கல்வியும் கேள்வியும்

Exam Royalty Free Stock Photo

ற்போது, இந்தியா முழுமைக்கும், பொறியியல் கல்லூரிகளில் சேர, ஒரே நுழைவுத் தேர்வுமுறை வரலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. அதாவது சீர்மை uniformity படுத்துவதற்காக; மற்றும், மாணவர்கள் அதிகமான நுழைவுத்தேர்வுகள் பங்கேற்கும் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக.

அதாவது, மாணவர் அதிகாலையிலேயே எழுந்து, குளிரும் பனியில், ஐ.ஐ.டி கோச்சிங் கிளாஸ் சென்றுவிட்டு வந்து; சிற்றுண்டி என்ற பெயரால் சிறிது பிரெட்டை பிட்டுச் சாப்பிட்டுவிட்டு; பின், பள்ளிக்கு சென்று பாடங்களையும் கவனித்துவிட்டு; மாலை வந்து ஸ்டேட் என்ட்ரென்ஸ் எஃஸாம் கோச்சிங்  சென்றுவிட்டு; பின், பள்ளியில் பயிலும் பாடத்திற்கான டியூஷன் சென்றுவிட்டு வந்து; அதற்கும் பின், பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடம், கோச்சிங் கிளாசில் கொடுத்த வீட்டுப்பாடம், டியூஷனில் கொடுத்த வீட்டுப்பாடம் என அனைத்தையும் முடித்துவிட்டு மணியைப் பார்த்தால் இரவு பணிரெண்டு.

அதிலும் மாணவர்களுக்கு இருக்கும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளியில் பாடம் நடத்தும்போது, என்னதான் டியூஷனில் அந்தப் பாடத்தை ஏற்கனவே கற்றிருந்தாலும், டியூஷனில் அந்தப் பாடத்தை கற்காதது போலும், தான் டியூஷனே போகவில்லை, பள்ளி ஆசிரியராகிய உங்கள் பாடத்தைத்தான் முழு கவனத்தோடும் கவனிக்கிறேன் என்பதுபோல் கவனிக்க வேண்டிய கட்டாயம். இல்லாட்டி, இன்டேர்னல் மார்க் யார் சார் போடுறது? பள்ளி ஆசிரியரல்லவா இன்டேர்னல் மார்க் போடுவது.

+2 முடிந்து நுழைவுத்தேர்வு இருந்த காலங்களில், நுழைவுத்தேர்வு எழுதப் போகும்போது மறக்காமல் தாயக்கட்டை எடுத்துப்போகும் வழக்கம் எல்லாம் உண்டு. பின்னே, பதில் எப்படி எழுதுவதாம்? அதிலும் சிலர், நல்ல கிரியேட்டிவிடி உடையவர்கள் அழிக்கும் ரப்பரிலேயே ஒவ்வொரு பக்கத்திலும் 1-2-3-4 என்று எழுதி; உருட்டி விளையாடி பதில் எழுதுவார்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், துளியும் பயமின்றி தைரியமாக பரீட்சையெழுதலாம். என்னதான் முட்டி மோதினாலும், அந்தர் பல்டியடித்தாலும் சில கேள்விகளுக்கு பதில் தெரியப்போவதில்லை பிறகு ஏன் வீண் டென்ஷன்? அப்படி இருக்கையில்தான், ஆகா! தாயமே நம் சகாயம், என்று எண்ணத் தோன்றும்.

அப்புறம் இந்த கணக்குப் பாடம் இருக்கே, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அப்போதுதான் முடிந்த +2 பொதுத்தேர்வில், 10 மதிப்பெண் கேள்வியாக வந்த அதே கேள்வி; அதுவும், மூன்று பக்கம் வரை நீள்கிற பெரிய பதில்; நுழைவுத்தேர்விலோ வெறும் கால் மதிப்பெண் அல்லது அரை மதிப்பெண்ணுக்கு கேள்வியாக கேட்கப்பட்டு இருக்கும். அப்போது மட்டும் தாயத்தை சற்றே வேகமாக உருட்டுவது ஷேமம். நேரம் பொன் போன்றது இல்லையா?

நுழைவுத்தேர்வில் கேள்வி வரிசைகள் விதவிதமாக இருக்கும். அதாவது, கேள்விகள் ஒன்றுதான்; ஆனாலும், கேள்வி வரிசைகள் வித்தியாசமாக இருக்கும். தேர்வு அறையில், வரிசையில் உட்கார்ந்திருக்கும் மாணவருக்கு, கேள்வி வரிசை வெவ்வேறாக இருக்கும். ஆனாலும் கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா? வழக்கம்போல், முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர் எழுதிய அதே பதிலை, பின்னால் இருக்கும் மாணவரும் எழுதினால்தான், தேர்வு எழுதிய திருப்தி இருக்கும்.

முன்னால் இருக்கும் மாணவருக்கு கேள்வி, நிலவைப் பற்றி இருக்கும்;
பின்னால் இருக்கும் மாணவருக்கோ கேள்வி, தாஜ்மகாலைப் பற்றி இருக்கும். ஆனாலும் விடை தேர்வு செய்வதோ முன்னால் இருக்கும் மாணவரைப் பார்த்து. இப்படியாக, அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சுபோடும் விதமாக மதநல்லிணக்கமும் இருக்கும் நுழைவுத்தேர்வில்.

பெரும்பாலும், நுழைவுத்தேர்வுகள் அருகில் உள்ள கல்லூரிகளில் நடக்கும். நுழைவுத்தேர்வு நடக்கும்போது, சில கல்லூரிகளில் ஐஸ்சர்பத் மோர் எல்லாம் கொடுப்பார்கள். நுழைவுத்தேர்வு முடிந்தவுடன் திரும்பிவரும் மாணவரிடம், 'என்ன பரீட்சை சூப்பரா?' என்று வினவினால், மாணவனோ 'ம்.... மோர் ரொம்ப சூப்பர்' என்று சொல்வதையும் கேட்க நேரிடும். பின்னே, எது சிறப்பாக செய்தாரோ அதைத்தானே மாணவர் சொல்லமுடியும்.

அதிலும் சில மாணவர், ஏதோ சட்டசபைக்கு வரும் அரசியல்வாதிபோல், நுழைவுத்தேர்வு அறைக்குள் நுழைந்து, அடுத்த ஐந்து நிமிடத்தில் பேப்பரை கொடுத்துவிட்டு சென்றுவிடுவர்.

இவ்வாறாக, நுழைவுத்தேர்வு பல சுவையான நிகழ்வுகளை உள்ளடக்கியது. தமிழகத்தில் சில வருடம் முன்னர்தான் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

மேலும், நுழைவுத்தேர்வை ரத்துசெய்ததன் மூலம் கிராமப்புற மாணாக்கர் பலரும் இப்போது நல்ல விதமாக பொறியியல் கல்லூரிகளில் சேர, அவர்கள் எடுத்த நல்ல பொதுத்தேர்வு மதிப்பெண்ணே போதும் என்ற நிலை இருக்கிறது. கிராமப்புற மாணாக்கர் தற்போதுதான் நகர்ப்புற மாணவர்களின் போட்டியை சமாளிக்க முடிகிறது. நகர்ப்புற மாணவர்களால் நுழைவுத்தேர்வு சிறப்பாக செய்வதற்கு தகுந்த வசதிகள் இருக்கின்றன. ஆனால், கிராமப்புற மாணாக்கருக்கு அந்த வசதியும் இல்லை, வசதி இருப்பினும் செலவு செய்யும் சூழ்நிலையும் இருப்பதில்லை. அப்படி இருக்கையில், கல்வியில் இரண்டு சம  சூழ்நிலைகள் உள்ளோருக்கு இடையில்தானே போட்டி இருக்கவேண்டும். அதுதானே முறையாக இருக்கும்?  அந்தவகையில் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் ரத்துசெய்தது சிறப்பான செயலாகும்.

மாநிலத்திற்குள்ளேயே இந்த கல்வி சூழ்நிலையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்றால், இந்தியா முழுதும் ஒரே நுழைவு தேர்வு வந்தால், பின், மாநிலத்தின் மாநகரங்களில் உள்ள மாணாக்கருக்கும் நாட்டின் தலைநகரில் உள்ள மாணாக்கருக்கும் கூட அது கல்விச்சூழலில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் அபாயம் இருக்கிறதா என்றுத் தெளிவாகத் தெரியவில்லை. அப்படி நகர்களுக்கிடையிலேயே ஏற்றத்தாழ்வு உண்டாக்குமேயானால்; அது, கிராமப்புற மாணாக்கரை எவ்வளவு பாதிக்கும்? மிக அதிகமாக அல்லவா பாதிக்கக்கூடும்.

இந்தியாவில் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் வரும் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறதாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2002 ஆம் ஆண்டில், 86வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது; அதாவது, கல்வி அடிப்படை உரிமை (Right to Education). அதில் குறிப்பிடப்படுவது என்னவெனில், ஆறு முதல் பதினான்கு வயதுவரை உள்ள அணைத்து மாணவர்களுக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் கல்வி அடிப்படை உரிமையின் நோக்கம். இது இன்னும் ஏட்டளவிலே இருக்கிறது. இதை நடைமுறைப் படுத்த செயல்வடிவம் இன்னும் வரவேண்டி உள்ளது.

கல்வி அடிப்படை உரிமையினால் குறைந்தபட்சம் சில தலைமுறையையாவது மேல்நிலைப்பள்ளி அடைய வைக்க முயற்சி செய்துவிட்டு, பிறகு தானே இந்த மேல்நிலைக் கல்விச்சீர்மை பற்றி சிந்திப்பது சிறப்பாக இருக்கும்.

எடுத்துக்காட்டிற்கு,  உயர்கல்வி எனும் சீர்மையான கனியை அடைய வேண்டும் என்கிறார்கள்; அப்படியெனில் முதலில் அடிப்படைப் பள்ளிக்கல்வி எனும் மரம் சிறப்பாக அமைய வேண்டும் அல்லவா? மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறாக இருக்கிறதே.

"இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் 88 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதில்லை. இந்தநிலையை போக்க உயர்கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது." என்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர் அவர்கள்.

அப்படி இருக்கையில்,  கல்வி அடிப்படை உரிமையை நடைமுறை படுத்துவதும், நுழைவுத்தேர்வு என்ற சுமையை அகற்றுவதும், கல்விக் கடன்கொடுக்கும் நடைமுறையை மேலும் எளிமை படுத்துவதும் தானே நிறைய மாணாக்கர் உயர்கல்விக்கு பல்கலைக்கழகங்களை அடைய ஏதுவாக இருக்கும்.


- பொன்னியின் செல்வன் -

3 comments:

jothi 2 March 2010 at 23:29  

இந்தியா முழுக்க ஒரே கல்வி என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஆப்புதான். ஸ்டேட் போர்டுக்கும், CBSCக்கும் காத தூரம்.

என் நடை பாதையில்(ராம்) 3 March 2010 at 07:03  

மன்னிக்கவும்..... எனக்கு உங்கள் பதிவில் உடன்பாடு இல்லை. நுழைவுத்தேர்வு இல்லாததால் தற்போது தமிழகத்தில் மேற்ப்படிப்பு நாசமாகிவிட்டது. பல தனியார் பள்ளிகள் நல்ல இலாபம் பார்க்கத் துவங்கி விட்டன. இதற்க்கு நான் வேண்டுமானால் ஒரு பதிவெழுதுகிறேன்...


நல்ல கிரியேட்டிவிடி உடையவர்கள் அழிக்கும் ரப்பரிலேயே ஒவ்வொரு பக்கத்திலும் 1-2-3-4 என்று எழுதி; உருட்டி விளையாடி பதில் எழுதுவார்கள்.

ஹி! ஹி! நான் கூட எழுதியிருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் 15 March 2010 at 01:30  

_/!\_ ஜோதி அவர்களே, பின்னூட்டத்திற்கு நன்றி. ஆமாம், ஸ்டேட் போர்டில் +2வில் படிப்பதை CBSE-வில் X-லேயே படித்துவிட முடியும்.


_/!\_ ராம் அவர்களே, பின்னூட்டத்திற்கு நன்றி. கண்டிப்பாக பதிவு போடுங்கள் ராம். பதிவிட்டபிறகு உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள உதவும். மற்றபடி'ஹி ஹி' ரசிக்கும்படி இருந்தது!

Post a Comment

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்