அட, அகராதி!




கராதி’ என்றால் என்ன தெரியுமா? 


சமீபத்தில் கமலுக்கு, 50 வருட கலை சேவையை முன்னிட்டு நடந்த பாராட்டு விழாவில்; மேடையில் கமலைப் பார்த்து, “நடிப்புக்கு கமல் ஒரு டிக்ஷனரி” என்று கூறினார்கள். அதற்கு கமல் அடக்கமாகவும் பொறுமையாகவும், “டிக்ஷனரி என்றால், தமிழில் ‘அகராதி’ என்று பெயர்”, என்றார் சிரித்துக்கொண்டே. மேடையில் குழுமியிருந்த எத்தனைப் பேர், கமல் கூறிய ‘அகராதி’-யின் உண்மை அர்த்தம் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. கமல் கூறிய ‘அகராதி’-யின் அர்த்தம் ‘கிருத்துருவம்’, ‘எகனைக்கு-மொகனை’, ‘ஏட்டிக்கு-போட்டி’ போன்றவை. இந்த அர்த்தங்கள் எல்லாம், எந்த அகராதியைப் புரட்டி பார்த்தாலும் இருக்காது!


திருக்குறளின் முதல் குறள்; அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகராதி’ வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; நான்காம் வார்த்தை ‘ஆதி’; அகர+ஆதி = அகராதி.


அகராதிக்கு மற்றுமொரு பெயர் ‘அகரமுதலி’. திருக்குறளின் முதல் வரியிலேயே, ‘அகரமுதலி’-யும் ஏறக்குறைய வந்து விட்டது. அதாவது, முதல் வார்த்தை ‘அகர’; இரண்டாம் வார்த்தை ‘முதல’. ஆக, அகர+முதல+(இ) = அகரமுதலி.


தமிழ் மொழியில் எழுத்துகள்,‘அ’ வில் ஆரம்பித்து ‘ன்’ வரை இருக்கிறது. இவ்வகையில்,திருக்குறளுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது; திருக்குறளின்,முதற் குறளின் முதல் எழுத்து ‘அ’; கடைசிக் குறளின் கடைசி எழுத்து ‘ன்’. ஆஹா! திருக்குறளில் இப்படி மறைத்து மறைத்து எவ்வளவு சூட்சமங்கள் இருக்கிறதோ? தெரிய வில்லை! இப்படி, பொதுவாகப் பார்த்தால் தெரியாமல், மறைத்து வைத்தும் பல பொருள் தருகிறதே திருக்குறள்;அதனால் தான் திருக்குறள் பொதுமறை-யோ! (விளக்கம்: 'மறை' என்றால் வேதம். 'பொது' என்றால் அனைவருக்கும் பொதுவானது. அதாவது எல்லா மனிதர்களும் ஏற்றுக் கொள்ளும் கருத்துகள்.)


'அகராதி’ என்றால் பொருள் தருவது; ‘பொருள்’ என்றால் பொண்,மணி,வைரம்,வைடூரியம் போன்ற ‘பொருள்’ அல்ல; சொற்பொருள் தருவது; அதாவது வார்த்தைக்கு விளக்கம் தருவது.


ஆங்கிலம் ஒரு கடனாளி மொழி.இப்போது ‘ஜெய்ஹோ’ வும் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது. கடனாளிகள் பகட்டாக உலவும் காலம் இது; எத்தனை கடன் அட்டைகள் பையில் இருக்கின்றனவோ அதற்கு ஏற்றார் போல் சிகப்பு கம்பள வரவேற்பும் இருக்கும். தமிழோ ஒரு கொடையாளி மொழி. அதுவும், தமிழ் போன்ற செம்மொழிகளில் அகராதி இல்லாமலா? தமிழில், அகராதிகள் தொகுப்பதற்கு முந்தைய காலங்களில் இருந்தவை, நிகண்டு. நிகண்டு என்றாலும் சொற்களின் தொகுப்புதான்;அதாவது, ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது; அல்லது, பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது;அதுவும் செய்யுள் வடிவில் இருக்கும்.


தற்காலத்தில் நிகண்டு இருந்தால் எப்படி இருக்கும்?
உதாரணத்திற்கு, 'ஒரு சொல்லுக்கு பல பொருள் தருவது'; ‘முடிச்சிடலாம்’ என்றால், சதுரங்கம் விளையாடுபவருக்கு, விளையாட்டை முடிக்கவும்; கபாலிக்கோ,அரசியல்வாதி கை காட்டுபவரை ‘லேசா தட்டி’ கைலாசத்துக்கு அனுப்புவதும்!


அதுவே,'பல சொல்லுக்கு ஒரு பொருள் தருவது';‘நடிகர்’, ‘அரசியல்வாதி’ என்றால் இரு வேறு சொற்கள்தான்;ஆனாலும், இப்போதோ அவை இரண்டும் ஒரே பொருளையே குறிக்கின்றன். பொருளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.அது அவரவர் கற்பனையைப் பொறுத்தது!


‘நிகண்டு’கள் பெரும்பாலும்அகர வரிசையில் இருக்காது; பாரதியார் ஒரு நிகண்டு தொகுத்திருக்கிறார்; அதன் பெயர் ‘பொருள் தொகை நிகண்டு’. 'நிகண்டு' 'அகராதி' போன்றவற்றை குறிப்பிடும் போது ‘எழுதி இருக்கிறார்’ என்று சொல்ல முடியாது; மாறாக ‘தொகுத்திருக்கிறார்’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.தமிழின் முதல் அகராதி(சதுரகராதி) தமிழரால் தொகுக்கப்பட்டது அல்ல. வீரமாமுனிவர் (ஜி.யூ.போப்) தான் முதன் முதலாய் தமிழ் மொழியின் அகராதியைத் தொகுத்தவர். ஆனந்த விகடனும் ஒரு அகராதியைத் தொகுத்து இருக்கிறது. அகராதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என தொல்காப்பியத்திலேயே விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ‘எழுத்தென் படுப அகரமுதல் னகர இறுவாய்’ என்று. 


எவ்வளவோ அகராதிகள் வந்தாலும், ஒரு ஆசிரியரின் பணியை அகராதியால் ஈடு செய்து விட முடியாது. அகராதி, அகராதி தான்; ஆசிரியர், ஆசிரியர் தான்!


இப்போது எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘அகராதி’ இருக்கிறது; அரசியல்வாதிக்கு என்று ஒரு தனி ‘அகராதி’ இருக்கிறது. “என் கடைசி மூச்சு இருக்கும் வரை, காவிரி நீரை தமிழகம் கொண்டு வர ஓயாமல் பாடுபடுவேன்”, என்பார் அரசியல்வாதி. ஆக! அப்படிப்பட்ட அரசியல்வாதியின் வாழ்நாளில், காவிரிநீர் தமிழகம் வந்து விடாதாம். ஆக! அவர் பாடுபட்டு கொண்டே தான் இருப்பார், போயும் போயும் பாடுபடுவதின் பலனை எல்லாம் நாம கேட்க முடியுமா?


அதிலும் முல்லைப் பெரியாறு அணை விவகார ‘அகராதி’ சற்றே தூக்கல். அகராதியின் அர்த்தம்; நேற்று, மத்திய அரசைக் கை காட்டி; இன்று, கேரள அரசைக் கை காட்டி; நாளை, இது காவிரி பிரச்சினைக்காக கூட்டப்படும் கூட்டம் என கர்னாடகாவை கை நீட்டினாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், எங்கள் அகராதியில்; சொன்னதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்.


அதே போல் கணவன் மனைவிக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது. “என்னங்க! இந்த சரவணா தங்க மாளிகை விளம்பரம் சூப்பரா இருக்குல்ல?”, என்று கேட்டால்; அர்த்தமோ, ‘உங்க பொங்கல் போனஸ் எப்ப வருது ?!?’, என்பதுதான்.


ஹரீஷ்

கத்… கத்… கத்தரிக்காய் !!



கொளுத்தும் மதிய வெயிலில், தெருவில் காய்கறிக்காரன் காய்கறி விற்றுக்கொண்டு போகிறான்.
“கத்ரி……க்கா………………………….
முருங்கெ…….க்கா……………
வெண்டி……..க்கா……………….”

கொளுத்தும் வெயிலை, ஏன் கத்தரி வெயில் என்கிறார்கள் என்று குழம்பி கொண்டு இருந்தால்; ஒரு கத்தரிப்பூவை பார்த்தவுடன் அந்த சந்தேகம் தீர்ந்தது. விஷயம் இதுவாக இருக்கலாம்; கத்தரிப் பூவின் நடுவில் உள்ள மகரந்தம் நல்ல பளிச் மஞ்சள் வர்ணத்தில் கொளுத்தும் வெயிலின் நிறத்தில் இருக்கிறது. அதனால் இருக்குமோ ? 


காய்கறிக்காரனைக் கூப்பிட்டு, வீட்டம்மா,
“என்னப்பா; இந்த முருங்க்காய் எவ்வளவு?”
“கிலோ எட்டு ரூவா-ம்மா”
“வெண்டக்கா ?”
“கிலோ பத்து”
“கத்ரிகா?”
கிலோ ஒரு டாலர்!
என்னது? டாலரா? எந்த டாலர்? முருகன் டாலரா?
என்னம்மா. விவரம் தெரியாதா ? இது அமெரிக்கா கத்தரிக்கா-ம்மா; அதான்
மேலும் வெறுப்பேற்றும் விதமாய், காய்கறிக்காரன், “கோயம்பேடு மார்க்கெட் வரலாற்றிலேயே, முதன் முறையாய்; உலகத் தொழில் நுட்பத்துடன் தயாரான; வெளைச்சல் வந்து மூன்றே மாதத்தில்; விற்பனைக்கு வந்திருக்கும்மா !”, என்கிறான்.

இப்படியாக, தெருவில் கத்தரிக்காய் வாங்கி கொண்டு வீட்டுக்குள் வந்தால்; அமெரிக்காவில் இருந்து பேராண்டி, வீட்டுக்கு தொலை பேசுகிறான்; “என்ன, எப்படி இருக்கீங்க எல்லாம்? செய்தி கேட்டீங்களா? மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரப் போகிறதாமே?"
வீட்டில் இருந்து, “அட! அது ஓல்ட் நியூஸ்! அது, இப்ப நம்ம வீட்டுக்குள்ளேயே வந்திடுச்சு. அது தான் இப்போ லேட்டஸ்ட் நியூஸ்! எங்களுக்கு எங்கேப்பா தெரியுது அதெல்லாம். இந்த ‘கல்யாணம்’, ‘துளசி’, ‘கலசம்’, ‘கோலங்கள்’, ‘அரசி’, ‘ஆனந்தம்’ பாக்கவே எங்களுக்கு நேரம் சரியா இருக்குது ! இன்னிக்கு காய்கறி வாங்கறப்பதான், காய் கறிக்காரன் சொன்னான்; ஏதோ, அமெரிக்க கத்தரிக்காய்னு; சரி! அமெரிக்க கத்தரிக்காயாச்சே-ன்னு, ரெண்டு கிலோ கூடுதலாவே வாங்கி வச்சாச்சு! அந்த கத்தரிக்காயில Manufactured Date, Expiry Date எல்லாம் போட்டு இருக்குடா! அதெல்லாம் தமிழில் தான் அச்சிடனும்னு, எவன் வந்து சாப்பிடும் போது, சாப்பிட விடாம கைய பிடிக்கப் போறானோன்னு பயமா இருக்கு-டா!’

மேலே கூறியவை எல்லாம், கூடிய விரைவில், நாம் அன்றாடம் கேட்கும் சில சம்பாஷனைகள் ஆகக் கூடும்.

பின்னே, என்ன சார்? இந்தியாவில், இந்த மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் எல்லாம் வரப் போகிறதாமே. வரட்டுமே; பேஷா வரட்டுமே! இந்த ‘கத்தரிக்கா’ எல்லாம் ‘சுண்டக்கா’ மேட்டர் நமக்கு!! கத்தரிக்காய் தானே சார்! இது என்ன கத்ரினா கைஃப் மேட்டரா?
கத்ரினா கைஃப் ‘விலங்கியல்’ விவகாரம்; இந்த கத்தரிக்காய் வெறும் ‘தாவரவியல்’ விவகாரம் தானே. ஆமாம் சார், கத்ரினா கைஃப் ஒரு பெண் மான்; இந்த பெண் மானின் ஆண் மான் -  சல்மான்; இந்த மான்கள் விலங்கு வேட்டைக்கு கூட செல்லும். அப்போ இது விலங்கியல் தானே. விலங்கியல் தான் கொஞ்சம் கஷ்டம்; தாவரவியல் எல்லாம் சும்மா ‘அல்வா’ சாப்டற மாதிரி நமக்கு!

அணு என்றாலே அமெரிக்கா தான் போலும். அது ஆயுதமாக இருந்தாலும், காய்கறியாக இருந்தாலும் கூட!

கத்தரிக்காயின் பிறப்பிடம் இந்தியா. இந்தியாவுக்கே கத்தரிக்காயா ? சூரியனுக்கே டார்ச் லைட்டா ? ஒரு வலைப்பூவில் படித்த கேள்விகள், மிக நியாயமான கேள்விகள். அது அப்படியே இங்கே கொடுக்கப் பட்டுளது.

அது சரி, இப்போது கத்தரிக்காய்க்கு எங்கே தட்டுப்பாடு வந்தது? அதன் உற்பத்தியை அதிகரித்தே தீர வேண்டியது கட்டாயம் என யாராவது குரல் எழுப்பினார்களா ? எதற்காக இந்த விபரீத ஆசை புரியவில்லையா ?

என்ன நியாயமான கேள்விகள் ! இந்த மரபணு மாற்றிய கத்தரிக்காய் பற்றிய தகவல்களை, ‘தகவல் அறியும் சட்டத்தில்’ கேட்டார்களாம் சில சமூக ஆர்வலர்கள். ஆனால், அது ‘வர்த்தக ரகசியம்’ என்பதால் தர இயலாது என்று கூறி விட்டார்களாம். அவர்களுக்கு அது ‘வர்த்தக ரகசியம்’; நமக்கோ, வாழ்க்கையும் சந்ததியும் அத்தியாவசியம். வாழ்க்கை அத்தியாவசியத்தை விட ‘வர்த்தக ரகசியம்’ முக்கியம் எனில்; அதில் சந்தேகம் கொள்வதில் எள்ளளவும் தவறில்லை. அந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை.

இப்படித்தான், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் முன், வீட்டுக்கு தொலை பேசினான் நண்பன், “ஹ்ம்ம்.. வீட்டில் என்ன குழம்பு இன்னிக்கு?”
“கத்தரிக்காய் சாம்பார்-ங்க”
“ஹ்ம்ம்.. சரி.. யார் சாம்பார் வெச்சது? நீயா? பாட்டியா?’
“இன்னிக்கு, நானே காய் வெட்டி கொழம்பு வெச்சேங்க!”
“ஓ! அப்பிடியா .. ஹ்ம்ம்.. சேரி…. வரும் போது நான் வெளியில சாப்பிட்டு வந்திடரேன். எனக்கு சோறு வைக்க வேண்டாம்”
“இல்லீங்க. நீங்க வீட்டுக்கு வந்திடுங்க… இது ஒன்னும் அமெரிக்கா கத்தரிக்கா இல்ல; நம்ம ஊரு கத்தரிக்கா தான் பயபடாதீங்க!” என்றாள்.
அதற்கு நம்மாளு, “பயம் அமெரிக்கா மேல இல்ல !!!” என்றான்.
அதற்கு அவள், “பாருங்க! நான் பன்னின கத்தரிக்கா சாம்பாருக்கு பேடன்ட்(Patent) கூட கிடைக்கும்.  தெரிஞ்சுக்கங்க!’
அதற்கு நம்மாளு, “நீ பன்னின கத்தரிக்கா சாம்பாருக்கு பேடன்ட் (Patent) கிடைக்குதோ இல்லியோ; ஆனா, அத சாப்பிட்டா பேஷன்ட் (Patient) கிடைப்பாங்க !!”

……………………..……………………..……………………..……………………..
……………………..……………………..……………………..……………………..
……………………..……………………..……………………..……………………..


மரபணு ‘பேடண்ட்’ தெரிந்து கொள்வது இல்லை நம் நோக்கம்; நாமும், நம் நிலமும், தொடரும் சந்ததியும், சந்தடி சாக்கில் ‘பேஷன்ட்’ ஆகி விடக் கூடாது என்பது தான் நம் நோக்கம்! வேறொன்றுமில்லை !!

ஹரீஷ்

இளமை பருவத்து இன்பம் !



ளமை பருவத்திற்கு பெரிதும் இன்பம் சேர்ப்பது –  நட்பா ? காதலா ?

திருவள்ளுவர், திருக்குறளில் நான்கு அதிகாரம் நட்புக்கு மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்.
  • நட்பு.
  • நட்பாராய்தல்.
  • தீ நட்பு.
  • கூடா நட்பு.
ஏன் ? ஏனெனில், திருவள்ளுவருக்கு தெள்ளென தெரிந்திருக்கிறது, மனிதர்களுக்கு நட்பு என்பது மிக முக்கியம். நட்பு இல்லாமல் மனிதன் இல்லை என்பதும். எது முக்கியமோ அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா ? அதனால் தான் நட்பில் கூடுதல் அதிகாரம் வைத்து இருக்கிறார் திருவள்ளுவர்.

ஒரு குறளில்;
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு !
என்கிறார்.அதாவது, அரசர்களில் ஆண் சிங்கமாக இருக்க; அரசனுக்கு தேவையானவை, படை, குடிகள், அமைச்சர்கள், நண்பர்கள், அரண் ஆகியவை. 
ஏன், திருவள்ளுவர் வந்து.
            படை குடி கூழ் அமைச்சு அந்தப்புறம் அரண் ஆறும்
            உடையான் அரசருள் ஏறு !
என்று சொல்லி இருக்கலாம் அல்லவா? சொல்லவில்லையே ! ஏன் ? ஏனென்றால்,  அந்தப்புறம் சிற்றின்பம். நட்பே பேரின்பம் ! அதனால் தான். ‘நட்பை’ப் பெற்றால் அரசன் ஆகலாம். ‘காதலை’ கொண்டால் ஆன்டியாகலாம் !! 

கம்பன், கம்பராமாயனத்தில் நட்பை பற்றி ஒரு இடத்தில் மிக அருமையாக அற்புதமாக விளக்குகிறார். ராமரை சந்திக்கிறார் சுக்ரீவன். ராமர் சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு; இவ்வாறாக கூறுகிறார். 
  ‘மற்று இனி உரைப்பது என்னே? 
     வானிடை. மண்ணில் நின்னைச்
  செற்றவர் என்னை செற்றார்;
     தீயரே எனினும். உன்னோடு 
  உற்றவர் எனக்கும் உற்றார்; உன் 
     கிளை எனது; என் காதல் 
  சுற்றம். உன் சுற்றம்; நீ என் 
     இன் உயிர்த் துணைவன்’ என்றான் !! 
ராமர் இப்படி கூறியவுடன் சுக்ரீவனோடு வந்த குரங்கு சேனைகள் எல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றன. ராமருக்கு, அந்த அடர்ந்த காட்டில் மனைவியை பிரிந்த அந்த வேளையிலும் காட்டில் வானரர்களுடன் விளைந்த அந்த நட்பே சற்றேனும் இன்பம் சேர்த்தது. வீம்புக்கு சிலர், குரங்குக்கு ‘காதல்’ கூட வரலாமே என வாதிடலாம். அதுவும் சரிதான்; அப்படித்தானே எய்ட்ஸ் முதல் முதலாக வந்தது. வரட்டும் வரட்டும் !! 

இளமை என்றால் என்ன? இளமை என்றால் விடலைப் பருவத்திற்கு பிறகு வருவது. அதுதான் இளமைப் பருவம். அதாவது கல்லூரிக் காலம் மற்றும் திருமணத்திற்கு முந்தைய காலம் எனக் கொள்ளலாம். கல்லூரி காலங்களில் அடைந்த இன்பம் தான் எத்தனை ! எத்தனை ! 

  நாயர்     கடையில்  
  காந்தி     கணக்கில் 
  நண்பர்    சூழ 
  குடித்த    தேநீர் !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

  நண்பன்   கொண்டு 
  வந்த      கட்டுச்சோறு; 
  உண்டு    முடித்தோம் 
  போட்டி   போட்டு 
  நன்பர்கள் யாவரும்; 
  கொண்டுவந்தவனைத் தவிர !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

  எப்போதோ     ஒருமுறை; 
  எதேச்சையாய் ஒருவன் 
  எடுத்துக்        கூற; 
  புத்தி           வந்து 
  கல்லூரி        சென்றது 
  நண்பர்         கூட்டம்; 
  தினசரி         செல்லும் 
  திரையரங்கை   கட்டடித்து !! 
  மறக்குமா மனதைவிட்டு !?! 

தேர்வு அறையிலே உட்கார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் பாஸ் ஆவதற்கு உதவியாய் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் அமர்வதும் யார்? காதலா ? நண்பனா ?!? வாழ்க்கையில், முன்னும் சரி ! பின்னும் சரி ! நண்பன் தான், தேவைப் படும் போது கை கொடுப்பவன். காதலா கை கொடுக்கும் ? காதல் ‘கால்’ வேண்டுமானால் கொடுக்கும். அதுவும் மிஸ்டு கால் !! 

கண்ணதாசன் அருமையாக பாடியிருக்கிறார். 
  வீடு வரை உறவு 
  வீதி வரை மனைவி 
  காடு வரை பிள்ளை 
  கடைசி வரை யாரோ ?   
கண்ணதாசனின் அந்த, ‘கடைசி வரை யாரோ ?’ என்ற கேள்விக்கு விடை மிக எளிது. ‘இளமையில் இருந்து, இன்பத்தில் இனைந்து; துன்பத்தில் தோள் கொடுக்கும் அந்த நட்பு தான்’ கடைசி வரை !! ஆக, இளமையில் துன்பத்துக்கு தோள் கொடுப்பதில் ஆகட்டும், இன்பத்தை இரட்டிப்பாக்குவதில் ஆகட்டும் இரண்டிற்கும் மனித குலம் பெரிதும் நம்புவது நட்பையே !!

ஹரீஷ்

நிலவில் நூலகம் !





“நூல்……….…..” என்று தொடங்குகின்ற;
அல்லது “……….…..நூல்’ என்று முடிகின்ற;
அல்லது “……நூல்….…..” என்று கொண்ட;

நி
ற்
க.


ப்படி, தொடங்குகின்ற; முடிகின்ற; கொண்ட; என்றவுடன் ‘திருக்குறள்’ தான் போலும் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதீர்.


சற்றேனும் சிரமப்படாமல், சிந்தித்து சொல்லுங்கள்; ‘நூல்’ என்ற சொல் கொண்ட தமிழ் திரைப்படம் ஏதேனும் ஞாபகம் வருகிறதா? அட்லீஸ்ட். ‘காதல் நூல்’ என்றாவது தமிழ் திரைப்படம் வந்துள்ளதா? யாம் அறிந்தவரை இல்லை. ஆமாம் ! இவரு எல்லா மொழி திரைப்படமும் பார்த்து கரைத்து குடிச்சிட்டாரு; இதில் ‘யாமறிந்த’ ஒன்றுதான் குறைச்சல் !

சற்றே ‘கூகிள்’ செய்து பார்த்ததில், ஒரு தமிழ் திரைப்படம் ‘நூல்’ கொண்டு வெளிவந்தது தெரிந்தது. திரைப்படத்தின் பெயர் ‘நூல் வெளி’.


நகரங்களில், சினிமா கொட்டகையை கூட எளிதில் கண்டு பிடித்து விடலாம்; ஆனால் இந்த நூலகம் கண்டு பிடிப்பதற்கு பெரும் பிரயத்தனம் தான் பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சில சிறந்த நூலகங்கள்; சென்னை கன்னிமரா நூலகம். சென்னை தேவநேயப் பாவானர் நூலகம். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம். அதிலும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் பல நூற்றாண்டு தொன்மை வாய்ந்தது.


சென்னையில் ஆட்டோ காரனிடம் நடந்த சம்பாஷனை; இதோ கீழே.

"யப்பா…. தேவநேயப் பாவானர் நூலகம் வரை போகனும்.. ஆட்டோ வருமா?"
"அத்து … எங்கக்கீது வாத்யாரே ?"
"அதான்ப்பா… இந்த ஆனந்தோ.. கீனந்தோ ? ஏதோ தியேட்டராமே ? அதுக்கு பக்கத்துலப்பா."
"அத்த மொதல்ல சொல்றதில்லயா வாத்யாரே ! இந்த பொஸ்தகம் எல்லாம் அடுக்கி வச்சிருப்பாங்களே அந்த பில்டிங்க் தானே ! ஏறு சாரே."

இதுதான் இன்றைய மக்களின், ‘நூலகம்’ பற்றிய விழிப்புணர்வின் விகிதாச்சாரம்.இப்படி எல்லாம் கேள்விகள் வந்தால் சந்திரனின் ‘நீர்’ இருந்து தான் என்ன பயன் ? ஒருவேளை, சந்திரனில் ‘நூல்’ இருந்திருக்க வேண்டுமோ ? 

அடுத்த முறை சந்திரயான் அனுப்பப் படும் போது, இந்திய செம்மொழிகளான சமஸ்கிருதத்திலும், தமிழிலும், ஒரு பொது மறை புத்தகத்தை (தமிழுக்கு : திருக்குறள்) நிலவில் வைத்து; சிறு மற்றும் முதல் ‘நூலகம்’ அமைத்து விட்டு வரலாம். பாருங்க, எல்லா விழிப்புணர்வுக்கும் திரைத்துறையையே நம்பிக் இருக்க முடியாது அல்லவா? இப்படி ‘நிலவில் நூலகம்’ வைத்தாலாவது சற்றேனும் நூலக விழிப்புணர்வு ஏற்படலாம் ! எவ்வளவோ யோசிக்கிறோம், இத யோசிக்க மாட்டோமா !


பாட்டி வடை எல்லாம் சுடுறாங்க நிலாவில் ! ஒருவேளை, பாட்டி சுட்ட வடை ஜவ்வு மாதிரி ‘நூல் நூலா’ இருக்கு என்று சொல்லி; “அட! நம்ம பாட்டி நிலாவில் ‘நூல்’ எல்லாம் வச்சிருக்காங்களே” என்று சொல்லியும் பெருமை பட்டு கொள்ளலாம்.


ஹரீஷ்

காந்தி எனும் காந்தம் !!






மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.
புகைப் பிடித்தவர்; வீட்டு வேலைக்காரனிடம் பணம் திருடியவர்; வீட்டில் தங்கம் திருடியவர்; மனைவியிடம் கடுமையாய் நடந்து கொண்டவர்; மனைவியை சந்தேகம் கொண்டவர்; விபச்சாரியிடம் சென்று திரும்பி வந்தவர்; மனைவி கணவனுக்கு அடிமை என்று எண்ணியவர்; தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர்; இருட்டு, பேய் பிசாசு போன்றவற்றைக் கண்டு பயந்தவர். சீட்டு ஆடியவர்; நண்பர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி ஆபாச வார்த்தைகள் பேசியவர்.

இவரைப் போயா மகாத்மா என்பது ? அது அபத்தம் ஆயிற்றே ?

காந்தி மகாத்மாவா ? இல்லையா ?

காந்தி, தன் நிறைகளைக் காண்பதை விட தன் குறைபாடுகளையே அதிகம் உணர்ந்தவர்.

கதராடை அணிந்த அந்த தொண்டுக் கிழவர் தான் கோட் சூட் அணிந்த ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற்றியவர்.
கையில் கைத்தடி ஊன்றிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்த காந்தி தான், கன் (GUN) மற்றும் கேனான் (CANON) உடைய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையே தள்ளாட வைத்து இந்திய நாட்டை விட்டு அகற்றியவர்.

இது எப்படி சாத்தியமாயிற்று ?

ஆங்கிலேயர் பல நூறு ஆண்டுகள் இந்தியாவை அடிமை ஆட்சி புரிந்த பின், காந்தியின் அந்த ஒரு அஸ்திரத்தால் தாக்கப்பட்டு சுதந்திரத்தை ‘இந்தாப் பிடி’ எனக் கொடுத்து விட்டு ஓடிச்சென்றனர். அந்த அஸ்திரம் தான் அஹிம்சை; சத்தியாகிரகம். சத்தியாகிரகம் என்றால் உண்மையில் உறுதி.

ஆங்கிலேயரின் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும், பில்டிங் ஸ்டிராங்க் ஆனா பேஸ்மென்ட் வீக். காந்தியின் அஹிம்சைக்கும் அறப்போராட்டதிற்க்கும், பில்டிங்கும் ஸ்டிராங்க் பேஸ்மென்டும் ஸ்டிராங்க்.

காந்திஜி ஒரு போராட்டத்தில் இறங்கும் முன் சம்பந்த பட்டவர்களிடம் முதலில் பேசி, பிரச்சினையை நேரடியாய் களையப் பார்ப்பார். அதிலும், குற்றம் புரிந்தோரிடம் நேரிடையாக விவாதித்து பின்னும் தவறு செய்தவர் திருந்தவில்லை எனில், பிறகே போராட்டத்தை தொடங்குவார்.

இப்படியாக காந்தியை உதாரணமாகக் கொண்டு தற்போது உள்ள அரசியல்வாதியிடம் சென்று, “ஐயா, நீங்க கொடுத்த ரோடு காண்டிராக்ட்டில் ஊழல் நடந்திருக்கு. அதனால அந்த ரோடு கான்டிராக்டரை மாத்திட்டு நேர்மையான காண்டிராக்டரை மாத்தலைன்னா, அந்த ரோடு போடற இடத்தில் ஜனங்களை கூட்டி போராட்டதில் ஈடுபட வேண்டி இருக்கும்”, என்றால்.
அரசியல்வாதியோ, “சரிங்க நீங்க போங்க, பின்னால நான் பாத்துக்கறேன்” என்கிறார்.
நாமோ பெருமிதமாய் வெளியே வந்தால், நம்மைப் பின் தொடர்ந்து, சத்தமின்றி ஒரு ரோடு ரோலர் மெல்லமாய் நகர்ந்து வர ஆரம்பிக்கிறது.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் – வள்ளலார்.
வாடிய விவசாயின் முகம் பார்த்து, அந்த விவசாயியின் குறைந்த மேலாடையை பார்த்து அந்த விவசாயியின் துயரைத் தானும் அனுபவிக்க தன் ஆடையையும் தியாகம் செய்தவர் – காந்தியடிகளார்.

சரியாக சிந்திக்காத சொல் ஒன்றையும் அவர் வாயில் இருந்து வந்து விடாது. ஒன்றை சொல்லிவிட்டு பின் அதற்காக வருந்துபவர் இல்லை காந்தி. காந்திஜி, காற்று வாக்கில் வாய்க்கு வந்ததை பேசக் கூடியவர் இல்லை. ஒரு விஷயம் காந்திஜி கூறுகிறார் என்றால் அந்த விஷயத்தின் அடி ஆழம் நுனி வரை ஆராய்ந்து பரிசோதித்து உணர்ந்த பின் தான் அவர் வாயில் இருந்து வார்த்தை வரும். இன்றோ, நாம் அடிக்கடி கேட்கக்கூடிய ஒரு டையலாக், “அது …………….ப்போன வ்வாரம். ந்நான் சொன்னது இந்த வ்வாரம்’ போன்ற மழுப்பல்கள்.
காந்தி அறிவியலை அவ்வளவாக கற்றதில்லை. ஆனாலும் மக்களின் மனம் எனும் இயலை அறிந்தவர். அதனால்தான் காந்திஜி ஒரு விஷயம் செய்ய சொன்னால், மக்கள் அதைத் தாங்களே சொன்னதாய் எண்ணிக் கொண்டு செயலில் இறங்கி விடுகிறார்கள்.

சாதிப் பிரிவினையையும் மதப் பிரிவினையையும் கடுமையாய் எதிர்த்தவர். சாதி மற்றும் மதப் பிரிவினை கூடாது என்பதை வலியுறுத்தி பல முறை தன்னை வருத்தி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

காந்தி, விபச்சாரியிடம் சென்று வசை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தவர். காந்தி ஏக பத்தினி விரதன். திருமணத்திற்கு பிறகு, ஒரு கால கட்டத்தில் பொது சேவையில் தன்னை முழுமையாய் ஈடு படுத்திய பின், பூஜிய பத்தினி விரதனாகவே தன்னை மாற்றிக் கொண்டார். பூஜிய பத்தினி விரதன் என்றால் பிரம்மச்சரியம். அப்படி இருக்க என்ன ஒரு மனத் தூய்மை வேண்டும். என்ன ஒரு சேவை நோக்கம் வேண்டும். இன்றோ சாமியார்களும் சி.டி வெளியிடுகிறார்கள்.

எப்போதும் தன் அந்தராத்மாவின் குரலுக்கு அடி பணிபவர். தன் சொந்தக் குறை எதற்காகவும் நீதிமன்றம் செல்வது இல்லை என்ற உறுதி கொண்டவர். சொன்னதை செய்பவர். செய்வதை மட்டுமே சொல்பவர்.
இப்படித்தான்,
இரண்டாம் முறையாய் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன் கப்பல் கரையில் நின்று கொண்டு இருக்கிறது. காந்தி தென்னாப்பிரிக்கா வரக் கூடாது என்று வெள்ளையர்கள் அவரின் கப்பலை, துறை முகம் வர முடியாமல் நிறுத்தி வைத்து இருந்தனர். கப்பலில் இருந்தவர்கள் காந்தியிடம்,“வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றினால் உங்கள் அஹிம்சையை எப்படிக் கடைப்பிடிபீர்கள்”, என்றனர்.
அதற்கு காந்தி, “அவர்களை மன்னித்து அவர்கள் மீது வழக்கு தொடராமல் இருந்து விடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்று நம்புகிறேன்” என்றார். கேள்வி கேட்டவரோ சிரித்தார். இப்படியும் இருக்க முடியுமா? என்று. பின் காந்தி துறைமுகம் வந்தவுடன் அவரைக் கண்டு பலரும் கூடி கற்களாலும் அழுகிய முட்டையாலும் அடித்தனர்.
ஆனாலும் தன்னை அடித்தவர்களைப் பற்றி காந்தி இவ்வாறாக கூறுகிறார். “தங்கள் பிழையை உணரும் போது அவர்கள் சாந்தம் அடைவது நிச்சயம். அவர்களுக்கு நியாய புத்தியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார். “என்னைத் தாக்கியவர்கள் மீது குற்றம் சாட்டி வழக்கு தொடரக் கூடாது என்பது என் கொள்கை” என்றார். சொன்னதையே செய்தும் காட்டியவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் மரண தண்டனைக் கைதி கோட்சே.
காந்தியை சுட்டுக் கொன்றதால் இந்திய நீதி மன்றம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. ஒரு வேளை, கோட்சே சுட்ட குண்டு காந்தியை மாய்க்காமல் இருந்திருந்தால், காந்திஜியே முன் வந்து கோட்சேவை மன்னித்து இருப்பார். அதுதான் மகாத்மா.

காந்தி செய்த சோதனைகள், அவர் நமக்காக அடைந்த வேதனைகள், நம்மை முன்னிட்டு செய்த தியாகங்கள், தொடுத்த போராட்டங்கள் கணக்கிலடங்கா.

அது ஒரு வார இறுதி நாள். நண்பர்களுடன் மது அருந்திய மாலை. அன்று சத்திய சோதனை புத்தகத்தைப் பார்த்ததிலேயே சற்று நடுக்கம் ஏற்பட்டது. கண்களில் நீர் முட்டுகிறது. அந்த புத்தகத்தைத் தொடவும் மனம் கூசுகிறது. ஆன போதிலும் என்னைப் போன்ற மக்கு ஆத்மாவால், துளியும் மறுக்காமல் ஒத்துக் கொள்ள முடிகிறது காந்தி ஒரு மகாத்மா தான் என்று. அப்படி இருக்கையில் உங்களைப் போன்று மிகத் தெளிவாக சிந்திக்கும் ஆசாமிகளுக்கு, காந்தி ஒரு மிகப்பெரிய மகாத்மா தான் !


ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்