
18+ வயதுடையோர் மற்றும் 18- வயதுடையோர் மட்டுமே!
அட! எல்லோருமே வாசிக்கலாம்! விரசம் ஏதும் இருக்காது. சாமியார்களைப் பற்றியும், கடவுளைப் பற்றிய பதிவு என்றால் இப்படிப்பட்ட முன்குறிப்பு அவசியமாகிறது. இங்கே, சாமியார்கள் பற்றிய செய்திகளை 18+ வயதுடையோர் மட்டுமே வாசிக்கலாம் என்று சொல்லும் நிலை வந்துவிட்டதே என்பதால்தான் இந்த முன்குறிப்பு.
வெளிநாட்டு நண்பர் ஒருவரிடம், 'இந்த' மாதிரி நடந்துச்சு, ஒரு 'இந்த' சாமியார், 'இந்தமாதிரி' ஒரு நடிகையுடன் 'அந்த நேரம் அந்தி நேரம்' என்று இருக்கும் ஒரு 'இந்த' வீடியோ ஆதாரம் டிவியில் 'இந்தமாதிரி' வந்திச்சு என்று சொன்னால், அதற்கு அந்த நண்பர் கூறியது, சிரிப்பு வந்து விட்டது; அவர் கேட்டது இது தான், "அது சரி, அந்த சாமியார் ஒப்புதல் இல்லாம எப்படி அந்த வீடியோ எடுத்தாங்க. அது தப்பில்லையா? அதுதானே முதல் தப்பு? அது அந்த சாமியாரோட தனிமையைத் தொல்லை பண்ற மாதிரி இல்லையா?" என்று கேட்டார். நண்பரோ வெளிநாட்டவர்; அதனால் நம் ஊரைப் பற்றி எல்லாம் அவ்வளவா தெரியல. நண்பர் கூறியதோ, தனிமனித சுதந்திரம் எனும் பரந்த நோக்குடன். பிறகுதான், சாமியார் என்றால் இந்தியாவில் உள்ள விளக்கங்களைக் கூறநேரிட்டது. அவரை நம்பி மக்கள் எவ்வளவு காரியங்களில் இறங்குகிறார்கள். சாமியார்களை கடவுளாக மதிப்பது, சாமியார்களோ மக்களை சல்லியாய் நினைப்பது போன்று பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
பிரமச்சரியம் என்பதும், காவித்துணி என்பதும் வணிக மூலதனம்-Trade capital; பக்தகோடிகள்தான் முதலீட்டாளர்கள்-Investors. பக்த கோடிகளின் காணிக்கைதான் முதலீடு-Investment; இதைக்கொண்டு இந்தத்தொழிலை சாமியார் எப்படி நடத்துகிறார் என்பதுதான் வணிகதந்திரம்-Business Tricks. இதில் தொழில் போட்டிகள் வேற இருக்கும் போல; ஆக, எது வணிக மூலதனமாக Trade Capital-ஆக வைக்கப் பட்டதோ அதற்கு குந்தகம் விளையும் போது முதலீட்டாளர்கள்-Investors கோபம் கொள்வது வாடிக்கைதானே. அந்த வாடிக்கைதான் சற்றே வேடிக்கையாய், கல்வீச்சு, சூறையாடல் என்ற நிகழ்வுகள் மடங்களின் மீது வந்தன. மேலும், சத்சங்க கூடங்களை சாத்தி நொங்கு எடுத்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். ஆக, இது சாமியாரின் தனிமனித உரிமையில்லை. பொதுமக்களிடம் நம்பிக்கை மோசடி.
அதாவது, மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கவைப்பது, அந்த மூடநம்பிக்கையால் லாபம் பார்ப்பது; லாபம் பார்த்தாலும் பரவாயில்லை சல்லாபமும் செய்கிறார் சாமியார். மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்ததும், ஆசிரமத்திற்கு பாதகம் விளைந்துவிட்டது.
இந்த சாமியார்கள் இருக்கிறார்களே, சாமியார்களை சந்திப்பதும் சுலபம் இல்லை, இப்போதெல்லாம்; பலநேரங்களில் சிபாரிசுகள் தேவை. இப்போதோ, சாமியார்கள் சந்தியில் இருக்கிறார்கள். இது சாமியார்கள் காலம் போலும். பலநாள் திருடர் ஒருநாள் அகப்படுவார். ஏதோ, டெக்னாலஜிகள் வளர்ந்திருப்பதால், சாமியார்கள் சந்திக்கு வந்திருக்கிறார்கள். இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? சோனி-யாலோ சாம்சங்-காலோ சாமியார் சல்லாபம் சந்திக்கு வந்திருக்கிறது.
குண்டலினி என்றாவது குண்டக்க மண்டக்க பண்ண, அதே சமயத்தில் போதாத வேளையாய் வீடியோகேமரா 'ரண்டக்க ரண்டக்க' பண்ணிவிட்டது. பாவம் சாமியார் என்ன பண்ணுவார். ஹார்மோன் ஹார்மோனியம் வாசிப்பதோடு நிற்காமல், கூடவே கடம், கிதார் என பின்னிப் பெடலேடுத்து விட்டது போலும்.
திருச்சி, காஞ்சிபுரம், டெல்லி, திருவண்ணாமலை என்று பட்டியல் நீள்கிறது. என்ன பட்டியல் என்றால் சாமியார் பட்டியல்தான். வெளிவந்தது இதுவரை இவ்வளவே. வந்த இவ்வளவும் எள்ளளவுதான் போல. கொள்ளளவு எவ்வளவோ? புற்றீசல் போல், இன்னும் எவ்வளவோ? யார் அறிவார்...... அந்த சாமியார் நம்பும் சாமி தான் அருள் வாக்கு சொல்ல வீண்டும்.
ஏமாற்றுவது சாமியார் தொழில் எனில் அதைக்கண்டு ஏமாறுவது மக்கள் தப்பல்லவா. ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே முட்டாள்.
அதுசரி இப்படிபட்ட சாமியார்களைப் பார்த்து பொதுஜனம் ஏமாறக் காரணம் என்ன? பொதுஜனம் என்ன அவ்வளவு முட்டாளா? அல்லது இந்த சாமியார்தான் அவ்வளவு அறிவாளியா?
மக்கள் ஏன் இப்படிப்பட்ட சாமியார்களை நம்புகிறார்கள்? இன்றளவும் மக்களுக்கு, இப்படிப்பட்ட சாமியார்கள்தான் கடவுளின் நேரடி ஏஜென்ட் என்ற நினைப்பு. ஒரு சரக்கை நேரடி டீலரிடம் வாங்குவதற்கும், சப் டீலேரிடம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா. நேரடி டீலரிடம் வாங்கினால் சரக்கு திருப்திகரமாக இருக்கும் தரமாகவும் இருக்கும் என்பது மக்களின் எண்ணம்.
ஒருமுறை, விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் ஒரு பெண்மணி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மனியிடம், 'நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?' என்றார். அதற்கு, அந்தப் பெண்மணி, 'நாம் திருமணம் செய்து கொண்டால், உங்களைப் போல் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்றார். அதற்கு, விவேகானந்தர் உரைத்தது, 'அன்னையே! உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே' என்றார்.
ஆஹா! தமிழில் இதைச் சொல்வதில் என்ன ஒரு ரைமிங்; என்ன ஒரு டைமிங். 'அன்னையே! உங்கள் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னையே'
அப்படிப்பட்ட மக்கள் எண்ணம் கொண்ட மகான்கள் எங்கே; இப்போது வந்து கொண்டு இருக்கும் சாமியார்கள் எங்கே?
இஸ்லாம் மதத்தலைவர்கள் தான் இப்படிப்பட்ட சல்லாப வழக்குகள் ஏதுமின்றி இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று குர்ரான் சொல்கிறதாம்; அது வேறு கதை. கிறிஸ்தவ பாதிரியாரும் சல்லாப வழக்குகளில் வந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்கள் இந்து மதத்தில் தான் வீதிக்கு வீதி சாமியார்கள், அவர்களுக்கே உரிய அளவிலான வியாபார யுக்திகளைக் கொண்டும் இருக்கிறார்கள்.
சிறிய கிராமம் எனில், வெத்தலையில் மை வைத்துப் பார்த்து குறி கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள்; வெத்தலையில் மை வைப்பவரைப் பார்த்து, சில மக்கள் குறைகூறுவார்கள்; அப்படிக் குறைகூறுபவரோ எலுமிச்சையில் குங்குமம் வைப்பவராக இருக்கக்கூடும். எலுமிச்சையில் குங்குமம் வைப்பவரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ பூசணியை நடுரோட்டில் வைத்து பூசை செய்பவராய் இருக்கக்கூடும். பூசணியை நடு ரோட்டில் பூசை செய்வோரைப் பார்த்து, சிலர் குறைகூறுவார்; அப்படிக் குறைகூறுபவரோ மறக்காமல் திருப்பதி சென்று மொட்டையடித்துத் திரும்புவார். வாயில் வேல் குத்துவார்; முதுகில் கொக்கி வைத்துத் தேர் இழுப்பார்; தீச்சட்டி தூக்குவார்; தீமிதிப்பார்; பால்காவடி, பண்ணீர்க்காவடி, புஷ்பகாவடி தூக்குவார்; அனைத்தும் முடித்து விட்டு பீர் அடித்து பல்டி அடிப்பார். கேட்பார் எவரும் இல்லை. கேட்டால், 'எல்லாம் அவன் செயல்' என்பார். எல்லாமே கடவுளின் திருவிளையாடல் என்பார்; அப்படியென்றால், உங்கள் கடவுள்தான் இப்படியும் கேள்வி கேட்கச் சொல்கிறார் என்று எண்ணி கொள்ளுங்களேன்.
ஆக டிகிரி ஆஃப் மூடப்பழக்கம்தான் வேறேயன்றி, மூடப்பழக்கம் என்பது அவரவர் தகுதிக்கேற்ப வசதிக்கேற்ப இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதோ போதாத வேளையாக ராக்கெட் வானை நோக்கி பறக்கிறது. அங்கே எப்படி எலுமிச்சை பழம் வைத்து நசுக்குவது என்று தெரியாமல்தான் விட்டுவிட்டார்கள் போலும்.
அவனவன் கம்ப்யூடரில் இருந்து, லேப்டாப் போய், இப்போ பாம்டாப் வரை வந்தாலும், தலைடாப்பில் உள்ள மூளையில் இந்த மூடப்பழக்கம் மட்டும் இன்னும் ஒழியவில்லை.
அது சரி, இதனால என்ன சொல்ல வருகிறோம் எங்கிறீர்களா? அது நியாயமான கேள்விதானே? உங்களை யார் கேட்க வேண்டாம் என்றது? கேளுங்கள் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். பகவான் FM கேளுங்கள். இது மக்களை முட்டாளாக்கும் நேரம்!
நம் கேள்விகள் இதுவே.
அது சரி ஏன் கடவுள் பிறந்தார் ? அல்லது பிறப்பிக்க பட்டார்? வேறொன்றும் இல்லை, விடை தெரியாத வினாவுக்கு எல்லாம் ஒரு காரணம் வேண்டுமே; அதுதான் கடவுள்; As அறிவியல் accelerates, கடவுள் decelerates; அறிவியல் வளர வளர கடவுள் தேய்கிறார்; கடவுளும் அறிவியலும் indirectly proportion.
கடவுள் என்கின்ற கோட்பாட்டினால் உள்ள ஒரு நன்மை, நம்பிக்கை. ஆம்! மக்கள் நம்புகிறார்கள். மக்கள் கடவுளை நம்புகிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் இயற்கையை நம்புகிறார்கள்.
மக்கள் ஏன் நம்புகிறார்கள்? பெருவாரியான மக்கள் நன்மை நடக்கத்தான் கடவுளை நம்புகிறார்கள். நல்லது என்றால், ஒன்று தனக்கென்று இருக்கும்; அல்லது வீட்டுக்கென்று இருக்கும்; அல்லது ஊருக்கென்று இருக்கும்; அல்லது உலகத்துக்கென்று இருக்கும்; அல்லது அண்ட சராசரத்திற்கென்று இருக்கும். ஏதோ ஒன்று, தனக்கோ பிறர்க்கோ எதுவாக இருந்தாலும் நன்மை எனும் எண்ணம் இருக்கும் பட்சத்தில், இதைக் கூட ஏற்கலாம்.
இன்னொரு வகையில் கடவுள் என்பவர், மனிதருக்கு ஏன் தேவைப் படுகிறார் என்றால், அதை psychology என்று கூறலாமோ?, என்னவோ. அதாவது எந்த குற்றம் குறையையும் பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவை. அந்த ஆள் ஆனவர் கல்லானார். பின்னால், கற்கள் கடவுள் ஆனது. அதாவது, எதையும் அப்படியே ஏற்று கொள்ளும் ஒரு உபாயம். அண்ணன் பேச்சு ஒன் வே! எனும் கணக்காக! அந்த வகையில் மனபாரத்தை இறக்கி வைக்க ஒரு பொருள் தேவைப்பட்டது. அது தான் கடவுள் ஆனதோ?
என்னதான் இருந்தாலும் , எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்கிறார்கள். இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். நல்லது தானே. ஆனாலும் ஒன்னு வாங்கினால் ஒன்னு ப்ரீ கணக்கா அந்த 'சக்தி' பல ரூபங்களிலும், பல கோட்பாடுகளுடனும், பல வடிவங்களிலும் போட்டு படுத்தி எடுக்க வேண்டியது இல்லையே.
இந்த மாதிரி போலிச்சாமியார்கள் செய்திகள் அறிய முற்படும்போது, ஆஹா, நாமொன்றும் தவறான முடிவெடுக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. எடுத்த முடிவை மேலும் வலுச்சேர்க்கிறார்கள். அதாவது, சமீபத்தில் கி.வீரமணி ஐயாவின் கைகளாலே, திருப்பதி சென்று வந்தவுடன் போட்டுக்கொண்ட கை காப்பை அவிழ்த்து எரிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோவிந்தாவிற்கு வேண்டிக்கொண்ட மொட்டைக்கும் ஒரு பெரிய கோவிந்தா போட்டாச்சு. ஒரு வேளை கோவிந்தா கற்சிலையுடன் வேண்டியது நடந்தேறியவுடன், மொட்டை போடுவதை நிறைவேற்றாமல் இருந்தால் அதுதான் மிகப்பெரிய சுயநலமாக ஆகிவிடும். அதனாலேயே, ஏதும் நடக்கும் முன்னரே ஒப்பந்தத்தை(!) முடித்துக்கொள்வது ஷேமம்! இதில் ஷேம் ஒன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். கண்ட கண்ட ஷேம்பூ போடுவதால், முடி தானாகவே உதிரும் ஒரு நாள்; அது, அறிவியல். ஒருவேளை, அவ்வாறு நடக்கும்போது, 'பார்த்தாயா கோவிந்தா உன்னை தண்டிக்கிறார்' என்றால்; தண்டிப்பது கோவிந்தா அல்ல, கார்னியரும் சன்சில்க்சும் தான். அதுவும் ஷாம்பூவையே ஷேம்பைன் கணக்கா கலந்தடிச்சா, தலைமுடியும் உதிரும், மூளையும் கூட உதிரலாம்.
மேலும், கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால், குழந்தைகளிடம் நல்ல பண்புகளை எப்படி வளர்ப்பது என்று ஒரு வாதம் இருக்கிறது. இப்படியாக குழந்தைகள் நற்பண்புடன் வளரவேண்டும் என்பதால் வேண்டுமானால் கூட கடவுளை ஏற்றுக் கொள்ளலாம், வாதத்திற்காக. ஆனாலும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருவது கடவுளைப் பார்த்து அல்ல; உங்களை பார்த்தும், உங்கள் சுற்றத்தை பார்த்தும்; உங்கள் நடவடிக்கையைப் பார்த்தும்தான். ஆக நல்ல குழந்தைகள் வளர நீங்கள் காரணம் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும், கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால், குழந்தைகளிடம் நல்ல பண்புகளை எப்படி வளர்ப்பது என்று ஒரு வாதம் இருக்கிறது. இப்படியாக குழந்தைகள் நற்பண்புடன் வளரவேண்டும் என்பதால் வேண்டுமானால் கூட கடவுளை ஏற்றுக் கொள்ளலாம், வாதத்திற்காக. ஆனாலும் குழந்தைகள் நல்ல பண்புகளுடன் வளருவது கடவுளைப் பார்த்து அல்ல; உங்களை பார்த்தும், உங்கள் சுற்றத்தை பார்த்தும்; உங்கள் நடவடிக்கையைப் பார்த்தும்தான். ஆக நல்ல குழந்தைகள் வளர நீங்கள் காரணம் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய அளவில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு மதம் ஒரு முக்கிய காரணம். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு designated கடவுள் இருக்கிறார். ஏன் அந்த designated கடவுள்ஸ் ஒரு round table conference நடத்தி round robin fashion-இல் வருடத்திற்கு ஒருவர்தான் கடவுள் என்று வைத்துகொண்டால் சிறப்பாக இருக்குமே. என்று, இப்படியெல்லாம் பாட்டிகிட்ட காமெடியா பேசினா போதும், பாட்டி உடனே, 'அப்படி எல்லாம் சொல்ல படாது; தப்பு. சாமி கன்ன குத்தும்' என்று ரெண்டு விரலை நீட்டிக்காட்டுவார்கள். நாமோ புன்னகையே பதிலாய் சொல்லமுடியும். பாட்டிக்கு, பகவான்தான் எலாதையும் பாத்துக்கிறார்னு நினைப்பு. நமக்கோ, பாட்டிதான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணம்.
நீங்களே சொல்லுங்க பாஸ்? நமக்கு கடவுள் வேண்டுமா அல்லது பாட்டி வேண்டுமா?
நேக்கு பாட்டி; நோக்கு?
-பொன்னியின் செல்வன்-