
‘அகராதி’ என்றால் என்ன தெரியுமா?
சமீபத்தில் கமலுக்கு, 50 வருட கலை சேவையை முன்னிட்டு நடந்த பாராட்டு விழாவில்; மேடையில் கமலைப் பார்த்து, “நடிப்புக்கு கமல் ஒரு டிக்ஷனரி” என்று கூறினார்கள். அதற்கு கமல் அடக்கமாகவும் பொறுமையாகவும், “டிக்ஷனரி என்றால், தமிழில் ‘அகராதி’ என்று பெயர்”, என்றார் சிரித்துக்கொண்டே. மேடையில் குழுமியிருந்த எத்தனைப் பேர், கமல் கூறிய ‘அகராதி’-யின் உண்மை அர்த்தம் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. கமல் கூறிய ‘அகராதி’-யின் அர்த்தம் ‘கிருத்துருவம்’, ‘எகனைக்கு-மொகனை’, ‘ஏட்டிக்கு-போட்டி’ போன்றவை. இந்த அர்த்தங்கள் எல்லாம், எந்த அகராதியைப் புரட்டி பார்த்தாலும் இருக்காது!
திருக்குறளின் முதல் குறள்; அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகராதி’ வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; நான்காம் வார்த்தை ‘ஆதி’; அகர+ஆதி = அகராதி.
அகராதிக்கு மற்றுமொரு பெயர் ‘அகரமுதலி’. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகரமுதலி’-யும் ஏறக்குறைய வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; இரண்டாம் வார்த்தை ‘முதல’. ஆக, அகர+முதல+(இ) = அகரமுதலி.
தமிழ் மொழியில் எழுத்துகள்,‘அ’ வில் ஆரம்பித்து ‘ன்’ வரை இருக்கிறது. இவ்வகையில்,திருக்குறளுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது; திருக்குறளின்,முதற் குறளின் முதல் எழுத்து ‘அ’; கடைசிக் குறளின் கடைசி எழுத்து ‘ன்’. ஆஹா! திருக்குறளில் இப்படி மறைத்து மறைத்து எவ்வளவு சூட்சமங்கள் இருக்கிறதோ? தெரிய வில்லை! இப்படி, பொதுவாகப் பார்த்தால் தெரியாமல், மறைத்து வைத்தும் பல பொருள் தருகிறதே திருக்குறள்;அதனால் தான் திருக்குறள் பொதுமறை-யோ! (விளக்கம்: 'மறை' என்றால் வேதம். 'பொது' என்றால் அனைவருக்கும் பொதுவானது. அதாவது எல்லா மனிதர்களும் ஏற்றுக் கொள்ளும் கருத்துகள்.)
'அகராதி’ என்றால் பொருள் தருவது; ‘பொருள்’ என்றால் பொண்,மணி,வைரம்,வைடூரியம் போன்ற ‘பொருள்’ அல்ல; சொற்பொருள் தருவது; அதாவது வார்த்தைக்கு விளக்கம் தருவது.
ஆங்கிலம் ஒரு கடனாளி மொழி.இப்போது ‘ஜெய்ஹோ’ வும் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது. கடனாளிகள் பகட்டாக உலவும் காலம் இது; எத்தனை கடன் அட்டைகள் பையில் இருக்கின்றனவோ அதற்கு ஏற்றார் போல் சிகப்பு கம்பள வரவேற்பும் இருக்கும். தமிழோ ஒரு கொடையாளி மொழி. அதுவும், தமிழ் போன்ற செம்மொழிகளில் அகராதி இல்லாமலா? தமிழில், அகராதிகள் தொகுப்பதற்கு முந்தைய காலங்களில் இருந்தவை, நிகண்டு. நிகண்டு என்றாலும் சொற்களின் தொகுப்புதான்;அதாவது, ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது; அல்லது, பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது;அதுவும் செய்யுள் வடிவில் இருக்கும்.
தற்காலத்தில் நிகண்டு இருந்தால் எப்படி இருக்கும்?
உதாரணத்திற்கு, 'ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது'; ‘முடிச்சிடலாம்’ என்றால், சதுரங்கம் விளையாடுபவருக்கு, விளையாட்டை முடிக்கவும்; கபாலிக்கோ,அரசியல்வாதி கை காட்டுபவரை ‘லேசா தட்டி’ கைலாசத்துக்கு அனுப்புவதும்!
அதுவே,'பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது';‘நடிகர்’, ‘அரசியல்வாதி’ என்றால் இரு வேறு சொற்கள்தான்;ஆனாலும், இப்போதோ அவை இரண்டும் ஒரே பொருளையே குறிக்கின்றன். பொருளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.அது அவரவர் கற்பனையைப் பொறுத்தது!
‘நிகண்டு’கள் பெரும்பாலும்அகர வரிசையில் இருக்காது; பாரதியார் ஒரு நிகண்டு தொகுத்திருக்கிறார்; அதன் பெயர் ‘பொருள் தொகை நிகண்டு’. 'நிகண்டு' 'அகராதி' போன்றவற்றை குறிப்பிடும் போது ‘எழுதி இருக்கிறார்’ என்று சொல்ல முடியாது; மாறாக ‘தொகுத்திருக்கிறார்’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.தமிழின் முதல் அகராதி(சதுரகராதி) தமிழரால் தொகுக்கப்பட்டது அல்ல. வீரமாமுனிவர் (ஜி.யூ.போப்) தான் முதன் முதலாய் தமிழ் மொழியின் அகராதியைத் தொகுத்தவர். ஆனந்த விகடனும் ஒரு அகராதியைத் தொகுத்து இருக்கிறது. அகராதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என தொல்காப்பியத்திலேயே விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ‘எழுத்தென் படுப அகரமுதல் னகர இறுவாய்’ என்று.
எவ்வளவோ அகராதிகள் வந்தாலும், ஒரு ஆசிரியரின் பணியை அகராதியால் ஈடு செய்து விட முடியாது. அகராதி, அகராதி தான்; ஆசிரியர், ஆசிரியர் தான்!
இப்போது எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘அகராதி’ இருக்கிறது; அரசியல்வாதிக்கு என்று ஒரு தனி ‘அகராதி’ இருக்கிறது. “என் கடைசி மூச்சு இருக்கும் வரை, காவிரி நீரை தமிழகம் கொண்டு வர ஓயாமல் பாடுபடுவேன்”, என்பார் அரசியல்வாதி. ஆக! அப்படிப்பட்ட அரசியல்வாதியின் வாழ்நாளில், காவிரிநீர் தமிழகம் வந்து விடாதாம். ஆக! அவர் பாடுபட்டு கொண்டே தான் இருப்பார், போயும் போயும் பாடுபடுவதின் பலனை எல்லாம் நாம கேட்க முடியுமா?
அதிலும் முல்லைப் பெரியாறு அணை விவகார ‘அகராதி’ சற்றே தூக்கல். அகராதியின் அர்த்தம்; நேற்று, மத்திய அரசைக் கை காட்டி; இன்று, கேரள அரசைக் கை காட்டி; நாளை, இது காவிரி பிரச்சினைக்காக கூட்டப்படும் கூட்டம் என கர்னாடகாவை கை நீட்டினாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், எங்கள் அகராதியில்; சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்.
அதே போல் கணவன் மனைவிக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது. “என்னங்க! இந்த சரவணா தங்க மாளிகை விளம்பரம் சூப்பரா இருக்குல்ல?”, என்று கேட்டால்; அர்த்தமோ, ‘உங்க பொங்கல் போனஸ் எப்ப வருது ?!?’, என்பதுதான்.
ஹரீஷ்
5 comments:
//கணவன் மனைவிக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது. “என்னங்க! இந்த சரவணா தங்க மாளிகை விளம்பரம் சூப்பரா இருக்குல்ல?”, என்று கேட்டால்; அர்த்தமோ, ‘உங்க பொங்கல் போனஸ் எப்ப வருது ?!?’, என்பதுதான்.// வெறுமே பின்னூட்ட மரியாதைக்காகச் சொல்லவில்லை; நிஜமாகவே பின்னிப் பெடலெடுக்கிறீர்கள் பொன்னியின் செல்வன். சொல்கிற விதம் ரசிக்கும்படியாக, அத்தனை நயமாக இருக்கிறது. ஆமாம், ‘அகராதி’ என்ற பெயரில் ராஜேஷ்குமாரின் கதை ஒன்று படமாக வரப்போகிறதே, அதையும் இந்தப் பதிவில் சேர்த்திருக்கலாமே?
_/!\_ ரவி சார், பின்னூட்டத்திற்கு நன்றி. ஓ! அப்டிங்களா.. தெரியாது.. அப்படி ஒரு படம் வரப் போவதாய். உண்மையை சொல்வதென்றால், ராஜேஷ்குமார் நாவல்கள் படித்ததும் இல்லை.
thalaippa parthonna nammala koopidureengalonu nenachen..
_/!\_ அடடே.. உங்களைப் போய் அப்படி எல்லாம் கூப்பிடலாமா...
உங்கள் பதிவு நல்லா இருக்கு...தொடருங்கள்.
Post a Comment