கருத்து சுதந்திரம் !!


சமீபத்தில் நான்  எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு பலர்,
‘இவர் என்ன தான் சொல்ல வருகிறார்’ என்று மிகக் கோவமாய் கேட்கிறார்கள்.  எனக்கோ ஒன்றும் புரியவில்லை, படிப்பவர்கள் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்? என்று.

ஒன்று மட்டும் புரிகிறது. கருத்து சுதந்திரம் என்பது எழுதுபவருக்கு மட்டும் இல்லை. அதைப் படிப்பவருக்கும் இருக்கிறது என்பதை வாசகர்களின் இத்தகைய கருத்தால் நிரூபனமாகிறது.


கருத்துகள் கூறப்பட்டால், முதலில் அதை காது கொடுத்து கேட்க வேண்டும். பிறகு அதை ஏற்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அண்ணாவின் மொழியில் மொழிவதாய் இருந்தால் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு”. மல்லிகை தோட்டம் உள்ளது கூவம் ஆற்றங்கரையா அல்லது காவிரி ஆற்றங்கரையா என்பதை அதன் மணம் உணர்த்தி விடும்.


சட்டசபையில் ஒரு கட்சிக்காரர் மறு கட்சிக்காரரை, “யோவ்! வெளிய வாய்யா ஒன்ன பாத்துக்கிறேன்“ என கோவமாய் உரக்க கூறினால், அதுவும் கருத்து சுதந்திரமே. ஆனால், அவை அவைக்குறிப்பில் இடம்பெறாது. ஏனென்றால் கருத்தை சொல்ல சுதந்திரம் இருக்கிற அதே வேளையில்; அவை, அவைக்குறிப்பில் இடம்பெற சில வரைமுறையும் இருக்கிறது.


பேச்சு சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பில் முக்கியமான ஒன்றாகும். அதாவது Right to Speech.
இந்த பேச்சுரிமை, குடியாட்சிக்கும் முடியாட்சிக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசங்களில் ஒன்று.


அரசாட்சி நடைபெறும் வளைகுடா நாடுகளில், அரசருக்கு எதிராய் ஏதாவது பேசுவதாகத் தெரிந்தால், அதை குற்றம் என்று, எதிர்த்து பேசியவரை, ஒட்டகம் வெட்டுகிற இடத்தில் ஒரு ஓரமாய் நிக்க வைத்து, ஹலால் செய்து விட்டு சென்று விடக் கூடும். ஏதோ கருத்து கந்தசாமி என ஜம்பம் விட்டு கொண்டு கண்ட இடத்திலேயும் கருத்து சொல்லி விட முடியாது. ஆக கருத்திற்கு பொருள் மட்டும் முக்கியம் இல்லை, இடமும் முக்கியம் எனத் தெரிகிறது.


குடியாட்சி நடக்கும் பல வளர்ந்த நாடுகளின் ஜனாதிபதிகளை, நேருக்கு நேர் நின்று சாதாரன அடித்தட்டு குடிமகன் கூட கேள்விகள் கேட்க முடியும். நிருபர்கள் கூட , ஜனாதிபதியிடம் தங்கள் காலனியின் அளவை பகிர்ந்து கொள்ள, 'இதோ பாருங்கள் !' என்று தூக்கி எறிந்து காட்ட முடியும் என்றால் எவ்வளவு சுதந்திரம் பாருங்களேன்.


நடிகையிடம் ஒரு விசிறி, “நீங்கள் ஒவர் ஆக்டிங் பண்றீங்க” என்றான். உடனே அந்த நடிகை தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அந்த நடிகையின் மேலாளர் ஓடி வந்து நடிகையை சாந்த படுத்தும் விதமாய், “மேடம் அவன் ஏதோ உளறுகிறான் மேடம். அவன் சொல்வதை நம்பாதீர்கள். நீங்கள் நடிப்பது ஒவர் ஆக்டிங் இல்லை மேடம். நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும் அதிகமாக நடிக்கிறீர்கள், அதைத்தான் அந்த முட்டாள் அப்படி உளருகிறான்” என்கிறார். இதை நம்பி, அந்த நடிகை ப்ரொடியூஸரிடம், தான் அதிகமாக நடிப்பதாய் கூறி சம்பளம் கூட்டி கேட்டால். ப்ரொடியூஸரின் கருத்து, “சம்பளமும் உடுத்தும் துணியும் இன்வெர்ஸ்லி ப்ரொபோர்ஷனல் (Inversely Proportional), பரவாயில்லையா மேடம் ?” எனக் கூறக்கூடும்.
ஆக, எண்ணங்கள் பல விதம் அதை ஏற்பது அவரவர் விதம்.


நம் நண்பர் ஒருவர் அதிகமாக பேசமாட்டார். நண்பர்களிடமும் அதிகம் பேச மாட்டார், உறவினர்களிடமும் அப்படியே. நாங்களோ அவரை, “நீன் பேசவே மாட்டேன் என்கிறாய். ஏன், எங்களாண்ட பேச பயமா கீதா ?” என்று சும்மனாகாச்சுக்கும் கேலியெல்லாம் செய்வோம். அவரோ ஒரு புன்சிரிப்பையே பதிலாய் தருவார். சமீபத்தில் அந்த நண்பருக்கு திருமணம் முடிந்தது.
நாங்கள், முன் போல் அவரை கேலி கிண்டல் எல்லாம் செய்வதில்லை. அதான் கல்யாணம் ஆயிடுச்சே, நாமளே புரிஞ்சுக்க வேண்டாமா !! கல்யாணத்துக்கு முன்னாலேயே அதிகம் பேச மாட்டார்; இப்போ கல்யாணமும் வேறு முடிந்து விட்டது. பிறகு கேள்வி எதற்கு? கேலிதான் எதற்கு ?. வெந்த புன்னில் வேலைப் பாய்ச்சவா?


பல தரப்பட்ட மக்களிடம் அவர்களின் எண்ணங்களை சேகரித்து, அதன் விடையை பிரதிபலிப்பதுதான் கருத்துக் கணிப்பு.
இந்த கருத்து கணிப்பு, சில நேரங்களில் குடும்பங்களை பிரிக்க செய்யும் பிறகு சேர்க்கவும் செய்யும். இதற்கு மேல் இதைப் பற்றி விளக்கினால் அது அரசியல் ஆகி விடக் கூடும்.
கருத்து கணிப்பு என்பது, ஒரே ஆளிடம் பலமுறை கருத்து கேட்பது கிடையாது, அது ஓரவஞ்சனை. பல்வேறு தரப்பட்ட மக்களிடம் கேட்பது தான் கருத்து கணிப்பு. சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு பிரபல தினசரி நாளிதழில், ‘எந்த கட்சி தேர்தல் பிரசாரத்தில் முன்னிலை வகிக்கிறது?’ என்ற கருத்துக் கணிப்பு கேள்வி இருந்தது. அதில் குறிப்பிடப்பெற்ற ஒரு கட்சி குறைந்த சதவிகிதத்தில் இருந்தது. நம் நண்பரோ குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியின் நடிகரின் ரசிகர். நண்பர், இரவு முழுதும் கணினியில் உட்கார்ந்து பல முறை வோட்டளித்து அந்த குறிப்பிட்ட கட்சியின் சதவிகிதத்தை உயர்த்திக் கொண்டு இருந்தார்.
இதை, மறுநாள் எங்களிடம் கூறிக் கொண்டும் இருந்தார். நம் நண்பரில் மற்றொருவர் சற்றே டெக்கீ (Techie – Technology) ஆசாமி. அதே விஷயத்தை அவர் கணினியில் புகுந்து ஐந்தே நிமிடத்தில் மற்றொறு கட்சி பெறும்பான்மை வரும் விதமாய், ஜாவா(Java) எனும் ஜாலத்தினால் மாற்றி, மாயா ஜாலம் காட்டினார். இப்படி கருத்து கணிப்புகளும் சில நேரங்களில் ஒருவரே முடிவு செய்யும் விதமாய் மாறக் கூடுகிறது.
தேர்தல் என்பதே ஒரு கருத்து கணிப்பு தான். தேர்தலோ, சற்றே கட்டுக்கோப்பான போலீஸ் பாதுகாப்புடன், சில சமயம் அடியாட்கள் அராஜகத்துடனும் நடைபெறும் கருத்துக் கணிப்பு. என்ன ஒரு கூத்து என்றால் முன்பெல்லாம் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் சரியில்லை என்றால், ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டு ஏதாவது ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்போம். இப்போதோ, '49-ஓ' இருக்க பயமேன். சில சமயங்களில் நாம் வீட்டில் ஹாயாக டீ.வி பார்த்து கொண்டு இருந்தால் கூட போதும், நமது ஜனநாயக கடமையை நமக்கு பதில் ஆள் (மாறாட்டம்) வைத்து நிறைவேற்ற பல கட்சிகள் முண்டி அடித்து கொண்டு முன் வரும்.


பூத்துக்கு வந்த மக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனாலும், தொகுதியின் வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பார். எல்லாம் கள்ள ஓட்டுகள்; நம் நண்பர்கள் கணினியில் செய்ததை நம் வேட்பாளர் பூத்தில் செய்கிறார். நம் நண்பர் அவருக்கு தெரிந்ததை செய்தார்; நம் வேட்பாளர் அவருக்கு தெரிந்ததை செய்கிறார்.
இப்படியாக தேர்தல் எனும் ஜனநாயகக் கடமை சிலரால் சீரழிக்கப்படுகிறது.


கருத்து கணிப்பு இருப்பது போல் கருத்து தினிப்பும் சில நேரங்களில் நடக்கக் கூடும். பெரும்பாலும் அரசியல் தலைவர்களுக்கு பொதுக் குழுக்களும், செயற் குழுக்களும் கருத்து தினிப்பு செய்ய உதவி புரியும்.


மனைவிக்கோ, “நான் சொன்னதை மீறி ஏதாச்சும் செஞ்சீங்கன்னு தெரிஞ்சிச்சு அவ்ளோதான். புரிஞ்சிச்சா?” என கணவனிடம் தங்கள் அன்பையும் கருத்தையும் தினிக்கிறார்கள். கணவர்களுக்கு தெரியும் அந்த ‘புரிஞ்சிச்சா?’ வின் அர்த்தம். அது புரியவில்லை என்றால், மறுநாள் மதியம் ஆபீசில், ஆம்படையாள் வைத்த, சற்றே உப்பு தூக்கலான சாம்பார் சாதம் சாப்பிடும் போது தானாக புரிந்து விடும்.


சமீபத்தில் விகடனில் அன்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார். தன் ஒரு வயது பையனை (சின்னஞ் சிறு குழந்தையை !!! ) வருங்காலத்தில் பைலட் ஆக்கப் போகிறாராம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று. இது வரும் காலத்தில் அந்த குழந்தை மேல் பெற்றொரின் கருத்து தினிப்பாக வராமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நம் குழந்தைகள் நம்மால் வந்தவர்களாக இருக்கலாம், ஆனாலும் நமக்காக வந்தவர்கள் இல்லை.


எங்கோ எதிலோ படித்தது, “சுதந்திரம் கொடுக்கப் பட்டால் கட்டுப்பட்டிருப்போம். கட்டுப்படுத்த நினைத்தால் நமது சுதந்திரத்தை நிரூபித்தே தீருவோம்”.
நமக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதை முறையாக சொல்வதிலும், கண்ணியமாக கையாள்வதும் நம்மிடம் தான் இருக்கிறது !!!


ஹரீஷ்

0 comments:

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்