சால்வையால் சோர்ந்தவன்

லோ! என்ன அப்டி பாக்கறீங்க? நாந்தான் அரசியல்வாதியோட மனசாட்சி பேசறேன். எசமான் தூங்கிட்டு இருக்கார்.

சால்வை போர்த்திக்கொண்டும் போர்த்தப்பட்டுக் கொண்டும் இருக்கும் சாட்சாத் சால்வை அரசியல்வாதியேதான் பேசறேன். அரசியல்வாதின்னா அரசியல்வாதியில்ல; அவரோட மனசாட்சி தான் பேசறேன்.

எங்க போனாலும், எந்த மேடைக்குப் போனாலும், எந்த நிகழ்சிக்குப் போனாலும், கூடவே சால்வை தூக்கிக்கிட்டு போக வேண்டியிருக்கு; இல்லைன்னா வரும்போது சால்வையோட வர வேண்டியிருக்கு.

ஏதாவது நல்ல சில்க்ஸ் கடை இருந்தா சொல்லுங்கள். அதுவும், குறைவான விலையில் சால்வை வாங்கவும்; விழாவில் பெற்ற சால்வையை, நிறைவான விலையில் விற்கவும்.

என்னது? அந்த சில்க்ஸ் எம்போரியத்தையே நாந்தான் தொறந்து வெக்கனுமா? அடடே! எனக்கு இந்த புகழ் எல்லாம் பிடிக்காது; அத மொதல்லயே சொல்லிடுங்க. ஏதோ நீங்க வற்புறுத்தி கேக்கறதால ஒத்துக்கறேன். அப்புறம் சிம்பிளா கேபிள் டி.வி லைவ் டெலிகாஸ்ட் பண்ணினால் போதும். எனக்கு இந்த விளம்பரம் எல்லாம் அலர்ஜி, அதனாலதான் பாருங்க.

நீங்க நெனப்பீங்க, இவரு வந்து கடையை தொறந்துவெச்சா பணம் தரனுமா?-ன்னு. அதப்பத்தி நீங்க கவலையே படாதீங்க; இந்த மாதிரி, சீப்பா பணம் வாங்குற புத்தியெல்லாம் எனக்கில்ல. வேணுமுன்னா கர்ச்சீப்ல நாலு கொடுங்க; அதுவும் உங்க மன திருப்திக்காகத்தான். ஆங்....... இத சொல்ல மறந்துட்டேனே! கர்ச்சீப்-ன உடனே ஒரு ஜானுக்கு-ஒரு ஜான் அளவு சைஸ்னு சீப்பா எட போட்றாதீங்க; ஒரு அடிக்கு-ஒரு அடி சைஸ் கர்சீப். பாருங்க, மக்கள் பணிக்காக ஓயாமல் வேர்வை சிந்தி உழைக்கிறோம்ல; அதான்! அதுலயும் தங்க ஜரிகை வெச்ச கர்ச்சீப்னா ரொம்ப ஷேமம்! இதுல ஒரு அடியா-ரெண்டு அடியாங்குறதா முக்கியம்? நீங்க நல்ல படியா ஜவுளி கடை நடத்தனும்; அதானே முக்கியம்.

பொங்கல் வேற வருதேன்னு, என்னைய உங்கள் ஜவுளிக்கடையிலேயே இலவசமா துணி எடுத்துக்க சொல்லி வற்புறுத்தாதீங்க. ஏன்னா இலவசங்களை கடுமையாக எதிர்ப்பவன் நான். அப்புறம் என் டிரைவர் பொங்கல் சமயத்தில் உங்களைப் பார்க்க வருவார். மேற்படி விஷயங்களை டிரைவர்கிட்ட பேசிக்கங்க. டிரைவர் குடும்பமும் சின்னதுதான்; அதுனால உங்களுக்கும் செலவு ஒன்னும் அதிகம் இருக்காது. மேற்படி, கவணிக்க வேண்டியதை கவனிச்சு விட்றுங்க.

இந்த சால்வை போத்தறவங்களும் சரியான அளவான சால்வை போத்தறாங்களான்னா அதுவும் இல்லை. பல நேரத்துல அவங்க போத்தற சால்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு, அவங்க போத்தற சால்வை பெரிசுதான்னு காட்ட நான் படுற கஷ்டம் எனக்குல்ல தெரியும்.இந்த லட்சனத்தில் போட்டோ வேற;என்னமோ நான் மயில் மாதிரியும், அவரு பேகன் மாதிரியும்!

சரிங்க, சால்வை போத்தறதுன்னு முடிவு பன்னிட்டீங்க; அதை மடிச்சு வச்சபடியே அப்படியே கொடுக்க வேண்டியது தானே! அதையும் செய்ய மாட்டீங்க. மடிச்சு வெச்ச சால்வையை பக்கத்தில கொண்டு வந்து ஆசை காட்டிட்டு, சர்ருன்னு மயில் தோகை விரிக்கிற கணக்கா விரிச்சு போத்தி விட்டுடுறீங்க. இந்த மயில் தோகையை மறுபடியும் மடிச்சு, கவருக்குள்ளேயே திரும்ப வெச்சு, புது சால்வை மாதிரியே ஜவுளிக்கடையில விக்க நாயா பேயா அலையறது நாந்தானே. அந்த வலி, காசு கொடுத்து சால்வை வாங்கிய உமக்கு எங்கப் புரிய போது?

இது கூட சரிங்க, மயில் தோகையை கூட மண்ணிச்சிரலாம். ஆனாலும், பக்கத்தில வந்திட்டு, இந்த விரிச்ச சால்வையை கையில வெச்சுகிட்டு, உன் பேர மைக்ல சொல்ற வரைக்கும் காத்திருந்து, உன் பேர சொல்லி 'இன்னார் இன்னார் இப்போது இன்னாருக்கு பொன்னாடை அணிவிப்பார்' என்று சொல்லியவுடந்தான், கடமை உணர்ச்சியோட சால்வை போடுற உன்னை என்னய்யா செய்யறது. ஆமா, இந்த பொன்னாடை-யில இருக்க 'பொன்'-னுக்கு அர்த்தம் தெரியுமாய்யா உனக்கெல்லாம்?

அது என்னய்யா கலர் இது? உனக்கு பிடிச்ச கலரா வாங்கியாந்தியா? உனக்கு வேலையாகனும்னா, எனக்கு பிடிச்ச கலர்தான நீ வாங்கியாரனும்! எனக்கு பிடிச்ச கலரா வாங்கியாந்தாலாச்சும் நான் யூஸ் பன்னுவேன். உனக்கு புடிச்ச கலரா வாங்கியாந்தா ஜவுளி கடைக்குத்தான் போகும்.

இதுல சில அதிகப்பிரசங்கிகள் வேறு. அவங்கள்ளாம் செய்தித்தாள் படிக்கிறாங்களா? இல்ல வேனுமுன்னே அவமானப் படுத்தறாங்களா?-ன்னு தெரியல. பின்ன என்னங்க? போன கட்சியில இருந்து இந்த கட்சிக்கு வந்தப்புறமும், போன கட்சி கலர் போட்ட சால்வையோ துண்டோ போட்டா, இருக்கிற கட்சியோட தலைமை என்ன நினைக்கும்? தலைமை என்ன நினைக்குமோ ஏது நினைக்குமோ-ன்னு, தலைமைக்கு பிடித்த கலரில் சால்வை வாங்கிட்டு போய் பொன்னாடையைப் போர்த்தி; ஒரு போட்டோவாவது எடுத்துக் கொண்டு, சால்வையை மடித்தும் கொடுத்து விட்டு வந்தால்தான், உள்கட்சி அரசியலில் இருந்து தப்பிக்க முடியும்.

அரசியல்ல இந்த சால்வையெல்லாம் சகஜமப்பா! பொது வாழ்க்கைன்னு வந்துட்டா பலப் பிரச்சினைகளையும் போர்வையாவே போத்திகிட்டு படுக்குறவங்க நாங்க!

ஐயோ! எசமான் எந்திரிக்றாருன்னு நினைக்கிறேன்! நான் அவருக்குள்ள போறேன். அவரு என்ன தேடமாட்டாருதான். ஆனா எனக்குன்னு ஒரு மனசாட்சி இருக்குல்ல!

பொன்னியின் செல்வன்

பாரதி சாடும் சாதி


க்கட்டுரையின் நாயகன்; கவிநாயகன், மகாகவி பாரதி. பாரதி பிறந்து 128 வருடம் உருண்டோடிவிட்டது. இன்றும் அவன் புகழ் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் வார்த்தைகளின் வீரியம், பல தலைமுறைகள் தாண்டியும் பீடு நடைப் போடுகிறது.

கால சக்கரத்தில், முன்னோக்கி ஒராயிரம் ஆண்டுகள் உருண்டோடினாலும்; அன்றும், சேது சமுத்திரத்தின் வழி செல்லும் மாலுமிகள் மிக விந்தையாய்த்தான் பேசுவார்கள், "அன்று, ஓர் அமரகவி கண்ட கனவு நனவானதில், நமக்குப் பிரயானம் எவ்வளவு எளிதாகிறதுப் பார்" என்று.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று உரைத்தான்; இதை சொல்லும் முன்னரே அவன் பல மொழிகள் கற்று தேர்ந்தவன். ஆம்! பாரதி பன்மொழி வித்தகன். அப்படிப் பட்ட பாரதியின் தமிழ் கவிதையைக் கேட்கும் பொழுது 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே'!

பாரதி ஓர் தமிழ் அகராதி தொகுத்திருக்கிறார். பாரதியின் சொல்லாட்சி பிரமிக்க வைக்கும். அவர் தமிழிலா எழுதினார்? இல்லை! தமிழ், பாரதியைக் கொண்டு தன்னைத்தானே எழுதிக் கொண்டது!

மூடநம்பிக்கைகளை மூட்டைக்கட்டவும், அச்சத்தை அகற்றவும் பல சிந்தனை சொற்கள் செதுக்கியவன். பெண்களின் சுதந்திரத்தை, பெண்கள் பேசும் முன்னரே இந்த பாட்டுடைத் தலைவன் பாடிவிட்டான்.

ஒருவர் நல்ல சொற்களைக் கூறினால், அதிலோர் நல்ல அதிர்வலைகள் பிறக்கும். அதே நல்ல சொற்களைக் கடைப்பிடித்தால் அதன் அதிர்வலைகள் அடர்த்தி ஆகும். இப்படி இருக்கையில், நல்ல சொற்களைச் சொன்னவரே, சொன்னபடி நடந்தும் காட்டினால் அந்த அதிர்வலைகளின் அடர்த்தி விகிதம் எப்படி இருக்கும்! அவன்தான் பாரதி! யப்பப்பா... பாரதி ஓர் யுகப் புரட்சி!

நாம், ஒரு தவறும் செய்யாதபோது; ஆனாலும் நாம் தூற்றப்பட்டும் சிறுமை படுத்தப் பட்டும், குற்றம் சாட்டப்படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படிபட்ட சூழ்நிலையில், பாரதியின் இந்தக் வரிகளை வாசித்துப் பார்த்தால் எவ்வளவு உத்வேகம் வருகிறது!


தேடிச் சோறு நிதம் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக்கு இரை எனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

சாதிகளை சாடியவன் இந்த முண்டாசுக்கவி; சாதிப் பிரிவினைப் பேசுவோரைப் பார்த்து, 'ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ' என்றான். சாதி மதங்களை பார்க்கக் கூடாது எனும் விதமாய்,'ஜாதி மதங்களைப் பாரோம்' என்றான். ஒரு படி மேலே போய், மனிதர்களில் ஏன் வீண் பிரிவினை; காகமும் குருவியும் கூட நம் இனமே எனும் தெய்வீக எண்ணமாய், 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றும் பாடினான். சாதியை, குழந்தையின் உள்ளத்தில் இருந்து முதலில் களைய வேண்டும் என்று, 'சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;' என்றும் பாடினான்.

பாரதிக்கு கனவுகள் அதிகம். அவன் கண்ட கனவுகள் யாவும் நிறைவேறக்கூடியவையும் கூட. பாரதியின் பல கனவுகள் நிறைவேறியும் இருக்கின்றன. ஒரு பாடலில், 'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்' என்று கனவுக் கண்டான்; பின்னொரு நாளில் எவரெஸ்ட் உச்சியை இந்தியர் தொட்டனர். 'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்று கனவு கண்டான்; பின்னொரு நாளில் வானொலி வந்தது. 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்று கனவு கண்டான்; சமீபத்தில் தான் நிலவில் நீர் ஆதாரம் இருப்பதை நமது சந்திரயான் வின்கலம் உறுதி செய்தது. 'கடல் மீனை அளப்போம்' என்று கனவு கண்டான்; இன்று இந்திய செயற்கோளின் மூலமாக கடலில் உள்ள மீன் ஆதாரம் தெரிந்து கொள்ள முடியும். 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்று கனவு கண்டான்; இன்று அந்த பணியும் நடைபெறுகிறது. அதே பாடலில் அவன் கண்ட முக்கியமான கனவை,  கடைசியாய் குறிப்பிடுகிறான், 'சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்' என்றான்; பாரதியின் இந்த கனவு ஒர் நாள் நனவாகுமா? நனவாகும்!



பொன்னியின் செல்வன்

ஏமாற்றம் மானிடத் தத்துவம்


மாறுகிறவர் இருப்பதால் ஏமாற்றுபவன் இருக்கிறானா, அல்லது ஏமாற்றுகிறவன் இருப்பதால் ஏமாறுகிறவர் இருக்கிறாரா?

ஏமாறுவோர் இருப்பதால்தான் ஏமாற்றுவோர் இருக்கிறார். ஏமாற்றம் எனும் மரத்திற்கு, வேர் - ஏமாறுவோர்; கிளையும், இலையும், கனியும் – ஏமாற்றுவோர். வேர் நீரை உரிஞ்சுகிறது; பலனோ இலைக்கும் கனிக்கும்.

ஏமாற்றம் எனும் செயலுக்கு, செய்பவர் மற்றும் செய்யப்படுபவர் என ‘இருவர்’ வேண்டும். ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை. ‘நீயின்றி நான் இல்லை’ என்பது போல்.



[ஏ.. பெண் சிங்கமே! நீயின்றி நானில்லை என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது!]
ஏமாறுவது நலமா? எனில், ஆம்; நலம்தான்! அதில் ஒரு நன்மை இருக்கிறது. அதாவது, மீண்டும் அதே மாதிரி ஏமாறாமல் இருக்க பாடம் கற்றுத்தருகிறது. ஒரு முறை ஏமாந்த பின், மீண்டும் மீண்டும் அதே மாதிரியே ஏமாறுவோர் நிலைதான் பரிதாபம். அதாவது வாக்காளர்கள் மாதிரி! ஏமாறும் வாக்காளர் இருக்கும் வரையில் ஏமாற்றும் போலி அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது. ஏமாறுவோரும், எல்லா நேரத்திலும் ஏமாற மாட்டார்கள்.

சில நேரங்களில், வேண்டும் என்றே கூட ஏமாறலாம். அது எதற்கு உபயோகப்படும் என்றால், எதிரில் இருப்பவரின் குண நலன்களை எடுத்துக் காட்டுவதற்கு உதவும்.

சின்ன மீனைப் பிடித்தால்தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும். அதைப் போல், சின்ன முள்ளில் மாட்டி வெளிவந்தால்தான், பெரிய முள்ளில் மாட்டாமல் தப்பிக்கலாம். அதற்காக பட்டறிவை வளர்க்கிறேன் பேர்வழி என்று, எப்போதும் பெரிய முள்ளிலேயே மாட்டினால் அது அவரவர் புத்திசாலித்தனத்தை பொருத்தது.

மாற்றம் என்பது மானிடத் தத்துவம். ஏமாற்றம் என்பதோ மனிதன் உபயோகிக்கும் மலிவான யுக்தி. இது என்னவோ மனிதன் மட்டும் உபயோகிக்கும் யுக்தி அன்று. மிருகங்களும் இந்த யுக்தியைப் புரிகின்றன. என்ன வித்தியாசம்? எனில், மிருகங்கள் தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சிக்கு அதைப் புரிகின்றன. மிருகங்கள் புரியும் ஏமாற்று செயல், மற்ற மிருக இனத்தின் மேல்தான் இருக்கும். மனிதனோ, தான் வசதியாய் வசிப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறான்; அதுவுன் தன் சக மனித இனத்தின் மேலேயே! மனிதனுக்குதான் ஆறாம் அறிவு இருக்கிறதே! அது, வேறு எதற்கு இருக்கிறதாம்? இதற்குத்தான்!

ஒருவர் வந்து, கைமாத்துக்காக 100 ரூபாய் பணம் வாங்கி செல்கிறார். ஒரே வாரத்தில் பணத்தைத் திருப்பி கொடுத்து விடுவதாகவும் சொல்கிறார். ந்…நம்..பி கொடுப்பதில் தவறில்லை. ஒரு வாரம் என்பது நமக்கோ 52 முறை வந்து சென்றிருக்கும். ஆனால், பணம் வாங்கியவருக்கோ, ஒரு வாரம் இன்றும் முடிந்திருக்காது; என்றும் முடிந்திடாது.

பிறிதொரு நாளில்,  அதே நபர் வந்து, “சாரே! ஒரு பிரில்லியன்ட் ஐடியாகீது சாரே. அத்தாவது நீ ஒரு பத்தாயிரம் மட்டும் இன்வெஸ்ட் பன்னு. ஒரே வருஷத்துல அத்து இருவதாயிரம் ஆய்டும் சாரே”, என்றால் அப்போதுதான் பட்டறிவு தடுக்கும். ‘ஒரு வாரத்தில்’ என்பதே ஒரு வருடம் தாண்டி உருண்டோடையில்; ‘ஒரே வருஷத்துல’ என்பது யுகப் புரட்சியோ!

வந்த பாதையிலோ 100 ரூபாய் போயிற்று; வரும் பாதையிலோ 10,000 ரூபாய் நிற்கிறது. அப்போதுதான், மாற்றுப் பாதை தேர்ந்தெடுக்க பட்டறிவு தடுக்கும். இந்த மாற்றத்திற்கு காரணம்? ஏமாற்றம்! இந்த மாற்று பாதைக்கு காரணமான ஏமாற்றமும் மானிடத் தத்துவம் தானே!

ஹரீஷ்

நோக்கம் !

- எண்ணங்களை எழுதுவது

- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது

- எளிதினும் எளிதாய் எழுதுவது

பொன்னியின் செல்வன்

My photo
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
பெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.

மெயிலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

நறுமனம்

பிற தோட்டம்