பொய் எதிர்ப்பு சக்தி !!



பொய் எதிர்ப்பு சக்தி என்றால் என்னவென்று யோசிக்கக்கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி தெரியும், அது என்ன பொய் எதிர்ப்பு சக்தி ?
இதை வாசித்து முடிக்கும் போது அது தானாகவே தெரிந்து விடும்.

உண்மை என்ற ஒன்று இருப்பது போல், பொய் என்ற ஒன்றும் இருக்கிறது.
வள்ளுவன் கூறுவது யாதெனில்,
   பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
   எல்லா அறமும் தரும்
அதாவது, பொய் சொல்லாதவனுக்கு புகழ் வரும்; அவனை அறியாமலே மற்ற எல்லா நல்லதும் உண்டாகும்.

இதை மீறி, தனக்கு நல்லது உண்டாக வேண்டாம் என எண்ணி, ஒருவர் பொய் சொல்லும்போது, அவர் உள்ளே
  • இரத்த அழுத்த மாற்றம்
  • நாடித்துடிப்பு மாற்றம்
  • மூச்சு விடும் சுழற்ச்சியில் மாற்றம்
  • உடல் வெப்ப மாற்றம்
  • இதயத்துடிப்பு மாற்றம்
போன்ற பல மாற்றங்கள் ஏற்படும்.

ஒருவர் பொய் சொல்லும் போது, அவரையும் அறியாமல் டிரம்ஸ் சிவமணி, இதயத்தில் புகுந்து சற்றே வேகமாக ‘லப் டப், ‘லப் டப்’ ‘லப் டப்’ ’ இசைத்துக் கொண்டிருப்பார்.

பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க, இப்போது உண்மை அறியும் சோதனை கருவி , ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detectors / Polygraph) எல்லாம் வந்துவிட்டது. அது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு, சொல்லப்படுவது பொய்யா? மெய்யா? என்று கூறிவிடும்.

சில நேரங்களில் , உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்), பிரச்சினைகளையும் கூடவே கொண்டு வரும். கிரிக்கெட் வீரர் காம்ப்ளி-யிடம் உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்) சமீபத்தில் உபயோகப் படுத்தப்பட்டு, சச்சின் பற்றி தவறான கருத்துக்களை கூறி விட்டார். இதற்கு காம்ப்ளி மன்னிப்பும் கேட்டுவிட்டார்.

இப்படி சில நடை முறை பிரச்சினைகள் இருப்பதால், உண்மை அறியும் சோதனை கருவி (பாலிகிராப்) , இன்னும் முழுமையாய் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப் பட வில்லை.


பொய் சொல்லுபவர்களை கண்டு பிடிக்க மேலும் சில வழிகள் உள்ளன. அதாவது.

ஒருவர் பொய் சொல்லும் போது, அவர் தன்னுடைய முகத்தையோ, உதட்டையோ விரலால் தொட்டுக்கொண்டோ, காது மடலையோ, நாசி நுனியையோ விரலால் வருடி கொண்டோ இருக்கக் கூடும். இதை கருத்தில் கொண்டு எந்த அரசியல்வாதி பொய் சொல்லுகிறார் என்று பார்க்கலாம் என்று நினைத்தால், அதில் ஒரு சிக்கல். பின்னே, வரிசையாய் அனுமார் வால் மாதிரி எல்லா அரசியல்வாதிகளும் நடிகர்களாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த வித்தை எல்லாம் எடுபடாது. இந்த அனுமார் வால் இன்னும் எவ்வளவு தூரம் நீளுமோ தெரியவில்லை?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும் போது பெருவாரியான நேரங்களில் கண்ணைப் பார்த்து பேச மாட்டார்கள். அதுவும் குற்ற உணர்ச்சியின் காரணமாக.
இதிலும் கெட்டது குடி. கருப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டால் அதுவும் கடினமாகிவிடும், எதிரே இருப்பவர் நம்மிடம் பேசுகிறாரா இல்லை தூக்கத்தில் பேசுகிறாரா என்பதையே அறிய முடியாது, இதில் பொய் சொல்வதைப் போய் எப்படி கண்டுபிடிப்பது?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும் போது நீண்ட வாக்கியங்களை உபயோகப்படுத்தக் கூடும்.
அக்கா தன் தம்பியிடம், “டேய், ஃப்ரிட்ஜில் அடித்தட்டில் வச்சிருந்த சாக்லேட்டை நீ எடுத்து சாப்ட்டியாடா ? ”.
அதற்கு தம்பி, “நான் ஒன்னும் ஃப்ரிட்ஜில் அடித்தட்டில் இருந்த சாக்லேட் எடுத்து சாப்பிடல”, என்கிறான்.
அந்த தம்பி சாக்லேட் எடுத்து சாப்பிட்ட போது அது மேல் தட்டில் இருந்திருக்கலாம், யார் கண்டது?


பொய் சொல்லுபவர், பொய் சொல்லும்போது பல விஷயங்களையும் சுற்றி வளைத்து பேசக்கூடும். மேலும் தேவையில்லாத விஷயங்களைக் கூறி மழுப்பவும் கூடும்.
இதில் அரசியல்வாதிகள் சற்றே சிறந்தவர்கள். இப்படித்தான் நிருபர் ஒருவர், “உங்கள் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் அதிகம் சேரவில்லை என்கிறார்களே, அது உண்மையா”, எனக் கேட்கிறார்.
அதற்கு அரசியல்வாதி, “எங்கள் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்கள் அதிகம் சேரவில்லையா என எங்களைக் கேட்கிறீர்கள்” (அதான் கேட்டாச்சே சார்!) “நாங்கள் கூறுவது என்னவென்றால்” (அதை முதலில் சொல்லுங்கள் சார். ப்ளீஸ்,அடுத்த பேட்டி ஒன்னு இருக்கு) “எங்கள் தொகுதியில் மொத்தம் மூன்று அரசுப் பள்ளிகள் உள்ளன. இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி” (‘பெண்கள்’ சொல்லும் போது மட்டும் ஏன் சார் இளிக்கிறீங்க) ”இவற்றில் கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் 200 மாணவர்கள் தான் அரசுப் பள்ளிகளில் இருந்து விலகி, வேறு பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். இதுவே சென்ற ஆட்சியில் இந்த எண்ணிக்கை 400 ஆக இருந்தது” (அந்த பள்ளியின் மொத்த கொள்ளளவே 600 தான், சென்ற ஆட்சியில் 400, இப்போ 200. தேவலை, காமராஜர் கனவுக்கு கல்லறை கட்டியாச்சு !) ”இது சென்ற ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் பாதியாய் குறைந்துள்ளது என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம்”
இப்படி, ஆம் / இல்லை என்று ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியதை, மிகச் சுருக்கமாக ஒரு பத்தியில் கூறக் கூடும் !!!!



ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இரானுவத்தில், இரானுவ வீரர்களிடம் கையடக்க வடிவிலான பொய் கண்டுபிடிக்கும் இயந்திரமான ‘பொய் கண்டுபிடிப்பானை’ (Lie detectors or Polygraph) உபயோகிக்க கொடுத்து இருக்கிறார்களாம்.
நமது திருமணங்களிலோ, மணநாள் அன்று, மணமகன் கையில் மணமகளை கைப்பிடித்து கொடுக்கும் போதே மணமகனுக்கு ஒரு ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detector) கையில் கொடுக்கப் பட்டு விடுகிறது.

ஆம்! மிகப் பெறிய ‘பொய் கண்டுபிடிப்பான்’ (Lie Detectors) மனைவிகள் தான்!அவர்கள் தான் கனவனின் பொய் , பொய் சதவிகிதம், எதற்கு பொய் எல்லாத்தையும் சொல்லாமலே கண்டு பிடிப்பவர்கள்.

மனைவிகள் ஒரு கேள்வியை ஒருமுறைதான் கேட்பவர்கள் என்று தவறாக் எண்ணிவிடக் கூடாது. கணவர் பொய் சொல்லுகிறார் என்ற சந்தேகம் மட்டும் வந்து விட்டால் போதும், ஒரே கேள்வியை பல இடைவெளிகளில் பல சூழ்நிலைகளில் பல விதமாய் கேட்டு, பொய்யா ? மெய்யா ? என உறுதி படுத்திக் கொள்ளப் பார்ப்பார்கள்.
மனைவி முன்னர் கேட்ட அதே கேள்வியை, இரண்டாம் முறையாய் கேட்டு விட்டால், கணவன் திகைத்து போய் அப்போதுதான் யோசிப்பார், போன தடவை என்ன சொன்னோம் என்று. இப்படியே சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிந்தால், உடனே தலைக் கவசம் ஏதேனும் எடுத்து மாட்டிக் கொண்டால், தம்பிரான் புன்னியத்தில் பூரிக் கட்டை தாக்குதலில் தலையாவது தப்பக்கூடும்.

சற்றே சமயோசிதமான புருஷர்கள் என்றால் பல சூழ்நிலைகளிலும் ஒரே பதிலைக் கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

இப்படித்தான்,
வெள்ளி இரவு, வேலை காரணமாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர தாமதம் ஆகும் என்பதை மனைவியிடம் தெரிவிக்க போன் செய்தால்.
“ஆபீசில் வேலை இருக்கிறது” (நண்பன் வீட்டில் பார்ட்டி!) , “நீ சாப்ட்டு தூங்கிடு. எனக்கு சாப்பாடு வேண்டாம்” (அதான் சைட் டிஷ் இருக்கே!)

மறுமுனையில் மனைவி, “சரிங்க…………..” என ஒரு மாதிரியாக இழுத்துக்கொண்டே, “ஏங்க, ஆபீசில் மல்லுக் கட்டறதுக்கு பதில் ராம் அண்ணா வீட்டுக்கு போய் அவங்க குழந்தையை பார்த்திட்டு வரலாம்ல, அந்த அக்காதான் ஊருக்கு போயிருக்காங்கள்ல, அவங்களுக்கும் துனையா இருக்கும்ல?”

நாமோ மனதிற்குள்ளாக, (அடிப் பாவி பொய் சொல்றதையும் கண்டு பிடிச்சு, பார்ட்டி நண்பனையும் கண்டுபிடிச்சு, லொகேஷனையும் கண்டு பிடிக்கிறாளே) என்று எண்ணிக்கொண்டு, “இங்கே தல போற வேலை இருக்கு, இதுல அவன எல்லாம் போய் இப்ப பார்க்க முடியாதும்மா”.

அவள், “ம்ம்ம்…. சரிங்க …. அந்த அண்ணன் வீட்டுக்கு போனால் அஞ்சப்பரில் இரால் வறுவல் வாங்கிட்டு போங்க-ன்னு சொல்லலாம்னு இருந்தேன். போன தடவை நம்ம வீட்டுக்கு அவங்க எல்லாம் வந்தப்ப அசைவம் சமைக்க முடியல, அதான்………. ”

நாமோ மனதிற்குள்ளாக, (போதும்டி, இப்ப சைட் டிஷ்ஷையும், கடையையும் கண்டு பிடிச்சிட்டியா, சந்தோஷமா?), என எண்ணிக்கொண்டு, “அதெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம், நான் அப்புறம் போன் செய்றேன்” என வைத்து விடுகிறோம்.

இப்படி, பேசும் போதே பொய்யையும் கண்டு பிடித்து விடுகிறார்கள் மனைவிகள்.
வேர் இஸ் தி பார்ட்டி டுனைட் (Where is the Party tonight) !! நண்பன் வீட்டில் !!!

இப்படியாக கணவன் கூறும் பொய்யை, எதிர்க்கும் சக்தியான மனைவியிடம் இருந்து தப்பிக்க, கணவர்கள் பெரும் பாடுதான் படுகிறார்கள்.

இப்போது தெரிகிறதா 'பொய் எதிர்ப்பு சக்தி' யார் என்று. ‘மனைவி’ தாங்க !!!

ஹரீஷ்

கருத்து சுதந்திரம் !!


சமீபத்தில் நான்  எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு பலர்,
‘இவர் என்ன தான் சொல்ல வருகிறார்’ என்று மிகக் கோவமாய் கேட்கிறார்கள்.  எனக்கோ ஒன்றும் புரியவில்லை, படிப்பவர்கள் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்? என்று.

ஒன்று மட்டும் புரிகிறது. கருத்து சுதந்திரம் என்பது எழுதுபவருக்கு மட்டும் இல்லை. அதைப் படிப்பவருக்கும் இருக்கிறது என்பதை வாசகர்களின் இத்தகைய கருத்தால் நிரூபனமாகிறது.


கருத்துகள் கூறப்பட்டால், முதலில் அதை காது கொடுத்து கேட்க வேண்டும். பிறகு அதை ஏற்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அண்ணாவின் மொழியில் மொழிவதாய் இருந்தால் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு”. மல்லிகை தோட்டம் உள்ளது கூவம் ஆற்றங்கரையா அல்லது காவிரி ஆற்றங்கரையா என்பதை அதன் மணம் உணர்த்தி விடும்.


சட்டசபையில் ஒரு கட்சிக்காரர் மறு கட்சிக்காரரை, “யோவ்! வெளிய வாய்யா ஒன்ன பாத்துக்கிறேன்“ என கோவமாய் உரக்க கூறினால், அதுவும் கருத்து சுதந்திரமே. ஆனால், அவை அவைக்குறிப்பில் இடம்பெறாது. ஏனென்றால் கருத்தை சொல்ல சுதந்திரம் இருக்கிற அதே வேளையில்; அவை, அவைக்குறிப்பில் இடம்பெற சில வரைமுறையும் இருக்கிறது.


பேச்சு சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பில் முக்கியமான ஒன்றாகும். அதாவது Right to Speech.
இந்த பேச்சுரிமை, குடியாட்சிக்கும் முடியாட்சிக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசங்களில் ஒன்று.


அரசாட்சி நடைபெறும் வளைகுடா நாடுகளில், அரசருக்கு எதிராய் ஏதாவது பேசுவதாகத் தெரிந்தால், அதை குற்றம் என்று, எதிர்த்து பேசியவரை, ஒட்டகம் வெட்டுகிற இடத்தில் ஒரு ஓரமாய் நிக்க வைத்து, ஹலால் செய்து விட்டு சென்று விடக் கூடும். ஏதோ கருத்து கந்தசாமி என ஜம்பம் விட்டு கொண்டு கண்ட இடத்திலேயும் கருத்து சொல்லி விட முடியாது. ஆக கருத்திற்கு பொருள் மட்டும் முக்கியம் இல்லை, இடமும் முக்கியம் எனத் தெரிகிறது.


குடியாட்சி நடக்கும் பல வளர்ந்த நாடுகளின் ஜனாதிபதிகளை, நேருக்கு நேர் நின்று சாதாரன அடித்தட்டு குடிமகன் கூட கேள்விகள் கேட்க முடியும். நிருபர்கள் கூட , ஜனாதிபதியிடம் தங்கள் காலனியின் அளவை பகிர்ந்து கொள்ள, 'இதோ பாருங்கள் !' என்று தூக்கி எறிந்து காட்ட முடியும் என்றால் எவ்வளவு சுதந்திரம் பாருங்களேன்.


நடிகையிடம் ஒரு விசிறி, “நீங்கள் ஒவர் ஆக்டிங் பண்றீங்க” என்றான். உடனே அந்த நடிகை தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அந்த நடிகையின் மேலாளர் ஓடி வந்து நடிகையை சாந்த படுத்தும் விதமாய், “மேடம் அவன் ஏதோ உளறுகிறான் மேடம். அவன் சொல்வதை நம்பாதீர்கள். நீங்கள் நடிப்பது ஒவர் ஆக்டிங் இல்லை மேடம். நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும் அதிகமாக நடிக்கிறீர்கள், அதைத்தான் அந்த முட்டாள் அப்படி உளருகிறான்” என்கிறார். இதை நம்பி, அந்த நடிகை ப்ரொடியூஸரிடம், தான் அதிகமாக நடிப்பதாய் கூறி சம்பளம் கூட்டி கேட்டால். ப்ரொடியூஸரின் கருத்து, “சம்பளமும் உடுத்தும் துணியும் இன்வெர்ஸ்லி ப்ரொபோர்ஷனல் (Inversely Proportional), பரவாயில்லையா மேடம் ?” எனக் கூறக்கூடும்.
ஆக, எண்ணங்கள் பல விதம் அதை ஏற்பது அவரவர் விதம்.


நம் நண்பர் ஒருவர் அதிகமாக பேசமாட்டார். நண்பர்களிடமும் அதிகம் பேச மாட்டார், உறவினர்களிடமும் அப்படியே. நாங்களோ அவரை, “நீன் பேசவே மாட்டேன் என்கிறாய். ஏன், எங்களாண்ட பேச பயமா கீதா ?” என்று சும்மனாகாச்சுக்கும் கேலியெல்லாம் செய்வோம். அவரோ ஒரு புன்சிரிப்பையே பதிலாய் தருவார். சமீபத்தில் அந்த நண்பருக்கு திருமணம் முடிந்தது.
நாங்கள், முன் போல் அவரை கேலி கிண்டல் எல்லாம் செய்வதில்லை. அதான் கல்யாணம் ஆயிடுச்சே, நாமளே புரிஞ்சுக்க வேண்டாமா !! கல்யாணத்துக்கு முன்னாலேயே அதிகம் பேச மாட்டார்; இப்போ கல்யாணமும் வேறு முடிந்து விட்டது. பிறகு கேள்வி எதற்கு? கேலிதான் எதற்கு ?. வெந்த புன்னில் வேலைப் பாய்ச்சவா?


பல தரப்பட்ட மக்களிடம் அவர்களின் எண்ணங்களை சேகரித்து, அதன் விடையை பிரதிபலிப்பதுதான் கருத்துக் கணிப்பு.
இந்த கருத்து கணிப்பு, சில நேரங்களில் குடும்பங்களை பிரிக்க செய்யும் பிறகு சேர்க்கவும் செய்யும். இதற்கு மேல் இதைப் பற்றி விளக்கினால் அது அரசியல் ஆகி விடக் கூடும்.
கருத்து கணிப்பு என்பது, ஒரே ஆளிடம் பலமுறை கருத்து கேட்பது கிடையாது, அது ஓரவஞ்சனை. பல்வேறு தரப்பட்ட மக்களிடம் கேட்பது தான் கருத்து கணிப்பு. சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு பிரபல தினசரி நாளிதழில், ‘எந்த கட்சி தேர்தல் பிரசாரத்தில் முன்னிலை வகிக்கிறது?’ என்ற கருத்துக் கணிப்பு கேள்வி இருந்தது. அதில் குறிப்பிடப்பெற்ற ஒரு கட்சி குறைந்த சதவிகிதத்தில் இருந்தது. நம் நண்பரோ குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியின் நடிகரின் ரசிகர். நண்பர், இரவு முழுதும் கணினியில் உட்கார்ந்து பல முறை வோட்டளித்து அந்த குறிப்பிட்ட கட்சியின் சதவிகிதத்தை உயர்த்திக் கொண்டு இருந்தார்.
இதை, மறுநாள் எங்களிடம் கூறிக் கொண்டும் இருந்தார். நம் நண்பரில் மற்றொருவர் சற்றே டெக்கீ (Techie – Technology) ஆசாமி. அதே விஷயத்தை அவர் கணினியில் புகுந்து ஐந்தே நிமிடத்தில் மற்றொறு கட்சி பெறும்பான்மை வரும் விதமாய், ஜாவா(Java) எனும் ஜாலத்தினால் மாற்றி, மாயா ஜாலம் காட்டினார். இப்படி கருத்து கணிப்புகளும் சில நேரங்களில் ஒருவரே முடிவு செய்யும் விதமாய் மாறக் கூடுகிறது.
தேர்தல் என்பதே ஒரு கருத்து கணிப்பு தான். தேர்தலோ, சற்றே கட்டுக்கோப்பான போலீஸ் பாதுகாப்புடன், சில சமயம் அடியாட்கள் அராஜகத்துடனும் நடைபெறும் கருத்துக் கணிப்பு. என்ன ஒரு கூத்து என்றால் முன்பெல்லாம் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் சரியில்லை என்றால், ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டு ஏதாவது ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்போம். இப்போதோ, '49-ஓ' இருக்க பயமேன். சில சமயங்களில் நாம் வீட்டில் ஹாயாக டீ.வி பார்த்து கொண்டு இருந்தால் கூட போதும், நமது ஜனநாயக கடமையை நமக்கு பதில் ஆள் (மாறாட்டம்) வைத்து நிறைவேற்ற பல கட்சிகள் முண்டி அடித்து கொண்டு முன் வரும்.


பூத்துக்கு வந்த மக்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனாலும், தொகுதியின் வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பார். எல்லாம் கள்ள ஓட்டுகள்; நம் நண்பர்கள் கணினியில் செய்ததை நம் வேட்பாளர் பூத்தில் செய்கிறார். நம் நண்பர் அவருக்கு தெரிந்ததை செய்தார்; நம் வேட்பாளர் அவருக்கு தெரிந்ததை செய்கிறார்.
இப்படியாக தேர்தல் எனும் ஜனநாயகக் கடமை சிலரால் சீரழிக்கப்படுகிறது.


கருத்து கணிப்பு இருப்பது போல் கருத்து தினிப்பும் சில நேரங்களில் நடக்கக் கூடும். பெரும்பாலும் அரசியல் தலைவர்களுக்கு பொதுக் குழுக்களும், செயற் குழுக்களும் கருத்து தினிப்பு செய்ய உதவி புரியும்.


மனைவிக்கோ, “நான் சொன்னதை மீறி ஏதாச்சும் செஞ்சீங்கன்னு தெரிஞ்சிச்சு அவ்ளோதான். புரிஞ்சிச்சா?” என கணவனிடம் தங்கள் அன்பையும் கருத்தையும் தினிக்கிறார்கள். கணவர்களுக்கு தெரியும் அந்த ‘புரிஞ்சிச்சா?’ வின் அர்த்தம். அது புரியவில்லை என்றால், மறுநாள் மதியம் ஆபீசில், ஆம்படையாள் வைத்த, சற்றே உப்பு தூக்கலான சாம்பார் சாதம் சாப்பிடும் போது தானாக புரிந்து விடும்.


சமீபத்தில் விகடனில் அன்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார். தன் ஒரு வயது பையனை (சின்னஞ் சிறு குழந்தையை !!! ) வருங்காலத்தில் பைலட் ஆக்கப் போகிறாராம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று. இது வரும் காலத்தில் அந்த குழந்தை மேல் பெற்றொரின் கருத்து தினிப்பாக வராமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நம் குழந்தைகள் நம்மால் வந்தவர்களாக இருக்கலாம், ஆனாலும் நமக்காக வந்தவர்கள் இல்லை.


எங்கோ எதிலோ படித்தது, “சுதந்திரம் கொடுக்கப் பட்டால் கட்டுப்பட்டிருப்போம். கட்டுப்படுத்த நினைத்தால் நமது சுதந்திரத்தை நிரூபித்தே தீருவோம்”.
நமக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதை முறையாக சொல்வதிலும், கண்ணியமாக கையாள்வதும் நம்மிடம் தான் இருக்கிறது !!!


ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்