பாரதி சாடும் சாதி


க்கட்டுரையின் நாயகன்; கவிநாயகன், மகாகவி பாரதி. பாரதி பிறந்து 128 வருடம் உருண்டோடிவிட்டது. இன்றும் அவன் புகழ் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் வார்த்தைகளின் வீரியம், பல தலைமுறைகள் தாண்டியும் பீடு நடைப் போடுகிறது.

கால சக்கரத்தில், முன்னோக்கி ஒராயிரம் ஆண்டுகள் உருண்டோடினாலும்; அன்றும், சேது சமுத்திரத்தின் வழி செல்லும் மாலுமிகள் மிக விந்தையாய்த்தான் பேசுவார்கள், "அன்று, ஓர் அமரகவி கண்ட கனவு நனவானதில், நமக்குப் பிரயானம் எவ்வளவு எளிதாகிறதுப் பார்" என்று.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று உரைத்தான்; இதை சொல்லும் முன்னரே அவன் பல மொழிகள் கற்று தேர்ந்தவன். ஆம்! பாரதி பன்மொழி வித்தகன். அப்படிப் பட்ட பாரதியின் தமிழ் கவிதையைக் கேட்கும் பொழுது 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே'!

பாரதி ஓர் தமிழ் அகராதி தொகுத்திருக்கிறார். பாரதியின் சொல்லாட்சி பிரமிக்க வைக்கும். அவர் தமிழிலா எழுதினார்? இல்லை! தமிழ், பாரதியைக் கொண்டு தன்னைத்தானே எழுதிக் கொண்டது!

மூடநம்பிக்கைகளை மூட்டைக்கட்டவும், அச்சத்தை அகற்றவும் பல சிந்தனை சொற்கள் செதுக்கியவன். பெண்களின் சுதந்திரத்தை, பெண்கள் பேசும் முன்னரே இந்த பாட்டுடைத் தலைவன் பாடிவிட்டான்.

ஒருவர் நல்ல சொற்களைக் கூறினால், அதிலோர் நல்ல அதிர்வலைகள் பிறக்கும். அதே நல்ல சொற்களைக் கடைப்பிடித்தால் அதன் அதிர்வலைகள் அடர்த்தி ஆகும். இப்படி இருக்கையில், நல்ல சொற்களைச் சொன்னவரே, சொன்னபடி நடந்தும் காட்டினால் அந்த அதிர்வலைகளின் அடர்த்தி விகிதம் எப்படி இருக்கும்! அவன்தான் பாரதி! யப்பப்பா... பாரதி ஓர் யுகப் புரட்சி!

நாம், ஒரு தவறும் செய்யாதபோது; ஆனாலும் நாம் தூற்றப்பட்டும் சிறுமை படுத்தப் பட்டும், குற்றம் சாட்டப்படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படிபட்ட சூழ்நிலையில், பாரதியின் இந்தக் வரிகளை வாசித்துப் பார்த்தால் எவ்வளவு உத்வேகம் வருகிறது!


தேடிச் சோறு நிதம் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக்கு இரை எனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

சாதிகளை சாடியவன் இந்த முண்டாசுக்கவி; சாதிப் பிரிவினைப் பேசுவோரைப் பார்த்து, 'ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ' என்றான். சாதி மதங்களை பார்க்கக் கூடாது எனும் விதமாய்,'ஜாதி மதங்களைப் பாரோம்' என்றான். ஒரு படி மேலே போய், மனிதர்களில் ஏன் வீண் பிரிவினை; காகமும் குருவியும் கூட நம் இனமே எனும் தெய்வீக எண்ணமாய், 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றும் பாடினான். சாதியை, குழந்தையின் உள்ளத்தில் இருந்து முதலில் களைய வேண்டும் என்று, 'சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;' என்றும் பாடினான்.

பாரதிக்கு கனவுகள் அதிகம். அவன் கண்ட கனவுகள் யாவும் நிறைவேறக்கூடியவையும் கூட. பாரதியின் பல கனவுகள் நிறைவேறியும் இருக்கின்றன. ஒரு பாடலில், 'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்' என்று கனவுக் கண்டான்; பின்னொரு நாளில் எவரெஸ்ட் உச்சியை இந்தியர் தொட்டனர். 'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்று கனவு கண்டான்; பின்னொரு நாளில் வானொலி வந்தது. 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்று கனவு கண்டான்; சமீபத்தில் தான் நிலவில் நீர் ஆதாரம் இருப்பதை நமது சந்திரயான் வின்கலம் உறுதி செய்தது. 'கடல் மீனை அளப்போம்' என்று கனவு கண்டான்; இன்று இந்திய செயற்கோளின் மூலமாக கடலில் உள்ள மீன் ஆதாரம் தெரிந்து கொள்ள முடியும். 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்று கனவு கண்டான்; இன்று அந்த பணியும் நடைபெறுகிறது. அதே பாடலில் அவன் கண்ட முக்கியமான கனவை,  கடைசியாய் குறிப்பிடுகிறான், 'சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்' என்றான்; பாரதியின் இந்த கனவு ஒர் நாள் நனவாகுமா? நனவாகும்!



பொன்னியின் செல்வன்

3 comments:

ungalrasigan.blogspot.com 11 December 2009 at 19:56  

அட்டகாசம் பொன்னியின்செல்வன்! கடைசி பாரா நச்சென்று இருந்தது. Superb!

பொன்னியின் செல்வன் 11 December 2009 at 20:05  

_/!\_ ரவி சார், நன்றி! உங்களின் கருத்துகள் ஊக்கம் அளிக்கின்றன சார். சுடச் சுட பின்னூட்டம் அளித்து விட்டீர்கள்! நன்றி சார்.

Unknown 3 August 2018 at 21:23  

Super

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்