தங்கம் ஆ-தங்கம்!


தங்கம் என்றாலே 'ஆ'வென்று வாய் பிளப்பவறாய்த்தான் இன்றளவிலும் பலரும் இருக்கின்றனர். இதில் ஆண்-பெண் பேதமேதும் இல்லை. பெண்களுக்கோ தங்கத்தின் மேல் சற்றே அதீத ஆர்வம். அழகுக்கு அழகு சேர்த்தது போலுமாயிற்று. பொருளுக்கு பொருள் சேர்த்தது போலுமாயிற்று. இவற்றையெல்லாம் விட, பெண்கள் சிலருக்கு இருக்கும் மற்றொரு ஆசை........ ஆசையா ? பேராசை........ பேராசையா ? ம்ஹூம்.. இல்லை.... பொறாமை! அந்த பொறாமை என்னவென்றால் தாங்கள் அணிந்திருக்கும் பொன் நகையைப் பார்த்து யாவரும் பல்லிளிக்கனும் பிரமிப்படைய வேண்டும் என்பதுதான். இப்படியாக, பிற பெண்களை தங்கள் மேல் பொறாமை பட வைப்பதில்தான் தங்கம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.

மஞ்சள் வண்ணம் மின்னும் பளபளப்பு; பார் போற்றும் வைபவம் எனவாக வளர்ப்பு மகன் திருமணத்தை நடத்திய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அந்தத் திருமணத்தை நடத்தியபோது வாங்கிய சம்பளம் ரூ.1. இப்போதோ நீதிமன்றப் படிக்கட்டுகளில் சொத்துக் குவிப்பு வழக்குக்காக அலைந்து கொண்டிருக்கிறார். இது எதைக் குறிப்பிடுகிறது என்றால், மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

இன்றைய தேதியில் வரதட்சனை என்பது கௌரவமாகப் போய்விட்டது. யாருக்கு? என்றால், மணமகன் வீட்டாருக்கு மற்றும் மணப்பெண் வீட்டாருக்கு என இரு வீட்டாருக்கும்தான். நாங்கள் 'இவ்வளவு போட்டோம்', 'இவ்வளவு செஞ்சோம்' 'இவ்வளவு கேட்டோம்' 'அவுங்க எவ்வளவு செஞ்சாங்க' 'மார்க்கெட் நிலவரம் தெரியுமா?' என் ஜம்பம் அடிப்பதற்குத்தான். 'மார்க்கெட் நிலவரம்' என்றவுடன் இன்றைய தேதியில் தங்கம் கிராம் எவ்வளவு என்ற நிலவரம் இல்லை; இன்றைய தேதியில் எவ்வளவு தங்கம் போடுகிறார்கள் சமூகத்தில் என்ற 'மார்க்கெட் நிலவரம்'. இதிலும் கெட்டிக்கார மணமகள்கள் இதுதான் சமயம் என்று, சமயோசிதமாக பிறந்த வீட்டில் இருந்து இருப்பதை உருவிக்கொண்டு, புகுந்த வீட்டிற்கு பொருள் சேர்க்கிறார்கள்.

இது போகட்டும் என்று, பொன் அல்லது வரதட்சனைப் பெறாத மணமகன் யாராவது இருக்கிறாரா என்று தேடிப்பார்த்ததில் இதுவரை யாரும் கண்ணுக்கு அகப்படவில்லை. ஆண்கள் கூற்று என்னவென்றால் "நாமாக கேட்பதில்லை; கேட்காமல் வருவதைத் தடுப்பதில்லை " என்று கலைஞர் வகையறா கன்ஃபுயூஷன் டையலாகை பெருமிதமாய் கூறுவதாய் எண்ணி, சுயநலமாய் தப்பித்துக்கொள்ளுகிறார்கள்.

[இவ்வளவு வரட்டு பேச்சு பேசுறீரே.. நீர் எப்படிங்கானும்..]

தங்கத்தின் தரம், இந்தியாவை விட வெளிநாடுகளான சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் சிறப்பாக இருப்பதாக வீட்டில் கூறுகிறார்கள். அதெல்லாம் நமக்கெப்படிங்கானும் தெரியும். அதுவும், அந்த நாடுகளில் தங்க மார்கெட்கள் மிகப் பிரசித்தம். வளைகுடாவில் அதனை கோல்ட் சோக் (Gold Souk) என்று கூறுகிறார்கள்.

இந்தியா வந்த போது வீட்டில், "கோல்ட் சோக்-கில்(Gold Souq) தங்கம் நல்ல சூப்பரா குவாலிட்டியா இருக்குமே! அங்கே எல்லாம் போயிருக்கியா?" என்று கேட்டார்கள்.

நமக்கோ நாரதர் நாக்கில் நாட்டியம் ஆடுபவர். "ஒ! போயிருக்கேனே.. பயங்கர நெரிசலான ஏரியா.. எப்பம் பார்த்தாலும் கூட்டம் அலைமோதும்.. மக்கள் பரபரப்பாக இருப்பார்கள்... " என்றோம்; மேலும் தொடர்ந்து, "ஆனா குவாலிட்டி பத்தியெல்லாம் எனக்கு தெரியாது" என்றோம். மேலும், "அங்க கோல்ட் சோக்-ல நடந்து போனப்ப, கடைத்தெரு வழியா போகும்போது கையில ஃபோட்டோ வெச்சுகிட்டு, 'இந்தாங்க பாருங்க; இந்தோ பாருங்க; இது ஓகே-வா?' அப்டின்னு காட்டுவாங்க!" என்றேன்.

வீட்டிலே ஆச்சரியமாய், "ஓ! அப்படியா! நகை டிசைனை மார்க்கெட் பன்ன இப்படி கடைவாசலில் நின்னு ஃபோட்டோவைக் காட்டுறாங்களா?" என்று அப்பாவியாய் கேட்கிறார்கள்.

நாமோ அமைதியாய், "கடை வாசல்ல இல்லை" என்றோம்.

வீட்டில் சற்றே குழப்ப ரேகையுடன், "வேற எங்க?" என்கிறார்கள்.

நாமோ, முன்பு இருந்த அதே பொறுமையுடன், "தங்க மார்க்கெட் இருக்குற ஏரியாவில் உள்ள லாட்ஜ் வாசலில்" என்றோம்.

வீட்டிலோ, குழப்ப ரேகை போய், சந்தேகரேகைத் துளிர்விட, "என்ன ஃபோட்டோ?" என்கிறார்கள்.

நாமோ, மீண்டும் பொறுமையுடன், "பெண்கள் ஃபோட்டோ" என்றோம்.

இதைக் கூறியவுடனேயே, நாரதர் எழுந்து நின்று நாட்டியம் ஆடத்தயாராகி விட்டார் நாக்கில். எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்டதைப் போல், நாமோ, "தங்கம் என்றால் எப்படி வாங்க வேண்டும். உரசி பார்த்துதான் வாங்க வேண்டுமோ?" என்று அதே பொறுமையோடும் பவ்யத்தோடும் கேட்க, நாரதர் நாட்டியத்தின் உச்சியில் இருந்தார் என்றால் பாருங்களேன்!

ஏனோ தெரியவில்லை, வீட்டில் இப்போதெல்லாம் தங்கத்தின் தரம் வெளிநாட்டைவிட இந்தியாவிலேயே சிறப்பாக இருப்பதாகக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், "கோல்ட் சோக்" எல்லாம் போய் அலையாதே என்றும் கரிசனமாய்க் கூறுகிறார்கள். ஏன் சார்! எங்கே, தங்கத்தில் குவாலிட்டி(Quality) பாக்க போய் கடைசியில் கில்டியாக(Guilty) முடிந்துவிடும் என்ற கரிசனமோ!

சரி அத விடுங்க சார்!

கிளாஸ்-மேட் (CLASS Mate) எல்லாம் க்ளாஸ்-மேட்(GLASS Mate) ஆகின்ற தருனத்தில் தங்கபாட்டில் என்றால் அதன் அர்த்தமே வேறு. என்ன அர்த்தமா? தங்கத்தின் கெமிக்கல் சிம்பல்-AU, கெமிக்கல் நேம்-AURUM. வார இறுதியில் வகுப்பு நண்பர்கள் குழுமும் போது, தங்க பாட்டில் என்றால் அதன் அர்த்தமே வேறு! அதாவது, AURUM என்ற வார்த்தையின் கடைசி மூன்று எழுத்தான 'RUM' என்ற வார்த்தையைப் பார்த்தாலே புரிந்து போகும். முதல் இரண்டெழுத்து 'தங்கத்தை' குறிக்க, கடைசி மூன்றெழுத்து 'பானத்தை' குறிக்க, அந்த வேளையில், கிளாஸ்-மேட்ஸ் (CLASS Mate) எல்லாம் ஒன்ற சேர்ந்து க்லாஸ்-மேட்ஸ்(GLASS Mate) ஆகின்ற தருனத்தில் தங்கபாட்டில் என்றால் அது சோமபானத்தைக் குறிக்கும்.


சுத்தமான தங்கம் என்பது 24 கேரட். அந்த சுத்த தங்கத்தை வைத்து தங்கக்கட்டி மட்டும்தான் செய்யமுடியும்; ஆபரணங்கள் செய்ய முடியாது. சூடான சுத்தமான தங்கம் எடுத்து சற்று காப்பர் மற்றும் சில உலோகங்களைச் சற்றே கிண்டி எடுத்து, ஆறவைத்து எடுத்தால் 22 கேரட் தங்கம் கிடைக்கும். கூடவே தங்க நகைகளும் கிடைக்கும். உபரியாய் 'அசூயை' கிடைக்கும்.

அந்த சுத்த 24 கேரட் தங்கத்தில் சற்று மிகுதியாகவே காப்பர் மற்றும் சில உலோகங்களைக் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்தால் பற்பல டிசைனில் வகை வகையாய் நகைகள் கிடைக்கும். விலையோ பர்ஸை கடிக்கும்.

இவற்றைத் தவிர, தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடும் கூட என்கிறார்கள். தங்கம் அதன் சுரங்கத்தில் கட்டிகட்டியாய் இருக்காது, ச்சும்மா போய் வெட்டி எடுத்துக் கொண்டு வந்துவிட. தங்கம் பிரித்தெடுக்கப் படுவதற்கு முன்னால் பல்வேறுபட்ட உழைப்பு இருக்கிறது. பல ஆயிரம் கிலோ தங்கத் தாது வெட்டி எடுத்து வந்தால்தான் சில கிராம் தங்கம் கிடைக்கும். இதைப்போலவே, ஒரு மனிதனிடம் ஒரு சிறிய சிறந்த நற்பன்பைப் பார்க்கும்முன் பல ஆயிரம் தூசுகளைத் தான்டித்தான் பார்க்க இயலும்.


எதில் எல்லாம் சிறப்பு இருக்கிறதோ, அதிலெல்லாம் போலி என்ற ஒன்று உருவாகும் என்ற உலக நியதிக்கு இனங்க, தங்கநகைகள் போல தோற்றம் இருக்கின்ற கவரிங் நகைகளும் பிரசித்திதான். அது சரி! இது என்ன கவரிங் நகை என்று வினவினால். கவரிங் நகையில் இருக்கிற ஜொலிப்பால், தங்கம் போல் காட்டி ஆண்களை 'கவர்' பண்ணத்தான் என்கிறார்கள் கூலாக. ஓ! அதனால் தான் இது 'கவரிங்' நகை போலும்!

திருப்பதி கோவிலின் உட்பிரகாரத்தில் தங்கத்தகடுகள் பதிக்கப் போகிறார்களாம். எல்லாம் மக்கள் காணிக்கையாக்கிய பணம். செய்யட்டுமே.. ஷேமமாய் செய்யட்டுமே .. அப்படியே கோவிலுக்கு வர்ற பக்தர்களுக்கு, ஒரு கால் கிராம் தங்கக் காசு கொடுத்தால்... கொடுத்தவனுக்கே திரும்பவும் கொடுக்கப்பட்டது என்ற திருப்தியும் ஏற்படும். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் கூடுவார்கள். பிசினசும் சூடு பறக்கும். இதுதான் சின்னமீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது.

தந்தை பெரியார் அவர்கள், பெண்களின் தங்க நகை அலங்கார மோகத்தைப் பற்றி மிக சிறப்பாக இவ்வாறாக குறிப்பிடுகிறார்கள்:
"அலங்கரிப்பு இல்லாத பெண்களைப் பார்த்தால்தான் குணத்தை மதிப்பார்கள். மதிக்கவும், நேரமும் புத்தியும் போகும். அலங்கரித்த பெண்ணைப் பார்த்தால் உடலையும் உருவத்தையும் மதித்துத் தப்பான உணர்ச்சியைத்தான் பெறுவார்கள். சுத்தமாய் இருக்க வேண்டும் என்பதிலும் பார்வைக்கு வெறுப்பு, அசிங்கம் இல்லாமல் பசுந்தாய் (Neat-டாய்) இருக்க வேண்டும் என்பதிலும் நமக்கு எள்ளளவும் அக்ஷேபனை இல்லை." மேலும், "பெரிதும் இந்த மாதிரி அலங்காரம் எதற்குப் பயன்படுகிறது எப்படிப்பட்டவர்களுக்கு இது தேவை இருக்கிறது என்று பார்த்தால், மிகவும் அதிருப்தியான பதில்தான் காணப்படும். ஏனெனில் நல்ல அறிவும், மானமும், நாகரிகமும் உள்ளவர்கள், மற்றவர்கள் தங்களைப் பார்த்து 'இந்தப் பெண் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்திருக்கிறாள். அழகுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறாள். இவள் மிகவும் சிங்காரமாக இருக்கிறாள்' என்று சொல்லுவதற்கே இடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்".

பெரியார் சொன்னால் சரிதான்!

இப்படிப் பட்ட பெண்களைப் பார்ப்பது எப்போது? அதுதான் ஆ-தங்கம்!


-பொன்னியின் செல்வன்-

ஏன் கடவுள்?



18+  வயதுடையோர் மற்றும் 18- வயதுடையோர் மட்டுமே!

அட! எல்லோருமே வாசிக்கலாம்! விரசம் ஏதும் இருக்காது. சாமியார்களைப் பற்றியும், கடவுளைப் பற்றிய பதிவு என்றால் இப்படிப்பட்ட முன்குறிப்பு அவசியமாகிறது.  இங்கே, சாமியார்கள் பற்றிய செய்திகளை 18+ வயதுடையோர் மட்டுமே வாசிக்கலாம் என்று சொல்லும் நிலை வந்துவிட்டதே என்பதால்தான் இந்த முன்குறிப்பு.

வெளிநாட்டு நண்பர் ஒருவரிடம், 'இந்த' மாதிரி நடந்துச்சு, ஒரு 'இந்த' சாமியார், 'இந்தமாதிரி' ஒரு நடிகையுடன் 'அந்த நேரம் அந்தி நேரம்' என்று இருக்கும் ஒரு 'இந்த' வீடியோ ஆதாரம் டிவியில் 'இந்தமாதிரி' வந்திச்சு என்று சொன்னால்,  அதற்கு அந்த நண்பர் கூறியது, சிரிப்பு வந்து விட்டது; அவர் கேட்டது இது தான், "அது சரி, அந்த சாமியார் ஒப்புதல் இல்லாம எப்படி அந்த வீடியோ எடுத்தாங்க. அது தப்பில்லையா? அதுதானே முதல் தப்பு? அது அந்த சாமியாரோட தனிமையைத் தொல்லை பண்ற மாதிரி இல்லையா?"  என்று கேட்டார். நண்பரோ வெளிநாட்டவர்; அதனால் நம் ஊரைப் பற்றி எல்லாம் அவ்வளவா தெரியல. நண்பர் கூறியதோ, தனிமனித சுதந்திரம் எனும் பரந்த நோக்குடன். பிறகுதான், சாமியார் என்றால் இந்தியாவில் உள்ள விளக்கங்களைக் கூறநேரிட்டது. அவரை நம்பி மக்கள் எவ்வளவு காரியங்களில் இறங்குகிறார்கள். சாமியார்களை கடவுளாக மதிப்பது, சாமியார்களோ மக்களை சல்லியாய் நினைப்பது போன்று பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

பிரமச்சரியம் என்பதும், காவித்துணி என்பதும் வணிக மூலதனம்-Trade capital; பக்தகோடிகள்தான் முதலீட்டாளர்கள்-Investors. பக்த கோடிகளின் காணிக்கைதான் முதலீடு-Investment;  இதைக்கொண்டு இந்தத்தொழிலை சாமியார் எப்படி நடத்துகிறார் என்பதுதான் வணிகதந்திரம்-Business Tricks. இதில் தொழில் போட்டிகள் வேற இருக்கும் போல; ஆக, எது வணிக மூலதனமாக Trade Capital-ஆக வைக்கப் பட்டதோ அதற்கு குந்தகம் விளையும் போது முதலீட்டாளர்கள்-Investors கோபம் கொள்வது வாடிக்கைதானே. அந்த வாடிக்கைதான் சற்றே வேடிக்கையாய், கல்வீச்சு, சூறையாடல் என்ற நிகழ்வுகள் மடங்களின் மீது வந்தன. மேலும், சத்சங்க கூடங்களை சாத்தி நொங்கு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். ஆக, இது சாமியாரின் தனிமனித உரிமையில்லை. பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி.

அதாவது, மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கவைப்பது, அந்த மூடநம்பிக்கையால் லாபம் பார்ப்பது; லாபம் பார்த்தாலும் பரவாயில்லை சல்லாபமும் செய்கிறார் சாமியார். மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்ததும், ஆசிரமத்திற்கு பாதகம் விளைந்துவிட்டது.

இந்த சாமியார்கள் இருக்கிறார்களே, சாமியார்களை சந்திப்பதும் சுலபம் இல்லை, இப்போதெல்லாம்; பலநேரங்களில் சிபாரிசுகள் தேவை. இப்போதோ, சாமியார்கள் சந்தியில் இருக்கிறார்கள். இது சாமியார்கள் காலம் போலும். பலநாள் திருடர் ஒருநாள் அகப்படுவார். ஏதோ, டெக்னாலஜிகள் வளர்ந்திருப்பதால், சாமியார்கள் சந்திக்கு வந்திருக்கிறார்கள். இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? சோனி-யாலோ சாம்சங்-காலோ சாமியார் சல்லாபம் சந்திக்கு வந்திருக்கிறது. 

குண்டலினி என்றாவது குண்டக்க மண்டக்க பண்ண, அதே சமயத்தில் போதாத வேளையாய் வீடியோகேமரா 'ரண்டக்க ரண்டக்க' பண்ணிவிட்டது. பாவம் சாமியார் என்ன பண்ணுவார். ஹார்மோன் ஹார்மோனியம் வாசிப்பதோடு நிற்காமல், கூடவே கடம், கிதார் என பின்னிப் பெடலேடுத்து விட்டது போலும்.

திருச்சி, காஞ்சிபுரம், டெல்லி, திருவண்ணாமலை என்று பட்டியல் நீள்கிறது. என்ன பட்டியல் என்றால் சாமியார் பட்டியல்தான். வெளிவந்தது இதுவரை இவ்வளவே. வந்த இவ்வளவும் எள்ளளவுதான் போல. கொள்ளளவு எவ்வளவோ?   புற்றீசல் போல், இன்னும் எவ்வளவோ? யார் அறிவார்...... அந்த சாமியார் நம்பும் சாமி தான் அருள் வாக்கு சொல்ல வீண்டும்.

ஏமாற்றுவது சாமியார் தொழில் எனில் அதைக்கண்டு ஏமாறுவது மக்கள் தப்பல்லவா. ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே முட்டாள்.

அதுசரி இப்படிபட்ட சாமியார்களைப் பார்த்து பொதுஜனம் ஏமாறக் காரணம் என்ன? பொதுஜனம் என்ன அவ்வளவு முட்டாளா?   அல்லது இந்த சாமியார்தான் அவ்வளவு அறிவாளியா?

மக்கள் ஏன் இப்படிப்பட்ட சாமியார்களை நம்புகிறார்கள்? இன்றளவும் மக்களுக்கு,  இப்படிப்பட்ட சாமியார்கள்தான் கடவுளின் நேரடி ஏஜென்ட் என்ற நினைப்பு. ஒரு சரக்கை நேரடி டீலரிடம் வாங்குவதற்கும், சப் டீலேரிடம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா.  நேரடி டீலரிடம் வாங்கினால் சரக்கு திருப்திகரமாக இருக்கும் தரமாகவும் இருக்கும் என்பது மக்களின் எண்ணம்.

ஒருமுறை, விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் ஒரு பெண்மணி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மனியிடம், 'நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?' என்றார். அதற்கு, அந்தப் பெண்மணி, 'நாம் திருமணம் செய்து கொண்டால், உங்களைப் போல் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்றார். அதற்கு,  விவேகானந்தர் உரைத்தது, 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே'  என்றார். 

ஆஹா! தமிழில் இதைச் சொல்வதில் என்ன ஒரு ரைமிங்;  என்ன ஒரு டைமிங். 'அன்னையே!  உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே' 

அப்படிப்பட்ட மக்கள் எண்ணம் கொண்ட மகான்கள் எங்கே; இப்போது வந்து கொண்டு இருக்கும் சாமியார்கள் எங்கே?

இஸ்லாம் மதத்தலைவர்கள் தான் இப்படிப்பட்ட சல்லாப வழக்குகள் ஏதுமின்றி இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று குர்ரான் சொல்கிறதாம்; அது வேறு கதை. கிறிஸ்தவ பாதிரியாரும் சல்லாப வழக்குகளில் வந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்கள் இந்து மதத்தில் தான் வீதிக்கு வீதி சாமியார்கள், அவர்களுக்கே உரிய அளவிலான வியாபார யுக்திகளைக் கொண்டும் இருக்கிறார்கள்.

சிறிய கிராமம் எனில், வெத்தலையில் மை வைத்துப் பார்த்து குறி கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள்; வெத்தலையில் மை வைப்பவரைப் பார்த்து, சில மக்கள் குறைகூறுவார்கள்; அப்படிக் குறைகூறுபவரோ எலுமிச்சையில் குங்குமம் வைப்பவராக இருக்கக்கூடும். எலுமிச்சையில் குங்குமம் வைப்பவரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ பூசணியை நடுரோட்டில் வைத்து பூசை செய்பவராய் இருக்கக்கூடும். பூசணியை நடு ரோட்டில் பூசை செய்வோரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ மறக்காமல் திருப்பதி சென்று மொட்டையடித்துத் திரும்புவார். வாயில் வேல் குத்துவார்; முதுகில் கொக்கி வைத்துத் தேர் இழுப்பார்; தீச்சட்டி தூக்குவார்; தீமிதிப்பார்; பால்காவடி, பண்ணீர்க்காவடி, புஷ்பகாவடி தூக்குவார்; அனைத்தும் முடித்து விட்டு பீர் அடித்து பல்டி அடிப்பார். கேட்பார் எவரும் இல்லை. கேட்டால், 'எல்லாம் அவன் செயல்' என்பார். எல்லாமே கடவுளின் திருவிளையாடல் என்பார்; அப்படியென்றால், உங்கள் கடவுள்தான் இப்படியும் கேள்வி கேட்கச் சொல்கிறார் என்று எண்ணி கொள்ளுங்களேன்.

ஆக டிகிரி ஆஃப் மூடப்பழக்கம்தான் வேறேயன்றி, மூடப்பழக்கம் என்பது அவரவர் தகுதிக்கேற்ப வசதிக்கேற்ப இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதோ போதாத வேளையாக ராக்கெட் வானை நோக்கி பறக்கிறது. அங்கே எப்படி எலுமிச்சை பழம் வைத்து நசுக்குவது என்று தெரியாமல்தான் விட்டுவிட்டார்கள் போலும். 

அவனவன் கம்ப்யூடரில் இருந்து, லேப்டாப் போய், இப்போ பாம்டாப் வரை வந்தாலும், தலைடாப்பில் உள்ள மூளையில் இந்த மூடப்பழக்கம் மட்டும் இன்னும் ஒழியவில்லை.

அது சரி, இதனால என்ன சொல்ல வருகிறோம் எங்கிறீர்களா? அது நியாயமான கேள்விதானே? உங்களை யார் கேட்க வேண்டாம் என்றது? கேளுங்கள் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். பகவான் FM கேளுங்கள். இது மக்களை முட்டாளாக்கும் நேரம்!

நம் கேள்விகள் இதுவே.

அது சரி ஏன் கடவுள் பிறந்தார் ? அல்லது பிறப்பிக்க பட்டார்?   வேறொன்றும் இல்லை, விடை தெரியாத வினாவுக்கு எல்லாம் ஒரு காரணம் வேண்டுமே; அதுதான் கடவுள்; As அறிவியல் accelerates, கடவுள் decelerates; அறிவியல் வளர வளர கடவுள் தேய்கிறார்; கடவுளும் அறிவியலும் indirectly proportion. 

கடவுள் என்கின்ற கோட்பாட்டினால் உள்ள ஒரு நன்மை, நம்பிக்கை. ஆம்! மக்கள் நம்புகிறார்கள். மக்கள் கடவுளை நம்புகிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் இயற்கையை நம்புகிறார்கள்.

மக்கள் ஏன் நம்புகிறார்கள்? பெருவாரியான மக்கள் நன்மை நடக்கத்தான் கடவுளை நம்புகிறார்கள். நல்லது என்றால், ஒன்று தனக்கென்று இருக்கும்; அல்லது வீட்டுக்கென்று இருக்கும்; அல்லது ஊருக்கென்று இருக்கும்; அல்லது உலகத்துக்கென்று இருக்கும்; அல்லது அண்ட சராசரத்திற்கென்று இருக்கும். ஏதோ ஒன்று, தனக்கோ பிறர்க்கோ எதுவாக இருந்தாலும் நன்மை எனும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், இதைக் கூட ஏற்கலாம்.

இன்னொரு வகையில் கடவுள் என்பவர், மனிதருக்கு ஏன் தேவைப் படுகிறார் என்றால், அதை psychology என்று கூறலாமோ?, என்னவோ. அதாவது எந்த குற்றம் குறையையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவை. அந்த ஆள் ஆனவர் கல்லானார். பின்னால், கற்கள் கடவுள் ஆனது. அதாவது, எதையும் அப்படியே ஏற்று கொள்ளும் ஒரு உபாயம். அண்ணன் பேச்சு ஒன் வே! எனும் கணக்காக! அந்த வகையில் மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு பொருள் தேவைப்பட்டது. அது தான் கடவுள் ஆனதோ?

என்னதான் இருந்தாலும் , எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்கிறார்கள். இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். நல்லது தானே. ஆனாலும் ஒன்னு வாங்கினால் ஒன்னு ப்ரீ கணக்கா அந்த 'சக்தி' பல ரூபங்களிலும், பல கோட்பாடுகளுடனும், பல வடிவங்களிலும் போட்டு படுத்தி எடுக்க வேண்டியது இல்லையே.


இந்த மாதிரி போலிச்சாமியார்கள் செய்திகள் அறிய முற்படும்போது, ஆஹா, நாமொன்றும் தவறான முடிவெடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. எடுத்த முடிவை மேலும் வலுச்சேர்க்கிறார்கள். அதாவது, சமீபத்தில் கி.வீரமணி ஐயாவின் கைகளாலே, திருப்பதி சென்று வந்தவுடன் போட்டுக்கொண்ட கை காப்பை அவிழ்த்து எரிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிந்தாவிற்கு வேண்டிக்கொண்ட மொட்டைக்கும் ஒரு பெரிய கோவிந்தா போட்டாச்சு.  ஒரு வேளை கோவிந்தா கற்சிலையுடன் வேண்டியது நடந்தேறியவுடன், மொட்டை போடுவதை நிறைவேற்றாமல் இருந்தால் அதுதான் மிகப்பெரிய சுயநலமாக ஆகிவிடும். அதனாலேயே, ஏதும் நடக்கும் முன்னரே ஒப்பந்தத்தை(!) முடித்துக்கொள்வது ஷேமம்! இதில் ஷேம் ஒன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். கண்ட கண்ட ஷேம்பூ போடுவதால், முடி தானாகவே உதிரும் ஒரு நாள்; அது, அறிவியல். ஒருவேளை, அவ்வாறு நடக்கும்போது, 'பார்த்தாயா கோவிந்தா உன்னை தண்டிக்கிறார்' என்றால்; தண்டிப்பது கோவிந்தா அல்ல, கார்னியரும் சன்சில்க்சும் தான். அதுவும் ஷாம்பூவையே ஷேம்பைன் கணக்கா கலந்தடிச்சா, தலைமுடியும் உதிரும், மூளையும் கூட உதிரலாம்.


மேலும், கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால், குழந்தைகளிடம் நல்ல பண்புகளை எப்படி வளர்ப்பது என்று ஒரு வாதம் இருக்கிறது. இப்படியாக குழந்தைகள் நற்பண்புடன் வளரவேண்டும் என்பதால் வேண்டுமானால் கூட கடவுளை ஏற்றுக் கொள்ளலாம், வாதத்திற்காக. ஆனாலும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருவது கடவுளைப் பார்த்து அல்ல; உங்களை பார்த்தும், உங்கள் சுற்றத்தை பார்த்தும்; உங்கள் நடவடிக்கையைப் பார்த்தும்தான். ஆக நல்ல குழந்தைகள் வளர நீங்கள் காரணம் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய அளவில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு மதம் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு designated கடவுள் இருக்கிறார். ஏன் அந்த designated கடவுள்ஸ் ஒரு round table conference நடத்தி round robin fashion-இல் வருடத்திற்கு ஒருவர்தான் கடவுள் என்று வைத்துகொண்டால் சிறப்பாக இருக்குமே. என்று, இப்படியெல்லாம் பாட்டிகிட்ட காமெடியா பேசினா போதும், பாட்டி உடனே, 'அப்படி எல்லாம் சொல்ல படாது; தப்பு. சாமி கன்ன குத்தும்' என்று ரெண்டு விரலை நீட்டிக்காட்டுவார்கள். நாமோ புன்னகையே பதிலாய் சொல்லமுடியும். பாட்டிக்கு, பகவான்தான் எலாதையும் பாத்துக்கிறார்னு நினைப்பு. நமக்கோ, பாட்டிதான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணம்.

நீங்களே சொல்லுங்க பாஸ்? நமக்கு கடவுள் வேண்டுமா அல்லது பாட்டி வேண்டுமா?

நேக்கு பாட்டி; நோக்கு?



-பொன்னியின் செல்வன்-




நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்