப்பட்ட ரூமில், ரூமுக்கு வந்தாலே, 'ஹாய்' 'ஹலோ' 'நைஸ் மீட்டிங் யூ' என்று கூறியே பல காலம் ஓடி விடும்.

சில நேரங்களில், நாம் மட்டும் தான் முட்டாள்தனமா இதே ரூம்ல ரொம்ப நாளா இருக்கோமோ ? அப்படின்னு தோணும்.

ஒரு சிலர் ரூமுக்கு வரும் போது, தன்னை பற்றி மிகவும் பிரஸ்தாபித்து கொள்ளுவார்.
அவர் கூறும் போது, 'நான் வாரத்துக்கு ஒரு தடவை தான் தண்ணி அடிப்பேன். அதனால ஒன்னும் பிரச்சினை இல்லைல்ல பாஸ்' என்பார்.
நாமும், 'அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை பாஸ்' என்போம்.
பிறகு அவர் ரூமுக்கு வந்தவுடன் தான் தெரியும், பாஸ்-க்கு கணக்கு வீக் போல? நமக்கு எல்லாம் வாரத்துக்கு ஏழு நாள், பாஸ்-க்கு ஒரு வாரத்தில் ஒரு நாள் தான்!
இது தொடர்ந்து கொண்டு இருக்கும் சிறிது நாளில், இன்னொருவன் வருவான். பாஸ்-இன் நண்பன். அவர் சொல்லுவார் 'பாஸ் இந்த ராத்திரியிலேல்லாம் தண்ணி அடிக்கிற பழக்கம் எல்லாம் நமக்கு இல்ல சார். ஒன்னும் கவலையே படாதீங்க'.
அப்பவே லைட்டா புளிய கரைக்கும். மனதிற்குள்ளாக, அடேய் உன் நண்பனுக்கு ஒரு வாரம் என்பது ஒரு நாள். நீ நைட்-ல தண்ணி அடிக்க மாட்டேன்கிற, ஒரு நாளைக்கு ராத்திரி போக இன்னும் காலை, மதியம் , மாலை வேளை எல்லாம் இருக்கே ! அதெல்லாம் என்ன செய்வதாய் உத்தேசம்?


இதெல்லாம் தாண்டி, காலையில் கண் விழிக்கும் போது, கண்ணில் படும் பாட்டில்-கள், நாம் பார்க்கும் கிழக்கு திசையையோ அல்லது நாம் தொழுகும் மெக்கா திசையிலோ இருந்தால் மனதிற்கு சிறிது மனக்கஷ்டம் தான் .

சில நேரங்களில் நல்ல களைப்புடன் வந்து இரவு படுத்திருப்போம். திடீர்னு அதிகாலையில் தூக்கம் களைவது போல் இருக்கும்.கண்களை லேசாக விழித்து பார்த்தால் நம்மையே நம்ப முடியாது. நம்மை சுற்றி ஒரே புகை மூட்டமா இருக்கும். ஏதோ நம் உயிரே நம்மை விட்டு பிரிவது மாதிரி இருக்கும். தூங்கி கொண்டு இருக்கும் போது உயிர் போனால் மிகுந்த பாக்கியம் என்பார்களே. அந்த புண்ணியம் தான் நமக்கு கிடைக்க போகின்றதோ, என்று அந்த புகை மூட்டதிற்கு இடையில் சிந்தனை வரும்.
இன்னும் சற்று நேரத்தில் சித்திர குப்தன் வருவாரோ, என்று எண்ணி கொண்டே முழுமையாய் நினைவு திரும்பும் போது, நம் கண் எதிரே பாஸ் MARLBORO வுடன் மல்லாக்க படுத்துக்கொண்டு, புகையை வாயில் இருந்து வெளியே விட்டு கொண்டே நம்மைப் பார்ப்பார். இவற்றின் மூலம் பாசிவ் ஸ்மோகிங்கில் சித்திர குப்தனை சீக்கிரம் சந்திக்க போவது என்னமோ உறுதி. இப்படி பாசிவ் ஸ்மோகிங் மக்களிடம் இருந்து தப்பி வந்தோமேயானால், நாம் இன்னும் சிறிது காலம், கூடுதலாய் இந்த பூமிக்கு பாரமாய் இருக்கலாம்.

இவை இல்லாமல் இவர்கள் ரூம் காலி செய்து போன பிறகே தெரியும், 'ஆச்சி மெஸ்சுல' நாமளே இது வரை அக்கௌன்ட் வச்சது இல்லை, இவங்க நம்ம பேரில் அக்கௌன்ட் ஓபன் பண்ணி இருக்காங்கன்னு.

நம் நண்பன் ஒருவர் இது வரை புகை பிடித்ததே இல்லை. அவனிடம், ஏன் நீ தம் பிடித்ததே இல்லை? ஒரு தடவை கூட தம் அடித்ததிலையா ? என்று கேட்டால்.
'நான் தம் அடித்திருக்கிறேனா? என்று கேட்கின்றாய். கேள், யார் வேண்டாம் என்றது.
நீ கேட்கலாம், ஏனெனில் நீ என் நண்பன். ஆகையால் நானும் உன் நண்பன். நண்பனுக்கு நண்பன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெரிந்து கொள்ளலாம்.
நீ இதை என்னிடம் கேட்க கூடாது ? என்று கூற மாட்டேன், ஏனென்றால், அதை இப்போது தான் நீ கேட்டே விட்டாய். இனியும் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை'
என்று பேசிக்கிட்டே அவன் மேலும் கூறினான்.
'ஒரு நாள், ஆத்து மேல உள்ள பாலத்தில் மேல உள்ள கட்டை மேல், சர்க்கஸ் கோமாளி போல நடந்து போனேன். அப்போ தவறி ஆத்துல தண்ணில விழுந்துட்டேன். தண்ணியில் விழுந்த நான் ரொம்ப நேரம் இழுத்து தம் பிடிச்சி தண்ணிக்கு வெளியில் வர வேண்டி இருந்திச்சு. அப்புறம் யாரோ வந்து என்ன காப்பாதினாங்க. அன்றைய தேதியில் இருந்து இனி வாழ்கையில் தம் பிடிக்கும் விதமாக நடந்து கொள்ள கூடாது என்று முடிவு செய்தேன்' அப்டின்னான்.
நான் , 'அது சரி தம் பிடிக்காம இருக்க வேற என்னவெல்லாம் செய்கிற இப்போ' என்றேன்.
அதற்கு அவன், 'இப்பல்லாம் பாலத்து நடுவில தான் போறேன்'-ன்னான்.

அதைக் கூட விடுங்க, வீடு வாடகைக்கு கிடைக்கும், அப்டின்னு பேப்பரில் விளம்பரம் கொடுக்கும் போது அது பாமிலி-க்கா ? இல்ல பேச்சிலருக்கா ? என்று தெளிவாகவும் கொடுக்க மாட்டார்கள். அப்பிடி கொடுத்தால் விளம்பரத்தில் ஒரு வரி அதிகமா போயிடுமாம். அதுக்கு காசு நீங்களோ கொடுப்பீங்க.
சமீபத்தில், ஒரு நாளிதழில் வீடு வாடகைக்கு விளம்பரம் பார்த்து, அதில் இருக்கும் போன் நம்பர்-க்கு போன் பண்ணினால், மறு முனையில் ஒரு பெண் மதுரமான குரலில் பேசினாள்.பேச்சிலர் என்பதால், 'மதுரம்' என்று நாம் குறிப்பிட முடிகின்றது. இதுவே திருமணமானவர் ஆக இருந்திருந்து, இந்த மதுரம், சதுரம் அப்டின்னு எல்லாம் சொன்னா அவ்ளோதான், அப்புறம் வீட்டில் வெளக்கமாறுதான் அபிநயம் பிடிக்கும்.
அந்த பெண், அவள் வீட்டில் உள்ள வசதிகளையும் வாடகையையும் கூறினாள்.
பின், ஊர் பேர் கேட்டு தெரிந்து கொண்டு, ஏதோ சந்தேகம் வந்தவளாய் 'நீங்க பேச்சிலரா ?' என்று கேட்டாள்.
நான் 'ஆமாங்க'.
அவள், 'பேச்சிலருக்கு வீடு இல்லைங்க, ஒன்லி பாமிலி'
நான் கேட்டேன், 'நீங்க பேச்சிலரா?'
அவள், 'ஆமாம்'
நான், 'அப்புறம் என்னங்க பிரச்சினை?', என்றேன்.
மறுமுனையில் டெலிபோன் 'டொக்' என வைக்கப்பட்டு விட்டது.
அந்த பெண் என்ன நினைத்து கொண்டாளோ நமக்கு தெரியாது.

கூடிய சீக்கிரம் ஒரு நல்ல பாமிலி மேனாக பார்த்து, அவள் பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைக்க, எல்லாம் வல்ல எல்லா இறைவனியும் வேண்டுகின்றோம் !!!!

ஹரீஷ்

கள்ளமில்லா குழந்தைகள் !!!அவர்கள் எப்போதும், ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதில் என்றுமே விருப்பம் கொள்வது இல்லை; அவர்களுக்கு எதாவது புதுசு புதுசாக செய்யணும். அரைச்ச மாவையே அரைச்சா, 'நீ சுத்த போர்' அப்டின்னு பளிச்சுன்னு சொல்லிட்டு போய்டுவாங்க.

அதிலும் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்களுக்கு எதையும் கிரகிக்கும் சக்தி அதிகம். உதாரணத்திற்கு, தாயானவள் தந்தையை காட்டி, 'அப்பா பாரு' என்றவுடன், குழந்தை உடனே கிரகித்து கொள்ளும். என்ன கொடுமை என்றால், இப்போது எல்லாம் உறவுகளை தொலைக்காட்சியில் தெரிந்து கொள்கின்றார்கள் 'மனைவி', 'சித்தி' எனவாக சீரியலில்.
தாயும் தந்தையும் வேலைக்கு போவோராக இருந்தால் கேள்வியே வேண்டாம். ஒரு வீடியோ கேம் பார்ட்னெர் கிடைத்து விடும. பணம் புரட்டுவதை காரணமாய் கொண்டு குழந்தையின் குணத்தில் கவனம் சிதறாமல் பார்த்து கொள்ளுவது பெற்றோரின் கடமை.

அவர்கள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு என்ன சொல்லுவது என்று சில நேரங்களில் தெரியாது. அதற்கு நாம் தான் தகுந்த வயதிற்கு ஏற்ற விளக்கங்கள் கொடுக்க வேண்டும்.மிக மிக சிறு வயது சிறுவன் கேட்கின்றான், 'அப்பா குட்டி பாப்பா நம்ம வீட்டுக்கு எப்படிப்பா வந்தா?'
அப்பா, 'நம்ம குட்டி பாப்பா ரொம்ப குட்டியோண்டா இருக்கால்ல?'
சிறுவன், 'ம்... ஆமாம் ....'.
'அவளால நடக்க முடியுமா ?'
'முடியாது .......'.
'அதனால அம்மாவும் நானும் தூக்கிகிட்டு இந்த வீட்டு வாசப்படி வழியா வந்தோம்' அப்டின்னார்.
'ம்ம் சரிப்பா .. குட்டி பாப்பா அழகா இருக்கா .. நான் கிட்ட போனா சிரிக்கிறா...'.
'குட்டி பாப்பாவும் cute தான்... நீயும் cute தான்'.
சிறுவன், 'ஹைய்யா ...... !!'.

சற்றே வளர்ந்த சிறுவனாக இருந்தால், 'அம்மா தங்கச்சி எப்டிம்மா வந்தா?'
அம்மா, 'நீ முன்னாடி சின்ன பையனா இருந்தியா?'
சிறுவன், 'ஆமாம்'.
'இப்போ நீ வளர்ந்து கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டல்ல?'
'ம்ம் அப்டியா நான் வளர்ந்துடனா .......?'
'ம்ம்ம்ம் ஆமாம்டா கண்ணா, முன்னாடி நீனும் தங்கச்சி மாதிரி குட்டியோண்டா இருந்த, இப்போ பாரு நீயே பாத்ரூம் போற, டிரஸ் போட்டுக்கற, சாப்ட்ற'.
 'ம்ம் ஆமாம்'.
'நானும் அப்பாவும் உன்ன பார்த்து கிட்டோம். இப்ப நீ, நான், அப்பா எல்லோரும் சேர்ந்து குட்டி பாப்பாவ பார்த்துக்கலாம்னு, உனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வந்திருக்கா'.
'ம் அப்டியா சேரி நானும் தங்கச்சி பாப்பாவை பார்த்துகிறேன். பாப்பாவுக்கு முத்தாய் தரலாமா?'

இப்படி எல்லாம் சொன்னவுடன் ஏற்று கொள்ளும் குழந்தையாக இருக்க வேண்டும் என்றால் குழந்தைகளை, ஆம்படையாள் டெலிவரியின் போது ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூடாது. இல்லை என்றால், குழந்தை அதன் வயதிற்கு கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்கும். இதெல்லாம் தேவையா.இதற்கு மேலும் அவர்கள் தெரிந்து கொள்ள தான் வேண்டும் என்று நாம் ஒற்றை காலில் நின்றால், வேண்டுமானால் +2 ஸ்டேட் போர்டு பையாலாஜி புத்தகம் வாங்கி கொடுக்கலாம். சற்றே பண விருத்தி இருந்தால், X CBSE சயின்ஸ் புத்தகம் வாங்கி கொடுக்கலாம்.'என்ன கொடுமை சார் இது?' ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா சார்?

குழந்தைகளுக்கு வார்த்தை மேல் மிகுந்த பிரியம். சிறிது சிறுதாக எழுத்துக்களில் இருந்து அவர்கள் வார்த்தை தெரிந்து கொள்ளும் லாவகமே தனி தான்.சில நேரங்களில் ஒரு வார்த்தை தெரியும். அதில் இருந்து வரும் மறு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. ஆனாலும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அதற்காக அவர்கள் பிரயத்தனம் படுவார்கள்.

ஒரு தாய், சிறு குழந்தையை கையில் வைத்து கொண்டு, அச்சிறு குழந்தையின் அண்ணனிடம்,'தம்பி போய் ரூம்ல இருந்து பீரோவ்ல tissue பேப்பர் எடுத்து வா'. அச்சிறுவன் செல்கின்றான் யோசித்து கொண்டே. ரூம் தெரியும், பீரோல் தெரியும், பேப்பர் தெரியும் அது என்ன tissue.அவனுக்கு பிடி படவில்லை. முயற்சியையும் விடவில்லை. இருந்தாலும் ரூமிற்கு வந்து பீரோவில் உள்ள சில செவ்வக வடிவ காகிதங்களை அள்ளி கொண்டு வந்து தாயாரிடம் கொடுக்கிறான்.

அவன் தாயாருக்கு அவனை திட்டுவதா ? சிரிப்பதா ?  என்று தெரிய வில்லை.'அப்பனுக்கு புள்ள தப்பாம தான் பொறந்திருக்க, அப்பா காச கரியாக்குராறு, புள்ள கழுவ யூஸ் பண்ண போறீங்களோ ' என குழந்தையை வாஞ்சையுடன் இழுத்து கொஞ்சி, சிறுவன் கையில் உள்ள 'பணத்தை' வாங்கி மடித்து பத்திரமாக வைத்து கொள்கின்றாள்.காந்தி, புளங்காகிதம் அடைந்து குழந்தை போல் சிரிக்கின்றார், மடிந்த நோட்டில்.

'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாடு கேட்குதா' என்ற பிடித்த இளையராஜா பாடலாகட்டும், அல்லது 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற இனிய பழைய பாடல் ஆகட்டும். இவை எல்லாம் நமக்கு பிடித்து இருந்தாலும் ஒரு குழந்தை பிறந்தவுடன் தரவரிசை பட்டியலில் பின்னுக்கு தள்ள படும், குழந்தை குழருவதை கேட்டால்.ஏனெனில்,
     குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் 
     மழலை சொல் கேளா தவர்

அவர்களுக்கு இருக்கும் இன்னொரு வரப் பிரசாதம், பொய் சொல்லத் தெரியாது. பொய் சொல்வதை பெரியவர்களிடம் இருந்து தான் தெரிந்து தெரிந்து கொள்கின்றார்கள். அதையும் சில நேரங்களில் எப்படி சொல்வது என்று தெரியாது.இப்படித்தான், ஒரு தாயும் தந்தையும் வெளியே புறப்பட கிளம்பி கொண்டு இருந்தார்கள்.ஹாலில் செல்போன் ரிங்குகிறது.அந்த சிறுவன் செல்போனை எடுத்து,
'அலோ' என்றான்.......................................................
சிறிது இடைவெளிக்கு பிறகு.'அப்பா ஷாப்பிங் கெளம்பிட்டு இருக்காங்க' என்றான். ......................................................
மீண்டும் சிறிது இடைவெளிக்கு பிறகு.'அப்பா வந்த வுடன் கால் பண்ண சொல்றேன் அங்கிள்',.......................சிறிது இடைவெளி.
'தெர்யாது அங்கிள்' .........இடைவெளி
'ம் சேரி அங்கிள்'.
சிறிது நேரம் கழித்து அப்பா வருகின்றார், 'யாருடா போன்-ல'?
சிறுவன், 'உங்க ஆபீஸ்ல இருந்து ஒரு அங்கிள் பண்ணினாங்க.'
அப்பா நினைத்து கொள்கின்றார், என்னது ஆபிசா ? .... 'என்னடா கேட்டாங்க?'
பையன், 'நீங்க எங்கன்னு கேட்டாங்க'.
அப்பா 'நீ என்ன சொன்ன?'.
பையன், 'நீங்க ஷாப்பிங் கிளம்பிட்டு இருக்கீங்க அப்டினேன்.'
அப்பாவுக்கு பதற்றம் அதிகம் ஆகி விட்டது, 'அப்புறம் என்ன கேட்டாங்க?'.
பையன் 'நாளைக்கு ஆபிஸ் வருவீங்களான்னு கேட்டாங்க, நான் தெரியாது அங்கிள் அப்டினுட்டேன்'.
அப்பா நினைத்து கொள்கின்றார், ஹ்ம்ம். கெட்டது குடி. Planned Sick Leave-kku ஆப்பா....
சிறுவனை திட்டவும் முடியாமல் குட்டவும் முடியாமல் நிற்கின்றார்.

குழந்தைகள் முன் தான் நாம் மிகவும் மரியாதையுடனும் பய பக்தியோடு நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் முன், கணவன் மனைவி பரஸ்பரம் அன்பு காட்டலாம். ஆனாலும் எக்காரணம் கொண்டும் காதல் காட்டுவது தகாது. சொல்ல போனால், பெரியவர் முன்னும் அப்படி நடந்து கொள்ள கூடாது, அது பெரியவர்களை அவமதிப்பது போல். இல்லை என்றால், பின்னொரு நாளில், குழந்தை தொலைகாட்சி பார்க்கையில், 'அம்மாவும் அப்பாவும் இப்படித்தான்' என்று மானத்தை வாங்கி விட கூடாதல்லவா.

பின் குழந்தைகளுக்கு உண்மையையை மறைக்க சொல்லி தர வேண்டி இருக்கும். இதுவும் தேவை தானா.இப்படித்தான், ஒரு வீட்டில்,காலிங் பெல் அடிக்கிறது. அந்த தந்தை வியூ பைண்டேர் வழியாக பார்க்கின்றார்.'ஐயையோ, அருவ பேச்சு ஆசாமி வந்துட்டாரே' என திரும்பி, 'நான் ரூமுக்குள்ள போய்டறேன். அவர்கிட்ட நான் வெளில போயிருக்கேன்னு சொல்லி அனுப்புடி. அவர் போன வுடன் வந்து என்ன கூப்பிடு.' என்று கூறி கொண்டே உள்ளே செல்கின்றார்.'சரிங்க நீங்க போங்க'கதவு திறக்க படுகின்றது,
'சார் இருக்காங்களா ?'.
'இல்லைங்களே வெளில போயிருக்காங்க'.
'அப்டியா, சார் வந்தா வந்துட்டு போனதா சொல்லுங்க. ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குங்களா ?'
அந்த அம்மணி உள்ளே செல்கின்றார், தண்ணீர் கொண்டு வர.இதை எல்லாம் கவனித்து கொண்டு அங்கே நிற்கும் சிறுவனை பார்த்து, 'ஹாய் குட்டி பையா. ஹொவ் ஆர் யு?'
'பைன் அங்கிள்'
'அப்பா எப்பப்பா வருவாங்க?'
குழந்தை ஒன்னும் தெரியாம 'அம்மா கூப்பிடவுடன் அங்கிள்'.
இதை கேட்டவுடன் புரிந்து கொண்டவராய் இருந்தால் அதற்கு மேல் ஒன்றும் கேட்க மாட்டார்.இல்லை மேலும் பேசி புண் ஆக்கி கொள்வது என்று தீர்மானமாய் இருந்து, அவர் மேலும், 'அம்மா எப்போ கூப்டுவாங்க?' என்று கேட்டால்,
'நீங்க போனவுடன் அங்கிள்' !!
வாழ்க கள்ளமில்லா குழந்தைகள் !!!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்