சால்வையால் சோர்ந்தவன்

லோ! என்ன அப்டி பாக்கறீங்க? நாந்தான் அரசியல்வாதியோட மனசாட்சி பேசறேன். எசமான் தூங்கிட்டு இருக்கார்.

சால்வை போர்த்திக்கொண்டும் போர்த்தப்பட்டுக் கொண்டும் இருக்கும் சாட்சாத் சால்வை அரசியல்வாதியேதான் பேசறேன். அரசியல்வாதின்னா அரசியல்வாதியில்ல; அவரோட மனசாட்சி தான் பேசறேன்.

எங்க போனாலும், எந்த மேடைக்குப் போனாலும், எந்த நிகழ்சிக்குப் போனாலும், கூடவே சால்வை தூக்கிக்கிட்டு போக வேண்டியிருக்கு; இல்லைன்னா வரும்போது சால்வையோட வர வேண்டியிருக்கு.

ஏதாவது நல்ல சில்க்ஸ் கடை இருந்தா சொல்லுங்கள். அதுவும், குறைவான விலையில் சால்வை வாங்கவும்; விழாவில் பெற்ற சால்வையை, நிறைவான விலையில் விற்கவும்.

என்னது? அந்த சில்க்ஸ் எம்போரியத்தையே நாந்தான் தொறந்து வெக்கனுமா? அடடே! எனக்கு இந்த புகழ் எல்லாம் பிடிக்காது; அத மொதல்லயே சொல்லிடுங்க. ஏதோ நீங்க வற்புறுத்தி கேக்கறதால ஒத்துக்கறேன். அப்புறம் சிம்பிளா கேபிள் டி.வி லைவ் டெலிகாஸ்ட் பண்ணினால் போதும். எனக்கு இந்த விளம்பரம் எல்லாம் அலர்ஜி, அதனாலதான் பாருங்க.

நீங்க நெனப்பீங்க, இவரு வந்து கடையை தொறந்துவெச்சா பணம் தரனுமா?-ன்னு. அதப்பத்தி நீங்க கவலையே படாதீங்க; இந்த மாதிரி, சீப்பா பணம் வாங்குற புத்தியெல்லாம் எனக்கில்ல. வேணுமுன்னா கர்ச்சீப்ல நாலு கொடுங்க; அதுவும் உங்க மன திருப்திக்காகத்தான். ஆங்....... இத சொல்ல மறந்துட்டேனே! கர்ச்சீப்-ன உடனே ஒரு ஜானுக்கு-ஒரு ஜான் அளவு சைஸ்னு சீப்பா எட போட்றாதீங்க; ஒரு அடிக்கு-ஒரு அடி சைஸ் கர்சீப். பாருங்க, மக்கள் பணிக்காக ஓயாமல் வேர்வை சிந்தி உழைக்கிறோம்ல; அதான்! அதுலயும் தங்க ஜரிகை வெச்ச கர்ச்சீப்னா ரொம்ப ஷேமம்! இதுல ஒரு அடியா-ரெண்டு அடியாங்குறதா முக்கியம்? நீங்க நல்ல படியா ஜவுளி கடை நடத்தனும்; அதானே முக்கியம்.

பொங்கல் வேற வருதேன்னு, என்னைய உங்கள் ஜவுளிக்கடையிலேயே இலவசமா துணி எடுத்துக்க சொல்லி வற்புறுத்தாதீங்க. ஏன்னா இலவசங்களை கடுமையாக எதிர்ப்பவன் நான். அப்புறம் என் டிரைவர் பொங்கல் சமயத்தில் உங்களைப் பார்க்க வருவார். மேற்படி விஷயங்களை டிரைவர்கிட்ட பேசிக்கங்க. டிரைவர் குடும்பமும் சின்னதுதான்; அதுனால உங்களுக்கும் செலவு ஒன்னும் அதிகம் இருக்காது. மேற்படி, கவணிக்க வேண்டியதை கவனிச்சு விட்றுங்க.

இந்த சால்வை போத்தறவங்களும் சரியான அளவான சால்வை போத்தறாங்களான்னா அதுவும் இல்லை. பல நேரத்துல அவங்க போத்தற சால்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு, அவங்க போத்தற சால்வை பெரிசுதான்னு காட்ட நான் படுற கஷ்டம் எனக்குல்ல தெரியும்.இந்த லட்சனத்தில் போட்டோ வேற;என்னமோ நான் மயில் மாதிரியும், அவரு பேகன் மாதிரியும்!

சரிங்க, சால்வை போத்தறதுன்னு முடிவு பன்னிட்டீங்க; அதை மடிச்சு வச்சபடியே அப்படியே கொடுக்க வேண்டியது தானே! அதையும் செய்ய மாட்டீங்க. மடிச்சு வெச்ச சால்வையை பக்கத்தில கொண்டு வந்து ஆசை காட்டிட்டு, சர்ருன்னு மயில் தோகை விரிக்கிற கணக்கா விரிச்சு போத்தி விட்டுடுறீங்க. இந்த மயில் தோகையை மறுபடியும் மடிச்சு, கவருக்குள்ளேயே திரும்ப வெச்சு, புது சால்வை மாதிரியே ஜவுளிக்கடையில விக்க நாயா பேயா அலையறது நாந்தானே. அந்த வலி, காசு கொடுத்து சால்வை வாங்கிய உமக்கு எங்கப் புரிய போது?

இது கூட சரிங்க, மயில் தோகையை கூட மண்ணிச்சிரலாம். ஆனாலும், பக்கத்தில வந்திட்டு, இந்த விரிச்ச சால்வையை கையில வெச்சுகிட்டு, உன் பேர மைக்ல சொல்ற வரைக்கும் காத்திருந்து, உன் பேர சொல்லி 'இன்னார் இன்னார் இப்போது இன்னாருக்கு பொன்னாடை அணிவிப்பார்' என்று சொல்லியவுடந்தான், கடமை உணர்ச்சியோட சால்வை போடுற உன்னை என்னய்யா செய்யறது. ஆமா, இந்த பொன்னாடை-யில இருக்க 'பொன்'-னுக்கு அர்த்தம் தெரியுமாய்யா உனக்கெல்லாம்?

அது என்னய்யா கலர் இது? உனக்கு பிடிச்ச கலரா வாங்கியாந்தியா? உனக்கு வேலையாகனும்னா, எனக்கு பிடிச்ச கலர்தான நீ வாங்கியாரனும்! எனக்கு பிடிச்ச கலரா வாங்கியாந்தாலாச்சும் நான் யூஸ் பன்னுவேன். உனக்கு புடிச்ச கலரா வாங்கியாந்தா ஜவுளி கடைக்குத்தான் போகும்.

இதுல சில அதிகப்பிரசங்கிகள் வேறு. அவங்கள்ளாம் செய்தித்தாள் படிக்கிறாங்களா? இல்ல வேனுமுன்னே அவமானப் படுத்தறாங்களா?-ன்னு தெரியல. பின்ன என்னங்க? போன கட்சியில இருந்து இந்த கட்சிக்கு வந்தப்புறமும், போன கட்சி கலர் போட்ட சால்வையோ துண்டோ போட்டா, இருக்கிற கட்சியோட தலைமை என்ன நினைக்கும்? தலைமை என்ன நினைக்குமோ ஏது நினைக்குமோ-ன்னு, தலைமைக்கு பிடித்த கலரில் சால்வை வாங்கிட்டு போய் பொன்னாடையைப் போர்த்தி; ஒரு போட்டோவாவது எடுத்துக் கொண்டு, சால்வையை மடித்தும் கொடுத்து விட்டு வந்தால்தான், உள்கட்சி அரசியலில் இருந்து தப்பிக்க முடியும்.

அரசியல்ல இந்த சால்வையெல்லாம் சகஜமப்பா! பொது வாழ்க்கைன்னு வந்துட்டா பலப் பிரச்சினைகளையும் போர்வையாவே போத்திகிட்டு படுக்குறவங்க நாங்க!

ஐயோ! எசமான் எந்திரிக்றாருன்னு நினைக்கிறேன்! நான் அவருக்குள்ள போறேன். அவரு என்ன தேடமாட்டாருதான். ஆனா எனக்குன்னு ஒரு மனசாட்சி இருக்குல்ல!

பொன்னியின் செல்வன்

பாரதி சாடும் சாதி


க்கட்டுரையின் நாயகன்; கவிநாயகன், மகாகவி பாரதி. பாரதி பிறந்து 128 வருடம் உருண்டோடிவிட்டது. இன்றும் அவன் புகழ் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் வார்த்தைகளின் வீரியம், பல தலைமுறைகள் தாண்டியும் பீடு நடைப் போடுகிறது.

கால சக்கரத்தில், முன்னோக்கி ஒராயிரம் ஆண்டுகள் உருண்டோடினாலும்; அன்றும், சேது சமுத்திரத்தின் வழி செல்லும் மாலுமிகள் மிக விந்தையாய்த்தான் பேசுவார்கள், "அன்று, ஓர் அமரகவி கண்ட கனவு நனவானதில், நமக்குப் பிரயானம் எவ்வளவு எளிதாகிறதுப் பார்" என்று.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று உரைத்தான்; இதை சொல்லும் முன்னரே அவன் பல மொழிகள் கற்று தேர்ந்தவன். ஆம்! பாரதி பன்மொழி வித்தகன். அப்படிப் பட்ட பாரதியின் தமிழ் கவிதையைக் கேட்கும் பொழுது 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே'!

பாரதி ஓர் தமிழ் அகராதி தொகுத்திருக்கிறார். பாரதியின் சொல்லாட்சி பிரமிக்க வைக்கும். அவர் தமிழிலா எழுதினார்? இல்லை! தமிழ், பாரதியைக் கொண்டு தன்னைத்தானே எழுதிக் கொண்டது!

மூடநம்பிக்கைகளை மூட்டைக்கட்டவும், அச்சத்தை அகற்றவும் பல சிந்தனை சொற்கள் செதுக்கியவன். பெண்களின் சுதந்திரத்தை, பெண்கள் பேசும் முன்னரே இந்த பாட்டுடைத் தலைவன் பாடிவிட்டான்.

ஒருவர் நல்ல சொற்களைக் கூறினால், அதிலோர் நல்ல அதிர்வலைகள் பிறக்கும். அதே நல்ல சொற்களைக் கடைப்பிடித்தால் அதன் அதிர்வலைகள் அடர்த்தி ஆகும். இப்படி இருக்கையில், நல்ல சொற்களைச் சொன்னவரே, சொன்னபடி நடந்தும் காட்டினால் அந்த அதிர்வலைகளின் அடர்த்தி விகிதம் எப்படி இருக்கும்! அவன்தான் பாரதி! யப்பப்பா... பாரதி ஓர் யுகப் புரட்சி!

நாம், ஒரு தவறும் செய்யாதபோது; ஆனாலும் நாம் தூற்றப்பட்டும் சிறுமை படுத்தப் பட்டும், குற்றம் சாட்டப்படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படிபட்ட சூழ்நிலையில், பாரதியின் இந்தக் வரிகளை வாசித்துப் பார்த்தால் எவ்வளவு உத்வேகம் வருகிறது!


தேடிச் சோறு நிதம் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக்கு இரை எனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

சாதிகளை சாடியவன் இந்த முண்டாசுக்கவி; சாதிப் பிரிவினைப் பேசுவோரைப் பார்த்து, 'ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ' என்றான். சாதி மதங்களை பார்க்கக் கூடாது எனும் விதமாய்,'ஜாதி மதங்களைப் பாரோம்' என்றான். ஒரு படி மேலே போய், மனிதர்களில் ஏன் வீண் பிரிவினை; காகமும் குருவியும் கூட நம் இனமே எனும் தெய்வீக எண்ணமாய், 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றும் பாடினான். சாதியை, குழந்தையின் உள்ளத்தில் இருந்து முதலில் களைய வேண்டும் என்று, 'சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;' என்றும் பாடினான்.

பாரதிக்கு கனவுகள் அதிகம். அவன் கண்ட கனவுகள் யாவும் நிறைவேறக்கூடியவையும் கூட. பாரதியின் பல கனவுகள் நிறைவேறியும் இருக்கின்றன. ஒரு பாடலில், 'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்' என்று கனவுக் கண்டான்; பின்னொரு நாளில் எவரெஸ்ட் உச்சியை இந்தியர் தொட்டனர். 'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்று கனவு கண்டான்; பின்னொரு நாளில் வானொலி வந்தது. 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்று கனவு கண்டான்; சமீபத்தில் தான் நிலவில் நீர் ஆதாரம் இருப்பதை நமது சந்திரயான் வின்கலம் உறுதி செய்தது. 'கடல் மீனை அளப்போம்' என்று கனவு கண்டான்; இன்று இந்திய செயற்கோளின் மூலமாக கடலில் உள்ள மீன் ஆதாரம் தெரிந்து கொள்ள முடியும். 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்று கனவு கண்டான்; இன்று அந்த பணியும் நடைபெறுகிறது. அதே பாடலில் அவன் கண்ட முக்கியமான கனவை,  கடைசியாய் குறிப்பிடுகிறான், 'சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்' என்றான்; பாரதியின் இந்த கனவு ஒர் நாள் நனவாகுமா? நனவாகும்!பொன்னியின் செல்வன்

ஏமாற்றம் மானிடத் தத்துவம்


மாறுகிறவர் இருப்பதால் ஏமாற்றுபவன் இருக்கிறானா, அல்லது ஏமாற்றுகிறவன் இருப்பதால் ஏமாறுகிறவர் இருக்கிறாரா?

ஏமாறுவோர் இருப்பதால்தான் ஏமாற்றுவோர் இருக்கிறார். ஏமாற்றம் எனும் மரத்திற்கு, வேர் - ஏமாறுவோர்; கிளையும், இலையும், கனியும் – ஏமாற்றுவோர். வேர் நீரை உரிஞ்சுகிறது; பலனோ இலைக்கும் கனிக்கும்.

ஏமாற்றம் எனும் செயலுக்கு, செய்பவர் மற்றும் செய்யப்படுபவர் என ‘இருவர்’ வேண்டும். ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை. ‘நீயின்றி நான் இல்லை’ என்பது போல்.[ஏ.. பெண் சிங்கமே! நீயின்றி நானில்லை என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது!]
ஏமாறுவது நலமா? எனில், ஆம்; நலம்தான்! அதில் ஒரு நன்மை இருக்கிறது. அதாவது, மீண்டும் அதே மாதிரி ஏமாறாமல் இருக்க பாடம் கற்றுத்தருகிறது. ஒரு முறை ஏமாந்த பின், மீண்டும் மீண்டும் அதே மாதிரியே ஏமாறுவோர் நிலைதான் பரிதாபம். அதாவது வாக்காளர்கள் மாதிரி! ஏமாறும் வாக்காளர் இருக்கும் வரையில் ஏமாற்றும் போலி அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது. ஏமாறுவோரும், எல்லா நேரத்திலும் ஏமாற மாட்டார்கள்.

சில நேரங்களில், வேண்டும் என்றே கூட ஏமாறலாம். அது எதற்கு உபயோகப்படும் என்றால், எதிரில் இருப்பவரின் குண நலன்களை எடுத்துக் காட்டுவதற்கு உதவும்.

சின்ன மீனைப் பிடித்தால்தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும். அதைப் போல், சின்ன முள்ளில் மாட்டி வெளிவந்தால்தான், பெரிய முள்ளில் மாட்டாமல் தப்பிக்கலாம். அதற்காக பட்டறிவை வளர்க்கிறேன் பேர்வழி என்று, எப்போதும் பெரிய முள்ளிலேயே மாட்டினால் அது அவரவர் புத்திசாலித்தனத்தை பொருத்தது.

மாற்றம் என்பது மானிடத் தத்துவம். ஏமாற்றம் என்பதோ மனிதன் உபயோகிக்கும் மலிவான யுக்தி. இது என்னவோ மனிதன் மட்டும் உபயோகிக்கும் யுக்தி அன்று. மிருகங்களும் இந்த யுக்தியைப் புரிகின்றன. என்ன வித்தியாசம்? எனில், மிருகங்கள் தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சிக்கு அதைப் புரிகின்றன. மிருகங்கள் புரியும் ஏமாற்று செயல், மற்ற மிருக இனத்தின் மேல்தான் இருக்கும். மனிதனோ, தான் வசதியாய் வசிப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறான்; அதுவுன் தன் சக மனித இனத்தின் மேலேயே! மனிதனுக்குதான் ஆறாம் அறிவு இருக்கிறதே! அது, வேறு எதற்கு இருக்கிறதாம்? இதற்குத்தான்!

ஒருவர் வந்து, கைமாத்துக்காக 100 ரூபாய் பணம் வாங்கி செல்கிறார். ஒரே வாரத்தில் பணத்தைத் திருப்பி கொடுத்து விடுவதாகவும் சொல்கிறார். ந்…நம்..பி கொடுப்பதில் தவறில்லை. ஒரு வாரம் என்பது நமக்கோ 52 முறை வந்து சென்றிருக்கும். ஆனால், பணம் வாங்கியவருக்கோ, ஒரு வாரம் இன்றும் முடிந்திருக்காது; என்றும் முடிந்திடாது.

பிறிதொரு நாளில்,  அதே நபர் வந்து, “சாரே! ஒரு பிரில்லியன்ட் ஐடியாகீது சாரே. அத்தாவது நீ ஒரு பத்தாயிரம் மட்டும் இன்வெஸ்ட் பன்னு. ஒரே வருஷத்துல அத்து இருவதாயிரம் ஆய்டும் சாரே”, என்றால் அப்போதுதான் பட்டறிவு தடுக்கும். ‘ஒரு வாரத்தில்’ என்பதே ஒரு வருடம் தாண்டி உருண்டோடையில்; ‘ஒரே வருஷத்துல’ என்பது யுகப் புரட்சியோ!

வந்த பாதையிலோ 100 ரூபாய் போயிற்று; வரும் பாதையிலோ 10,000 ரூபாய் நிற்கிறது. அப்போதுதான், மாற்றுப் பாதை தேர்ந்தெடுக்க பட்டறிவு தடுக்கும். இந்த மாற்றத்திற்கு காரணம்? ஏமாற்றம்! இந்த மாற்று பாதைக்கு காரணமான ஏமாற்றமும் மானிடத் தத்துவம் தானே!

ஹரீஷ்

வீடும் விவாதமும்


ல்லம் என்பது இனிய இதயங்களால் ஆனது. அப்படிப்பட்ட இல்லத்திலும், சில நேரங்களில் சந்து பொந்துகளில் புகுந்து சச்சரவுகள் வரும். அப்படிப்பட்ட இனிய இல்லம் தனில் விவாதம் இப்படியும் இருக்கும்! அதாவது, சச்சரவும் சக்கரையாய்! விவாதமும் வெல்லமாய்!

இதோ கற்பனைத் திரை விரிகிறது.

'சோ கால்ட்' வீட்டுத் தலைவன் (எ) கணவன் மற்றும் இல்லாள் இருவருக்கும் இடையே நடந்த சந்தோஷ சண்டையை, கேட்கும் நேரம் வரை மட்டும் கேட்டு, இங்கே கொடுக்கப் பட்டுள்ளது!

வீட்டுக்காரம்மா பயங்கர கோவமா இருக்காங்க,

"நான், புள்ளய கூட்டிட்டுஎன் அம்மா வீட்டுக்கே போறேன்! வீட்டு வேலை எல்லாம்நீங்களே செஞ்சுக்க வேண்டியதுதான் இனிமே; ஆமாம்!"

வீட்டுக்காரய்யா சிரித்துகொண்டு இருக்கார்.
"சரி போறது தான் போற, சீக்கிரமே வந்திடாதேடி! கொஞ்ச நாளாச்சும் நல்ல சாப்பாடு சாப்பிடறேன்"


மணைவி சற்றே சத்தமாய், "ஆமா...! நான் போனா கேக்க நாதி ஏது இங்க? நீங்க உங்க ரூமுக்கு போங்க! நான் என் ரூமுக்கு போறேன்!"மனைவி சத்தம் போடுவதைப் பார்த்து கணவன்,
"வேணாம்டி! நிறுத்திக்குவோம்! வீணா சத்தம் போடாதேடி!"


மனைவி ஏட்டிக்கு போட்டியாய், "ஏன்? நீங்க தான் வாய தொறந்து ஏதாச்சும்பேசறது! என் ரூமுக்குள்ள வராதீங்கன்னு சொன்னா வராதீங்க! அவ்ளோதான்! கல்யாணம் ஆனவொன்ன என்னை சுத்தி சுத்தி வந்தீங்க! இப்ப எரிஞ்சு எரிஞ்சு விழறீங்க"
இடையே, வீட்டுத் தலைவனின் தாயார், தன் பங்குக்கு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிறார்.
"ஏம்மா! வாழ்கைன்னா, ஏத்த இறக்கம் இருக்கதான் செய்யும்! வாழ்கைன்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அனுசரிச்சுதான் போகனும்!"


விடுவாளா இல்லாள்! அவள் பங்குக்கு அப்போதே ஏதாவது சொல்லி ஆக வேண்டுமே! எவ்வளவு சீரியல் பார்க்கிறாள்!
"உங்க அம்மாவெல்லாம் இதில தலையிட வேண்டாம்ன்னு சொல்லிடுங்க, ஆமாம்! அப்புறம் நல்லா இருக்காது! ஆமாம் சொல்லிட்டேன்!"


இந்த ஐ.நா தலையீட்டை, வீட்டுத் தலைவன் நிறுத்தவில்லை என்பதால்; இல்லாள் அடுப்படி புகுந்து பத்ரகாளி பாத்திரம் ஏந்தி, கொஞ்சம் கொஞ்சமாய், டமார் டமார் என்று வீட்டு பாத்திரங்களை உருட்டுகிறாள்.

மேலும், அடுக்களையில் இருந்து பின்வருமாறு அசரிரீ கேட்கிறது.

"இன்னிக்கு சமையல் கிடையாது, ஹோட்டலில் தான் எல்லோரும் சாப்பிடனும்! நாந்தான் தண்டசோறு வடிச்சு கொட்டனும்னு தலையெழுத்தா?"


கணவன், முதல் முறையாய் ஆத்திரம் கொண்டவனாய்,
"என்னடி ஓவரா பேசற? ஒவரா பேசின, கை கால ஒடிச்சிருவேன்!"


.................................................
.................................................
.................................................
.................................................
.................................................


கடைசியாய், வீட்டுத் தலைவன் தன் 'சோ கால்ட்' பட்டத்தை தக்க வைத்து கொள்ளும் விதமாய்,  "சரி.. சரி.. வழக்கம் போல நானே சரண்டர் ஆய்டறேன்!!"


.................................................
.................................................
.................................................
.................................................
.................................................


 "என்னடி! இன்னும் மொனகிட்டு இருக்க!... மழை விட்டும் இன்னும் தூவானம் விடலியா !!"'கேட்கும் நேரம் வரை' இனிதே முடிந்தது! திரை மூடுகிறது!
[ ஏய்! நீ டிரைவிங் கத்துக்க, ஒரு ஃபேமிலிய  ஏன் டேமேஜ் பண்ற! ]

பிச்சை ஒழியுமா?


லகமே ஒரு நாடக மேடை! இதில் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில், சதா சர்வ காலமும் கையில் பாத்திரம் ஏந்தும் கதாபாத்திரம் தான், பிச்சைக்காரர்கள் எனும் கதாபாத்திரம்; மக்கள் போடும் எந்த பதார்த்ததையும், பாத்திரத்தில் ஏந்தி பிழைப்பவர் தான், இந்த பிச்சைக்காரர்கள். பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியவில்லை என்பது இன்றைய எதார்த்தம் ஆகி விட்டது. ஆனாலும் அவர்களை பழிக்கத்தான் செய்கிறோம்.


இன்றைய போலி அரசியல்வாதிகள் பெறும் அன்பளிப்பை(!) புறந்தள்ளுவோம். அந்த அன்பளிப்பும்(!) பிச்சை பெறும் வகையை சேர்ந்தது!


?ui=2&view=att&th=124ec6bb8a88b736&attid=0.1&disp=attd&realattid=ii_124ec6bb8a88b736&zw[இப்படி, அரசியல்வாதிகளை குறிப்பிடும் போது ‘போலி அரசியல்வாதி’ என்று எழுதிவிடுவது ஒரு சேஃப்டி. பின்னால யாராச்சும் பிரச்சினை பன்னினால், “நாங்கள் போலி அரசியல்வாதியைப் பற்றி அல்லவா கூறினோம்; நீங்கள்…............?” என்று கூறி வாயடைத்துவிடலாம். ]
இராணிய கவிதை ஒன்று இருக்கிறதாம்; அதாவது, ஒரு காதலன் காதலியை பார்த்து, “ஏ… காதலியே! உன் இதயத்தை என்னிடம் கொடு. அதற்கு பரிசாக இந்த சாமர்கண்ட் நகரையே தருகிறேன்!”, என்கிறானாம். என்ன ஆச்சரியம் என்றால், அந்த சாமர்கண்ட் நகரமோ அந்த காதலனுடையது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? அதில் இருக்கும் காதல் ரசம், சாம்பார் இவற்றை விட்டுவிட்டுப் பார்த்தால் தெரிவது என்னவெனில், நம்முடையதாக இல்லாவிட்டாலும் தானம் செய்வதாக எளிதாகக் கூறிவிடலாம்! இப்படித்தான் ஆங்கிலேயர்கள், இந்தியாவை இந்தியர்களிடமே கொடுத்தார்களோ என்னவோ!


பிச்சைக்காரர்கள் வார்த்தையில் வித்தை புரிவர். அவர்களும் போலி அரசியல் வாதியின் வார்த்தை விளையாட்டுகளைப் பல நேரங்களில் புரிவார்கள். பின்னே என்னங்க, பார்க்கிறவரை எல்லாம் “சாமி…” என்கிறார். பத்து பைசா என்றால் – “தரும பிரபு!” ஒரு ரூபாய் என்றால் – “தரும மஹா பிரபு!”


பிச்சைப் எடுப்பது கேவலம் எனில் பிச்சைப் போடுவது அதை விட கேவலம். பிச்சையையும் உதவியையும் ஒன்று எனக் கருதக் கூடாது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கொள்கை இதில் ஒரு நல்ல கொள்கை. அதாவது உதவி என்பது, உணவுக்கும், மருத்துவத்திற்கும், கல்விக்கும் ஆக இருக்க வேண்டும் என்பது தான் அது. இதை வரிசை படுத்தி இருப்பதும் சிறப்பாக இருக்கிறது.


பிச்சைக்காரர்களை ஒழிக்க முடியுமா? அதாவது, பிச்சைக்காரர்கள் என்றால் பிச்சைக்காரர்களை அல்ல; அவர்கள் எடுக்கும் பிச்சை எனும் செயலை. கொடுப்பவர் இருப்பதால் தான் பிச்சை எடுப்பவர்களும் இருக்கிறார்கள். பத்து பைசா பிச்சை போட்டு விட்டு, ஐடி ரிடர்ன்ஸ் 80CC-ல் டிடக்ஷன் கிடைக்குமா என்று யோசிப்போர் ‘தரும பிரபு’-வாகவே சில நொடிகள் பூஜிக்கப்படுவதில் குறையொன்றுமில்லை.


பிச்சைப் இடுகிறவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை, ‘நாம் ஒருவரின் சுய மரியாதையை குழி தோன்டிப் புதைக்கிறோம்; ஒருவனை சோம்பேறி ஆக்குகிறோம்; சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறோம்’, என்று. உழைக்காத ஒருவனுக்கு பிச்சைப் போடுவதால், பிச்சைப் பெற்றவரின் போலி வாழ்த்துரையால் புண்ணியம் வருகிறதோ என்னமோ தெரியாது, ஆனால் பிச்சை இட்டதால் பாவம் வந்து சேரும்.


இரண்டு கைகளும், கால்களும், கண்களும் சரியாய் இருப்போருக்கும்; குறிப்பாய், சிறுவனாய் இருப்போருக்கு பிச்சைப் போடுவதை எப்படி ஏற்க முடியும்? கற்கை நன்றே … கற்கை நன்றே …. பிச்சை புகினும் கற்கை நன்றே … என்று கூறப்பட்டுள்ளது. பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் என்று இருக்கையில்; பிச்சை எடுப்பதையே வாழ்க்கையாய் கொண்டுள்ள சிறாரை ஊக்குவிப்பது தவறுதானே?


சில நேரங்களில் பிச்சை கேட்பவர், நமக்கு தெரிந்த; நமக்கு தெரிந்து மறைந்த நபர் போல இருக்கக் கூடும். அந்த சமயங்களில் மட்டும் கை தானாகவே பர்ஸை நோக்கி பொகிறதே! அது ஏனோ தேரியவில்லை! அதை கேள்வி நியாயங்களுக்கு உட்படுத்துவது கடினம் தான்.


பிச்சைக் காரர்களுக்கு குறும்பும் அதிகம். பாருங்கள்! பிச்சைக் காரன் ஒருவன், ஒரு வீட்டில் சோறு வாங்கி கொண்டு விட்டு, “அம்மா…. சோறு ஆக்கின கைக்கு, தங்கத்திலேயே நல்ல வாட்ச் வங்கி போடுங்கம்மா” என்று கூறி சமையல் செய்தவருக்கு (வீட்டுக்காரருக்கு!) பாராட்டு மழை பொழிந்து செல்கிறார்.


“அமெரிக்காகாரனுக்கு ஏதாச்சும் பொறுப்பு இருக்கா? இந்த recession  வந்தாலும் வந்திச்சு. ‘தருமபிரபு’ எல்லாம் ‘கருமிபிரபு’வால்ல ஆயிட்டான். நல்ல வேளை இது வரை சேத்த பணத்தை எல்லாம் எந்த பேங்க்லயும் போடாததால திவாலாகாம தப்பிச்சோம்”. இப்படியாக, குறும்பாயும் உலகத்தை நோக்குகிறார்கள்.


சிறு துளி பெரு வெள்ளம்… புரியவில்லையா? பத்து பைசா, கால் ரூபா இப்படி இத சேர்த்தாலும் கோடி வரும்ங்க. மும்பைல இருக்க பிச்சைக்காரர்களின் வருட கலக்ஷன் 180 கோடியாம். இத எங்க போய் சொல்றது?


இப்போது எல்லாம் பிச்சைக்காரர்கள் மாநகரங்களை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்து விட்டனர். எல்லாம் வருமான நோக்கம் தான். பிச்சைக்காரர்களுக்கும் ஏரியா இருக்கிறது. அது கூகில் மேப்பை காட்டிலும் துள்ளியமானதும் கூட. சமீபத்தில், டெல்லியில் பிச்சைக்காரர்களை கைது செய்து நகரத்தை விட்டு அகற்றும் பணியில் போலீஸ் ஈடுபட்டது. சில மாநிலங்களில் பிச்சை எடுப்பது குற்றம் என்று கூட சட்டம் இருக்கிறது. டெல்லியிலும் கூட அப்படியே. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது. டெல்லி உயர் நீதி மன்றம், ‘வறுமை ஒரு குற்றம் இல்லை; பிச்சைக்காரர்கள் நகரை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட வேண்டியது இல்லை; அப்படி செய்தால், அது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம்’, என்று குறிப்பிட்டுள்ளது. 

ஆம்! ஒழிக்க வேண்டியது பிச்சைக்காரர்களை அல்ல பிச்சை எனும் செயலை! 


ஹரீஷ்உள்ளத்தின் குரல்

சொல்’  - இதைப் பற்றி, திருவள்ளுவர் எவ்வளவோ சொல்லி இருக்கிறார்! சொற்களின் சிக்கனத்துக்கு திருவள்ளுவரே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஏழே வார்த்தையில் கருத்தையும்; அதே நேரத்தில் உவமைகளையும் கூறி; சொற் சிக்கனத்தை போதித்த திருவள்ளுவர் தான், இன்றைய நவீன யுக ட்விட்டர்-களுக்கும்(Twitter) முன்னோடி!

இப்படியாக ட்விட்டர் புண்ணியங்களால் சொற்களைக் கூட சிக்கனம் செய்து விடலாம். ஆனாலும், கேள்வி செல்வமான கேட்பதில், சிக்கனம் செய்ய முடியுமா? என்றால்; அதுதான் முடியாது.

வாயைத் திறந்துவிட்டு, பேசாமல் கூட இருந்து விட முடியும். ஆனாலும், ஒருவர் வாய் திறந்து பேசி விட்டால்; அதைக் கேட்காமல் தான் இருந்து விட முடியுமா?  பேசுவதைக் கூட தடுத்து விட முடியும்; கேட்பதை தடுத்துவிட முடியாது. நிறைய கேட்க வேண்டும் என்பதால்தான் இயற்கையிலேயே இரண்டு காது இருக்கிறது; ஒரு நாக்கு இருக்கிறது. நாக்குக்காவது கதவு இருக்கிறது. காதுக்கு ஏது கதவு? பல நேரங்களில்; பேச்சை, கேட்டு கேட்டு காது பஞ்சர் ஆகி, ‘ஸ்சே.ம் ப்ளட்………’-இல் அல்லவா முடிகிறது.

வாய், ஆட்டோமெடிக் கதவு போல; அதுவும் மனைவி முன், வாய் தானாகவே மூடிக் கொள்ளும். ஆனால், இந்த காதுக்கு தான் இப்படிப்பட்ட கதவுகள் இல்லை. மனைவியின் ‘தொன தொன’க்களை கேட்டே ஆக வேண்டியிருக்கிறது. என்னது? ‘கேட்டா’; காதில் போட்டுக் கொண்டாக வேண்டியிருக்கிறது! காதில போட்டாதான், உப்பு அளவா போட்ட சோத்த வாயில போட முடியும், சாரே!

காதுக்கு வடிகட்டியும் போட முடியாது. நமக்கு நாமே தான் அந்த கட்டுப்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இதைத்தான் பாரதி, ‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிறார். கேட்பதில், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கேட்பதில் மூன்று வகை இருக்கிறது. உடலால் கேட்பது; மூளையால் கேட்பது; உள்ளத்தால் கேட்பது.

உடலால் கேட்பது – தீப்பொறி(!) பேச்சாளர்கள், அடுத்த கட்சி தலைவரைப் பற்றி, ஆ……….பாசமாய் மேடையில் பேசும் போது; சருமத்தால் மட்டும் கேட்டு விட்டால் நன்மை. அதாவது, சத்ததை உடம்புக்கு வெளியிலேயே நிறுத்தி விடுவது. சும்மா… சும்மனாகாச்சுக்கும் கேட்டா போதும். முடிந்தால் அங்கிருந்து ஓடியே விடுவது நலம்.

மூளையால் கேட்பது – அறிவியல் மாநாட்டில், வகுப்பில் கேட்கும் வகை.

உள்ளத்தால் கேட்பது – அதாவது, ‘வாழ்க வளமுடன்’, ‘வாழும் கலை’ போன்ற கூட்டங்களில் கேட்கும் வகை இது. அப்புறம், காதலர்கள் சொல்லும் ‘டெலிபதி’ கூட இந்த வகை தான்.

மகாத்மாக்கள் இதயத்தைத் திறந்து கொண்டு கேட்கிறார்கள். நாமோ, தொலைக்காட்சியை ஆன் செய்து, சீரியலில் ‘நம்ம குடும்பம்’ பார்த்துக் கொண்டே, “அத்தை, ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்-னு சொன்னீங்களே. சொல்லுங்க அத்தை”, எனும் வகை!

குரல்களில் எல்லாம் மிகச்சிறந்த; மற்றும் கேட்க வேண்டிய;உன்னதமான, உண்மையான குரல், நமக்குள்ளே இருக்கும் அந்த உள்ளத்தின் குரல் தான். அந்த உள்ளத்தின் குரல் தான் உண்மையின் குரல்; அறத்தின் குரல்.

இனி, உலகின் வேறு எந்த துக்ளியோண்டு ஒலியும் கேட்க விருப்பமின்றி; உள்ளத்தின் குரலை மட்டும் கேட்டாலே போதும்; என்றேண்ணினால்; சற்றே பொறுப்போம்! நிலவில் ஒலி கேட்காது. ஒலி பிரயாணிக்க ஊடகம் தேவை. 2015-இல் சந்திரனுக்கு மனிதரை அனுப்பும் திட்டம் இருப்பதாய் இஸ்ரோவில் சொல்லப் படுகிறது. அப்படி அனுப்பும் போது, நாமும் நிலவுக்கு சென்று; புற உலகின் ஹை டெசிபல் சத்தத்தின் பிடியில் இருந்து தப்பிக்கலாம். அது அதிக செலவு பிடிக்கும் என்றால்; 2050 வரை பொறுத்துக் கொள்ளலாம். எப்படியும் இன்றைய அரசியல் வாதிகளின் கொள்ளுப் பேரன்கள் தயாரிக்கும் தேர்தல் அறிக்கையில், இலவசமாய், வீட்டிற்கு ஒருவர் நிலவுக்கு சுற்றுலா அனுப்பி வைக்கப் படலாம். உள்ளம் என்ற ஒன்று இருந்து; அந்த உள்ளத்தின் குரல் ஒலித்தால், ஒரு வேளை இலவசத்தை   எதிர்க்கலாம்.


ஹரீஷ்

அட, அகராதி!
கராதி’ என்றால் என்ன தெரியுமா? 


சமீபத்தில் கமலுக்கு, 50 வருட கலை சேவையை முன்னிட்டு நடந்த பாராட்டு விழாவில்; மேடையில் கமலைப் பார்த்து, “நடிப்புக்கு கமல் ஒரு டிக்ஷனரி” என்று கூறினார்கள். அதற்கு கமல் அடக்கமாகவும் பொறுமையாகவும், “டிக்ஷனரி என்றால், தமிழில் ‘அகராதி’ என்று பெயர்”, என்றார் சிரித்துக்கொண்டே. மேடையில் குழுமியிருந்த எத்தனைப் பேர், கமல் கூறிய ‘அகராதி’-யின் உண்மை அர்த்தம் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. கமல் கூறிய ‘அகராதி’-யின் அர்த்தம் ‘கிருத்துருவம்’, ‘எகனைக்கு-மொகனை’, ‘ஏட்டிக்கு-போட்டி’ போன்றவை. இந்த அர்த்தங்கள் எல்லாம், எந்த அகராதியைப் புரட்டி பார்த்தாலும் இருக்காது!


திருக்குறளின் முதல் குறள்; அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகராதி’ வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; நான்காம் வார்த்தை ‘ஆதி’; அகர+ஆதி = அகராதி.


அகராதிக்கு மற்றுமொரு பெயர் ‘அகரமுதலி’. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகரமுதலி’-யும் ஏறக்குறைய வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; இரண்டாம் வார்த்தை ‘முதல’. ஆக, அகர+முதல+(இ) = அகரமுதலி.


தமிழ் மொழியில் எழுத்துகள்,‘அ’ வில் ஆரம்பித்து ‘ன்’ வரை இருக்கிறது. இவ்வகையில்,திருக்குறளுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது; திருக்குறளின்,முதற் குறளின் முதல் எழுத்து ‘அ’; கடைசிக் குறளின் கடைசி எழுத்து ‘ன்’. ஆஹா! திருக்குறளில் இப்படி மறைத்து மறைத்து எவ்வளவு சூட்சமங்கள் இருக்கிறதோ? தெரிய வில்லை! இப்படி, பொதுவாகப் பார்த்தால் தெரியாமல், மறைத்து வைத்தும் பல பொருள் தருகிறதே திருக்குறள்;அதனால் தான் திருக்குறள் பொதுமறை-யோ! (விளக்கம்: 'மறை' என்றால் வேதம். 'பொது' என்றால் அனைவருக்கும் பொதுவானது. அதாவது எல்லா மனிதர்களும் ஏற்றுக் கொள்ளும் கருத்துகள்.)


'அகராதி’ என்றால் பொருள் தருவது; ‘பொருள்’ என்றால் பொண்,மணி,வைரம்,வைடூரியம் போன்ற ‘பொருள்’ அல்ல; சொற்பொருள் தருவது; அதாவது வார்த்தைக்கு விளக்கம் தருவது.


ஆங்கிலம் ஒரு கடனாளி மொழி.இப்போது ‘ஜெய்ஹோ’ வும் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது. கடனாளிகள் பகட்டாக உலவும் காலம் இது; எத்தனை கடன் அட்டைகள் பையில் இருக்கின்றனவோ அதற்கு ஏற்றார் போல் சிகப்பு கம்பள வரவேற்பும் இருக்கும். தமிழோ ஒரு கொடையாளி மொழி. அதுவும், தமிழ் போன்ற செம்மொழிகளில் அகராதி இல்லாமலா? தமிழில், அகராதிகள் தொகுப்பதற்கு முந்தைய காலங்களில் இருந்தவை, நிகண்டு. நிகண்டு என்றாலும் சொற்களின் தொகுப்புதான்;அதாவது, ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது; அல்லது, பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது;அதுவும் செய்யுள் வடிவில் இருக்கும்.


தற்காலத்தில் நிகண்டு இருந்தால் எப்படி இருக்கும்?
உதாரணத்திற்கு, 'ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது'; ‘முடிச்சிடலாம்’ என்றால், சதுரங்கம் விளையாடுபவருக்கு, விளையாட்டை முடிக்கவும்; கபாலிக்கோ,அரசியல்வாதி கை காட்டுபவரை ‘லேசா தட்டி’ கைலாசத்துக்கு அனுப்புவதும்!


அதுவே,'பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது';‘நடிகர்’, ‘அரசியல்வாதி’ என்றால் இரு வேறு சொற்கள்தான்;ஆனாலும், இப்போதோ அவை இரண்டும் ஒரே பொருளையே குறிக்கின்றன். பொருளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.அது அவரவர் கற்பனையைப் பொறுத்தது!


‘நிகண்டு’கள் பெரும்பாலும்அகர வரிசையில் இருக்காது; பாரதியார் ஒரு நிகண்டு தொகுத்திருக்கிறார்; அதன் பெயர் ‘பொருள் தொகை நிகண்டு’. 'நிகண்டு' 'அகராதி' போன்றவற்றை குறிப்பிடும் போது ‘எழுதி இருக்கிறார்’ என்று சொல்ல முடியாது; மாறாக ‘தொகுத்திருக்கிறார்’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.தமிழின் முதல் அகராதி(சதுரகராதி) தமிழரால் தொகுக்கப்பட்டது அல்ல. வீரமாமுனிவர் (ஜி.யூ.போப்) தான் முதன் முதலாய் தமிழ் மொழியின் அகராதியைத் தொகுத்தவர். ஆனந்த விகடனும் ஒரு அகராதியைத் தொகுத்து இருக்கிறது. அகராதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என தொல்காப்பியத்திலேயே விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ‘எழுத்தென் படுப அகரமுதல் னகர இறுவாய்’ என்று. 


எவ்வளவோ அகராதிகள் வந்தாலும், ஒரு ஆசிரியரின் பணியை அகராதியால் ஈடு செய்து விட முடியாது. அகராதி, அகராதி தான்; ஆசிரியர், ஆசிரியர் தான்!


இப்போது எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘அகராதி’ இருக்கிறது; அரசியல்வாதிக்கு என்று ஒரு தனி ‘அகராதி’ இருக்கிறது. “என் கடைசி மூச்சு இருக்கும் வரை, காவிரி நீரை தமிழகம் கொண்டு வர ஓயாமல் பாடுபடுவேன்”, என்பார் அரசியல்வாதி. ஆக! அப்படிப்பட்ட அரசியல்வாதியின் வாழ்நாளில், காவிரிநீர் தமிழகம் வந்து விடாதாம். ஆக! அவர் பாடுபட்டு கொண்டே தான் இருப்பார், போயும் போயும் பாடுபடுவதின் பலனை எல்லாம் நாம கேட்க முடியுமா?


அதிலும் முல்லைப் பெரியாறு அணை விவகார ‘அகராதி’ சற்றே தூக்கல். அகராதியின் அர்த்தம்; நேற்று, மத்திய அரசைக் கை காட்டி; இன்று, கேரள அரசைக் கை காட்டி; நாளை, இது காவிரி பிரச்சினைக்காக கூட்டப்படும் கூட்டம் என கர்னாடகாவை கை நீட்டினாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், எங்கள் அகராதியில்; சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்.


அதே போல் கணவன் மனைவிக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது. “என்னங்க! இந்த சரவணா தங்க மாளிகை விளம்பரம் சூப்பரா இருக்குல்ல?”, என்று கேட்டால்; அர்த்தமோ, ‘உங்க பொங்கல் போனஸ் எப்ப வருது ?!?’, என்பதுதான்.


ஹரீஷ்

கத்… கத்… கத்தரிக்காய் !!கொளுத்தும் மதிய வெயிலில், தெருவில் காய்கறிக்காரன் காய்கறி விற்றுக்கொண்டு போகிறான்.
“கத்ரி……க்கா………………………….
முருங்கெ…….க்கா……………
வெண்டி……..க்கா……………….”

கொளுத்தும் வெயிலை, ஏன் கத்தரி வெயில் என்கிறார்கள் என்று குழம்பி கொண்டு இருந்தால்; ஒரு கத்தரிப்பூவை பார்த்தவுடன் அந்த சந்தேகம் தீர்ந்தது. விஷயம் இதுவாக இருக்கலாம்; கத்தரிப் பூவின் நடுவில் உள்ள மகரந்தம் நல்ல பளிச் மஞ்சள் வர்ணத்தில் கொளுத்தும் வெயிலின் நிறத்தில் இருக்கிறது. அதனால் இருக்குமோ ? 


காய்கறிக்காரனைக் கூப்பிட்டு, வீட்டம்மா,
“என்னப்பா; இந்த முருங்க்காய் எவ்வளவு?”
“கிலோ எட்டு ரூவா-ம்மா”
“வெண்டக்கா ?”
“கிலோ பத்து”
“கத்ரிகா?”
கிலோ ஒரு டாலர்!
என்னது? டாலரா? எந்த டாலர்? முருகன் டாலரா?
என்னம்மா. விவரம் தெரியாதா ? இது அமெரிக்கா கத்தரிக்கா-ம்மா; அதான்
மேலும் வெறுப்பேற்றும் விதமாய், காய்கறிக்காரன், “கோயம்பேடு மார்க்கெட் வரலாற்றிலேயே, முதன் முறையாய்; உலகத் தொழில் நுட்பத்துடன் தயாரான; வெளைச்சல் வந்து மூன்றே மாதத்தில்; விற்பனைக்கு வந்திருக்கும்மா !”, என்கிறான்.

இப்படியாக, தெருவில் கத்தரிக்காய் வாங்கி கொண்டு வீட்டுக்குள் வந்தால்; அமெரிக்காவில் இருந்து பேராண்டி, வீட்டுக்கு தொலை பேசுகிறான்; “என்ன, எப்படி இருக்கீங்க எல்லாம்? செய்தி கேட்டீங்களா? மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரப் போகிறதாமே?"
வீட்டில் இருந்து, “அட! அது ஓல்ட் நியூஸ்! அது, இப்ப நம்ம வீட்டுக்குள்ளேயே வந்திடுச்சு. அது தான் இப்போ லேட்டஸ்ட் நியூஸ்! எங்களுக்கு எங்கேப்பா தெரியுது அதெல்லாம். இந்த ‘கல்யாணம்’, ‘துளசி’, ‘கலசம்’, ‘கோலங்கள்’, ‘அரசி’, ‘ஆனந்தம்’ பாக்கவே எங்களுக்கு நேரம் சரியா இருக்குது ! இன்னிக்கு காய்கறி வாங்கறப்பதான், காய் கறிக்காரன் சொன்னான்; ஏதோ, அமெரிக்க கத்தரிக்காய்னு; சரி! அமெரிக்க கத்தரிக்காயாச்சே-ன்னு, ரெண்டு கிலோ கூடுதலாவே வாங்கி வச்சாச்சு! அந்த கத்தரிக்காயில Manufactured Date, Expiry Date எல்லாம் போட்டு இருக்குடா! அதெல்லாம் தமிழில் தான் அச்சிடனும்னு, எவன் வந்து சாப்பிடும் போது, சாப்பிட விடாம கைய பிடிக்கப் போறானோன்னு பயமா இருக்கு-டா!’

மேலே கூறியவை எல்லாம், கூடிய விரைவில், நாம் அன்றாடம் கேட்கும் சில சம்பாஷனைகள் ஆகக் கூடும்.

பின்னே, என்ன சார்? இந்தியாவில், இந்த மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் எல்லாம் வரப் போகிறதாமே. வரட்டுமே; பேஷா வரட்டுமே! இந்த ‘கத்தரிக்கா’ எல்லாம் ‘சுண்டக்கா’ மேட்டர் நமக்கு!! கத்தரிக்காய் தானே சார்! இது என்ன கத்ரினா கைஃப் மேட்டரா?
கத்ரினா கைஃப் ‘விலங்கியல்’ விவகாரம்; இந்த கத்தரிக்காய் வெறும் ‘தாவரவியல்’ விவகாரம் தானே. ஆமாம் சார், கத்ரினா கைஃப் ஒரு பெண் மான்; இந்த பெண் மானின் ஆண் மான் -  சல்மான்; இந்த மான்கள் விலங்கு வேட்டைக்கு கூட செல்லும். அப்போ இது விலங்கியல் தானே. விலங்கியல் தான் கொஞ்சம் கஷ்டம்; தாவரவியல் எல்லாம் சும்மா ‘அல்வா’ சாப்டற மாதிரி நமக்கு!

அணு என்றாலே அமெரிக்கா தான் போலும். அது ஆயுதமாக இருந்தாலும், காய்கறியாக இருந்தாலும் கூட!

கத்தரிக்காயின் பிறப்பிடம் இந்தியா. இந்தியாவுக்கே கத்தரிக்காயா ? சூரியனுக்கே டார்ச் லைட்டா ? ஒரு வலைப்பூவில் படித்த கேள்விகள், மிக நியாயமான கேள்விகள். அது அப்படியே இங்கே கொடுக்கப் பட்டுளது.

அது சரி, இப்போது கத்தரிக்காய்க்கு எங்கே தட்டுப்பாடு வந்தது? அதன் உற்பத்தியை அதிகரித்தே தீர வேண்டியது கட்டாயம் என யாராவது குரல் எழுப்பினார்களா ? எதற்காக இந்த விபரீத ஆசை புரியவில்லையா ?

என்ன நியாயமான கேள்விகள் ! இந்த மரபணு மாற்றிய கத்தரிக்காய் பற்றிய தகவல்களை, ‘தகவல் அறியும் சட்டத்தில்’ கேட்டார்களாம் சில சமூக ஆர்வலர்கள். ஆனால், அது ‘வர்த்தக ரகசியம்’ என்பதால் தர இயலாது என்று கூறி விட்டார்களாம். அவர்களுக்கு அது ‘வர்த்தக ரகசியம்’; நமக்கோ, வாழ்க்கையும் சந்ததியும் அத்தியாவசியம். வாழ்க்கை அத்தியாவசியத்தை விட ‘வர்த்தக ரகசியம்’ முக்கியம் எனில்; அதில் சந்தேகம் கொள்வதில் எள்ளளவும் தவறில்லை. அந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை.

இப்படித்தான், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் முன், வீட்டுக்கு தொலை பேசினான் நண்பன், “ஹ்ம்ம்.. வீட்டில் என்ன குழம்பு இன்னிக்கு?”
“கத்தரிக்காய் சாம்பார்-ங்க”
“ஹ்ம்ம்.. சரி.. யார் சாம்பார் வெச்சது? நீயா? பாட்டியா?’
“இன்னிக்கு, நானே காய் வெட்டி கொழம்பு வெச்சேங்க!”
“ஓ! அப்பிடியா .. ஹ்ம்ம்.. சேரி…. வரும் போது நான் வெளியில சாப்பிட்டு வந்திடரேன். எனக்கு சோறு வைக்க வேண்டாம்”
“இல்லீங்க. நீங்க வீட்டுக்கு வந்திடுங்க… இது ஒன்னும் அமெரிக்கா கத்தரிக்கா இல்ல; நம்ம ஊரு கத்தரிக்கா தான் பயபடாதீங்க!” என்றாள்.
அதற்கு நம்மாளு, “பயம் அமெரிக்கா மேல இல்ல !!!” என்றான்.
அதற்கு அவள், “பாருங்க! நான் பன்னின கத்தரிக்கா சாம்பாருக்கு பேடன்ட்(Patent) கூட கிடைக்கும்.  தெரிஞ்சுக்கங்க!’
அதற்கு நம்மாளு, “நீ பன்னின கத்தரிக்கா சாம்பாருக்கு பேடன்ட் (Patent) கிடைக்குதோ இல்லியோ; ஆனா, அத சாப்பிட்டா பேஷன்ட் (Patient) கிடைப்பாங்க !!”

……………………..……………………..……………………..……………………..
……………………..……………………..……………………..……………………..
……………………..……………………..……………………..……………………..


மரபணு ‘பேடண்ட்’ தெரிந்து கொள்வது இல்லை நம் நோக்கம்; நாமும், நம் நிலமும், தொடரும் சந்ததியும், சந்தடி சாக்கில் ‘பேஷன்ட்’ ஆகி விடக் கூடாது என்பது தான் நம் நோக்கம்! வேறொன்றுமில்லை !!

ஹரீஷ்

இளமை பருவத்து இன்பம் !ளமை பருவத்திற்கு பெரிதும் இன்பம் சேர்ப்பது –  நட்பா ? காதலா ?

திருவள்ளுவர், திருக்குறளில் நான்கு அதிகாரம் நட்புக்கு மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்.
  • நட்பு.
  • நட்பாராய்தல்.
  • தீ நட்பு.
  • கூடா நட்பு.
ஏன் ? ஏனெனில், திருவள்ளுவருக்கு தெள்ளென தெரிந்திருக்கிறது, மனிதர்களுக்கு நட்பு என்பது மிக முக்கியம். நட்பு இல்லாமல் மனிதன் இல்லை என்பதும். எது முக்கியமோ அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா ? அதனால் தான் நட்பில் கூடுதல் அதிகாரம் வைத்து இருக்கிறார் திருவள்ளுவர்.

ஒரு குறளில்;
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு !
என்கிறார்.அதாவது, அரசர்களில் ஆண் சிங்கமாக இருக்க; அரசனுக்கு தேவையானவை, படை, குடிகள், அமைச்சர்கள், நண்பர்கள், அரண் ஆகியவை. 
ஏன், திருவள்ளுவர் வந்து.
            படை குடி கூழ் அமைச்சு அந்தப்புறம் அரண் ஆறும்
            உடையான் அரசருள் ஏறு !
என்று சொல்லி இருக்கலாம் அல்லவா? சொல்லவில்லையே ! ஏன் ? ஏனென்றால்,  அந்தப்புறம் சிற்றின்பம். நட்பே பேரின்பம் ! அதனால் தான். ‘நட்பை’ப் பெற்றால் அரசன் ஆகலாம். ‘காதலை’ கொண்டால் ஆன்டியாகலாம் !! 

கம்பன், கம்பராமாயனத்தில் நட்பை பற்றி ஒரு இடத்தில் மிக அருமையாக அற்புதமாக விளக்குகிறார். ராமரை சந்திக்கிறார் சுக்ரீவன். ராமர் சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு; இவ்வாறாக கூறுகிறார். 
  ‘மற்று இனி உரைப்பது என்னே? 
     வானிடை. மண்ணில் நின்னைச்
  செற்றவர் என்னை செற்றார்;
     தீயரே எனினும். உன்னோடு 
  உற்றவர் எனக்கும் உற்றார்; உன் 
     கிளை எனது; என் காதல் 
  சுற்றம். உன் சுற்றம்; நீ என் 
     இன் உயிர்த் துணைவன்’ என்றான் !! 
ராமர் இப்படி கூறியவுடன் சுக்ரீவனோடு வந்த குரங்கு சேனைகள் எல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றன. ராமருக்கு, அந்த அடர்ந்த காட்டில் மனைவியை பிரிந்த அந்த வேளையிலும் காட்டில் வானரர்களுடன் விளைந்த அந்த நட்பே சற்றேனும் இன்பம் சேர்த்தது. வீம்புக்கு சிலர், குரங்குக்கு ‘காதல்’ கூட வரலாமே என வாதிடலாம். அதுவும் சரிதான்; அப்படித்தானே எய்ட்ஸ் முதல் முதலாக வந்தது. வரட்டும் வரட்டும் !! 

இளமை என்றால் என்ன? இளமை என்றால் விடலைப் பருவத்திற்கு பிறகு வருவது. அதுதான் இளமைப் பருவம். அதாவது கல்லூரிக் காலம் மற்றும் திருமணத்திற்கு முந்தைய காலம் எனக் கொள்ளலாம். கல்லூரி காலங்களில் அடைந்த இன்பம் தான் எத்தனை ! எத்தனை ! 

  நாயர்     கடையில்  
  காந்தி     கணக்கில் 
  நண்பர்    சூழ 
  குடித்த    தேநீர் !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

  நண்பன்   கொண்டு 
  வந்த      கட்டுச்சோறு; 
  உண்டு    முடித்தோம் 
  போட்டி   போட்டு 
  நன்பர்கள் யாவரும்; 
  கொண்டுவந்தவனைத் தவிர !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

  எப்போதோ     ஒருமுறை; 
  எதேச்சையாய் ஒருவன் 
  எடுத்துக்        கூற; 
  புத்தி           வந்து 
  கல்லூரி        சென்றது 
  நண்பர்         கூட்டம்; 
  தினசரி         செல்லும் 
  திரையரங்கை   கட்டடித்து !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

தேர்வு அறையிலே உட்கார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பாஸ் ஆவதற்கு உதவியாய் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் அமர்வதும் யார்? காதலா ? நண்பனா ?!? வாழ்க்கையில், முன்னும் சரி ! பின்னும் சரி ! நண்பன் தான், தேவைப் படும் போது கை கொடுப்பவன். காதலா கை கொடுக்கும் ? காதல் ‘கால்’ வேண்டுமானால் கொடுக்கும். அதுவும் மிஸ்டு கால் !! 

கண்ணதாசன் அருமையாக பாடியிருக்கிறார். 
  வீடு வரை உறவு 
  வீதி வரை மனைவி 
  காடு வரை பிள்ளை 
  கடைசி வரை யாரோ ?   
கண்ணதாசனின் அந்த, ‘கடைசி வரை யாரோ ?’ என்ற கேள்விக்கு விடை மிக எளிது. ‘இளமையில் இருந்து, இன்பத்தில் இனைந்து; துன்பத்தில் தோள் கொடுக்கும் அந்த நட்பு தான்’ கடைசி வரை !! ஆக, இளமையில் துன்பத்துக்கு தோள் கொடுப்பதில் ஆகட்டும், இன்பத்தை இரட்டிப்பாக்குவதில் ஆகட்டும் இரண்டிற்கும் மனித குலம் பெரிதும் நம்புவது நட்பையே !!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்